அதிகரித்த கள்ளச்சாராய பலி எண்ணிக்கை, அழுகுரலில் மிதக்கும் கள்ளக்குறிச்சி - கள நிலவரம்

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 47 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள்.
கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்த 27 நபர்களின் பிரேதங்கள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு வியாழக்கிழமை அதிகாலை முதல் வரத் துவங்கின.
பிபிசி அங்கு நேரில் சென்றதன் பதிவு, இக்கட்டுரை.

முக்கிய அலுவலகங்களுக்கு அருகிலேயே இருக்கும் பகுதி
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கருணாபுரம் பகுதி. கள்ளக்குறிச்சி நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் இப்பகுதிக்கு 100 மீட்டர் அருகில் தான் உள்ளன. இந்தப் பிரதான அலுவலங்களைத் தாண்டித்தான் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
வியாழன் (ஜூன் 20) காலை 7:00 மணிக்கு கருணாபுரம் பகுதிக்குள் சென்றோம்.
நம்மை வரவேற்றவை: தெருவெங்கும் அழுகுரல்கள், அருகருகே போடப்பட்டிருந்த பந்தல்கள், வாசலிலேயே பிரேதபெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறந்த உடல்கள். அவற்றைச் சுற்றி நின்று அழும் உறவினர்கள் ஒருபுறமும், துக்கம் விசாரிக்க வருபவர்கள் ஒருபுறமும்.சிலர் எந்த வீட்டிற்குச் செல்வது, எத்தனை மாலைகள் வாங்கிச் செல்வது என்று பேசுவது நமது காதில் விழுந்தது. ஒரே தெருவிலேயே பத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இறந்து போன தாய்-தந்தையர்
கருணாபுறம் நடுத்தெருப் பகுதிக்குள் நுழைந்தபோது இரண்டு பள்ளி மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது தாய் வடிவுக்கரசி, தந்தை மாற்றுத்திறனாளியான சுரேஷ் ஆகிய இருவருமே கள்ளச்சாராயம் குடித்ததில் இறந்துவிட்டனர் என்று அழுது கொண்டே கூறினார்.
“எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவர் 11-ஆம் வகுப்பு படிக்கின்றார்,” என்று கூறினார். “சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியவில்லை,” என்று கூறிக் கண்கலங்கினார் அவர்.
அருகே உள்ள வீட்டிலும் கந்தன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து இருந்து விட்டிருந்தார். வயதான அவரது அம்மா முலவி கண்ணீருடன் பேசினார். “என் மகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. நான் என்ன செய்வது? அவ்வப்பொழுது கூலி வேலைக்குச் சென்று தான் கந்தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். நான் இந்த வயதில் என்ன செய்வது?” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதேபோல் லட்சுமி, மணிகண்டன், சுரேஷ், என இறந்து போனவர்கள் அனைவர் வீட்டின் முன்பும் பந்தல் போடப்பட்டு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கருணாபுரம் முழுவதும் அழுகுரல் சத்தம் தான் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
சில வீடுகளில் இறந்த உடலை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸ் கிடைக்காததால் கட்டிலிலேயே சடலத்தைப் போட்டு வைத்து சடங்கு செய்ய தொடங்கியிருந்தனர். மேளச் சத்தங்களை விட அழுகுரல் சத்தம் அதிகமாக கேட்டது.



மருத்துவமனைக்கு வந்த அரசியல் தலைவர்கள்
வியாழன் மதியம் 3.50 மணிக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட நபர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று இறந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வீதம் காசோலைகள் வழங்கினார். அப்பொழுது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உடன் இருந்தனர்.
முன்னதாக செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேசினார்.
“கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது,” என்றார்.
“அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன," எனக் குற்றம்சாட்டினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது.நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது, என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வந்து ஆறுதல் கூறினார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் ஆறுதல் கூறினார். தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்ட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், என்றார். “குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். இந்த விஷச் சாராய உயிரிழப்பு கிராமப் பகுதியில் நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது,” என்றார்..
“விஷச் சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசைப் பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்,” என்றார் அவர். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
இச்சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் கலப்படச் சாராயம் குடித்து மக்கள் பலியாகிய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டார். மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கருணாபுரத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா சகோதரன் தாமோதரன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்ததாக, சின்னதுரை என்பவரையும் தற்பொழுது கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி ஏ.டி.எஸ்.பி கோமதி விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சேலம் மருத்துவமனைகளிலும் 108 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












