நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?

காடு வனம் மனித குரங்கு இயற்கை

பட மூலாதாரம், Elodie Freymann

படக்குறிப்பு, மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர்.

காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ​​​​ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

"இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார்.

காடு வனம் மனித குரங்கு இயற்கை

பட மூலாதாரம், Elodie Freymann

படக்குறிப்பு, காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன

வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள்.

காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர்.

"தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார்.

கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார்.

காடு வனம் மனித குரங்கு இயற்கை

பட மூலாதாரம், Austen Deery

படக்குறிப்பு, மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார்.

"அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன.

மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர்.

கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன.

காடு வனம் மனித குரங்கு இயற்கை

பட மூலாதாரம், Austen Deery

படக்குறிப்பு, அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார்.

"ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார்.

"ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)