மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி? என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய சாராயத்தில் ஏன் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? அது எப்படி விஷமாக மாறி உயிரைப் பறிக்கிறது?
சாராய தயாரிப்பில் மெத்தனால் ஏன் சேர்க்கப்படுகிறது?
அனைத்து வகையான மதுபானங்களிலும் எத்தனால் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. வேதியியல் அடிப்படையில் பார்த்தால், எத்தனால் மனித உடலின் நரம்பு கடத்தலின் அளவைக் குறைக்கிறது.
இதன் காரணமாகப் போதை விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. எத்தனால் வேதிப்பொருளின் விலை அதிகம். இது மதுபானமாக மாற நேரம் தேவைப்படும். அனைத்து மதுபானத்திலும் குறிப்பிட்ட அளவில்தான் எத்தனால் சேர்க்கப்பட்டிருக்கும். பீரில் 5% மற்றும் பிற மதுபானத்தில் 40% வரை எத்தனால் அளவு இருக்கும்.
இது உடனே உயிரைப் பாதிக்கக் கூடிய வேதிப்பொருள் அல்ல. ஆனால், காலப்போக்கில் மது அருந்தும்போது உடல் உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை கொண்டது.
ஆனால், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சாராயம், மெத்தனால் எனப்படும் எரிசாராயம் கலந்து தயாரிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மெத்தனால் என்பது என்ன?
மெத்தனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு அமிலம் ஆகும். வார்னிஷ், தின்னர் போன்ற பொருட்களில் மெத்தனால் பயன்படுத்தப்படும்.
பெரும்பாலும் பெயிண்ட் போன்ற பொருட்களின் உறைதலை தடுக்க இது பயன்படுகிறது. தமிழகத்தில் மெத்தனால் உற்பத்தி, வர்த்தகம், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு உரிமம் தேவை.
அடிப்படையில் மெத்தனால் உயிரைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருள். ஆனால், இதன் விலை குறைவு. ’’ஒரு லிட்டர் மெத்தாலின் விலையே 20 ரூபாய்தான் இருக்கும். விரைவாக மது தயாரிக்கவும், போதையை அதிகரிக்கவும் கள்ளச்சாராய வியாபாரிகள் இதை பயன்படுத்துகின்றனர்’’ என்கிறார் முன்னாள் மதுவிலக்கு போலிசார் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால் எப்போது விஷமாக மாறுகிறது?
மெத்தனால் என்பது உயிரைப் பாதிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ’’மெத்தனாலின் தவறாக வடிகட்டுதல் செயல்முறைகளின் போது, அதிக செறிவுகள் உருவாக்கத்தால் பிரச்னைகள் எழுகின்றன. ஆனால், சட்டவிரோத மதுபான உற்பத்தியில், போதையை அதிகரிக்க மெத்தனால் வேண்டுமென்றே சேர்க்கப்படும் போது அது விஷமாக மாறுகிறது’’ எனக் கூறுகிறது.
மனித உடலில் குறைந்தபட்சம் 30 மில்லி மெத்தனால் சென்றாலே அது உயிரைப் பாதிக்கும் விஷமாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
’’மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை உட்கொள்ளும் அளவைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. மெத்தனால், இரண்டு மணி நேரத்திற்குள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் ஆபத்து கொண்டது’’ என்கிறார் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால் உடலுக்குள் சென்றதும் என்ன நடக்கும்?
மெத்தனாலை ஒரு நபர் அருந்திய பிறகு முதல் சில மணி நேரத்திற்குப் போதையுடன், தெளிவற்ற நிலையில் இருப்பார் எனவும், பிறகுத் தலைவலி ஏற்பட்டு வாந்தி ஏற்படும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பின்னர் வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, மூச்சுத் திணறலை உணர ஆரம்பிப்பார் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது?
நாம் என்ன சாப்பிட்டாலும், அதைச் செரிமானம் செய்வது, நமது வயிற்றில் இருக்கும் என்சைமின் எனப்படும் ஒரு வேதியியல் வினைதான்.
’’மெத்தனால் கலந்த சாராயத்தை ஒருவர் குடித்த உடன், ஆல்கஹால் டிஹைட்ரோஜெனேஸ் (Alcohol dehydrogenase) எனும் வயிற்றில் உள்ள என்சைம் இதற்கு வினையாற்றும். இதன் காரணமாக மெத்தனால், பார்மிக் அமிலம் மற்றும் ஃபார்மால்டிஹைடாக பிரியும். ஃபார்மால்டிஹைட் மற்றும் பார்மிக் அமிலம்தான் அனைத்து பக்க விளைவுகளுக்கும் காரணம். இவை மிகவும் ஆபத்தானவை. ஃபார்மால்டிஹைட் அமிலம் ரத்தத்தில் கலந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் செல்லும்போது ஒவ்வொரு விளைவுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.’’ என்கிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவர் ஆ.முத்து.

பட மூலாதாரம், Getty Images
’’நமது உடலின் இருக்கக் கூடிய ரத்தம் எப்போதும் ஒரு சீரான பி.ஹெச் (Ph) அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் அமிலத்தின் தன்மை அதிகமானால் அதை அசிடோசிஸ் என கூறுவோம். ரத்தத்தில் அமிலம் அதிகமானதால், இதைச் சீராக்குவதற்கு பைகார்பனைட் எனும் ஒரு எதிர்ப்புச் சக்தி உருவாக வேண்டும். ஆனால், எதிர்ப்புச்சக்தியை உருவாக்கக்கூடிய எம்சைமினை, ரத்தத்தில் உள்ள அதி ஆபத்தான அமிலங்கள் அழித்துவிடும். உடலில் ஒரு ஆபத்து வந்தவுடனே, அதை எதிர்க்க கூடிய பொருள் உருவாகும். ஆனால், அதையும் ஆபத்தான அமிலம் அழிக்கும் என்பதால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. ரத்தம் மூலமாகச் செல்லும் இந்த அமிலம், மூளையிலிருந்து கண்ணுக்குச் செல்லக் கூடிய நரம்பில் படிந்துவிடுவதால், கண்பார்வை பாதிக்கப்படுகிறது.’’ என்கிறார் பொது மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ்.
’’வெளியிலிருந்து வரும் பொருட்களை உடைத்து, சிதைத்து அதை உடலில் மற்ற பகுதிக்கு அனுப்புவதுதான் கல்லீரலில் வேலை. இந்த அமிலம் சென்று, கல்லீரலில் இருக்கும் என்சைம்களை கொன்றுவிடும். இதன் காரணமாகக் கல்லீரலில் பாதிப்படைந்து செயலிழந்துபோகும்’’ என்கிறார் மருத்துவர் பாண்டியன்
’’சிறுநீரகத்தில்,இந்த அமிலம் படிந்துவிடுவதால், சிறுநீர் வெளியேற்றத்தை இது தடுக்கும். இதனால் சிறுநீரகத்தின் உப்புசத்து அளவு அதிகரித்து, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் அமிலம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் குறைக்கும். அது ஒரு உறுப்பில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாக இல்லாமல், கல்லீரல், நுரையீரல், நரம்பு மண்டலம் என அனைத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக விரைவாக மரணம் ஏற்படுகிறது.’’ என்கிறார் மருத்துவர் முத்து.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால் குடித்தவரின் உயிரை காப்பாற்ற வழிகள் உள்ளதா?
’’வயிற்றில் உள்ள டிஹைட்ரோஜெனேஸ் (Alcohol dehydrogenase) எனும் எம்சைம், மெத்தனால் உடன் சேரும்போது அது விஷமாக மாறுகிறது. ’Fomepizole எனும் மருந்தை ஊசியாக நரம்பில் செலுத்துவார்கள், இது எம்சைமின் வெளியேற்றத்தை தடுக்கும். ஒருவேளை மெத்தனால் வயிற்றில் உடையாமல் இருந்தால், இது நல்ல பலனை தரும். ஆனால், இவை அனைத்தும் நேரத்துக்கு உட்பட்டது. ஒருவர் விரைவாக மருத்துவமனைக்கு வந்தால்தான் இது சாத்தியமாகும்.
மேலும் மெத்தனால் உடலில் எந்த அளவு உள்ளது என பார்ப்பார்கள். மெத்தனால் குறையும் வரை அந்த ஊசியை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு ஏற்ற சிகிச்சையை அளிக்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் முத்து.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












