இஸ்தான்புல் நகரை கைப்பற்ற 'தரை' வழியே ஒரே இரவில் 72 கப்பல்களை கொண்டு சென்ற சுல்தான் - எப்படி?

பட மூலாதாரம், BRITISH LIBRARY
- எழுதியவர், அய்லியன் யாசான்
- பதவி, பிபிசி துருக்கி
1451 ஆம் ஆண்டு, சுல்தான் இரண்டாம் முகமது இரண்டாவது முறையாக அரியணை ஏறியபோது, அவருக்கு முன் இருந்த சுல்தான்களைப் போலவே, அவரும் கான்ஸ்டான்டிநோபிளை (இன்று இஸ்தான்புல் என்று அறியப்படுவது) கைப்பற்ற வேண்டும் என்று கனவு கண்டார்.
1453 ஏப்ரல் 6 ஆம் தேதி அவர் முதலில் இஸ்தான்புல்லை நிலம் வழியாக முற்றுகையிட உத்தரவிட்டார். ஆனால் பின்னர் அவர் கடல் வழியாகவும் முற்றுகையை துவக்கினார். இதன் மூலம் இஸ்தான்புல்லை கைப்பற்றும் தனது கனவை நனவாக்கி வெற்றி பெற்றார்.
ஒன்றரை மாதங்களுக்கும் மேலான முற்றுகைக்குப் பிறகு இஸ்தான்புல் இறுதியாக 1453 மே 29 ஆம் தேதி கைப்பற்றப்பட்டது. மேலும் சுல்தான் இரண்டாவது முகமதுக்கு சுல்தான் முகமது ஃபாதேஹ் (வெற்றியாளர்) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இஸ்தான்புல் வெற்றியின் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்று, தரை வழியே கோல்டன் ஹார்ன் வரை கப்பல்கள் மற்றும் படகுகள் கொண்டுசெல்லப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. இன்று இஸ்தான்புல்லை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் உள் பாதை இது.
ஆனால் இது எப்படி சாத்தியமானது? இந்த வெற்றியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் நமக்கு என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்தான்புல்லின் மேஸ் பல்கலைக்கழக வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான பேராசிரியர் ஃபெரிதுன் முஸ்தஃபா எம்சென், லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒட்டோமான் பேரரசு மற்றும் நவீன மத்திய கிழக்கு வரலாற்றாசிரியர் மைக்கேல் டால்போட் மற்றும் கடல்சார் வரலாற்றாசிரியர் அலி ரெசா இஷிபெக் ஆகியோரிடம் பேசினோம்.
இரண்டாம் முகமது கோல்டன் ஹார்னை முற்றுகையில் சேர்த்தது ஏன்?

1453 ஆம் ஆண்டில் பைசண்டின் பேரரசு இஸ்தான்புல்லின் 'வரலாற்று தீபகற்பம்' என்று நாம் இன்று அறியும் பகுதி வரை மட்டுமே பரவியிருந்தது. அந்த நேரத்தில், இன்றைய குலாட்டாவாக இருக்கும் பேரா பகுதி ஜெனீவாவின் காலனியாக இருந்தது.
ஒட்டோமான் பேரரசு பைசண்டின் தலைநகரைக் கைப்பற்ற விரும்பியது. அந்த தலைநகரம் அனடோலியாவிற்கும் ஐரோப்பாவில் உள்ள அதன் பிரதேசங்களுக்கும் இடையில் அமைந்திருந்தது. மேலும் தன் பேரரசை கிழக்கிலிருந்து மேற்கு வரை உலகத்துடன் இணைக்க அது விரும்பியது.
ஏப்ரல் 6 ஆம் தேதி நகரின் மேற்குச் சுவர்களை அடைந்த பிறகு ஒட்டோமான் வீரர்கள் அதன் பல அடுக்குகள் தடிமனான மற்றும் ஊடுருவ முடியாத சுவர்களை பீரங்கிகளால் சுடத் தொடங்கினர். ஆனால் அதன் கடற்படையால் கோல்டன் ஹார்ன் அருகே பைசண்டின் பேரரசு எழுப்பிய வலுவான தற்காப்பு சுவரை கடக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்மாரா கடல் வழியாக கோல்டன் ஹார்னுக்குள் நுழைய முடியவில்லை.
இருப்பினும் இந்த சூழ்நிலையில் சுல்தான் இரண்டாவது முகமது. தரைவழியாக கோல்டன் ஹார்னை நோக்கி கப்பல்களை அனுப்ப ஏன், எப்போது உத்தரவிட்டார்?
இஸ்தான்புல்லை கைப்பற்றியதை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் எழுதப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.1453 நிகழ்வுகள் பற்றி முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒரு விஷயத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர். அதாவது, இஸ்தான்புல்லின் தற்காப்புச் சுவர்களில் பலவீனமான இடங்கள் கோல்டன் ஹார்னின் கடற்கரையைச் சுற்றி இருந்தன.
இரண்டாம் முகமது தனது சுல்தானகத்தின் தொடக்கத்திலிருந்தே இஸ்தான்புல் முற்றுகையைத் திட்டமிடத் தொடங்கினார் என்றும், கோல்டன் ஹார்னுக்குள் சென்றடைவதும் இதில் அடங்கும் என்றும் இஸ்தான்புல் ஆக்கிரமிப்பை ஆழமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஃபெரிதுன் எம்சென் கூறுகிறார்.
“முகமது ‘ஃபதேஹ்’, கலிபோலியில் சுமார் 100 கப்பல்களைத் தயார் செய்து இஸ்தான்புல்லுக்குக் கொண்டு வந்தார். இது தவிர, க்ரூஸேடர்ஸ் (கிறிஸ்தவர்கள்) கோல்டன் ஹார்னுக்குள் நுழைந்து 1204 இல் இஸ்தான்புல்லைக் கைப்பற்றியதையும் சுல்தான் இரண்டாம் முகமது அறிந்திருந்தார் என்றே தோன்றுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
"நிலப் பாதையைச் சுற்றியுள்ள சுவர்களின் நீளம் ஏழு முதல் எட்டு கிலோமீட்டர்கள். மற்ற சுவர்களுடன் சேர்த்து அதன் மொத்த நீளம் 22 கிலோமீட்டர்கள். எனவே அந்தப் பகுதிகள் அனைத்தையும் முழுமையாக சுற்றி வளைத்து, கடற்படை மூலம் கோல்டன் ஹார்னில் உள்ள பலவீனமான சுவர்களைக் குறிவைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
முற்றுகையின் ஆரம்பத்திலிருந்தே இந்த நடவடிக்கைக்கு முகமது 'ஃபதேஹ்' தயாராக இருந்ததாகவும், அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் சில வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வால்டர் கே ஹனக் மற்றும் மரியோ பிலிப்பைட்ஸ் ஆகியோர் 2011 இல் 'கான்ஸ்டான்டிநோபிளின் முற்றுகை மற்றும் வீழ்ச்சி' என்ற புத்தகத்தை எழுதினர்.
இரண்டாம் முகமது தரைவழியாக கப்பல்களை அனுப்பும் திட்டத்தை சிறிது காலம் தள்ளிவைத்ததாகவும், ஆனால் பைசண்டின்களுக்கு உதவ வீனஸின் கப்பல்கள் வருவதை அறிந்ததும், அவர் தனது திட்டத்தை ரத்து செய்ததாகவும், கப்பல்களை உடனடியாக அனுப்பியதாகவும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
எந்தப் பாதையில் கப்பல்கள் கொண்டு செல்லப்பட்டன?
கப்பல்கள் தரைவழியாக அங்கு சென்றடைய முடியுமா என்பதில் வரலாற்றாசிரியர்கள் ஒருமனதாக இல்லை.
'ஆர்ட்டிலரி' பகுதியிலிருந்து கப்பல்கள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டதாகவும், ஜெனீவாவின் காலனியான பேராவின் எல்லைகளை விட்டுவிட்டு, காசிம் பாஷா பகுதியில் உள்ள சேற்றில் தரையிறக்கப்பட்டதாகவும் சில ஆதாரங்கள் கூறுகின்றன.
அது சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள பாதை. ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. டோல்மே பாக் பகுதியில் இருந்து கப்பல்கள் அனுப்பப்பட்டதாக சமீபத்திய ஆராய்ச்சியில் ஒரு கருத்து வெளிவந்துள்ளது.
”ஒட்டோமான் வட்டாரங்கள் அந்த இடத்தை பிரத்யேகமாக குறிப்பிடவில்லை. ஆனால் அத்தகைய தகவல்கள் பைசண்டின் ஆதாரங்களில் உள்ளன. அதன் அடிப்படையில் கப்பல்கள் சீஃப்டா ஸ்டோனலர் என்ற இடத்திலிருந்து தரைவழியாக கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. இன்று இந்த இடம் டோல்மே பாக் மற்றும் காப்தாஷ் இடையே அமைந்துள்ளது,” பேராசிரியர் ஃபெரிதுன் எம்சென் குறிப்பிட்டார்.
சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல்கள் தரைவழியாக தொடர்ந்து அனுப்பப்பட்டதாகவும் ‘கான்ஸ்டான்டிநோபிள் முற்றுகை மற்றும் வீழ்ச்சி’ புத்தகம் தெரிவிக்கிறது.
“இந்த காரணத்திற்காகவே கப்பல்கள் டோல்மே பாக் பகுதியில் இருந்து தரைவழியே கொண்டு செல்லப்பட்டன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கப்பல்கள் பீரங்கி பகுதியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டிருந்தால், அவை மற்ற திசையில் இருந்து பார்க்கப்பட்டிருக்கும், மேலும் இது பற்றி பைசண்டின்களுக்கு தெரிந்திருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, இந்தக் கப்பல்கள் எந்தப் பாதையில் கொண்டு செல்லப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தக் கப்பல்கள் அயூப் பகுதியில் இருந்து அல்லாமல் காசிம் பாஷா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஒருமனதாக கருதுகின்றனர்.
துருக்கிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் விரிவான அறிக்கை 'ஃபதஹ் இஸ்தான்புல்' என்ற தலைப்பில் 1979 இல் வெளிவந்தது. அதில் பல்வேறு வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பேராசிரியர் ஃபெரிதுன் எம்சென் மற்றொரு கண்ணோட்டத்தையும் அளிக்கிறார். சில கப்பல்கள் அந்த இடத்திலேயே கட்டப்பட்டன என்று அவர் கூறுகிறார். பெரிதாக இல்லாத சில கப்பல்கள் ஓகே சமவெளியில் கட்டப்பட்டு பின்னர் மெதுவாக அயூப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன என்று மற்றொரு கூற்று தெரிவிக்கிறது.
கிரீன்விச் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய மைக்கேல் டால்போட், கப்பல்களின் திசை மற்றும் அவற்றின் வகை குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
"1453 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக இருந்தாலும் கூட, அதைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஆதாரங்கள் அதிகம் இல்லை. இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் கப்பல்கள் வருவதையும் போவதையும் பற்றி பேசுகின்றன. அதாவது இந்தசம்பவம் இட்டுக்கட்டப்பட்ட கதையல்ல. ஆனால் பல சிறிய படகுகள் நிலத்தில் கட்டப்பட்டு பின்னர் கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டன என்று தெரிகிறது,” என்றார் அவர்.
அந்தக் கப்பல்கள் எவ்வளவு பெரியவை?

பட மூலாதாரம், Getty Images
இஸ்தான்புல் வெற்றியைப் பற்றிய திரைப்படங்கள் அல்லது ஓவியங்களில் ஓட்டோமான் கடற்படையில் இணைக்கப்பட்ட பெரிய கப்பல்களைக் காண்கிறோம். மேலும் அவை வீரர்களால் எண்ணெய் கசடுகள் வழியாக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் படங்கள் மற்றும் ஓவியங்களில் காட்டப்படும் கப்பல்களின் உண்மையான அளவு பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது.
அலி ரெசா இஷிபெக், கடல்சார் வரலாற்றாசிரியர். அவற்றில் பெரும்பாலானவை உண்மையில் பெரிய படகுகள் என்று அவர் கூறுகிறார்.
“அப்போது ட்ரோமன் வகை கப்பல்கள் இருந்தன. அவை ’கேலி கப்பல்களின்’ வடிவத்தை எடுத்திருக்கவில்லை. கப்பல்கள் சுமார் 15 மீட்டர் நீளம் கொண்டவை. அவற்றில் பீரங்கிகள் பொருத்தப்படவில்லை. அவை நீண்ட மற்றும் பெரிய படகுகள் போல இருந்தன." என்றார் அவர்.
"அந்த நேரத்தில் மேற்கத்திய பேரரசுகளிடம் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கடற்படை மற்றும் வணிகக் கப்பல்கள் இருந்தன.”
1453 ஏப்ரல் 22 ஆம் தேதி மொத்தம் 72 கப்பல்கள் தரை வழியாக கொண்டுசெல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டதாக ‘கான்ஸ்டான்டிநோபிளின் முற்றுகையும் வீழ்ச்சியும்’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் 30 ’கேலியன்’ கப்பல்கள் மற்றும் ஏராளமான சிறிய ஒட்டோமான் கப்பல்கள் அடங்கும்.
கப்பல்கள் உண்மையில் இரவோடுஇரவாக அனுப்பப்பட்டதா?

கப்பல்கள் இரவோடு இரவாக அனுப்பப்பட்டதாக எல்லா பைசண்டைன் ஆதாரங்களும் ஒப்புக்கொள்கின்றன என்று பேராசிரியர் ஃபெரிதுன் எம்சென் கூறுகிறார். "இந்த தகவல் நீண்ட காலமாக நவீன வரலாற்றாசிரியர்களால் எந்த சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஒட்டோமான் ஆதாரங்களில் இந்த நிகழ்வுகளின் காலம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை கப்பல்கள் ஒரே இரவில் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படவில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்..
ஒட்டோமானின் இந்த ஏற்பாடுகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை பைசண்டின் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் காட்டுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், FAUSTO ZONARO
‘கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சி’ என்ற தலைப்பிலான வரலாற்றுப் புத்தகமும் அன்றைய இரவைப் பற்றிய இந்தத் தகவலை வழங்குகிறது: “சேகரிக்கப்பட்ட விறகுகள் மூலமாக சக்கர டிராம்கள் உருவாக்கப்பட்டு, அந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது காசிம் பாஷாவுக்கு கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. ஏப்ரல் 21ம் தேதி இரவு நடவடிக்கை வேகமெடுத்தது.
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இறுதி தயாரிப்புகளை முடித்தனர். இந்த நேரத்தில் சுல்தான், பேரா பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பீரங்கிகளை தொடர்ந்து சுட உத்தரவிட்டார். இதனால் தரையில் என்ன நடக்கிறது என்பது அருகிலுள்ள கப்பல்களுக்குத் தெரியாமல் இருக்கும். சில பீரங்கிகளிடம் பேராவின் சுவர்களில் வேண்டுமென்றே சுடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நிகழ்வுகள் பற்றிய தகவல்களை ஜெனிவா வீரர்கள் அறியாமல் இருக்க இவ்வாறு செய்யப்பட்டது."
மறுநாள் காலையில் பைசண்டின்கள் கப்பல்களைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக புத்தகம் குறிப்பிடுகிறது. இருதரப்பிலும் ஏராளமான உளவாளிகள் இருந்தபோதிலும் இந்த நடவடிக்கை பைசண்டின் காதுகளை எட்டவில்லை. சுல்தான் முகமதுவின் ராணுவத்திற்கு இது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












