கள்ளச்சாராயம் குடித்ததும் உடலுக்குள் என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டி

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
[குறிப்பு: இக்கட்டுரையில், குடிப்பழக்கம், மரணம் ஆகியவற்றைப் பற்றிய விவரணைகள் உள்ளன.]
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில், 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பேசினோம். கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சையின் மூலம் மீண்ட அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'தினமும் குடிக்கும் பழக்கம் உண்டு'
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே, காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் உள்ள கருணாபுரம் பகுதிக்கு சென்றோம். அப்பகுதியில் எங்கு திரும்பினாலும் இன்னமும் அழுகுரல் ஓயவே இல்லை. அங்கு கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து மீண்ட முருகன் வீடு எங்கே உள்ளது என்று கேட்டு, முதல் தெருவில் நுழைந்து வலது புறம் திரும்பியவுடன் மா மரத்தின் கீழே முயல் விளையாடிக் கொண்டிருந்த வீட்டிற்குள் சென்றோம்.
அங்கு முருகன் வீட்டினுள் படுத்திருந்தார். அப்பொழுது தான் அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின் பூரண நலம் பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் கூறினார்கள். என்ன நடந்தது என்பது குறித்து அவர் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.
"எனக்கு தினமும் குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் குறைந்தது நான்கு முதல் ஆறு பாக்கெட் சாராயம் குடிப்பேன். அதுபோலத்தான் அன்றும் சென்று நான்கு பாக்கெட் வாங்கிக் குடித்தேன். கூடுதலாக இரண்டு பாக்கெட் வாங்கி எனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தபோது சற்று உடல் தடுமாறி கீழே விழுந்தேன்,” என்றார்.
"என்னை எனது மகன் வீட்டிற்குள் தூக்கி வந்து படுக்க வைத்தார். எனக்கு எப்பொழுதும் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான நிலை இருப்பதை உணர்ந்தேன் என்ற போதும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை . இட்லியும், சப்பாத்தியும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் எழுந்தேன். நான் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவன்," என்று கூறிய முருகன் தொடர்ந்து பேசினார்.
"காலை எழுந்தவுடன் எனக்கு வாந்தி வந்தது. என்னை எனது மகனும், மகளும் உடனடியாகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் உடனடியாக என்னைப் பரிசோதனை செய்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்," என்றார்.
அங்கு மருத்துவர்கள் மிக வேகமாகச் செயல்பட்டுத் தன்னை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டயாலிசிஸ் மேற்கொண்டனர் என்கிறார் முருகன்.

‘இந்தக் கஷ்டத்தை மறக்க மாட்டேன்’
"நான் உயிர்பிழைத்ததற்கு காரணம் மருத்துவர்கள் தான். நான் உயிர் பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மயக்க நிலையில் தான் இருந்தேன். இறந்து விடுவேனோ என்று மீண்டும் மீண்டும் பயந்தேன். குமட்டல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் மருத்துவர்கள் என்னைக் காப்பாற்றினார்கள். 20 வருடமாகத் தொடர்ந்து நான் சாராயம் குடித்து வருகின்றேன். மருத்துவமனையில் 5 நாட்களாக நான் பட்ட கஷ்டத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்," என்கிறார்.
"மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு வருடத்தை கடப்பது போன்ற உணர்வு இருந்தது. குடிப்பது தப்பு தான். ஆனால் அதற்குக் பழகிவிட்டேன். காலையில் எழுந்தாலே குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அதனால்தான் தொடர்ந்து குடித்தேன். இனிமேல் நிச்சயமாகக் குடிக்க மாட்டேன்," என்கிறார் முருகன்.
'சிறு வயதிலேயே ஏற்பட்ட பழக்கம்'
குடிக்கும் பழக்கம் தனக்குச் சிறுவயதில் ஏற்பட்டது எனக் கூறும் சத்யா, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்து வந்துள்ளார்.
"ஒருநாள் என் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். இருவரும் சாராயம் குடித்தனர். அதில் அவர்கள் சிறிது மீதி வைத்துவிட்டு வெளியே சென்றனர். அன்று நான் முதன் முதலாக அதைக் குடித்தேன். அது தொடர் கதையாக மாறிப்போனது. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் குடித்தேன். அடிக்கடி குடிக்கும் பழக்கம் உருவானது. பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் நான் குடிப்பழக்கத்தை ஓரளவு நிறுத்தினேன். அவ்வப்போது மட்டுமே குடித்தேன்,” என்கிறார்.
சம்பவம் நடந்த அன்று, சாராயம் குடித்தவுடன் தனக்கு வாந்தி வந்ததாகவும், உடல்நிலை மோசமானதாகவும் கூறும் சத்யா, தன்னுடன் சேர்ந்து குடித்தவர்களில் ஒருவர் இறந்து விட்டார் என்ற செய்தி தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார்.
"உடனடியாக நான் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கு என்னை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்," என்கிறார் சத்யா.
தன்னை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போது, தான் மீண்டும் உயிர் பிழைப்போமா, எனது குழந்தைகளை பார்ப்போமா என மிகவும் பயந்ததாகவும் கூறுகிறார் சத்யா.
"என்ன அழுது, என்ன பிரயோஜனம் குடிக்காமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது அல்லவா என்றெல்லாம் நினைத்தேன். நான் பாண்டிச்சேரி செல்லும் பொழுது, மீண்டும் உயிருடன் வருவது சந்தேகம் என்று தான் நினைத்தேன். ஏனென்றால் அன்று என்னுடன் குடித்தவர்கள் பெரும்பாலோர் இறந்து விட்டனர். நான் பிழைத்தது பாக்கியம் தான். எனது குழந்தைகளுக்காக இனி நான் குடிக்கவே மாட்டேன்," என்று கூறினார்.
'தயவு செய்து இனி யாரும் சாராயம் குடிக்காதீர்கள்'

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கள்ளக்குறிச்சி, கருணாபுரம் மேல் தெருவில் வசித்து வரும் பரமசிவம் வீட்டிற்கு சென்றோம். சம்பவத்தன்று நடந்ததை நம்மிடம் விவரித்தார் பரமசிவம்.
"கடந்த 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தேன். அதைக் குடிக்கும் போது எனக்கு வித்தியாசமாகத் தோன்றியது. அதை அலட்சியப்படுத்திக் குடித்து விட்டேன். காலையில் எழுந்தவுடன் மயக்கமாக, சோம்பலாக இருந்தது. அதைத் தெளிய வைப்பதற்காக மீண்டும் இரண்டு பாக்கெட் சாராயத்தை குடித்தேன். குடித்துவிட்டு வெளியே வந்தபோது சாராயம் குடித்து இரண்டு பேர் இறந்து விட்டதாக எனது மனைவி மற்றும் மகன் கூறினார்கள்,” என்கிறார்.
எனக்குத் தலை சுற்றியது, மயங்கி விழுந்தேன். உடனடியாக எனது மகன் என்னை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கிருந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு சேர்த்தவுடன் எனக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். ஆனாலும் என் உடல்நிலை தேறவில்லை, கண் பார்வை மங்கியது," என்று கூறியவர், கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கியவர், "எனது அருகில் இருந்த மகன் என்னைப் பார்த்து கேட்ட கேள்விகள் நெஞ்சில் முள்ளாகத் தைத்தன. 'நீ ஏன் சாராயம் குடித்தாய்? இது தேவையா' என்றான். எனக்கு அசிங்கமாக இருந்தது,” என்கிறார்.
"எனது நண்பர்கள் 'உன் அப்பா கள்ளச்சாராயம் குடிப்பவரா?' என்று ஏளனமாக பேசியது செருப்பால் அடித்தது போல் இருந்தது. இது தேவையா? என்று அழுதான். எனது குடும்பத்தாருக்கு மிகப்பெரிய மனக்கஷ்டத்தை தந்துள்ளேன் என்று வேதனைப்பட்டேன். எனது மகன் அழுததை என்னால் மறக்க முடியாது," என்று கூறினார்.
"இறந்துபோக வேண்டிய நான் உயிர் பிழைத்திருக்கிறேன். ஆகவே, இனி வரக்கூடிய காலங்களில் இளைஞர்களுக்கும் சரி, என்னை போன்ற வயதினருக்கும் சரி யாரும் சாராயம் குடிக்க வேண்டாம்," என்று வேண்டுகோள் விடுத்தார் பரமசிவம்.

'கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை'
கருணாபுரம், ஜோகியர் தெருவில் வசித்து வரும் சாரதா வீட்டிற்கு சென்றோம். அங்கு கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன கணவர் முருகன் படத்தின் முன்னே அமர்ந்து அழுது கொண்டிருந்தார், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சாரதா.
"எனது கணவர் முருகனின் சாவுக்குக் கூட என்னால் வர முடியவில்லை. எனது நிலை யாருக்கும் வரக்கூடாது," என்று கூறினார் சாரதா.
தொடர்ந்து பேசிய அவர், "எனது கணவர் முருகன் தினமும் குடிப்பார். எனக்கு அந்தப் பழக்கமில்லை. அன்று கூலி வேலைக்குச் சென்று வந்தபோது எனது கணவர் தண்ணீர் கேட்டார். அப்பொழுது சொம்பில் தண்ணீர் கொடுத்துவிட்டு அமர்ந்தேன். அருகில் டம்ளரில் தண்ணீர் போல ஏதோ இருந்தது,” என்றார்.
"வேலைக்குச் சென்று வந்து களைப்பாக இருந்ததால் அதை எடுத்துக் குடித்தேன். அது சாராயம் என்று எனக்கு தெரியாது. குடித்த சிறிது நேரத்தில் எனது கணவர் வாந்தி எடுத்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சென்றவுடன் எனக்கும் வாந்தி வந்தது. இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம்," என்று கூறினார்.
தனது கணவர் உடல்நிலை மோசமானதால் முதலில் அவரை பாண்டிச்சேரிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தன்னையும் மருத்துவர்கள் வேறொரு ஆம்புலன்ஸ் மூலமாக அங்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார் சாரதா.
"ஆனால் வழியிலேயே எனது கணவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். எனக்கு அழுகையாக வந்தது, ஆனால் என்ன செய்ய முடியும். மருத்துவமனையில் என்னை விடவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எனது கணவர் இறுதிச் சடங்கில் கூட மனைவியான நான் கலந்து கொள்ள முடியவில்லை. இதுதான் வாழ்க்கையா?" என்று அழத் தொடங்கினார்.
"கடைசியாக எனது கணவரின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. என்னைப் போல் இப்பகுதியில் நிறைய பெண்கள் விதவைகளாக மாறிவிட்டனர். இதற்கெல்லாம் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும். கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்," என கண்ணீருடன் கூறுகிறார் சாரதா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












