அட்லாண்டிக்கை விட பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் 20 செ.மீ. மேலே இருக்க என்ன காரணம்?

பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக்கை விட உயரமாக இருப்பதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அட்லாண்டிக்கை விட பசிஃபிக் பெருங்கடலின் நீர்மட்டம் சுமார் 20 செ.மீ அளவுக்கு மேலே இருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு பென்சிலின் அளவு.

இது சற்று சிறியளவிலான வித்தியாசமாகத் தோன்றினாலும், கடற்பயணம் கடல் சுழற்சி, உலகளாவிய தட்பவெப்பநிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பனாமா கால்வாய் போன்ற பெரிய பொறியியல் சார்ந்த பணிகளிலும் இது தாக்கங்களைக் கொண்டுள்ளது.

கப்பல் வழித்தடங்கள், கடல்வழி எண்ணெய் வணிகம், மீன்பிடித்தல், தேடல் மற்றும் மீட்பு பணிகள், எண்ணெய் கசிவை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கடல்சார் செயல்பாடுகளை நிறுவுவதற்கு இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அர்ஜென்டினா, பிரேசில் அல்லது உருகுவேயை விட சிலி, பெரு, ஈக்வடார் அல்லது கொலம்பியாவில் இருக்கும் கடல்கள் உயரமானவை என்பது உங்களுக்கு தெரியுமா? அதே சமயம், பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடலை விட உயரமானது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டு பெருங்கடல்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பூமியின் மேற்பரப்பில் 71% க்கும் அதிகமான உப்பு நீரின் தொடர்ச்சியான ஓட்டத்தை உருவாக்குகின்றன.

ஆனால் இரு பெருங்கடல் நீரின் ஓட்டம் தொடர்ச்சியாக இருக்கிறது என்றால், அவற்றுக்கு நடுவில் உயர வித்தியாசம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தது எப்படி?

"கடலின் உயரம் என்பது விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யக்கூடிய ஒரு அளவீடு" என்று சிலியில் உள்ள கான்செப்சியன் பல்கலைக்கழகத்தில் கடலியல் ஆய்வாளரும் பேராசிரியருமான சூசன்னா புக்கன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

கடல்

பட மூலாதாரம், Getty Images

"செயற்கைக்கோள்கள் மூலம் நீங்கள் கடலின் வெப்பநிலை, குளோரோபில் உள்ளிட்ட அளவுருக்களை (parameters) பற்றி தெரிந்து கொள்ள முடியும். இவை கடலில் நிகழும் பல்வேறு இயற்பியல் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், கடல் உயிரியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் உதவும்" என்று அவர் விவரித்தார்.

பொதுவாக கடல் மட்டத்தை அளவிடுவதற்கு டைட் கேஜ் (tide gauge) என்னும் சாதனம் பயன்படுத்தப்படும். கடல் நிலப்பரப்பின் முழுமையான கோணத்தை தெரிந்து கொள்ள கூடுதலாக செயற்கைக்கோள் அளவீடுகளையும் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஜேசன்-3 போன்ற அல்டிமெட்ரி செயற்கைக்கோள்கள், கடல் மேற்பரப்பை நோக்கி ரேடார் கதிர்வீச்சுகளை பாய்ச்சி, அதன் சமிக்ஞை திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தை அளவிடுகின்றன.

இது கடல் மேற்பரப்பின் உயரத்தை ஏறக்குறைய சில சென்டிமீட்டர் துல்லியமாக அளவிடுகிறது.

பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தரவுகள், கடல் மேற்பரப்பின் விரிவான மாதிரிகளை உருவாக்க உதவுகிறது. உலக அளவில் கடல்களுக்குள் இருக்கும் உயர மாறுபாடுகளை தெரிந்து கொள்ள வழிவகுக்கிறது. இந்த வேறுபாட்டை விளக்கும் பல செயல்பாடுகள் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.

கடலில் நிகழும் சில செயல்பாடுகள் அதிக துல்லியமாக உயர வித்தியாசத்தை ஏற்படுத்தும். மேலும் சில கூறுகள் தற்காலிகமாக கடல் உயரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, அலைகள் அல்லது நீருக்கடியில் நிகழும் எரிமலைச் செயல்பாடுகள் கடலின் உயரத்தை தற்காலிகமாக பாதிக்கக்கூடும்.

ஆனால் கடல்களுக்கு இடையேயான உயர வேறுப்பாட்டை நிரந்தரமாக்கும் சக்திகள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகிறன.

பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக்கை விட உயரமாக இருப்பதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெதுவெதுப்பான நீர் ஆக்ஸிஜனை கொண்டிருக்கும் திறனை இழக்கிறது மற்றும் விஞ்ஞானிகள் 1960 மற்றும் 2010 க்கு இடையில், இது 2% குறைந்துள்ளது என்கின்றனர்.

அடர்த்தி (The density)

அடர்த்தி என்னும் பண்பை விளக்க வல்லுநர்கள் சுட்டிக்காட்டும் சிறந்த உதாரணம் தண்ணீர் மற்றும் எண்ணெய் இடையே இருக்கும் வேறுபாடு. இரண்டு தனிமங்களையும் ஒரு கண்ணாடி குவளையில் நிரப்பினால், அடர்த்தி குறைந்த எண்ணெய் மிதப்பதை காண முடியும்.

சிலியின் மில்லேனியம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசியானோகிராஃபி இயக்குநரும், கான்செப்சியன் பல்கலைக்கழகத்தின் கல்வியாளருமான ஓஸ்வால்டோ உல்லோவா, "இதை புரிந்து கொள்வது மிகவும் எளிது. எண்ணெய் மற்றும் தண்ணீருக்கும் இடையில் இருந்த வேறுப்பாட்டை வைத்து கடலில் நடக்கும் செயல்பாட்டையும் புரிந்து கொள்ள முடியும். கடலில் நடப்பதை புரிந்து கொள்ள ஒரு குவளையில் உப்புத் தண்ணீரையும், மற்றொன்றில் நன்னீரையும் (fresh water) வைத்து , இரண்டு குவளைகளின் கீழ்பகுதியில் ஒரு சிறிய குழாய் மூலம் இணைக்க வேண்டும். இதன்மூலம் உப்பு நீரும் நன்னீரும் நடுப்புள்ளியில் சேரும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் அப்படி ஆகாது. நீரின் ஓட்டம் சிறிது நன்னீரை நோக்கி நகரும், ஏனெனில் நீரின் ஓட்டத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டு நன்னீரை நோக்கி நகர்கிறது" என்று அவர் விளக்குகிறார்.

இந்த அடர்த்தி என்னும் பண்பு, நீரின் உயரத்தில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது, இதற்கு உப்புத்தன்மை தான் காரணமாகும் : அதாவது பசிஃபிக் கடல் பகுதியை விட அட்லாண்டிக் உப்புத்தன்மை கொண்டது.

"உண்மை என்னவென்றால், கடல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால் அவை ஒரே மட்டத்தில் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அடர்த்தியின் காரணமாக அட்லாண்டிக்கின் உயரம் சற்று குறைவாக உள்ளது, அட்லாண்டிக் பசிஃபிக் பகுதியை விட அடர்த்தியானது. அதனால், அழுத்தம் ஏற்பட்டு சமநிலையை உருவாக்க அட்லாண்டிக் கடல் நீரின் ஓட்டம் ஆழம் நோக்கி செல்கிறது. அடர்த்தியான பகுதி, அடர்த்தி குறைவான பகுதியை அழுத்துகிறது.” என்று ஓஸ்வால்டோ விளக்குகிறார்.

அமெரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் மலைத்தொடர்கள் நீரின் ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

"ஆண்டிஸ் மலைத்தொடர், ராக்கீஸ் மலைத்தொடர் ஆகியவை பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் அதிக மழைப் பொழிவை உண்டாக்கி, அதன் உப்புத்தன்மையை குறைக்கிறது” என்றார்.

பசிஃபிக் பெருங்கடலின் இந்த குறைந்த உப்புத்தன்மை அதன் உயரத்தை அதிகரிக்கிறது.

"சமீபத்திய ஆய்வுகள் பசிஃபிக் பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. உப்புத்தன்மை என்பது ஆவியாகும் தன்மை கொண்டது. மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உப்புத்தன்மை குறையும்” என்று அவர் கூறுகிறார்.

பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக்கை விட உயரமாக இருப்பதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெதுவெதுப்பான நீர் அதிக அளவை ஆக்கிரமித்து, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவின் உருகும் தன்மையுடன் சேர்ந்து, கடல் மட்டங்கள் உலகின் பல பகுதிகளில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

வெப்ப நிலை

கடல்களுக்கு இடையே இருக்கும் உயர வேறுபாட்டிற்கு பங்களிக்கும் மற்றொரு காரணி நீரின் வெப்பநிலை ஆகும். ஏனெனில் இது அடர்த்தியை பாதிக்கும் மற்றொரு இயற்பியல் பண்பாகப் பார்க்கப்படுகிறது.

குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீரின் அடர்த்தி குறைவாக இருக்கும். கடல்களுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாடுகள் கடல் மட்டத்தில் மாறுபாடுகளை உருவாக்கக் கூடும்.

பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக்கை விட சற்று அதிகமான சராசரி வெப்பநிலையைக் கொண்டுள்ளது, இதனால் அதன் அடர்த்தி சற்று குறைவாக உள்ளது. எனவே நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், குறைந்த அடர்த்தி உயரத்தை அதிகரிக்கும்.

நிலப்பரப்பு (The topography)

கடலுக்கு அடியில் உள்ள நிலப்பரப்பும் நீரை கடலுக்கு வழங்குவதில் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் கடல் மட்டத்திலும் தாக்கம் ஏற்படும்.

கடலின் ஆழமான பகுதிகளில், மரியானா அகழி போன்ற கடல் அகழிகள் 11 கிலோமீட்டருக்கு மேல் இறக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கடற்பரப்புகளும் கடலில் காணப்படும் மலைத்தொடர்களும் நீரோட்டப் பாதையில் தடைகளாக செயல்படுகின்றன.

"கடலில் பல இயற்கையான உள் கட்டமைப்புகள் உள்ளன, அவை கடலின் அளவீடுகளை மாற்றியமைக்கிறது. கடல் மட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் பல்வேறு கடல்சார் செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்" என்கிறார் சூசன்னா புக்கன்.

இவ்வாறாக நீருக்கடியில் உள்ள முகடுகள், பள்ளத்தாக்கு சமவெளிகள் மற்றும் கடல் அகழிகள் ஆகியவை கடல் சுழற்சியை பாதித்து கடல் உயரத்தில் மாறுபாடுகளை உருவாக்கும்.

பசிஃபிக் பெருங்கடல் அட்லாண்டிக்கை விட உயரமாக இருப்பதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீருக்கடியில் முகடுகள், பள்ளத்தாக்கு சமவெளிகள் மற்றும் கடல் அகழிகள் கடல் சுழற்சியை பாதிக்கின்றன.

காற்று ஏற்படுத்தும் மாற்றம்

"லத்தீன் அமெரிக்கா பகுதியில் ஹம்போல்ட் மின்னோட்டத்துடன் (Humboldt current) தொடர்புடைய வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்றுடன் தொடர்புடைய மற்றொரு செயல்முறையை நாங்கள் காண்கிறோம் , இது ஒரு குளிர் மின்னோட்டமாகும் (cold current)" என்கிறார் கான்செப்சியன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

"பசிஃபிக் பகுதியில் சிலியில் இருந்து இந்தோனீசியாவை நோக்கி நீரின் ஓட்டத்தை தள்ளும் காற்று வீசுகிறது. மறுபுறம், சிலி, பெரு மற்றும் இந்தோனீசியா இடையே, இந்த காற்று செயல்முறை காரணமாக கடல் உயரம் மாறுபடுகிறது"

காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் கடலின் உயரம் மாறுமா?

"செயற்கைக்கோள்களுடன் கூடிய அல்டிமெட்ரி தரவு கடல் மட்டத்தின் உயர்வு சமச்சீராக இல்லை என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் அல்லது பசிஃபிக்கின் மறுபுறத்தில் நடப்பதைப் போலல்லாமல், சிலியின் கடற்கரையில் பகுதியில் கடல் இன்னும் உயரவில்லை" என்கிறார் உல்லோவா.

இதற்குக் காரணம், கடல்கள் ஒரேமாதிரியாக வெப்பமடையவில்லை. அதாவது பெருங்கடல் வெப்பமடைதல் நிகழ்வு ஒரே மாதிரியானதல்ல.

"வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலநிலை மாற்றம் பற்றி நாம் பேசும்போது, ​​​​அது எல்லா பகுதிகளையும் ஒரே மாதிரியாக பாதிக்கும் என்று நாம் நினைக்க முடியாது. சில பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படும். மற்றவை குறைவான பாதிப்பை கொண்டிருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)