செவ்வாய்க்குப் பதிலாக முதலில் நிலவில் ஒரு நகரை நிறுவ ஈலோன் மஸ்க் திட்டம் - இந்த மாற்றம் ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், லூயிஸ் பாருச்சோ
- பதவி, பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நிலவில் ஒரு "சுயமாக இயங்கும் நகரம்", இது 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் சாத்தியமாகக்கூடும் - இதுவே ஈலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட திட்டமாகும்.
எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான மஸ்க், எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை தெரிவித்திருந்தார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதிலிருந்து தனது கவனத்தை நிலவில் நகரத்தை உருவாக்குவதற்கு மாற்றியுள்ளதாகக் கூறினார்.
ஆனால் மஸ்க் ஏன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்? நிலவில் அமையவிருக்கும் இந்த "சுயமாக இயங்கும்" நகரம் பற்றி நமக்கு என்ன தெரியும்?
செவ்வாய்க்குப் பதிலாக நிலவு
சுயமாக இயங்கும் நகரத்திற்கான வரைபடங்களுடன் கூடிய முறையான, முழுமையான விரிவான திட்டம் இன்னும் இல்லை, மாறாக மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை மட்டுமே இது.
நிலவிற்கு அடிக்கடி விண்கலங்களை ஏவுவதன் மூலம், நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி படிப்படியாக விரிவடையக்கூடிய ஒரு நிரந்தர மனிதக் குடியிருப்பை நிறுவுவதை அவர் விவரித்தார்.
"நிலவில் இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் சாதிக்க முடியும், அதே சமயம் செவ்வாய் கிரகத்தில் இதை சாதிக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாகும்" என்று தனது பதிவில் மஸ்க் கூறியிருந்தார்.
"ஸ்பேஸ்எக்ஸின் நோக்கம் மாறாமல்தான் இருக்கிறது. நமக்கு தெரிந்த பிரக்ஞையையும் (Consciousness), உயிரையும் நட்சத்திரங்களுக்கு விரிவுபடுத்துவதே அது."
"ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் கிரகங்கள் நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்வது சாத்தியம் (ஆறு மாத பயண நேரம்)" என்று மஸ்க் விளக்கினார்.
இதற்கு மாறாக, "நம்மால் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நிலவிற்கு விண்கலங்களை ஏவ முடியும் (இரண்டு நாள் பயண நேரம்)" என்றும் அவர் மேலும் கூறினார்.
"இதன் பொருள், செவ்வாய் நகரத்தை விட நிலவு நகரத் திட்டத்தை நம்மால் விரைவாக நிறைவேற்ற முடியும்."
செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற மஸ்க்கின் நீண்டகால லட்சியத்தைத் தொடருவதே ஸ்பேஸ்எக்ஸின் நோக்கமாக உள்ளது.
"சுமார் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் அதைச் செய்யத் தொடங்கும். ஆனால் நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முதன்மையான முன்னுரிமை, அதற்கு நிலவு விரைவான வழி." என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார்,
மஸ்க்கின் ரசிகர்கள் மற்றும் அவரைப் பின்தொடர்பவர்கள், நிலவில் அந்த நகரம் எப்படி இருக்கும் என்பதற்கான ஓவியங்களை உருவாக்கிப் பகிரத் தொடங்கினர், சிலர் மஸ்க்கின் ஏஐ கருவியான க்ரோக்-ஐ பயன்படுத்தினர்.
மஸ்க்கின் இந்த கருத்துகள், இம்மாத தொடக்கத்தில் வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியை எதிரொலிக்கின்றன. அந்தச் செய்தி, ஸ்பேஸ்எக்ஸ் நிலவிற்கான பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், பின்னர் செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் மேற்கொள்ள முயலும் என்றும் முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கிறது. மார்ச் 2027-இல் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
இந்த மாற்றம், ஸ்பேஸ்எக்ஸின் முக்கிய இலக்காகச் செவ்வாய் கிரகத்தை மஸ்க் நீண்டகாலமாகக் கொண்டிருந்ததற்கு மாறாக உள்ளது. கடந்த ஆண்டு கூட, 2026 இறுதிக்குள் ஆளில்லா செவ்வாய் கிரக பயணத்தைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
"இல்லை, நாம் நேரடியாகச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்கிறோம். நிலவு என்பது ஒரு திசைதிருப்பல்," என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எக்ஸ் தளத்தில் பதிவொன்றுக்குப் பதிலளிக்கும் போது மஸ்க் கூறியிருந்தார்.
மின்சார வாகனங்கள் மற்றும் சுயமாக இயங்கும் தொழில்நுட்பம் போன்ற திட்டங்களுக்கு கடினமான காலக்கெடுவை மஸ்க் நிர்ணயித்த வரலாறு உண்டு. அவை பலமுறை திட்டமிட்டபடி நிறைவேறவில்லை.
இது எப்படிச் சாத்தியமாகும்?
பிரிட்டனில் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி பயன்பாடுகள், ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளர் சுங்வூ லிம், நிலவில் ஒரு தளத்தை அமைப்பதற்கான ஸ்பேஸ்எக்ஸின் திட்டத்தை "அதீத விருப்பம்" என்று விவரிக்கிறார், ஆனால் அது "அறிவியல் புனைகதை" அல்ல என்கிறார்.
"நிலவின் மண்ணைப் பயன்படுத்தி ஆக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களைத் தயாரிப்பது என்ற அடிப்படை யோசனை, நாம் ஏற்கனவே பூமியில் பயன்படுத்தும் தொழில்துறை செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது. தத்துவார்த்த ரீதியாக, இது செய்யக் கூடிய ஒன்றுதான்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
தீவிரமான வெப்பநிலை, நுண் தூசி, குறைந்த ஈர்ப்பு விசை மற்றும் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்ட நிலவின் கடுமையான சூழலில் அந்த அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியுமா என்பதுதான் சவால் என்று லிம் விளக்குகிறார். "நாம் அவற்றைச் சார்ந்து இருப்பதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் அவை சரியாகச் சோதிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
மக்களின் பணம் மற்றும் நீண்ட அரசியல் சுழற்சிகளைச் சார்ந்துள்ளதால் அரசாங்க விண்வெளி முகமைகள் "எச்சரிக்கையுடன்" செயல்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். "இது அவர்கள் புதிய யோசனைகளை எவ்வளவு விரைவாகச் சோதிக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்துகிறது, ஸ்பேஸ்எக்ஸ் "வித்தியாசமாகச் செயல்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
"அதன் புதிய ராக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி செயல்பட்டால், அதன் மூலம் அடிக்கடி மற்றும் குறைந்த செலவில் நிலவிற்கு உபகரணங்களை அனுப்ப முடியும், இது முன்னேற்றத்தை வேகப்படுத்தும்."
இந்தியாவில் ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழகத்தின் விண்வெளி மற்றும் எரிசக்தி ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் உகுர் குவென் கூறுகையில், விரைவான மறுவிநியோகம் மற்றும் அவசரகால பதில் நடவடிக்கை ஆகிய காரணங்களால் ஆரம்பகால மனிதக் குடியிருப்புகளுக்குச் செவ்வாய் கிரகத்தை விட நிலவு சாதகமாக இருக்கிறது என்கிறார்.
"அங்கு உங்களுக்கு ஒரு வாழிடம் இருந்து ஏதேனும் தவறு நடந்தால், உங்களால் உடனடியாக ஒரு தொடர் பயணத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார், பூமியிலிருந்து நிலவிற்கான பயணம் பொதுவாக "இரண்டு முதல் மூன்று நாட்கள்" ஆகும் என்பதையும் குறிப்பிட்டார்.
இருப்பினும், "உண்மையிலேயே சுயமாக இயங்கும் நிலவு நகரம்" என்பது இன்னும் தொலைதூர இலக்காகவே உள்ளது என்று டாக்டர் லிம் எச்சரிக்கிறார்.
"பூமியிலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வராமல் உணவுக்கான ஆதாரங்களை உருவாக்குவதும், அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படும் ஒரு மூடிய அமைப்பை உருவாக்குவதும் மிகவும் சிக்கலானது. அதற்கு அநேகமாகப் பல தசாப்தங்கள் ஆகும். எனவே இந்தத் தொலைநோக்கு பார்வை சாத்தியமானது, ஆனால் அது படிப்படியாக நடக்கும், ஒரே நேரத்தில் நடக்காது."
அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் புவி அறிவியல் பேராசிரியரான கிளைவ் நீல், நிலவில் மனித ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். அவரும் இதை ஒப்புக்கொள்கிறார்.
"நிலவில் மலிவான விலையில் பிரித்தெடுக்கக் கூடிய வளங்கள் இருப்பதை நிரூபிப்பதற்கான ஒரு விரிவான வள-ஆய்வு திட்டத்தை நாம் மேற்கொள்ளும் வரை, அணுகக்கூடிய மற்றும் பிரித்தெடுக்கக் கூடிய வளங்கள் இல்லாமல் ஒரு 'சுயமாக இயங்கும்' நகரத்தை எங்கே அமைப்பது என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியாது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு "சிறிய நிலவு புற நிலையம்" தனக்கான ஆக்சிஜனைத் தயாரிக்கத் தொடங்கும் மற்றும் நீரையும் பிரித்தெடுக்கக்கூடும் என்பது "யதார்த்தமானது" என்று லிம் நம்புகிறார். "அது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும், தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் வானூர்தி மற்றும் விண்வெளிப் பேராசிரியருமான ஜெப்ரி ஹோஃப்மேன் கூறுகையில், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் (அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவை நிலவில் தரையிறங்கும் கலன்களை வெற்றிகரமாக உருவாக்கினால், "இப்போது நம்மால் நிலவுத் தளத்திற்கான தளவாட விநியோகத்தை நிர்வகிக்க முடியும்" என்று வாதிடுகிறார்..
"ஆனால் செவ்வாய் கிரகம் இன்னும் சற்று தொலைவிலேயே உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
நிலையான நிலவு வாழிடங்களை உருவாக்குவதன் மூலம் பெறப்படும் அனுபவம், இறுதியில் செவ்வாய் கிரகத்தில் ஒரு தளத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஹோஃப்மேன் கூறுகிறார்.
குவெனும் இதை ஒப்புக்கொள்கிறார். ஒரு நிலவுத் தளம் நிறுவப்பட்டவுடன், செவ்வாய் கிரகத்தை அடைவது மிகவும் எளிதாகிவிடும், ஏனெனில் நிலவு "ஒரு படிக்கல்லாக" செயல்படும் என்று அவர் கூறுகிறார்.
அதிகரிக்கும் போட்டி

பட மூலாதாரம், Reuters
இந்தத் தசாப்தத்தில் மனிதர்களை மீண்டும் நிலாவிற்கு அழைத்துச் செல்வதில் அமெரிக்கா சீனாவிடம் இருந்து போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில் மஸ்க்கின் கருத்துகள் வந்துள்ளன. 1972-இல் நாசாவின் அப்பல்லோ 17 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு யாரும் நிலவின் மேற்பரப்பில் கால் வைக்கவில்லை.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தான் தலைமை தாங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-ஐ கையகப்படுத்தியுள்ளதாக மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்பேஸ்எக்ஸின் மதிப்பு 1 டிரில்லியன் டாலரின் ஆகவும், ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 250 பில்லியன் டாலர் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு விண்வெளியில் தரவு மையங்களை அமைக்கும் அவரது லட்சியத்திற்கும் உதவக்கூடும், ஏனெனில் அவை அதிக அளவிலான ஏஐ கம்ப்யூட்டிங்கைக் கையாளப் பயன்படுத்தப்படும் என்று நியூயார்க்கில் உள்ள பிபிசியின் மிஷெல் ஃப்ளூரி கூறுகிறார்.
ஸ்பேஸ்எக்ஸின் மிகப்பெரிய பங்குதாரரான மஸ்க், தனது நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான முன்னேற்பாடாக அவற்றைச் சீரமைத்து வருகிறார், ஸ்பேஸ்எக்ஸை பொது நிறுவனமாக்குவதை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது என்று நமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.
இந்த நடவடிக்கை 50 பில்லியன் டாலர் வரை திரட்டக்கூடும், இது வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த மாதம், மஸ்க் விண்வெளியில் ஒரு மில்லியன் தரவு மையங்களை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தார், ஏஐ பயன்பாடு அதிகரிப்பதால் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தத் திட்டம் உதவும் என்று அவர் நம்புகிறார்.
ஆனால் சில நிபுணர்கள் இதில் சந்தேகம் கொள்கின்றனர். விண்வெளியின் வெற்றிடத்தில், ஏஐ மற்றும் தரவு சார்ந்த பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கிராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்களைக் குளிர்விக்கக் காற்று இல்லாததை ஒரு முக்கியச் சவாலாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை, எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் பதிவிற்குப் பதிலளித்த மஸ்க், இந்த ஆண்டு ஸ்பேஸ்எக்ஸின் வருவாயில் நாசாவின் பங்கு 5% க்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.
விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் பணியைக் கொண்ட நாசாவின் ஆர்டெமிஸ் நிலவுத் திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












