தமிழ்நாட்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்ன நடந்தது? புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்கப்படுகிறது. அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நடுகல் - சதிக்கல்
மாலிக்காபூர் படையெடுத்து வந்ததை உறுதி செய்யும் நடுகல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூர் கிராமத்தில் கடந்த 15-ம் தேதியன்று கிடைத்தது. அதில் உள்ள விவரங்கள் குறித்து நமக்கு விளக்கம் அளிக்க விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷூம் வந்திருந்தார். அந்த நடுகல்லை காண்பித்து மாலிக்காபூர் குறித்தும் அவர் தொடர்புடைய கல்வெட்டுகள் பற்றியும் விரிவாக பேசத் தொடங்கினார்.
“அவிரியூரில் சிவன் கோவில் அருகே கிடைத்த இந்த பலகை கல்வெட்டானது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும். இதுபோன்ற ஆதாரங்கள் சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்றன” என்றார் அவர்.

"நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை ‘வீரக் கற்கள்’ என்றும் கூறுவர். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
சதிக்கல் என்பது இறந்துவிட்ட கணவனோடு தீப்பாய்ந்து (உடன்கட்டை ஏறுதல்) உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், அவரது கணவனுக்கும் சேர்த்தே நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். எனவே இங்கு காணப்படுவது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும்.” என்று கூறினார்.
"’ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கல்வெட்டானது, 'அவிரியூர் சிவன் கோவில் கற்களில் சேர்ந்தார் போல் சுமார் 5 அடி உயரம் கொண்ட தூணில் சிற்பங்களுடன் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.'" என்றார்.

"கல்வெட்டில் பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14-ஆவது (பொதுஆண்டு-1311) ஆட்சி ஆண்டில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.” என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.
கில்ஜி வம்ச மன்னன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுரிமை போட்டியின் போது சுந்தர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, அதனை எதிர்த்து சண்டையிட்டு இந்த வீரன் இறந்துள்ளார் என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
இதேபோன்று விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் சிவன் கோவிலில் 'துருக்கியர் படையெடுப்பு' பற்றி கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது. இவை யாவும் மாலிக்காபூர் தமிழக படையெடுப்பு பற்றி கூறும் முக்கிய ஆதாரமாகும்.
இது குறித்து பேசிய பேராசிரியர் ரமேஷ், “பல பலகை கல்தூணின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இடதுபுறம் அடா தெல்லார் நின்ற நிலையில் வலது கையில் நீண்ட வாளை வைத்துள்ளார், இடது கை தொங்கவிட்டவாறு உள்ளது. வலதுபுறம் அவரது மனைவி மல்லண தேவி வலது கையை தொங்கவிட்ட வாரும் இடது கையை மேலே தூக்கிய நிலையிலும் உள்ளார்.
இருவருக்கும் நடுவில் சிவலிங்கம் காணப்படுகிறது. இத்தூணில் நடுகல்லும் சதிக்கல்லும் சேர்ந்தவாறு உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் பெற்றது” என்றார்.
முக்கியத்துவம் வாய்ந்த மாலிக்காபூர் படையெடுப்பு

மாலிக்காபூர் பற்றி பேசிய பேராசிரியர் ரமேஷ், “தென்னிந்தியா மீதான மாலிக்காபூர் படையெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் வட இந்தியாவின் மீது படையெடுக்கத் தொடங்கி விட்டனர். கி.பி 712-இல் முகமது பின் காசிம் எனும் அரேபிய தளபதி சிந்துவை கைப்பற்றினார். ஆனால் அவரது ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.
தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் கழித்து முகமது கோரி கி.பி. 1191-இல் வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்து, முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து கி.பி.1290-இல் கில்ஜி வம்சம் அரியணை ஏறியது. இந்த வம்சத்தை சேர்ந்த அலாவுதீன் கில்ஜி கி.பி. 1296-இல் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1316 வரை டெல்லியை ஆட்சி செய்தார் என்ற போதிலும் தென் இந்தியாவில் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை.” என்கிறார்.

குழப்ப சூழலில் உள்நுழைந்த மாலிக்காபூர்
மதுரையை தலைநகராகக் கொண்டு பாண்டியர் தமிழக பகுதிகளை ஆண்டு வந்தனர். மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியின் (கி.பி.1268 -1311) காலத்தின் இறுதி பகுதி இறுதிக்காலம் குழப்பம் நிறைந்ததாக இருந்தது” என்று விளக்குகிறார் பேராசிரியர் ரமேஷ்.
தொடர்ந்து பேசிய அவர், “இவரது ஆட்சியின் போது இவரது மக்களான சடையவர்மன் வீரபாண்டியனும், சடையவர்மன் சுந்தர பாண்டியனும் இணை ஆட்சியாளர்களாக இருந்தனர். இருவருக்கும் இடையே பகை உணர்ச்சி அதிகரித்தது. ஆட்சியை கைப்பற்ற இருவரும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் செய்தனர்.
இதில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொல்லப்பட்டார். இதனால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுந்தரபாண்டியன் டெல்லி சென்று அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கில்ஜியின் முக்கிய தளபதியான மாலிக்காபூர் விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வந்ததை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.” என்கிறார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாலிக்காபூர் மற்றும் துருக்கியர் படையெடுப்புகள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறார்.
“அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே அவிரியூரில் கிடைத்த இந்த கல்வெட்டில் மாலிக்காபூர் படையை எதிர்த்து போரிட்டு இறந்த படைவீரனின் நடு கல் இதற்கு மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாக உள்ளது. எனவே இந்த நடு கல் உடன் கூடிய சதிக்கல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்” என்றார் பேராசிரியர் ரமேஷ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












