'மோதி அமைச்சரவை 3.0' - எந்தக் கட்சியில் யார் யாருக்கு வாய்ப்பு?

பட மூலாதாரம், Getty Images
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நரேந்திர மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று (ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை) பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கு முன், மோதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அமைச்சர்கள் பட்டியலை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறப்போகும் பெயர்களைப் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவி வருகிறது. யாருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும், யாருக்கு இடம் கிடைக்காமல் போகும் என்ற குழப்பங்களும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் முக்கியஸ்தர்களின் பெயர்களை வைத்து ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. மேலும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களின் பின்னணியில் அரசியல் ஆய்வாளர்கள் வெவ்வேறு பெயர்களை முன்வைத்து வருகின்றனர்.
என்.டி.ஏ கூட்டத்தில் பா.ஜ.க அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த விதத்தின் அடிப்படையில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பெயர்களை அரசியல் ஆய்வாளர்கள் ஊகித்து வருகின்றனர்.
மோதி அமைச்சரவை 3.0-இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும். ஆனால், முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்ததால், பா.ஜ.க-வின் புதிய முகங்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித் தாளின் அறிக்கையின் படி, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 16 எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைக்கக்கூடும். பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு (இரண்டு எம்.பி-க்கள்) ஒரு அமைச்சர் பதவிக் கிடைக்கலாம்.
ஸ்ரீகாகுளம் எம்.பி கே.ராம் மோகன் நாயுடு, குண்டூர் எம்.பி சந்திரசேகர் பெம்மசானி மற்றும் சித்தூர் எம்.பி டி.பிரசாத் ராவ் ஆகியோரின் பெயர்கள் ஊகத்தின் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றன.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 3 எம்.பி-க்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது. சிராக் பஸ்வானின் கட்சியான லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ்) ஒரு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, முன்னாள் ஜே.டி.யு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் 'லலன்' மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரிய சஞ்சய் ஷா-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
உ.பி. தலித் முகங்கள் இடம்பெறுமா?

பட மூலாதாரம், Getty Images
நாற்பதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்று என்.டி.டி.வி குறிப்பிட்டுள்ளது. கட்சி வட்டாரத் தகவல்களின்படி, பா.ஜ.க தனது கூட்டணிக் கட்சிகளிடம் இப்போது அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் பற்றி செவி சாய்க்கப்படும் என்று பா.ஜ.க கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு எந்தக் கட்சிக்கு எவ்வளவு பங்கு என இறுதி செய்யப்பட்டுள்ளது.
என்.டி.டி.வி-யின் செய்தி அறிக்கையில், உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க சந்தித்த பின்னடைவு, மோதி அமைச்சரவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
'பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சாசனத்தையும், இடஒதுக்கீட்டையும் ரத்து செய்யும்’ என்ற பிம்பத்தை பா.ஜ.க உருவாக்கி அதன்மூலம் எதிர்க்கட்சிகள் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. இந்த பிம்பத்தை மாற்ற புதிய ‘மோதி அணி’ முயற்சி செய்யலாம்.
இந்த விஷயத்தில் பா.ஜ.க மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. எனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் முகங்கள் மோதி அமைச்சரவையில் இடம் பெறலாம்.
நிதிஷ் மற்றும் சிராக் பெறப்போகும் பங்கு?

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய ஜனதா தளம் 12 எம்.பி-க்களைப் பெற்றுள்ளது. ஐந்து எம்.பி-க்கள் சிராக் பஸ்வான் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பிகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில எம்.பி-க்கள் தற்போது அமைச்சரவையில் அதிக இலாகாக்கள் பெறக்கூடும்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அமைச்சராக வாய்ப்பிருப்பதாக 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற என்.டி.ஏ கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்களை மேற்கோள் காட்டி 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒவ்வொரு 5 தொகுதிகளுக்கும் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும். ஆனால், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டு தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளதால், அவருக்கு மாநில அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே சமயம் குமாரசாமியின் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு அவரை கேபினட் அளவிலான அமைச்சராக்க முடியும். குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிதன் ராம் மஞ்சி, ஜெயந்த் செளத்ரி மற்றும் அனுப்ரியா பட்டேல்

பட மூலாதாரம், Getty Images
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) கட்சியின் ஜெயந்த் செளத்ரி, அப்னா தளம் கட்சியின் அனுப்ரியா பட்டேல் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், என்.டி.ஏ கூட்டத்தில் ஜெயந்த் சௌத்ரியை பின் பக்கத்தில் உட்கார வைத்ததால், அக்கட்சிக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயந்த் சௌத்ரியின் கட்சி தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அக்கட்சி உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜெயந்த் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர், அவர் ஜாட் சமூகம் (Jat) மற்றும் விவசாயிகளின் பிரதிநிதியாக கருதப்படுகிறார்.
பா.ஜ.க-வின் ஜாட் முகமாகக் கருதப்படும் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சமூகத்துக்கு உதவும் வகையில் ஜெயந்தை பா.ஜ.க அமைச்சராக்கலாம் என நம்பப்படுகிறது.
மகாராஷ்டிராவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும்?

பட மூலாதாரம், Getty Images
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித் தாளின் கூற்றுப்படி, மகாராஷ்டிரா அமைச்சரவையில் இந்த ஆண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் அதிகளவில் இடம்பெறும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி சிறப்பாக செயல்படவில்லை. சிவசேனா (ஷிண்டே) 7 இடங்களையும், என்.சி.பி (அஜித் பவார்) ஒரு இடத்தையும் பெற்றுள்ளது. பா.ஜ.க-வால் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி மீண்டும் தலைதூக்கலாம் என்று தெரிகிறது. எனவே, அங்கு தனது கூட்டணி கட்சிகள் பலவீனமாக இருப்பதை பா.ஜ.க விரும்பவில்லை.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், பிப்லப் குமார் தேவ், பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க கூடும்
சில தகவல்களை மேற்கோள் செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், என்.டி.ஏ தன்னை விரிவுபடுத்த முயற்சிக்கும். எனவே சுயேச்சைகளுக்கும் தகவல் அனுப்பப்படுகின்றன. 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சுயேச்சைகளில் ஒருவரான சாங்லி பகுதியை சேர்ந்த பிரகாஷ் பாபு பாட்டீல் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளார்.
மேலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) எம்பிக்களுடன் பா.ஜ.க தலைவர்கள் தொடர்பில் உள்ளனர். அக்கட்சியின் நான்கு எம்.பி-க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.க தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கும் இருவர்

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தீர்மானித்து கட்சித் தலைவரை மாற்ற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. பா.ஜ.க தலைவர் பதவிக்கான போட்டியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மற்றும் ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரின் பெயர்கள் பேசப்படுகிறது.
இந்த தேர்தலில் பா.ஜ.க 240 தொகுதிகளை பெற்றுள்ளது, இது பெரும்பான்மையை விட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. 2019 தேர்தலில் அக்கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 293 இடங்களில் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட இந்தியா கூட்டணி இந்த முறை சிறப்பாக செயல்பட்டு 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலில் 52 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் இந்த முறை 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளில், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், டிஎம்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், சிவசேனா 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












