மெய்நிகர் அனுபவத்தைத் தரும் ‘ஏ.ஐ. பாலுறவு பொம்மைகள்’ - இதன்பின் ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிக்கோலா கே ஸ்மித்
- பதவி, பிபிசி தொழில்நுட்ப நிருபர்
ஜெர்மனியின் பெர்லின் நகரில், உலகின் முதல் இணைய பாலியல் விடுதியின் சோதனைக் கட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த மாதத்தின் பிற்பகுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் மக்கள் செயற்கை நுண்ணறிவு (AI- ஏ.ஐ.) பாலுறவு பொம்மைகளுடன் ஒரு மணி நேரம் வரை, வாய்மொழியாகவும் தீண்டல் வழியாகவும் பாலியல் அனுபவம் பெற முன்பதிவு செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த ஏ.ஐ. பொம்மைகளுடன் வாய் மொழியாகவும் உடல் ரீதியாகவும் பாலியல் உணர்வுகளைப் பெற முடியும்.
சைப்ரோதெல் (Cybrothel) நிறுவனர் மற்றும் உரிமையாளர் பிலிப் ஃபுசெனேக்கர் கூறுகையில், "ஒரு இயந்திரத்துடன் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது பலருக்கு வசதியாக உள்ளது. காரணம் அந்த இயந்திரம் நம்மை எடைபோடாது, விமர்சிக்காது," என்கிறார்.
இதற்கு முன்னர், பேசும் பொம்மை மீது ஆர்வம் இருந்தது, அதனுடன் பயனர்கள் பேசவும் பேசுவதை கேட்கவும் முடியும். தற்போது, செயற்கை நுண்ணறிவுடன் இன்னும் மேம்படுத்தப்பட்ட முறையில் இதுபோன்ற பாலுறவு பொம்மைகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஏ.ஐ. பொம்மைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, என்கிறார்.
பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் பொழுதுபோக்கு வணிகங்களில் ஏ.ஐ. பயன்படுத்தப்படுவது இது ஒரு வழியாகும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏ.ஐ. உறவுகளுக்கான செயலிகளின் (AI companion apps) பயன்பாடுகள் 22.5 கோடி பதிவிறக்கங்களை எட்டியுள்ளதாக ஸ்பிளிட் மெட்ரிக்ஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Cybrothel
பெண்களின் பாலியல் உணர்வுகள்
ஸ்ப்ளிட் மெட்ரிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் தாமஸ் க்ரைபெர்னெக் கூறுகையில், "அதிகமான ஆப் டெவலப்பர்கள் இந்தப் போக்கைக் கவனித்து, செயற்கை நுண்ணறிவை வைத்து மேலும் புதுமையான மற்றும் பணமாக்குவதற்கான வழிகளை தேடுகிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
'ஏ.ஐ. உறவுகள்’ லாபகரமான வணிகமாக இருக்கலாம், மொசில்லாவின் 'பிரைவசி நாட் இன்க்ளூடட்’ வழிகாட்டியின் தனியுரிமை ஆராய்ச்சியாளர் மிஷா ரைகோவ் பேசுகையில், "பெரும்பாலான சாட்போட்கள் கட்டணம் வசூலிக்கின்றன. இவற்றின் முக்கியத் தொழில்நுட்பம் வேறு இடங்களில் உருவாக்கப்படுகிறது [ஓபன் ஏ.ஐ. போன்ற நிறுவனங்கள்], இது ஒரு உயர்மட்ட வணிகமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் செயலிகள் தனிப்பட்ட தரவைச் சேகரித்து, அவற்றை விளம்பரதாரர்கள் போன்ற மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்கின்றன," என்கிறார்.
இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு வணிகத்தில் ஏ.ஐ. பயன்பாட்டைப் புகுத்துவது ஆபத்தான போக்கு என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், ஜெனரேட்டிவ் ஏ.ஐ.-இல் 'உள்ளார்ந்த’ பண்பு உள்ளது. இது பயிற்சியளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதிய செயல்பாட்டை உருவாக்குகிறது.
"பாலுறவு மற்றும் இன்ப உணர்வுகள் பற்றிய பிற்போக்குத்தனமான பாலின 'ஸ்டீரியோடைப்' எண்ணங்கள் பாலுறவு சாட்போட்களில் புகுத்தப்படும் அபாயம் உள்ளது," என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள லெவர்ஹுல்ம் சென்டர் ஃபார் தி ஃபியூச்சர் ஆஃப் இன்டலிஜென்ஸின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் கெர்ரி மெக்கினெர்னி கூறுகிறார்.
"உருவாக்குபவர்கள் பாலுறவு சாட்பாட்களைப் பயிற்றுவிக்க என்ன வகையான தரவுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இல்லையெனில் பெண்களின் பாலியல் தொடர்பான உணர்வுகளை இழிவுபடுத்தும் உள்ளீடுகளையும் இருபாலர் (heterosexual) பாலியல் உறவுகளைத் தவிர்த்து பிற பாலியல் உறவுகளைப் புறக்கணிக்கும் கருத்துக்களை உள்ளிடும் அபாயம் உள்ளது," என்றும் விளக்குகிறார்.
ஏ.ஐ. பாலியல் உறவுக்கு அடிமையாகும் அபாயமும் உள்ளது என்கிறார் ரைகோவ், ஏ.ஐ. சாட்போட்கள் தனிமையில் இருக்கும் மக்களை, குறிப்பாக ஆண்களை குறிவைக்கின்றன என்று அவர் எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Jason Sheldon/Junction 10 Photography
ஏ.ஐ. எல்லை தாண்டிச் செல்கிறதா?
"நாங்கள் மதிப்பாய்வு செய்த ஏ.ஐ. சாட்பாட்களில் பெரும்பாலானவை அதிக அடிமையாக்கும் திறன் மற்றும் பல தீங்குகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக, மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களை அவை பாதிக்கின்றன. துஷ்பிரயோகம், வன்முறை, மற்றும் சிறுவர்-பாலியல் தொடர்பான கருப்பொருள்களை கொண்டுள்ளது. இதனால் மொசில்லா பல ஏஐ சாட்போட்களில் உள்ளடக்க எச்சரிக்கைகளைச் சேர்த்துள்ளது" என்கிறார் ரைகோவ்.
இதனால் தனியுரிமை பிரச்னைகளும் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கிறார். 'பார்ட்னர்ஷிப் சாட்பாட்கள்’ என்னும் வகையான ஏ.ஐ. செயலி, வாடிக்கையாளரிடம் இருந்து அதிக அளவு தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்.
மொசில்லாவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட 90% செயலிகள் "தனிப்பட்ட தரவைப் பகிரலாம் அல்லது விற்கலாம் என்னும் வாசகத்தை கொண்டுள்ளது," என்று ரைகோவ் கூறுகிறார். அதே நேரம், 50%-க்கும் மேற்பட்ட செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தரவை பதிவேற்றப்பட்ட பின்னர் அதனை நீக்குவதற்கு அனுமதிக்காது என்கிறார்.
நிஜ உலக உறவுகளில் ஏ.ஐ. ஏற்படுத்தக்கூடிய ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
'ரிலேட்’ என்னும் ஆலோசனை சேவை நிறுவனத்தின் மூத்த பயிற்சி ஆலோசகர் தமரா ஹோய்டன் பேசுகையில், “ஏ.ஐ. பாலியல் உறவில் பயனர்கள் அனுபவிக்கும் இன்பம், நிஜ வாழ்க்கையில் உறவுகளிடம் கிடைக்கவில்லை என்றால், மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். இது பல சிரமங்களை ஏற்படுத்தும்,” என்கிறார்.
சில சந்தர்ப்பங்களில், ஏ.ஐ. பாலியல் உறவு பயனர்களை ஆபத்தான வழிகளில் அழைத்துச் செல்லக்கூடும் என்று ஹோய்டன் கூறுகிறார்.
“கற்பனை வழியாக இன்பம் பெறுவது சிறிதும் தவறில்லை, மேலும் பலர் உணர்வு ரீதியாக மட்டும் பாலியல் ரீதியாக தூண்டப்படுகிறார்கள். ஏ.ஐ. பாலியல் உறவை இப்படி மட்டும் அணுகினால் நல்லது. ஆனால் நாம் அனுமதிக்கும் எல்லையை தாண்டி செயல்படும் போது, மற்ற பயனரின் அனுபவத்தின் அடிப்படையில் நம்மிடம் ஏ.ஐ. செயல்பாடுகள் திணிக்கப்படும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மக்களின் பாலியல் அனுபவம் மாற்றப்படுகிறதா?
இளைஞர்களுக்கான பொழுதுபோக்குத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் பயன்பாட்டின் போது சில எச்சரிக்கை உணர்வு தேவை என்பதை ஒப்புக் கொள்கின்றன, அதே சமயம் ஏ.ஐ.-க்கும் அதில் ஒரு முக்கிய பங்கு உள்ளது.
லவ்ஹனி நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைவரான பிலிப் ஹாம்பர்கர் பேசுகையில், "நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பாலியல் அனுபவத்தை மேம்படுத்துவதை விட, அதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது வரையறை செய்யப்படவேண்டிய முக்கியமான விஷயம்,” என்று கூறுகிறார்.
மற்றவர்கள் ஏ.ஐ. துறையில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். ரூபன் குரூஸ், பார்சிலோனாவை தளமாகக் கொண்ட 'தி க்ளூலெஸ் ஏஜென்சி'யின் இணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம் தான் முதல் ஏ.ஐ. இன்ஃப்ளூயன்சரான ஐடானா லோபஸை உருவாக்கியது.
பாலியல் தொழில் எப்போதும் இருக்கும் ஒன்றுதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார், மேலும் உண்மையான நபர்களைப் பயன்படுத்தி ஏ.ஐ. பொம்மைகளின் உள்ளடக்கம் உருவாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதன் மூலம் நெறிமுறைக் கவலைகளைத் தணிக்க ஏ.ஐ. உதவும், என்கிறார்.
"இந்த ஏ.ஐ. பாலுறவு எதிர்காலத்தில் எந்த ஒரு நபரும், (ஆணோ பெண்ணோ), வெளிப்படையாகப் பாலுறவு கொள்ளும் போகப்பொருளாக (sexualized) மட்டும் பார்க்கப்பட கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாக," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












