சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன?

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடல் கடந்து நாடுகளை வென்ற சோழர்களின் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சி முறை, ராஜேந்திர சோழனின் வெற்றிகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு இணையாக, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் பற்றி வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட இன்றளவும் விவாதிக்கிறார்கள்.
இதற்கு பொன்னியின் செல்வன் நாவலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சோழர் வரலாற்றில் மன்னருக்கு இணையான அதிகாரங்களுடன் இளவரசர் ஆதித்த கரிகாலன் வலம் வந்தார் என்பதற்கான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டம் அருகே ஏமப்பூர் கோவிலில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது.
அந்த கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது? என்பது குறித்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் நம்மிடம் விரிவாக விளக்கம் அளித்தார். அத்துடன், ஆதித்த கரிகாலன் ஆட்சிக்குட்பட்டிருந்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆதித்த கரிகாலன் குறித்து கூறும் செய்திகள் என்ன என்றும் அவர் விளக்கம் தந்தார்.

ஏமப்பூர் கல்வெட்டு கூறுவது என்ன?
சோழர் காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெயரை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன என்ற போதிலும் இளவரசர் ஆதித்த கரிகாலனின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் மன்னருக்கு இணையாகவே பொறிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
விழுப்புரம் அருகே ஏமப்பூரில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று தொடங்குகிறது.
இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் ரமேஷ், "ஆதித்த கரிகாலன் ஆட்சியின் நான்காவது ஆண்டான பொது ஆண்டு 960 -ல் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு என்று இந்த ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவில் மூலவருக்கு (இறைவனுக்கு) காலம் முழுவதும் (சந்திரன்- சூரியன் உள்ள வரை ) விளக்கு ஏற்றுவதற்காக 96 ஆடுகளை இந்த கோவில் அறங்காவலர் பான் மகேஸ்வரர் என்பவரிடம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கின்றது" என்றார்.
“இந்தக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனின் ஆட்சியைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது என்ற அவர், ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் இதன் மூலம் அறிய முடிவதாக கூறினார்.
ஆனைமங்கல செப்பேடு

"சுந்தர சோழன் தன் மூத்த மகனான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறார். எனவே தான் இப்பகுதியில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன" என்று அவர் கூறினார்.
சிறு வயதிலேயே வீரத்துடன் விளங்கிய ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதைக் குறிக்கும் வகையில், "இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்," என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு. இந்த கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ளது.
"ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டி கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு செருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏமப்பூர் கல்வெட்டிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதை படித்தும் காண்பித்தார்.

ஏரி பராமரிப்பு கல்வெட்டு
திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர் கிராமத்தில் மயிலாடும்பாறையில் உள்ள கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்படுகிறார்.
தொடர்ந்து அந்த கல்வெட்டில் "ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும் என்று கல்வெட்டு செய்தியையும் அவர் விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் "ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 ஆகும். ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை (தொண்டை நாடு பகுதி) தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தார். பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் மிக வலிமை வாய்ந்த இளவரசர் ஆவார்." என்று கூறினார்.
ஆதித்த கரிகாலன் மர்ம மரணம்
"கி.பி. 966- ல் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்" என்று ஆதித்த கரிகாலனின் பேராசிரியர் ரமேஷ் வரலாற்றை விவரித்தார்.

ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய கல்வெட்டு
ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனாலும் எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்று முழு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் குற்றவாளிகள் பெயர்களை அவர்களின் நிலத்தை கையகப்படுத்தியது குறித்த இக்கல்வெட்டு செய்தியால் அறியலாம்.
"ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. ஆனால் ஆதித்த கரிகாலனை எதற்காக கொலை செய்தார்கள், யார் அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது போன்ற தகவல்கள் அதில் இல்லை." என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












