மனிதன் போலவே விலங்குகளுக்கும் 'உணர்வு' உண்டா? ஆய்வில் வெளிவந்த உண்மைகள்

விலங்குகளுக்கு உணர்வு இருக்கிறதா? புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும் உண்மை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பல்லப் கோஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பரிணாமக் கோட்பாட்டை வழங்கியமைக்காக சார்லஸ் டார்வின் விஞ்ஞானிகளிடையே கடவுளைப் போன்று மதிக்கப்படுகிறார். அதே சமயம் மனிதர்களைப் போலவே விலங்குகளும் உணர்வுடன் இருக்கின்றன என்ற அவரது கருத்துகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டன. இப்பொழுது வரை பலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

"பிரியம், வலி, மகிழ்ச்சி மற்றும் துன்பம் உள்ளிட்ட உணர்வுகளை உணரும் திறனில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை" என்று டார்வின் சொன்னார்.

ஆனால் விலங்குகளின் நடத்தைகளை ஆராயும் வல்லுநர்கள் பலர், விலங்குகளுக்கு எண்ணங்களும் உணர்ச்சிகளும் உள்ளன என்ற அவரது கோட்பாட்டை விஞ்ஞான நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டது என்று கருதினர்.

விலங்குகளின் எதிர்வினைகளின் அடிப்படையில் அவற்றுக்கு உணர்வு இருப்பதாக சொல்வது பெரிய பாவமாகக் கருதப்பட்டது. மனித குணாதிசயங்கள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகள் விலங்குகளுக்கும் உள்ளன என்று சொல்வதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்றும் விலங்குகளின் மனதில் என்ன நடக்கிறது என்பதை மதிப்பிடுவது சாத்தியமில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஒருவேளை விலங்குகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரவும் செயல்படுத்தவும் கூடியவை என்று கூறும் புதிய ஆய்வுச் சான்றுகள் வெளியானால், அவை உண்மையில் உணர்வுள்ளவை என்று அர்த்தப்படுத்த முடியுமா?

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புத்திசாலித்தனம் கொண்ட தேனீ இனம்

தேனீக்களால் எண்ணவும், முகங்களை அடையாளம் காணவும் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தவும் முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனில் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லார்ஸ் சிட்கா தேனீக்களின் நுண்ணறிவு பற்றிய பல முக்கிய ஆய்வுகளில் பணியாற்றியுள்ளார்.

"தேனீக்கள் இந்தளவுக்கு புத்திசாலியாக இருக்குமானால், அவற்றால் சிந்திக்கவும் உணரவும் சாத்தியம் இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியர் சிட்காவின் ஆய்வுகளில், தேனீக்கள் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு பிறகு தேனீக்கள் தங்கள் நடத்தையை மாற்றியமைத்து, சிறிய மரப் பந்துகளை உருட்டி விளையாடக் கூடும். அதனை தேனிக்கள் ஒரு செயலாக ரசித்து செய்ததாக தோன்றியது” அவர் கூறுகிறார்.

விலங்குகள் பற்றிய ஆய்வுகள் துறையில், மிகவும் முக்கியமான மற்றும் நன்கு மதிக்கப்படும் விஞ்ஞானிகளில் ஒருவர், பின்வரும் வலிமையான, கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு அறிக்கையை இந்த ஆய்வு முடிவுகளால் உறுதிப்படுத்தியுள்ளார்:

"அவரின் மேசை மேல் உள்ள அனைத்து தரவுகளையும் ஆதாரங்களையும் கொண்டு, தேனீக்கள் உணர்வுடன் இருக்க வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆய்வு தேனீக்களுக்கு மட்டும் இன்றி மற்ற விலங்குகளுக்கும் பொருந்தும். விலங்குகளின் உணர்வு பற்றிய அறிவியலைப் புரிந்துகொள்வதில் மிகவும் ஆழமான அதே சமயம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய சான்றுகள் கண்டுபிடிப்பால் இது நிகழ்ந்துள்ளது என்றும், இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பல விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். இதில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பேராசிரியர் ஜோனாதன் பிர்ச் என்ற விஞ்ஞானியும் அடக்கம்.

"பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் உணர்வுத் திறனை சுற்றியுள்ள கேள்விகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகள் அத்தகைய நம்பிக்கைகளுக்கு எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்கின்றனர்." என்று பேராசிரியர் பிர்ச் கூறுகிறார்.

விலங்குகள் விழிப்புணர்வு கொண்டவை

நீங்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை கொண்ட ஒரு `யுரேகா’ தருணத்தை தற்போது தேடினால் கண்டிப்பாக அது சாத்தியமாகாது.

மாறாக, நம் நம்பிக்கைகள் பற்றி மறுபரிசீலனைக்கு அழைப்பு விடுக்கும் ஆதாரங்கள் வளர்ந்து வருவது, விஞ்ஞானிகள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் விஞ்ஞான சிந்தனையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

பேராசிரியர் பிர்ச்சின் கூற்றுப்படி, தற்போதைய கண்டுபிடிப்புகள் விலங்குகளுக்கு உணர்வுகள் உள்ளன என்பதற்கான உறுதியான ஆதாரத்தை வழங்காவிட்டாலும், விலங்குகள் விழிப்புணர்வு கொண்டவை என்பதற்கான "சாத்தியம்" இருப்பதாக ஆராய்ச்சி குழு தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழுவின் கூற்றுபடி, உணர்வுகள் பற்றிய ஆய்வு முடிவுகள் மற்ற விலங்குகளை காட்டிலும் வளர்ச்சியின் மேம்பட்ட நிலையை எட்டிய குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்ற உயர்நிலை விலங்குகளுக்கு அதிகம் பொருந்தும். பாம்புகள், ஆக்டோபஸ்கள், நண்டுகள், தேனீக்கள் மற்றும் ஈக்கள் போன்ற எளிய உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.

மேலும் விலங்குகள் உண்மையில் உணர்வுடன் உள்ளனவா, அப்படியானால், எந்த அளவிற்கு அவற்றுக்கு உணர்வுகள் இருக்கிறது என்பதை தீர்மானிக்க பெரிய ஆராய்ச்சிகள் தேவை. அதற்கு நிதித்தேவையும் உள்ளது.

ஆனால் இந்த `உணர்வு’ (consciousness) என்பதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களை போன்று பலர் அதன் சரியான அர்த்தம் தெரியாமல் தேடுகின்றனர். விஞ்ஞானிகளால் கூட அதன் சரியான அர்த்தத்தை வரையறுக்க முடியவில்லை.

மொழியும் உணர்வும்

ரெனே டெஸ்கார்ட்ஸ், ஒரு பிரெஞ்சு தத்துவஞானி, 17 ஆம் நூற்றாண்டில் `உணர்வுகள்’ பற்றி புரிந்து கொள்ள ஒரு ஆரம்ப முயற்சியை மேற்கொண்டார்.

அப்போது அவர், "என்னால் நினைக்க முடிகிறது, அதனால் உயிர்வாழ முடிகிறது".

"உடலில் மறைந்திருக்கும் சிந்தனையின் ஒரே அடையாளம் மொழி" என்று அவர் கூறினார்.

இருப்பினும், உணர்வு என்றால் என்ன என்பதற்கான வரையறையை கண்டறிவதில் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் சேத், ரெனே டெஸ்கார்ட்ஸ் கூறிய கருத்துகள் நீண்ட காலமாக உணர்வுகள் பற்றிய குழப்ப நிலையை ஏற்படுத்திவிட்டதாக நம்புகிறார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், "மொழி, நுண்ணறிவு மற்றும் உணர்வு என்ற இந்த புனிதமற்ற திரித்துவம் (unholy trinity) டெஸ்கார்ட்டஸ் கூறிய காலகட்டத்தில் இருந்து அப்படியே தொடர்கிறது" என்று கூறினார். அவரின் பேச்சில், டெஸ்கார்ட்டஸ் சொன்ன கோட்பாடு இதற்கு முன்பு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்று அவர் கொஞ்சம் வருத்தப்பட்டதை பிரதிபலித்தது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதன்முதலில் தோன்றிய `நடத்தைவாதம்’ (behaviourism) என்னும் கருத்தாக்கம், "புனிதமற்ற திரித்துவத்தை" மையமாகக் கொண்டிருந்தது. கருத்துகள் மற்றும் உணர்வுகளை அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி அளவிட இயலாது என்பதால், நடத்தையை(behaviour) பற்றி பகுப்பாய்வு செய்யும் போது அவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

பேராசிரியர் சேத் கூறுகையில், இந்த கருத்து விலங்குகளின் நடத்தைகளை ஆய்வு செய்யும் பல நிபுணர்களின் மனதில் வேரூன்றி இருந்தாலும், தற்போது மெல்லமெல்ல மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை குறைத்து வேறுவிதமாக அணுகுவதற்கு வழிவகுக்கத் தொடங்குகிறது.

நமது மனிதக் கண்ணோட்டத்தின் படி, `உணர்வு’ என்பதை புத்திசாலித்தனம் மற்றும் மொழி ஆகியவற்றுடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறது. அவை மனிதர்களுக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதால் அனைத்து உயிரினங்களுக்கு அப்படி தான் இருக்கும் என்று அர்த்தமில்லை” என்று விளக்குகிறார்.

"உணர்வு" என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் சிலர் வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

கியூபெக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவன் ஹர்னாட் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, இந்த துறையில் பயன்படுத்தப்படும் பல தெளிவற்ற வார்த்தைகளில் `உணர்வும்’ ஒன்றாகும்."

"இது பலரால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் அவை அனைத்தும் வித்தியாசமான ஒன்றைக் குறிக்கின்றன, எனவே இதன் அர்த்தம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை." என்கிறார்.

உணரும் திறன் என்பதை துல்லியமாக குறிப்பிடும் சொல் ”sentience” (உணரும் தன்மை) என்று கூறிய அவர், ``இந்த சொல் மிகவும் பொருத்தமானது. நிறங்களைப் பார்க்க, சோர்வாகவும் பசியாகவும் உணர என நீங்கள் உணரும் அனைத்து விஷயங்களையும் இது குறிக்கும்" என்கிறார் பேராசிரியர் ஹர்னாட்.

விலங்குகள் உணர்வுடன் இருப்பதற்கான சாத்தியத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சிலர், `உணர்வு’ என்ற வார்த்தையின் விரிவாக்கப்பட்ட வரையறையின் விளைவாக விஷயங்கள் மாறிவிட்டதாகக் கூறுகின்றனர்.

நடத்தையியல் ஆய்வுகளுடன் தொடர்புடைய ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் டாக்டர் மோனிக் உடெல்,

"நாம் வித்தியாசமான நடத்தைகளைப் பார்த்தால், எடுத்துக்காட்டாக, கண்ணாடியில் எந்த இனங்கள் தங்களை அடையாளம் காண முடியும், எத்தனை விலங்குகள் முன்னோக்கி திட்டமிட முடியும் அல்லது கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும், இந்த கேள்விகளை நாம் ஆய்வு மேற்கொள்வது மற்றும் விலங்குகளை கவனிப்பதன் மூலம் சோதிக்க முடியும். தரவுகளின் அடிப்படையில் துல்லியமான முடிவுகள் கிடைக்கும்," என்று விளக்குகிறார்.

"மேலும் `உணர்வு’ என்பது நம்மால் கவனிக்கக் கூடிய அளவிடக் கூடிய நடத்தைகள் என்று வரையறுக்கப்பட்டால், இந்த குறிப்பிட்ட பணிகளில் திறமையாக இயங்கும் விலங்குகள் உணர்வு கொண்டிருப்பதாக கருதலாம்.” என்றும் அவர் கூறுகிறார்.

புதிய ஆய்வுக் குழுக்கள் வாதிடுவதை விட இது உணர்வு பற்றிய மிக குறுகிய வரையறையாகும். டாக்டர். உடெல்லின் கருத்துப்படி, விஞ்ஞானம் என்பது உண்மையில் ஒரு மரியாதையான கருத்துப் பரிமாற்றத்தைப் பற்றியது என்கிறார்.

சிறிய உயிரினங்களின் உணர்வுத் திறனை ஆராய்வதன் அவசியம்

"சிந்தனைகளை செலுத்தி, விமர்சனக் கண்களில் பார்க்கும் நபர்களைக் கொண்டிருப்பது முக்கியம். ஏனென்றால் ஒரு விஷயத்தில் பல்வேறு கேள்விகளை நாம் வெவ்வேறு வழிகளில் எழுப்பவில்லை என்றால், முன்னேறுவது கடினமாக இருக்கும்." என்கிறார்.

இந்த ஆய்வுகளின் அடுத்தக் கட்டம் என்ன? உணர்வுத் திறனை ஆராய கணிசமாக அதிகமான விலங்குகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

"தற்போது, ​​பெரும்பாலான ஆராய்ச்சிகள் மனிதர்கள் மற்றும் குரங்குகள் மீது நடத்தப்படுகின்றன. மேலும் உணர்வுத் திறன் பற்றி அதன் மிக அடிப்படையான வடிவங்களில் நாம் புரிந்து கொள்ளாததால், ஆய்வுப் பணியை மிகவும் கடினமாக்குகிறோம்." என்று டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் எண்ணங்களை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற தத்துவப் பேராசிரியரான கிறிஸ்டின் ஆண்ட்ரூஸ் கூறுகிறார்.

மனிதர்கள் மற்றும் குரங்குகள் பற்றிய ஆய்வுகள் உயர் நிலை உணர்திறனை ஆராய்வதாகக் கருதுகின்றனர், இது சிக்கலான உணர்ச்சி மற்றும் தகவல்தொடர்பு திறன் போன்ற உயர்நிலை உணர்திறனை ஆராயும் விஞ்ஞானிகள், ஒரு ஆக்டோபஸ் அல்லது பாம்பில் குறைந்த அளவிலான உணர்வு இருக்கலாம் என்பதை கவனிக்க தவறுகின்றனர் என்று பேராசிரியர் ஆண்ட்ரூஸ் மற்றும் பலர் நினைக்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 286 ஆராய்ச்சியாளர்கள் கையெழுத்திட்டுள்ள விலங்கு உணர்வுத்திறன் குறித்த நியூயார்க் பிரகடனத்தின் (New York Declaration on Animal Consciousness) முக்கிய ஆதரவாளர்களில் பேராசிரியர் ஆண்ட்ரூஸும் ஒருவர்.

நான்கு பத்திகள் மட்டுமே கொண்ட அந்த அறிக்கை, விலங்குகள் உணர்வுள்ளவை என்ற கருத்தை நிராகரிப்பது "பொறுப்பற்ற செயல்" என்று கூறுகிறது.

கிறிஸ் மேகி என்பவர் `அண்டர்ஸ்டாண்டிங் அனிமல் ரிசர்ச்’ என்னும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர். இது ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விலங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் பிரிட்டன் அமைப்பாகும்.

அவரைப் பொருத்தவரை, மருத்துவ ஆராய்ச்சியின் நன்மைகள் அவை ஏற்படுத்தும் துன்பத்தை விட அதிகமாக இருந்தால் மட்டுமே விலங்குகள் மீதான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், விலங்குகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்று வரும்போது அவை ஏற்கனவே விழிப்புடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.

"விலங்குகள் முன்னெச்சரிக்கை அணுகுமுறையைக் கொண்டிருப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன" என்று அவர் கூறுகிறார்.

"இருப்பினும் நண்டுகள், கல் இறால் போன்ற வெளி ஓடுடைய கிரஸ்டசீன்(crustaceans) இனங்களை பற்றி ஆய்வு செய்ய பல விஷயங்கள் உள்ளன.

அவற்றின் வாழ்நாள் அனுபவத்தைப் பற்றியோ அல்லது அவற்றின் இறக்கும் தருவாய் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றியோ நமக்கு அதிகம் தெரியாது.”

"சிறிய உயிரினங்களை பற்றிய ஆய்வு முக்கியமானது, ஏனென்றால் ஆய்வகத்திலோ அல்லது காடுகளிலோ அவற்றைப் பாதுகாப்பதற்கான விதிகளை நாம் உருவாக்க வேண்டும்." என்று விவரித்தார்.

2021 இல் பேராசிரியர் பிர்ச் தலைமையிலான அரசாங்க மதிப்பாய்வு, ஆக்டோபஸ், ஸ்க்விட் மற்றும் கட்ஃபிஷ் உள்ளிட்ட டெகாபாட்கள் (decapods) மற்றும் செபலோபாட்களின் (Cephalopods) உணர்வு பற்றிய 300 அறிவியல் ஆய்வுகளை மதிப்பிட்டது.

இந்த உயிரினங்கள் வலி, இன்பம், தாகம், பசி, அரவணைப்பு, மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் உற்சாகம் போன்ற உணர்வுகளை அனுபவிக்க முடியும் என்பதற்கு வலுவான சான்றுகள் இருப்பதாக பேராசிரியர் பிர்ச்சின் குழு கண்டறிந்தது. அதன் முடிவுகள் 2022 இல் இந்த உயிரினங்களை அதன் விலங்கு நல (உணர்வு) சட்டத்தில் சேர்க்க அரசாங்கத்திற்கு வழிவகுத்தது.

"ஆக்டோபஸ் மற்றும் நண்டுகள் நலன் தொடர்பான பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன," என்கிறார் பேராசிரியர் பிர்ச்.

"வளர்ந்து வரும் விஞ்ஞானம் இந்த பிரச்னைகளை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக் கொள்ள சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும்." என்றார்.

லட்சக்கணக்கான வெவ்வேறு வகையான விலங்குகள் உள்ளன. அவை அனைத்தும் உலகை எவ்வாறு அனுபவிக்கின்றன என்பது குறித்து விலைமதிப்பற்ற ஒரு சிறிய அளவிலான ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேனீக்கள் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். பிற ஆராய்ச்சியாளர்கள் கரப்பான் பூச்சிகள் மற்றும் பழ ஈக்களில் கூட உணர்வுத் திறன் இருக்கும் நடத்தைக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளனர். பல சிறிய விலங்குகளை உள்ளடக்கிய சோதனைகள் எதிர்காலத்தில் செய்யப்பட உள்ளன.

நியூயார்க் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சமகால மாற்று கருத்து உடையவர்கள் (Heretics) கேலி செய்யப்பட்டனர். இந்த ஆய்வுப்பகுதியை பலர் புறக்கணித்துள்ளனர். பொருளாதாரத் தடைகளைக் கொண்டிருப்பதும், பிற விஞ்ஞானிகளால் சொல்ல முடியாததைச் சொல்வதும் இந்த மாற்று சிந்தனைக்காரர்களுக்கு புதிதல்ல.

கலீலியோ கலிலி, ஒரு இத்தாலிய வானியலாளர், கத்தோலிக்க திருச்சபையால் "விரோத நம்பிக்கையின் தீவிர சந்தேகத்திற்குரியவராக" கருதப்பட்டார், பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல என்று முன்மொழிந்தார், அதே காலக்கட்டத்தில் தான் ரெனே டெஸ்கார்ட்ஸ், "என்னால் நினைக்க முடிகிறது அதனால் உயிர்வாழ முடிகிறது" என்று கூறினார்.

சமீப கால மன மாற்றத்தின் விளைவாக பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வையும் அதில் நமதுப் பங்கும் மாறிவிட்டது.

மனிதர்களாகிய நாம் இந்த பிரபஞ்சத்தின் மையம் இல்லை என்று மீண்டும் ஒருமுறை உணர்ந்து உற்று நோக்கினால், நம்முடன் இந்த கிரகத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற உயிரினங்களைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)