யுஜிசி நெட் தேர்வு ரத்து: 9 லட்சம் மாணவர்களின் எதிர்காலத் திட்டம் என்னவாகும்?

யுஜிசி நெட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முதல் கட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வை மத்தியக் கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இதனால் நெட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டப்படிப்புக்கான தயாரிப்புகளும், மேற்படிப்புக்கான எதிர்காலத் திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முதல் கட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA), 2024-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு ஷிப்டுகளில் 'யுஜிசி நெட்’ எழுத்துத் தேர்வை நடத்தியது.

இந்நிலையில், மத்தியக் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber ​​Crime Coordination Center), தேர்வு முடிந்த அடுத்த நாளே, தேர்வு தொடர்பான சில தகவல்களை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) வழங்கியது. இந்தத் தகவலை முதன்மையாகப் பகுப்பாய்வு செய்ததில், தேர்வில் சில முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தேர்வை ரத்து செய்த அமைச்சகம், அதன் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) ஒப்படைத்துள்ளது. தற்போது, ​​ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை மீண்டும் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நீட் (NEET) தேர்வைப் போன்று யுஜிசி-நெட் தேர்வையும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தான் நடத்துகிறது

யுஜிசி நெட் தேர்வு என்றால் என்ன?

தேசியத் தகுதித் தேர்வு (நெட் - NET - National Eligibility Test) அல்லது 'யுஜிசி நெட்' (UGC NET) என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான (Junior Research Fellowship -JRF) தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேர்வாகும்.

இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். இது ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டு, காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் என இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்ற இந்த எழுத்து தேர்வில் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் எழுதியிருந்தனர்.

மூன்று மணி நேரத் தேர்வில் மாணவர்கள் இரண்டு தாள்களை எழுத வேண்டும். இரண்டாம் தாள் மாணவர் தேர்ந்தெடுத்த பாடத்துடன் தொடர்புடையதாக இருக்கும். முதல் தாள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.

முதல் தாளில் மாணவர்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளும் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கும் சில ஆஃப்ஷன்கள் பதில்களாக (multiple choice) கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான பதிலைத் தேர்வு செய்து அந்த ஆப்ஷனை OMR படிவத்தில் குறிக்க வேண்டும். இந்தத் தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.

யுஜிசியின் கூற்றுப்படி, ஜூன் 2024-இல் நெட் தேர்வுக்காக 317 நகரங்களில் 1,205 மையங்கள் அமைக்கப்பட்டன.

இத்தேர்வுக்கு மொத்தம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 225 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 81 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர்.

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நெட் தேர்வில் மொத்தம் 9 லட்சத்து 45 ஆயிரத்து 872 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

'பிஎச்.டி படிப்பு மேற்கொள்வதில் சிக்கல்'

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் எம். எஸ். சி எலக்ட்ரானிக் மீடியா இறுதி ஆண்டு மாணவியான ஜானகி கே.ஐ., கடந்த ஆறு மாதங்களாகத் தேர்வுக்குத் தயார் செய்து வந்த தனது உழைப்பு வீணாகிவிட்டதாக ஆதங்கப்படுகிறார்.

“இப்போது தான் முதல்முறை இந்த தேர்வு எழுதுகிறேன். இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. என் எதிர்காலக் கல்வித் திட்டங்கள் இதை நம்பியே இருந்தன. இந்தத் தேர்வை முடித்த பிறகு ஆராய்ச்சிப் படிப்புக்கு (பிஎச்.டி) விண்ணப்பிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றால் கல்வி உதவித்தொகை கிடைக்கும். அது என் ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தேர்வை முடித்திருந்தால் பிஎச்.டி படிப்புக்கான வழிகாட்டும் பேராசிரியரை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். தற்போது இது எதுவுமே இல்லாதால் என்ன செய்வதென்று புரியவில்லை,” என்றார்.

மேலும், இந்த முறை இதழியல் படிப்புக்கான கேள்விகளில் 90% வடஇந்தியா தொடர்பானதாகவே இருந்ததாக அவர் கூறுகிறார். “இந்தி நடிகர் ராஜ் கபூர் நடித்த படங்களை ஆண்டு வரிசையாக அடுக்கச் சொல்லி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இங்குள்ள எத்தனை பேருக்கு ராஜ் கபூரை தெரியும், அதுவும் எந்த ஆண்டில் எந்தப் படம் நடித்தார் என்று எப்படித் தெரியும்? கேட்கப்பட்ட 100 கேள்விகளில் இரண்டு கேள்விகள் மட்டுமே தென்னிந்தியா சம்பந்தப்பட்டதாக இருந்தன,” என்கிறார்.

ராஜஸ்தானில் வசிக்கும் கார்விட் கர்க், 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் யுஜிசி-நெட் தேர்வை மாஸ் கம்யூனிகேஷன் பாடப்பிரிவின் கீழ் எழுதி இருந்தார். இந்தத் தேர்வில் அவர் ஜே.ஆர்.எஃப் (JRF) தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவர் கூறுகையில், ​​“தற்போது பிஎச்டி ஆராய்ச்சிக்காக யுஜிசி-யில் இருந்து மாதந்தோறும் ரூ.37,000 பெறுகிறேன். இது தவிர, ரூ.9,000 வீட்டு வாடகைக்கு வழங்கப்படுகிறது,” என்கிறார்.

அதே போன்று, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குப் பதிவு செய்துள்ள, பெயர் குறிப்பிட விரும்பாத மாணவி கூறுகையில், “நான் இரண்டு முறை ஏற்கனவே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இந்த முறை அதிக மதிப்பெண்கள் பெற்று ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் பெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்வு எழுதினேன். தேர்வு எழுதி முடித்த வந்து இரவில், நான் தூங்கவில்லை. எத்தனை சரியான பதில் எழுதியுள்ளேன் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கலாம் என்று கணக்கிட்டு கொண்டிருந்தேன். இப்போது அந்த முயற்சி எல்லாம் வீணாகிவிட்டது,” என்கிறார்.

மேலும், "இந்த நிதிஉதவி கிடைக்காமல் ஆய்வுக்காக களத்துக்கு செல்வதும் தகவல்கள் சேகரிப்பதும் எனக்குச் சிரமமாக இருக்கும். நான் சரியாக எழுதவில்லை, அதனால் மீண்டும் படித்து தேர்வு எழுத வேண்டும் என்றால் சரி. ஆனால் தேசியத் தேர்வு முகமை செய்த தவறுக்கு நான் மீண்டும் ஓரிரு மாதங்கள் படித்து தேர்வு எழுத வேண்டுமென கூறுவது நியாயமா?” என்கிறார்.

தேசியத் தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வில் எப்படி மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனரோ அதே போன்று தான் இந்தத் தேர்விலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன என்கிறார் அவர். “நான் தேர்வு எழுதிய மையத்தில், சர்க்கரை நோயாளி ஒருவர் கால்வலிக்காக அணிந்திருந்த செருப்பை அகற்றச் சொன்னார்கள், மூக்குத்தி, சடை ஆகியவற்றை கழற்றச் சொல்லினார்கள்,” என்றும் கூறுகிறார்.

தேசியத் தேர்வு முகமை மீது எழும் கேள்விகள்

யுஜிசி நெட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங்

நீட் (NEET) தேர்வைப் போன்று யுஜிசி-நெட் தேர்வையும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) தான் நடத்துகிறது.

2018-ஆம் ஆண்டு முதல் யுஜிசி சார்பில் இந்தத் தேர்வை என்.டி.ஏ நடத்தி வருகிறது. முன்னதாக இந்தத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நெட் தேர்வை ஒரே நேரத்தில் வெவ்வேறு மையங்களில் பேனா மற்றும் காகித முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வையும் என்.டி.ஏ நடத்தியது. ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்.டி.ஏ பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான கேள்விகளால் சூழப்பட்டுள்ள தேசியத் தேர்வு முகமை, தற்போது நெட் தேர்வு தொடர்பான விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் சூழலில் உள்ளது.

நீட் தேர்வைச் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில், 67 மாணவர்களுக்கு 720-க்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், சில மாணவர்களுக்கு 718 மதிப்பெண்கள், 719 மதிப்பெண்கள் ஆகியவை வழங்கப்பட்டன. நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது.

மேலும் ஒரே தேர்வில் இவ்வளவு பேர் முழு மதிப்பெண் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும், 718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமில்லை என்றும் புகார்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் விடைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்.டி.ஏ தரப்பு வாதிட்டது. இருப்பினும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது, அதன் பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக என்.டி.ஏ கூறியது.

தற்போது இந்த மாணவர்களுக்கு 2024-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி, அன்று மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வு முகமையின் கூற்றுப்படி, மீண்டும் தேர்வு எழுத விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் உண்மையான மதிப்பெண்கள் (கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல்) எடுத்துக் கொள்ளப்படும்.

யுஜிசி நெட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யுஜிசி நெட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை மீது எழுப்பப்படும் கேள்விகள்

கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

யுஜிசி நெட் மற்றும் நீட் தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை குறிப்பிட்டு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்கே எக்ஸ் தளத்தில், "நரேந்திர மோதி ஜி, நீங்கள் தேர்வைப் பற்றி அதிகம் விவாதிக்கிறீர்கள், நீட் தேர்வு பற்றி எப்போது விவாதிப்பீர்கள்," என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்தது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்க முயன்ற மோதி அரசின் அகங்காரத்தின் தோல்வி என்று அவர் கூறியுள்ளார்.

அப்போது அவர், "நீட் தேர்வில் கேள்வித்தாள் கசியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் முதலில் கூறுகிறார். பிஹார், குஜராத், ஹரியானாவில் கல்வி மாஃபியாக்கள் கைது செய்யப்படும்போது, ​​ஏதோ மோசடி நடந்திருப்பதாகக் கல்வி அமைச்சர் நம்புகிறார். நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க அரசின் அதிகார வர்க்கமும் ஊழலும் இளைஞர்களுக்கு ஆபத்தானவை. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, தற்போது ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட நெட் தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தனப் போக்கிற்கு கல்வி அமைச்சர் பொறுப்பேற்பாரா?" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், “தற்போது முறைகேடுகள் நடந்ததாக வெளியான செய்தியை அடுத்து, யுஜிசி-நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் ஒவ்வொரு தேர்விலும் முறைகேடுகள் நடக்கிறது. இது நாட்டுக்கு எதிராக யாரோ செய்யும் பெரிய சதியாகவும் இருக்கலாம்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ட்விட்டரில், “கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களின் வாழ்க்கை ‘வினாத் தாள் கசிவு’ காரணமாக சீரழிந்துள்ளது. உத்தரபிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு, நீட் தேர்வு, நெட் என தொடர்ச்சியாக அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடந்து நாட்டை 'வினாத்தாள் கசிவு' நாடாக மாற்றியுள்ளன. உங்களுக்கு கோபம் வரவில்லையா? நீங்கள் மோதி ஜிக்கு மீண்டும் மீண்டும் வாக்களியுங்கள், மோதிஜி உங்களை முறைகேடுகள் மூலம் காயப்படுத்துவார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)