டி20 உலகக்கோப்பையில் தோல்வி - பாகிஸ்தான் அணிக்கு சேவாக் கூறும் புதிய யோசனை

டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான், பாபர் ஆசம்

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டித் தொடரை போலவே, 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்தும் பாகிஸ்தான் விரைவிலேயே வெளியேறிவிட்டது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான வெற்றியுடன் பாகிஸ்தானின் பயணம் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்த அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. ஆனால், அந்த அணியால் சூப்பர் 8-க்கு முன்னேற முடியவில்லை.

கேப்டன் பாபர் ஆசம் மீது பாகிஸ்தானின் அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அயர்லாந்து அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பிறகு, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் மீண்டும் மிடில் ஆர்டர் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 2 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார்.

பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா?

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி20 குழுநிலை ஆட்டத்தில் அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் ஆசம் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​"அணியின் வீரர்கள், நிர்வாகம் என அனைவரும் சோகமாக உள்ளனர்" என்று பாபர் கூறினார்.

"எங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை. எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்கள் கூட்டு செயல்திறன் குறைவாக இருந்தது. இந்த தோல்விக்கு தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் காரணம் சொல்ல முடியாது. நாங்கள் சில சமயங்களில் நல்ல பேட்டர்களாகவும் மற்ற நேரங்களில் நல்ல பந்து வீச்சாளர்களாகவும் இருந்தோம். நீங்கள் இந்த இடத்தில் ஆடுகளத்தை பார்த்தீர்களானால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் எங்கள் பேட்டிங்கை கொண்டு அதனை எதிர்கொள்ள முடியவில்லை. ” என்றார்

கேப்டன் பதவி குறித்து பேசிய பாபர் ஆசம், "முன்பு இதுபோன்ற சூழலில், என்னால் முடியாது நினைத்தபோது நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது நானாக அறிவித்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதனை ஏற்றுக் கொண்டது. " என்று குறிப்பிட்டார்.

மீண்டும் இதே முடிவுடன் கிரிக்கெட் வாரியத்தை நான் அணுகினாலும் உட்கார்ந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இறுதி முடிவை எடுக்கும்" என்றார்.

பாகிஸ்தான் அணியின் டி20 பயணம் எப்படி இருந்தது?

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் கட்டத்தில், பாகிஸ்தான் முதல் இரண்டு முக்கியமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு கடைசி இரண்டு போட்டிகளில் வென்றது. ஆனாலும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

முதல் போட்டியில், சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன் என்ற இலக்கைக் கூட துரத்திப் பிடிக்க முடியாமல் தோற்றுப் போனது.

இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய `குரூப் ஏ’ பிரிவில் பாகிஸ்தான் இருந்தது.

இந்த `குரூப் ஏ’ குழுவில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் குழுவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்தானது, இதன் மூலம் அமெரிக்கா ஒரு புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் : கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுகிறாரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்

பாகிஸ்தானின் பிரபல `டான்’ ஆங்கில நாளிதழின் விளையாட்டு செய்தியாளரான அப்துல் கஃபர் தனது எக்ஸ் தளத்தில், "2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் ஆசம் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் பாபர் ஆசமுக்கு கேப்டன் பதவியை வழங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல பெரிய ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

2017-ம் ஆண்டு முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் தலைமையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

2009 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணி பற்றிய மீம்ஸ்களும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், பாபர் ஆசம் கேப்டன் பதவி குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி பற்றி சேவாக் கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான், பாபர் ஆசம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கும் பாகிஸ்தான் பேட்டிங் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறுகையில், "பாகிஸ்தான் அணி பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு தேவை.” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக், டென் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "பாபர் ஆசம் இடத்தில் நான் இருந்திருந்தால், இப்போதே ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியிருப்பேன்” என்று கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறுகையில், "அயர்லாந்துக்கு எதிரான இன்னிங்ஸை பாபர் ஆசம் வழிநடத்திய போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர், டெயில் எண்டர்களே (கீழ் வரிசை பேட்ஸ்மேன்களே) முப்பது சதவீத ரன்களை எடுத்தனர்” என்று கூறினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணம் முடிந்தது’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)