உலகின் மிக ஆபத்தான சிறையிலிருந்து ஒரு ஸ்பூன் உதவியுடன் தப்பிய மூவர் குறித்து இன்னும் மர்மம் ஏன்?

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை
    • எழுதியவர், மைல்ஸ் பர்க்
    • பதவி, பிபிசி

1962-ஆம் ஆண்டு, ஜூன் 12-ஆம் தேதி மூன்று கைதிகள், உலகின் மிக ஆபத்தான சிறை என்று கருதப்படும் அமெரிக்காவின் அல்காட்ராஸ் தீவிலிருக்கும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். அதன்பிறகு அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அப்படித் தப்பிச் சென்ற ஃபிராங்க் மோரிஸ் மற்றும் ஆங்கிலின் சகோதரர்கள் என்ன ஆனார்கள் இன்னும் என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் அமெரிக்காவின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து அவர்கள் தைரியமாகத் தப்பித்ததன் பின்னால் இருக்கும் புத்தி கூர்மையும் மன உறுதியும் இப்போதும் மக்களைக் கவர்கிறது. இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி சம்பவ இடத்திற்குச் சென்றது.

1964-ஆம் ஆண்டு மே மாதம் பிபிசி பனோரமாவின் மைக்கேல் சார்ல்டன், சிறைச்சாலைத்தீவான அல்காட்ராஸைப் பார்வையிட, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் சலசலக்கும் நீரின் குறுக்கே 'குற்றங்களின் உலகில் அனைவருமே அஞ்சும் மிகவும் பயங்கரமான பயணத்தை' மேற்கொண்டார். 'தி ராக்' என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டாட்சிச் சிறைச்சாலையில் அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் சிலர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இது ஊடுருவ முடியாத கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் 1962-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி காலை வேளையில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மூன்று பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்.

வளைகுடாவின் நுழைவாயிலைக் காக்க அல்காட்ராஸ் முதலில் ஒரு கடற்படை பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கைப்பற்றப்பட்ட கைதிகள், தீவின் தனிமை, செங்குத்தான பாறைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள வேகமான, நடுங்கவைக்கும் குளிர் நீரோட்டம் காரணமாக அங்கு அடைக்கப்பட்டனர். இது 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராணுவ சிறைச்சாலையாக உருமாற்றம் செய்யப்பட்டது.1930-களில் அமலில் இருந்த மது தடையின் போது பெருகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க அமெரிக்கா போராடிக்கொண்டிருந்தபோது, நீதித்துறை, சிறைசாலையை தன்வசம் எடுத்துக் கொண்டது. விரைவில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் கூட்டாட்சி சிறை அமைப்பிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்டனர்.

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை

அமெரிக்காவின் 'மிக ஆபத்தான' குற்றவாளிகள்

ஆபத்தான குற்றவாளிகள் எனக் கருதப்பட்ட அல் கபோன், மிக்கி கோஹன், மற்றும் ஜார்ஜ் 'மெஷின் கன்' கெல்லி, தண்டனை பெற்ற கொலைக் குற்றவாளி ராபர்ட் ஸ்ட்ரூட் ஆகியோர் அதன் மிகவும் பிரபலமான கைதிகளில் அடங்குவர்.

ராபர்ட் ஸ்ட்ரூட் பின்னர் 'அல்காட்ராஸின் பறவை மனிதர்' என்று அறியப்பட்டார். "இவர்கள் மிகவும் கொடூரமானவர்களாகவும், தொந்தரவு அளிப்பவர்களாகவும் இருந்ததால் இவர்களை சாதாரண சிறையில் வைப்பது மிகவும் கடினம்,” என்று பிபிசி-யின் சார்ல்டன் இவர்களைப் பற்றிக் கூறினார்.

பனோரமா அங்கு செல்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஃபிராங்க் லீ மோரிஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். 11 வயதில் அனாதையாகி, 13 வயதில் தனது முதல் குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்ட மோரிஸ், தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல்வேறு சீர்திருத்த அமைப்புகளில் கழித்தார். மிகவும் புத்திசாலியாகக் கருதப்பட்ட அவர், அனுபவம் வாய்ந்த குற்றவாளியாக இருந்தார். போதைப்பொருள் வைத்திருந்தது, ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் சிறை உடைப்பு வரையிலான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டிருந்தார். 1960-ஆம் ஆண்டு ஜனவரியில் லூசியானா மாகாணச் சிறைச்சாலையிலிருந்து தப்பிய பின்னர் அவர் அல்காட்ரஸுக்கு அனுப்பப்பட்டார். அங்கு வந்து சேர்ந்த உடனேயே அங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நன்கு அறிந்த சிறைச்சாலை

1957-ஆம் ஆண்டு முதல் அல்காட்ராஸில் கைதிகளாக இருந்த வங்கிக் கொள்ளையர் சகோதரர்கள் ஜான் மற்றும் கிளாரன்ஸ் ஆங்லின், மற்றும் ஆலன் வெஸ்ட் ஆகிய மூவரும் அவரது சிறைக் கடிடத்தில் இருந்தனர். வேறு சிறைகளில் இவர்கள் ஒன்றாக இருந்துள்ள காரணத்தால் இவர்கள் ஒருவரை ஒருவர் அறிவார்கள். மேலும் அவர்களுக்கு அருகருகே சிறை அறைகள் இருந்ததால், இரவில் ஒருவருக்கொருவர் பேச முடிந்தது.

பிபிசியின் சார்ல்டன், சிறைச்சலை மூடப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சென்றார். ஆனால் சிறைச்சாலை எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதன் கடுமையான காவலர்கள், கடுமையான நிலைமைகள் மற்றும் கைதிகள் எதிர்கொண்ட வலுவான கடல் காற்று பற்றியும் அவருக்குத் தெரியும். "எப்போதுமே நிற்காத காற்று, அதன் ஊளையிடும் ஒலி சிறைக்கம்பிகள் வழியாக எதிரொலிக்கிறது. பழைய கோட்டையின் வளைந்த பாதையில் இது கட்டப்பட்டுள்ளது. இன்று அல்காட்ராஸின் அஸ்திவாரங்கள் சேதமாகி இடிய ஆரம்பித்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

விரிவான திட்டம்

மோரிஸ் தலைமையில் நான்கு கைதிகளும் தப்பிக்க ஒரு விரிவான மற்றும் துணிச்சலான திட்டத்தை உருவாக்கத் தொடங்கினர். பல மாதங்களாக இவர்கள் தங்கள் அறையில் கைகழுவும் பேஸினுக்கு அடியில் இருந்த காற்று துவாரத்தைச் சுற்றி உப்பால் சேதமடைந்த கான்கிரீட்டை தட்டி உடைக்கத்தொடங்கினர். டைனிங் ஹாலில் இருந்து மறைத்து கொண்டுவரப்பட்ட உலோக ஸ்பூன்கள், ஒரு வாக்யூம் க்ளீனர் மோட்டாரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஓட்டையிடும் கருவி மற்றும் தூக்கி எறியப்பட்ட சா பிளேடுகளைப் பயன்படுத்தி ஓட்டை துளைத்து, அவர்கள் காவலர்கள் இல்லாத சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் வழித்தடத்தைச் சென்றடைந்தனர்.

கைதிகளுக்கு இசைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஓட்டைபோடும் சத்தத்தை மறைக்க மோரிஸ் தனது ’அக்கார்டியன்’ இசைகருவியை வாசிப்பார். வழித்தடத்திற்கு ஊர்ந்து செல்லும் அளவுக்கு பெரிய துளையை உருவாக்கியவுடன் அவர்கள் சிறைக் கடிடத்தின் காலியான மேல் மட்டத்திற்கு ஏறி அங்கு ஒரு ரகசிய பட்டறையை அமைத்தனர்.

செல்களுக்கு உள்ளே இருக்கும் சுவர் துளைகளை மறைக்க, சிறை நூலக இதழ்களில் இருந்து போலி பேப்பர் மாஷே கிரில்களை அவர்கள் வடிவமைத்தனர். தங்கள் பட்டறையில் 6x14 அடி தற்காலிக ரப்பர் மிதவை மற்றும் 50-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட ரெயின்கோட்டுகள் கொண்டு லைஃப்-ஜாக்கெட்டுகளை அவர்கள் உருவாக்கத் தொடங்கினார்கள். ரப்பரை சீல் செய்ய சிறைச்சாலையின் சூடான நீராவிக் குழாய்களைப் பயன்படுத்தி அதை உருக்கினார்கள். மிதவையில் காற்றை நிறைக்க ’கான்சர்டினா’ இசைக்கருவியை பயன்படுத்தினார்கள். ப்ளைவுட் துண்டுகளைப் பயன்படுத்தித் துடுப்புகளை உருவாக்கினார்கள்.

ஆனால் அவர்கள் வேலை செய்யும் போது, அவ்வப்போது இரவு நேரச் சோதனைகளை செய்யும் காவலர்களிடம் இருந்து தாங்கள் செல்களில் இல்லாததை மறைக்க வேண்டியிருந்தது. எனவே, அவர்கள் சோப்பு, பற்பசை மற்றும் டாய்லெட் பேப்பர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் தலையின் பேப்பர் மாஷே பதிப்புகளை உருவாக்கினர். தங்களை மிகவும் யதார்த்தமாகக் காட்ட அவர்கள் சிறை முடிதிருத்தும் தளத்திலிருந்து உண்மையான முடியைக்கொண்டுவந்து அதை தலையில் ஒட்டினார்கள்.

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை

திருடிகொண்டுவந்த ஓவியம் வரையும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தில் சரும நிறத்தை வரைந்தார்கள். பின்னர் படுக்கையில் போர்வைக்கு கீழே துணி மூட்டைகள் மற்றும் துண்டுகளை உடல் வடிவத்தில் தூங்குவது போல் வைத்துவிடுவார்கள். தப்பிச்செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த அதே வேளையில் தப்பிக்கும் ஒரு வழியை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். பிளம்பிங் பைப்பை படிகளாகப் பயன்படுத்தி அவர்கள் 30 அடி (9.1 மீ) உயரத்திற்கு ஏறி, ஒரு ஷாஃப்டின் மேற்புறத்தில் உள்ள வென்டிலேட்டரை இழுத்து திறந்தனர். சோப்பை பயன்படுத்தி ஒரு போலி தாழ்பாளை தயாரித்து அதில் பொருத்திவிட்டனர்.

இறுதியாக 1962 ஜூன் 11 ஆம் தேதி இரவு, அவர்கள் தங்கள் புத்திசாலித்தனமான திட்டத்தை செயல்படுத்த தயாராக இருந்தனர். காவலர்களை ஏமாற்றுவதற்காக போலித் தலைகளை படுக்கையில் விட்டுவிட்டு, மோரிஸ் மற்றும் இரண்டு ஆங்கிலின் சகோதரர்கள் செல் சுவர்களில் உள்ள ஓட்டைகள் வழியாக ஊர்ந்து சென்றனர். வெஸ்ட் சரியான நேரத்தில் தனது அறையிலிருந்து வெளியே வர முடியாமல் போனதால் அவர் தப்பிக்க முடியாமல் போனது. அதனால் மற்றவர்கள் அவரை விட்டுவிட்டு வெளியேறினர்.

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை

தீவிரச் சோதனை

அவர்கள் செல்ஹவுஸ் கூரையில் ஏறி, மிதவையைச் சுமந்துகொண்டு அதன் குறுக்கே ஓடினார்கள். ஒரு வெளிப்புற வடிகால் குழாயைப் பிடித்தபடி கீழே இறக்கி, சிறை முற்றத்தைக் கடந்து, அடுத்தடுத்து இரண்டு 12அடி (3.7 மீ) முள்வேலிகளைத் தாண்டிக் குதித்து, தீவின் வடகிழக்குக் கரையில் செங்குத்தான சரிவில் இறங்கினர். தண்ணீரின் விளிம்பைத் தொட்டவுடன் அவர்கள் தங்கள் படகில் காற்றை நிறைத்து, காரிருளில் மறைந்தனர். மறுநாள் காலை வரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை. காலையில்தான் போலி தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிறைச்சாலையில் பணிபுரிந்த காவலர்களின் குடும்பங்களுக்கும் அந்தத்தீவில் குடியிருப்புகள் இருந்தன. அந்த நேரத்தில் அல்காட்ராஸில் வார்டனாக இருந்தவர் ஜோலீன் பேபியாக்கின் தந்தை. அவர் அலாரத்தை ஒலிக்கச்செய்தார். "நான் கண்விழித்தபோது, சைரன் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மிகவும் சத்தமாக இருந்தது, பயங்கரமாக இருந்தது, எனக்கு மிகவும் பயமாக இருந்தது," என்று ஜோலீன் பேபியாக் 2013-இல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரியிடம் கூறினார்.

"நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்க முடியாது என்பதே என் முதல் எண்ணம். ஆனால் அதுதான் நடந்தது,” என்றார் அவர்.

சிறை அதிகாரிகளின் தங்குமிடம் உட்பட எல்லா கட்டிடங்களிலும் தீவிர சோதனையுடன் சிறை உடனடியாக பூட்டப்பட்டது. இதற்கிடையில் ஜோலினின் தந்தை நூற்றுக்கணக்கான சட்ட அமலாக்கப் பணியாளர்களுடன் ஒரு பெரிய தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். அது பல நாட்கள் நீடித்தது. ஜூன் 14-ஆம் தேதி கைதிகளின் துடுப்புகளில் ஒன்றை கடலோர காவல்படை கண்டுபிடித்தது. அதே நாளில் ஆங்கிளினுடைய சில பொருட்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அது ரப்பரில் சீல் வைக்கப்பட்டிருந்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு, மிதவையின் எச்சங்கள் கோல்டன் கேட் பாலத்தின் அருகே கரை ஒதுங்கின. அடுத்த நாள் ஒரு லைஃப் ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் தப்பியோடிய மூன்று பேரையும் அதற்குப்பிறகு காணவில்லை.

மூடப்படாத வழக்கு

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை

தப்பித்தவர்கள் கடலில் மூழ்கினரா?

கைதிகள் சிறையிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் தீவை விட்டு வெளியேறும்போது கடல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

சிறைக் கண்காணிப்பாளர் ரிச்சர்ட் வில்லார்டை 1964-இல் பிபிசி பேட்டி கண்டபோது அதுதான் அவரது கருத்தாக இருந்தது. "தப்பித்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லலாம். அல்காட்ரஸிலிருந்து தப்பித்ததைப் பற்றி பெருமை அடித்துக்கொண்டு யாரும் தெருக்களில் நடமாடுவதாக எங்களுக்குத் தெரியவில்லை. நான் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறேன்? காற்றின் ஊளைச்சத்தம் உங்களுக்கு கேட்கிறதா? தண்ணீரைப் பார்த்தீர்களா? அவர்களால் இவற்றைத் தாண்டிப் போயிருக்கமுடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று அவர் கூறினார்.

கைதிகள் தப்பியோடிய ஒரு வருடத்திற்குப் பிறகு 1963-இல் அல்காட்ராஸ் சிறை மூடப்பட்டது. சேதமாகிக்கொண்டிருந்த அதன் கட்டிடங்கள் மற்றும் அதை நடத்துவதற்கான செலவு ஆகியவை இதற்கான காரணங்களாகக் கூறப்பட்டன. ஆனால், சிறைச்சாலையின் கடுமையான நிர்வாக முறை நீண்ட காலமாக சர்ச்சையின் கீழ் இருந்தது. 1939-ஆம் ஆண்டிலேயே, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஃபிராங்க் மர்பி அதை மூட முயன்றார். அதற்குக் காரணமாக, "ஒட்டுமொத்த அமைப்பும் மனநிலையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இது கைதிகளிடையே ஒரு மோசமான மற்றும் தீய மனப்பான்மையை உருவாக்குகிறது,” என்றார்.

ஓயாத எதிர்மறை நிலைமைகள் காரணமாக கைதிகள் தற்கொலை செய்துகொண்டனர் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் 1960-களில் அமெரிக்கா சிறைக்கைதிகளுக்கு தண்டனை வழங்குவதை விட மறுவாழ்வு அளிப்பதே சிறந்தது என்று சிந்திக்கத் துவங்கியது.

தப்பித்த மூன்று பேரைப் பொறுத்தவரை, வளைகுடாவில் உடல்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், 1979-இல் அவர்கள் சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். எஃப்.பி.ஐ தனது வழக்கை முடித்துக் கொண்டு பொறுப்பை அமெரிக்க மார்ஷல்ஸ் சேவையிடம் ஒப்படைத்தது.

கடும் கட்டுப்பாடுகள் உள்ள சிறையிலிருந்து ஸ்பூனின் உதவியுடன் மூன்று பேர் தப்பித்த கதை

மர்மமான கடிதம்

ஆனால் தப்பித்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய ஊகங்கள் ஒருபோதும் குறையவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில், ’எஸ்கேப் ஃப்ரம் அல்காட்ராஸ்’ திரைப்படம் வெளியானது. அதில் பிரபல நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட், ஃபிராங்க் மோரிஸின் கதாபாத்திரத்தில் நடித்தார். 1962-இல் அவர்கள் தப்பியோடியதில் இருந்து, சிலர் அவர்களைப் பார்த்ததாகவும், அவர்களிடமிருந்து செய்திகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜான் ஆங்கிளின் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து ஒரு மர்மமான கடிதம் தங்களுக்கு கிடைத்ததாக 2018-ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தில் 'நான் 1962-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அல்காட்ராஸிலிருந்து தப்பித்தேன். நாங்கள் அனைவரும் அந்த இரவில் மிகவும் சிரமத்துடன் தப்பிச்சென்றோம்' என்று கூறப்பட்டிருந்தது.

அவர்கள் மூவரும் ரகசியமாக வாழ்ந்ததாகவும், ஃபிராங்க் மோரிஸ் 2005-ஆம் ஆண்டு அக்டோபரிலும், க்ளாரன்ஸ் ஆங்லின் 2008-ஆம் ஆண்டிலும் காலமானதாக அந்தக்கடிதம் மேலும் கூறுகிறது. தன்னுடைய புற்றுநோய் சிகிச்சைக்கு ஈடாக தான் சரணடைவதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக, கடிதம் எழுதியவர் குறிப்பிட்டிருந்தார். எஃப்.பி.ஐ இந்தக் கடிதத்தை ஆராய்ந்தது. ஆனால் அதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய இயலவில்லை.

அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை இந்த வழக்கை இன்னமும் விசாரித்து வருகிறது. காணாமல் போன மூன்று அல்காட்ராஸ் கைதிகள் இப்போது எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட படங்களை 2022-இல் அது வெளியிட்டது. இந்த மர்மத்தின் இறுதிவிடை தெரியவரும் என்ற நம்பிக்கையில் அவர்களைப் பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)