மியான்மரில் ராணுவம், கிளர்ச்சிப்படை இரு தரப்பையும் சீனா ஆதரிப்பது ஏன்?

மியான்மர் வீழ்ச்சியின் தருவாயில் இருக்கிறதா, சீனாவின் நிலைபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மியான்மரில் கிளர்ச்சிக் குழுப் போராளிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர்

மியான்மர் அரசு 14 ஆண்டுகளாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய சட்டத்தை பிப்ரவரி 2024-இல் மீண்டும் அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ், 35 வயதுக்குட்பட்ட ஆண்களும், 27 வயதுக்குட்பட்ட பெண்களும் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும்.

அரசின் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தவிர்க்க முயற்சிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். மியன்மாரின் ராணுவத் தலைமையிலான அரசாங்கம் தீவிரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள நிலையில், புதிதாக 60,000 வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

மியான்மரில் 2021-இல் ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தபோது உள்நாட்டுப் போர் தொடங்கியது. ராணுவ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டில் பரவலாக அமைதியான போராட்டங்கள் தொடங்கியது, ஆனால் ராணுவம் அமைதி போராட்டங்களை நிறுத்த வன்முறையை கையில் எடுத்தது.

இதன் காரணமாக, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட விரும்பிய பல பழைய குழுக்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் நடப்பது புதிதல்ல, இருப்பினும் இம்முறை வெடித்துள்ள கலவர சூழல் ஒட்டுமொத்த நாட்டையும் நெருக்கடியை நோக்கித் தள்ளுகிறது.

இந்த கட்டுரை மியான்மரின் தற்போதைய சிதைந்து வரும் நிலையை ஆராய்கிறது.

வீழ்ச்சியின் தருவாயில் இருக்கும் மியான்மர் : சீனாவின் நிலைபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தலைவர் மின் ஆங் லைங்

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு என்ன நடந்தது?

1999-இல், பர்மாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மியான்மர் என மாற்றப்பட்டது. பிபிசி பர்மா சேவையின் முன்னாள் ஆசிரியரான டின் தார் ஸ்வே, தற்போது மியான்மர் விவகாரங்கள் தொடர்பான சுயாதீன ஆலோசகராக உள்ளார்.

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்ட பின்னர், அங்கு நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகவும், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய கிளர்ச்சி வெடித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"நாட்டில் மொத்தம் 330 நகரங்கள் உள்ளன. கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து 230 நகரங்களில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வருகின்றன" என்று டின் தார் ஸ்வே விளக்கினார்.

ராணுவ அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் விமானத் தாக்குதல்களால், பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

டின் தார் ஸ்வேயின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். வாழ்விடங்கள் தீக்கிரை ஆக்கப்படுகின்றன.

“மியான்மரில் தற்போது வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இனி வரும் காலங்களில், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களை குறிவைக்க அரசு விமானங்களை விட ட்ரோன்களை அதிகம் பயன்படுத்தக்கூடும். ராணுவ வீரர்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள்," என்று விவரித்தார்.

சுமார் 30 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மியான்மரின் மற்ற பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மிகப்பெரிய அளவில் மனித உரிமைகள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக டின் தார் ஸ்வே கூறுகிறார். நிதிப் பற்றாக்குறையால், உதவி தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டது. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து விட்டது, நாட்டில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நாட்டின் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். ஆனால் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இந்த பதற்றம் இல்லை.

மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் நிலைமை சாதாரணமாக உள்ளது என்று டின் தார் ஸ்வே கூறுகிறார். மக்கள் குடும்ப மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ராணுவ நிர்வாகத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயலாகும், ஏனெனில் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மக்களைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மியான்மரில் இருக்கும் இந்த நெருக்கடியும் மக்களின் துக்கமும் எல்லாப் பகுதிகளிலும் காணப்படவில்லை என்று அவர் சொல்கிறார்.

பெரிய நகரங்களில் மக்களின் வாழ்க்கை இயல்பாக உள்ளது.

டின் தார் ஸ்வேயின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.

“மியான்மரில் தற்போது வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இனி வரும் காலங்களில், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களை குறிவைக்க அரசு விமானங்களை விட ட்ரோன்களை அதிகம் பயன்படுத்தக்கூடும். ராணுவ வீரர்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள்," என்று விவரித்தார்.

சுமார் 30 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மியான்மரின் மற்ற பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மிகப்பெரிய அளவில் மனித உரிமைகள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக டின் தார் ஸ்வே கூறுகிறார். நிதிப்பற்றாக்குறையால், உதவி தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது, நாட்டில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நாட்டின் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். ஆனால் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இந்த பதற்றம் இல்லை.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயம்

மியான்மரின் முக்கிய தொழிலான விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டின் தார் ஸ்வே -இன் கூற்றுப்படி, ஏராளமான விவசாயிகள் இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் வாழ்கின்றனர், மேலும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இது உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், நாட்டின் ஏழை சமூகம் மிகவும் பாதிக்கப்படும்.

ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு சட்டத்தை ராணுவ நிர்வாகம் அமல்படுத்திய பிறகு, நகரங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்குள்ள இளைஞர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர், ராணுவத்தினரிடம் பிடிபட்டு ராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுவோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

மியான்மர் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக டின் தார் ஸ்வே நம்புகிறார். மேலும் 2021-இல் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திய ராணுவத் தலைவரின் கையில்தான் நாட்டின் ஆட்சி இன்னும் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். மூத்த ஜெனரல் மின் ஆங் லைங் ராணுவத்தின் தலைவராக மட்டுமல்ல, ராணுவ அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

மியான்மரின் அரசியலைப் பொறுத்தவரை ராணுவத்தின் ஆதிக்கம் அப்படியே இருப்பதை ராணுவம் உறுதி செய்கிறது.இது எவ்வாறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, நாம் அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

வீழ்ச்சியின் தருவாயில் இருக்கும் மியான்மர் : சீனாவின் நிலைபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோந்து பணியில் மியான்மர் ராணுவ வீரர்கள்

ராணுவத்தின் செல்வாக்கு

மியான்மர் 1948-இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது பர்மா என்று அழைக்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்கத் துறைப் பள்ளியின் (SOAS) ஆசிய மற்றும் ராணுவ வரலாற்றின் பேராசிரியர் மைக்கேல் சார்னி கூறுகையில், "மியான்மர் மற்ற நாடுகளைப் போல புரட்சியின் மூலம் சுதந்திரம் பெறவில்லை, இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது,” என்றார்.

“வியட்நாம் மற்றும் பிற நாடுகளைப் போலல்லாமல், பர்மாவில் வெவ்வேறு அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்து புரட்சி மூலம் சுதந்திரம் கிடைக்கவில்லை. எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு, வலதுசாரி முதல் இடதுசாரி சித்தாந்தங்கள் வரை பல குழுக்கள் உருவாகின, மிக விரைவில் உள்நாட்டுப் போர் வெடித்தது, இதன் காரணமாக ராணுவத்தின் செல்வாக்கு அதிகரித்தது,” என்றார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட Anti-Fascist People's Freedom League (AFPFL) கட்சி பிளவுபட்டதைத் தொடர்ந்து 1958-இல் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ராணுவத்தின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

பேராசிரியர் மைக்கேல் சார்னி கூறுகையில், “ராணுவம் வலுக்கட்டாயமாக அரசாங்கத்துடன் இணைந்ததா அல்லது அழைக்கப்பட்டதா என்பதே இன்னும் சர்ச்சையாக உள்ளது. ஆனால் பல ராணுவ அதிகாரிகள் நாட்டின் அரசுத் துறைகளின் நிர்வாகத்தைக் கைப்பற்றினர். இன்றைய சூழலில் மக்கள் ராணுவத்தின் மீது கோபமாக இருக்கலாம், ஆனால் ஆட்சி மாற்றம் நடந்த காலக்கட்டத்தில் ராணுவம் மிக விரைவாக செயல்பட்டது. இதனால் பொருளாதாரம் பயனடையத் தொடங்கியது. 1960 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, AFPFL இன் ஒரு பிரிவு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ராணுவம் அந்த அரசை கவிழ்த்து 1962-இல் ஆட்சியை கைப்பற்றியது,” என்றார்.

இதுநடந்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு, 1988-இல் ராணுவத்தின் ஒரு பிரிவினர் மியான்மரின் ராணுவ அரசாங்கத்தை கவிழ்த்தனர். 2008-இல் ஒரு புதிய அரசியலமைப்பின் கீழ், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25% இடங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன.” என்றார்.

2015-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது, இதனையடுத்து ராணுவ அரசாங்கத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

பேராசிரியர் மைக்கேல் சார்னி மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் மூலம், ராணுவம் பாராளுமன்றத்தின் மீது தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது, ஆனால் 2020-இல் ஆங் சாங் சூச்சி மீண்டும் வென்றபோது, பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பைத் திருத்த வாய்ப்புகள் இருப்பதாக ராணுவம் கவலையடைந்தது. ஆங் சாங் சூச்சி ராணுவத்தின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்றும் ராணுவம் கருதியது. எனவே, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 1- ஆம் தேதி ராணுவ ஜெனரல் ஹயெங் புதிய அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.

ஆங் சாங் சூச்சி மீது ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி ராணுவம் அவரை சிறையில் அடைத்தது. கடந்த ஆண்டு ஆங் சாங் சூச்சி-யின் தண்டனை காலம் 33 ஆண்டுகளில் இருந்து 27 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மியான்மரின் ராணுவ அரசாங்கம் அதன் அண்டை நாடுகளான தாய்லாந்து, லாவோஸ், இந்தியா, பங்களாதேஷ், மற்றும் சீனாவில் நாட்டிற்கு வெளியே தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது. சீனாவுடன் மியான்மருக்கு வணிக மற்றும் அரசியல் உறவுகள் இருப்பதால், மியான்மர் வீழ்ச்சி அடைவதை சீனா விரும்பவில்லை.

மியான்மரில் இருக்கும் இரு தரப்பையும் சீனா ஆதரிப்பதால் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று பேராசிரியர் மைக்கேல் சார்னி கூறுகிறார். "சீனா தனது எரிவாயு உற்பத்தி மற்றும் குழாய்களை இலக்கு வைக்கக் கூடாது என்று இரு தரப்புடனும் ஒப்பந்தம் செய்துள்ளது,” என்றார்.

மியான்மர் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவை கொண்டுள்ளது. பேராசிரியர் மைக்கேல் சார்னி கூறுகையில், "மியான்மர் ராணுவத்திற்கு பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வழங்கப்படுகிறது,” என்றார்.

2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியான்மரில் தேர்தல் நடத்தும் எண்ணம் ராணுவ அரசுக்கு உள்ளதா?

பேராசிரியர் மைக்கேல் சார்னி, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இதுவரை அடையாத பெரிய வெற்றியை அடையும் வரை தேர்தலை நடத்த ராணுவம் விரும்பவில்லை என்று கூறுகிறார்.

வீழ்ச்சியின் தருவாயில் இருக்கும் மியான்மர் : சீனாவின் நிலைபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, KNU என்பது மியான்மரில் இருக்கும் மிகப் பெரிய கிளர்ச்சிக் குழுவாகும்.

ராணுவ அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யார்?

பிரிட்டனின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கூட்டண்மைத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் டேவிட் ப்ரென்னர், மியான்மரின் ராணுவ அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் பலர் இருப்பதாக கூறுகிறார்.

அவர் கூறுகையில் “2021-இல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர். பின்னர் அவர்களில் பலர் ஆயுதம் ஏந்தத் தொடங்கினர். இந்த குழுவானது பாதுகாப்புப் படை (Defense Force) என்றும் அழைக்கப்படுகிறது. அதில் இருந்த இளைஞர்கள் பலர் நகரங்களை விட்டு வெளியேறி எல்லைப் பகுதிகளில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆயுதமேந்திய இன அமைப்புகளில் சேர்ந்தனர். சின் மற்றும் அரக்கான் (Chin and Arakan) போன்ற இனக்குழுக்கள் இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இது ஒரு உள்நாட்டுப் போர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது 1948-இல் நாட்டின் சுதந்திரம் அடைந்தபோது தொடங்கியது, இதில் பல வகையான குழுக்கள் ஈடுபட்டுள்ளன,” என்றார்.

"போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து குழுக்களும் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குழுக்களில் சில நூற்றுக்கணக்கான வீரர்கள் உள்ளனர். மற்றவை ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டுள்ளது,” என்றார்.

அதிகாரப்பூர்வமாக சுமார் 18 ஆயுதமேந்திய இனக்குழுக்கள் இருப்பதாக முனைவர் டேவிட் ப்ரென்னர் கூறினார். பல ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நிர்வாக அமைப்பை நிறுவிய சில குழுக்களும் உள்ளன. பல ஆண்டுகளாக, அந்த இனக்குழுக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகின்றனர்.

"அனைத்து குழுக்களும் ஜனநாயகத்திற்கு ஆதரவானவை அல்ல, ஆனால் அவை தங்கள் இன சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க போராடி வருகிறது,” என்று டேவிட் ப்ரென்னர் கூறுகிறார். அவர்களுக்கு தங்கள் இனத்தின் நலன்கள் தான் முக்கியம். ஜனநாயகம் முக்கியமல்ல,” என்று டேவிட் ப்ரென்னர் விளக்கினார்.

மியான்மரின் இனக் குழுக்களின் கட்டுப்பாட்டில் எத்தனை பகுதிகள் உள்ளது என்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எவ்வளவு பகுதி உள்ளது என்றும் மதிப்பிட முடியுமா?

முனைவர் டேவிட் ப்ரென்னர் கூறுகையில், “மியான்மரில் நிலைமை வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் அதிகமான பகுதிகள் ராணுவத்தின் பிடியில் இருந்து வெளியேறியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் முதல், மூன்று ஆயுதமேந்திய இனக்குழுக்களின் கூட்டணியான 'Three Brotherhood Alliance’ ராணுவத்தின் மீது பெரும் தாக்குதல்களை நடத்தியது. சீனா மற்றும் தாய்லாந்துடனான வர்த்தகப் பாதைகளான கச்சின் மற்றும் ஷான் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான தாக்குதல்கள் நடந்தன. ஆனால் யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன," என்றார்.

டேவிட் ப்ரென்னர் கூறுகையில், "இப்போது ஏராளமானோர் இந்த ஆயுதக் குழுக்களில் இணைகிறார்கள். அதேநேரம், ராணுவத்தின் பெரும்படையினர் ராணுவத்தை விட்டு வெளியேறி சரணடைவதாக பல இடங்களில் செய்திகளும் வருகின்றன,” என்றார்.

ரோஹிஞ்சா சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை நீதிமன்றத்தில் மியான்மர் எதிர்கொள்கிறது.

பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் மியான்மர், ரோஹிஞ்சா சமூகத்தைத் தனது குடிமக்களாக கருதவில்லை. 2017-இல், ராணுவம் ரோஹிஞ்சா சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. மேலும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

மியான்மரின் எதிர்காலம் என்ன?

வீழ்ச்சியின் தருவாயில் இருக்கும் மியான்மர் : சீனாவின் நிலைபாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images

"ராணுவம் தோற்கடிக்கப்பட்டால், மியான்மரில் எந்த அரசும் உருவாகாது. ஏனெனில் நாட்டின் சில பகுதிகள் வெவ்வேறு கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பிப்பார்கள்,” என்று மியான்மர் அமைதி மற்றும் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் முனைவர் மின் சாவ் ஓ கூறுகிறார்.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் மியான்மரின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மின் சாவ் ஓ கூறுகையில் “மியான்மரின் எதிர்காலம் இருண்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், ராணுவம் தற்போது தோற்று வருகிறது. ஆனால் மியான்மரில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஆதரவாக இல்லை. ஆனால், அரசாங்கம் வீழ்ந்தாலும், வெவ்வேறு குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய கூட்டணி எதுவும் இல்லை,” என்றார்.

இரண்டாவது பிரச்னை, பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே பரஸ்பர உடன்பாடு இல்லை. பல ஆயுதக் குழுக்களின் தலைமை சர்வாதிகாரமானது என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இல்லை என்றும் மின் சோ ஓ கூறுகிறார். பல பகுதிகளில் பல்வேறு குழுக்கள் உரிமை கோருவதுடன், சில இடங்களில் இக்குழுக்களுக்கிடையே மோதல்களும் நடந்து வருகின்றன.

ராணுவ அரசாங்கம் வீழ்ந்தாலும் பல இடங்களில் இனக்கலவரம் வெடிக்கலாம். இதற்கு எதிர்காலத்தில் தீர்வு காண்பது கடினம்.

'மக்கள் பாதுகாப்புப் படை’ போன்ற கிளர்ச்சிக் குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த குழுக்களில் பல NUG அதாவது தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் (National Unity Government) தலைமையில் இருப்பதாக மின் சாவ் ஓ கூறுகிறார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற இந்த இணை அரசாங்கம் அமைக்கப்பட்டதுடன், முன்னாள் எம்.பி-க்களும் அதில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் NUG-இல் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உள்ளன. அவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.

மியான்மரில் ராணுவத்தின் நிலை தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. ஆனால் அது அரசியலில் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. படிப்படியாக அதன் கோரிக்கைகளைக் கைவிட வேண்டி வரும்.

ராணுவத் தலைமையில் விரிசல் ஏற்படுமா?

மின் சாவ் ஓ கூறுகையில், "தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் லாயிங் மிகவும் செல்வாக்கற்ற ராணுவத் தளபதியாக இருப்பதால் விரிசல் சாத்தியம் தான். ஆனால் அவருக்கு எதிராக சவால் விடப்போவது யார் என்பதுதான் கேள்வி. மூத்த தலைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மியான்மர் ராணுவத்தில் உள்ளது. ராணுவத்தில் கலகம் ஏற்பட்டால் பேச்சுவார்த்தைக்கான பாதை திறக்கப்படும். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் கோபமும் விரக்தியும் மட்டுமே உள்ளது,” என்று விளக்கினார்.

அப்படியானால் மியான்மர் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறதா? தற்போதைய மோதல்கள் நிச்சயமாக நாட்டை வீழ்ச்சியின் பாதையில் நோக்கி தள்ளுகிறது. ஆனால் இந்த வீழ்ச்சியை மெதுவாக்கக்கூடிய சில விஷயங்களும் உள்ளன. மியான்மரில் உள்ள அதன் எரிசக்தி வளத்தை பாதுகாக்கும் வகையில் அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கும். தங்கள் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அமைத்துள்ள கிளர்ச்சிக் குழுக்கள் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது.

இனம் அடிப்படையிலான வேறுபாடுகள், பிளவுபட்ட சமூகம் மற்றும் கிளர்ச்சி ஆகியவை மியான்மர் வரலாற்றின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இதற்கு விரைவான தீர்வு ஏற்படச் சாத்தியம் இல்லை. அரசியலில் ராணுவம் தனது பங்கை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது. எனவே, மியான்மரை சரிவில் இருந்து மீட்கும் வழி எதிர்காலத்தில் திறக்கப்படுமா என்று சொல்வது சற்றுக் கடினம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)