கேள்வி கேட்ட ரசிகரை 'நீ இந்தியனா?' என்று கேட்ட பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவூஃப் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், SCREENSHOT
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஸ் ரவூஃப் அமெரிக்காவில் ஒரு நபருடன் தகராறு செய்யும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்திற்கு எதிராக ஏதேனும் நடந்தால் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அமெரிக்கா சென்றுள்ளது. டி20-யில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறினாலும், அணியின் வீரர்கள் இன்னும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் செவ்வாயன்று (ஜூன் 18), ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ஹரிஸ் ரவூஃப் ஒரு கிரிக்கெட் ரசிகருடன் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
வைரலான இந்த வீடியோவில், ரவூஃப் தனது மனைவி முஸ்னாவுடன் இருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த கிரிக்கெட் ரசிகர் ஒரு இளைஞர் குழுவுடன் இருக்கிறார். ரவூஃப் பொது இடத்தில் அந்த ரசிகரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. அவரது மனைவி முஸ்னா மற்றும் அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்திய போதும் ரவூஃப் அந்த ரசிகரை நோக்கி கோபமாகச் சண்டையிட ஓடுகிறார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் குறுக்கிட்டதும், அந்தக் கிரிக்கெட் ரசிகர் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.


பட மூலாதாரம், Getty Images
ஹரிஸ் ரவூஃப் கொடுத்த விளக்கம்
பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது பற்றி அந்த ரசிகர் கிண்டல் செய்ததைத் தொடர்ந்து ரவுஃப் கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். அந்த ரசிகர் தன் பெற்றோரை பற்றி விமர்சித்ததாக ரவுஃப் குற்றம்சாட்டியுள்ளார். வீடியோவில், ரவூஃப் கிரிக்கெட் ரசிகரிடம் "நீங்கள் ஒரு இந்தியராகத்தான் இருக்க வேண்டும்,” என்று கூறுகிறார். ஆனால் அந்த ரசிகர், "நான் பாகிஸ்தானியன்." என்று பதில் சொல்கிறார். "நீங்கள் எப்படி என் தந்தையை பற்றிப் பேசலாம்?” என்று ரவூஃப் கேட்கிறார். அதன் பிறகு சுற்றியுள்ளவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது ரவூஃப் தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், "சமூக ஊடகங்கள் வரை இந்த விவகாரத்தைக் கொண்டுவர வேண்டாம் என்று நான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இப்போது வீடியோ வெளியாகிவிட்டது. எனவே என் தரப்பு விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
''பொது வாழ்க்கையில் இருப்பதால், எல்லாவிதமான எதிர்வினைகளையும் கேட்கத் தயாராக இருக்கிறேன். எங்களை விமர்சிக்கவும் ஆதரிக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எனது பெற்றோரையும் குடும்பத்தினரையும் குறிப்பிட்டு விமர்சிக்கும் போது அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பேன். எந்தத் துறையாக இருந்தாலும், அந்தப் பிரபலங்களின் குடும்பத்தையும் மதிப்பது முக்கியம்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
ரவூஃப்பின் பதிவுக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, "ஹரிஸ் ரவூஃப் எதிர்கொண்ட நிகழ்வை நான் கண்டிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
"எங்கள் வீரர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஹரிஸ் ரவூஃபிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
'இந்தியர்’ என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய ரவூஃப்
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் ஹரிஸுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ஹரிஸ் ரவூஃப்பிடம் தவறாக நடந்து கொண்டவர் பாகிஸ்தானியரா அல்லது இந்தியரா என்பது முக்கியமில்லை,” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த நபருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு நபரை அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. குறிப்பாக ஹரிஸ் தனது குடும்பத்துடன் இருக்கும்போது அந்த நபர் இப்படி நடந்து கொண்டது தவறு. இதுபோன்ற மோசமான நடத்தை கண்டிக்கப்பட வேண்டும். சகிப்புத்தன்மை, மரியாதை, மற்றும் இரக்கம் போன்ற மதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன," என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் பாசித் சுபானி, "ஹரிஸ் ரவூஃப் உடன் விவாதத்தில் ஈடுபட்டது இந்தியரா? அவர் இந்தியர் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அவர் இந்தியராக இல்லாத போது இந்தியாவின் பெயர் ஏன் இழுக்கப்பட்டுள்ளது? கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் தூதர்கள். எதையும் பேசுவதற்கும் பதிவிடுவதற்கும் முன் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்னையின் போது ஹரிஸ் ரவூஃப் 'நீங்கள் இந்தியனாக இருக்க வேண்டும்' என்று கூறியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் ஊடகங்களில் பலர் கூறி வருகின்றனர். 'ARY’ டிவி சேனலில் இதுதொடர்பான பேனல் விவாதத்தின் போது, பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் ஒருவர் ஹரிஸ் 'இந்தியர்’ என்று அந்த ரசிகரைக் குறிப்பிட்டுச் சொல்லி 'முட்டாள்தனமாக நடந்து கொண்டதாகக்' கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "ஹரிஸ் ரவூஃப்பிடம் பேசியபோது, தான் பாகிஸ்தானியர் என்று கூறியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் விவாதத்தின்போது தெரியாமல் பேசிவிட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன்சி குறித்து பாபர் ஆசம் கூறியது என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியும் ஹரிஸ் ரவூஃப்பின் வீடியோ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஹசன் அலி தன் பதிவில், “ஹரிஸ் ரவூஃப் தொடர்பான வீடியோவைப் பார்த்தேன். விமர்சனங்கள் யாரையும் புண்படுத்தாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை நான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். விவாதம் மரியாதையுடன் செய்யப்பட வேண்டும். வீரர்களின் குடும்பங்களை அவமதிக்கக் கூடாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது அதன் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். குரூப் போட்டியின் போது அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் அணியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். மறுபுறம், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு பாபர் அசாம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, "அணியின் வீரர்கள், நிர்வாகம் என அனைவரும் சோகமாக உள்ளனர்," என்று பாபர் கூறினார்.
"எங்களால் திட்டமிட்டபடிச் செயல்பட முடியவில்லை. எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. எங்கள் கூட்டுச் செயல்திறன் குறைவாக இருந்தது. இந்தத் தோல்விக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் காரணம் சொல்ல முடியாது. நாங்கள் சில சமயங்களில் நல்ல பேட்டர்களாகவும், மற்ற நேரங்களில் நல்ல பந்து வீச்சாளர்களாகவும் இருந்தோம். நீங்கள் இந்த இடத்தில் ஆடுகளத்தைப் பார்த்தீர்களானால் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக உள்ளது. ஆனால் எங்கள் பேட்டிங்கைக் கொண்டு அதனை எதிர்கொள்ள முடியவில்லை,” என்றார்
கேப்டன் பதவி குறித்து பேசிய பாபர் ஆசம், "முன்பு இதுபோன்ற சூழலில், என்னால் முடியாது என்று நினைத்தபோது, நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது நானாக அதை அறிவித்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதனை ஏற்றுக் கொண்டது," என்று குறிப்பிட்டார்.
"மீண்டும் இதே முடிவுடன் கிரிக்கெட் வாரியத்தை நான் அணுகினாலும் உட்கார்ந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இறுதி முடிவை எடுக்கும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












