டி20 உலகக் கோப்பை: கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தொடர்ந்து 2 தோல்விகளுக்குப்பின் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி செல்வது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.
நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவில் 22வது லீக் ஆட்டத்தில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கடும் போராட்டத்துக்குப்பின் 15 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சூப்பர்-8 செல்லுமா பாகிஸ்தான்?
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.191 என்ற ரீதியில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியைவிட அமெரிக்கா அணி கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் வலுவாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு வரும் 16-ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டம் ஃப்ளோரிடாவில் நடக்க இருக்கிறது. ப்ளோரிடாவில் வரும் 16-ஆம் தேதி நல்ல மழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக வானிலை அறிவிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றிருந்தாலும், அமெரிக்க அணியின் கடைசி 2 லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14-ஆம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
அதன்பின் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு செல்லாமல் வெளியேற வேண்டியதுதான்.
பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழை வராமல் போட்டி நடந்து பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் இயல்பாக சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை,
அதேசமயம், கனடா அணி 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கனடா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவும் சூப்பர்-8 இடங்களைத் தீர்மானிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
கனடாவை பாகிஸ்தான் வீழ்த்தியது எப்படி?
பாகிஸ்தான் தரப்பில் நேற்று வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குறிப்பாக முகமது அமிர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், இதில் 17 டாட் பந்துகள் அடங்கும். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமிர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் முழுமையாக வெற்றிக்கு காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். கனடா அணியை 106 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் இந்த ரன்னை சேஸ் செய்வதற்குள் திணறிவிட்டனர். அதிலும் பவர்ப்ளே ஓவரில் பாகிஸ்தான் பேட்டர்களை ஷார்ட் பந்தாக வீசி கனடா பந்துவீச்சாளர்கள் திணறவைத்தனர்.
ஆனால், கேப்டன் பாபர் ஆஸம், அனுபவ வீரர் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு உதவி செய்தனர். ரிஸ்வான் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்து 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாபர் ஆஸம் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கனடா அணியின் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு பெரிதாக தொந்தரவு இல்லாத நிலையில் குறைந்த ஸ்கோரை விரைவாக சேஸ் செய்து நிகர ரன்ரேட்டை பாகிஸ்தான் உயர்த்தி இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் மந்தமாக பேட் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கனடாவின் ஜான்சன் அதிரடி பேட்டிங்
கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்ஸன் 44 பந்துகளில் 52 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்தார். இவரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புதான் கனடா அணியால் 100 ரன்களைக் கடக்க முடிந்தது. கனடா அணியில் ஜான்சனைத் தவிர மற்ற 6 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கனடா அணியின் ஜான்சன் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். அப்ரிதி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்தார், அடுத்த பந்திலும் பவுண்டரி் அடித்தார். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஓவரின் இரு பந்துகளில் பவுண்டரி அடித்த முதல் பேட்டர் ஜான்சன்தான். 3-ஆவது பந்தும் பவுண்டரி சென்றிருக்கும் ஆனால், கடைசி நேரத்தில் பீல்டிங் செய்துவிட்டனர்.
பாகிஸ்தான் பேட்டர்கள் பேட்டிங் செய்ய திணறிய நிலையில் கனடாவின் ஆரோன் ஜான்சன் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். நசீம்ஷா, இமாத் வாசிம், அப்ரிதி ஓவர்களில் சிக்ஸர் விளாசிய ஆரோன் ஜான்சன், 4 பவுண்டரிகளை விளாசி 118 ஸ்ட்ரேக் ரேட்டில் பேட் செய்தார். கத்துக்குட்டி அணியான கனடாவின் ஜான்சன் அதிரடியாக பேட் செய்தநிலையில், அனுபவமான பாகிஸ்தான் பேட்டர்களால் ஏன் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது கேள்வியாக எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கனடா அணியின் சிறந்த பேட்டர் என்று கூறப்படும் நிகோலஸ் கிர்டன் ரன் அவுட் செய்யப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஒருபுறம் கனடா அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ஜான்சன் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார்.
கனடாவின் ஸ்ரேயாஸ் மோவாவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டி20 வரலாற்றில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை எட்டிய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹேரிஸ் ராப் இணைந்தார்.
பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேட் செய்த ஜான்சன் 39 பந்துகளில் அரைசதம்அடித்தார். எந்த பந்துவீச்சாளரையும் சளைக்காமல் எதிர்த்து பவுண்டரி சிக்ஸர், அடித்த ஜான்சன் 52 ரன்னில் இமாத் வாசிம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். டெத் ஓவரில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை வழங்கியது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகமான டாட் பந்துகளை சந்தித்த அணியாக கனடா அணி பெயர் பெற்று நேற்றைய ஆட்டத்தில் 76 டாட் பந்துகளைச் சந்தித்தது. அதாவது, 44 பந்துகளில் மட்டும்தான் கனடா பேட்டர்கள் ரன் சேர்த்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
திணறிய பாகிஸ்தான் பேட்டர்கள்
107 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பேட்டர்கள் தொடக்கத்திலிருந்தே ரன் சேர்க்கத் திணறினர். நடுவரிசையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக கேப்டன் பாபர் ஆஸம் ஒன்டவுனில் களமிறங்கினார். தொடக்க வீரராக ரிஸ்வான், சயீம் அயுப் களமிறங்கினர். ஆனால், இளம் வீரர் சயூப் பெரிய ஷாட்டுக்கு முயன்று 6 ரன்னில் வெளியேறினார்.
ஆனால், பவர்ப்ளே ஓவர்களில் கனடா வேகப்பந்துவீச்சாளர்கள் கார்டன், ஹேலிகர், சனா ஆகியோர் லைன் லென்த்தில் பந்துவீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தனர். பவர்பளேயில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டைஇழந்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா அணி பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் அடித்த நிலையில், பாகிஸ்தான் அணி ஒரே பவுண்டரிதான் அடித்திருந்தது. பவர்ப்ளேயில் 36 பந்துகளில் 31 பந்துகளை கனடா அணி துல்லியமாக லென்த்தில் வீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தது. 9.1 ஓவர்களில்தான் பாகிஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது.

பட மூலாதாரம், Getty Images
“ரன்ரேட்டை உயர்த்தமுடியவில்லை”
வெற்றிக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறுகையில் “எங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. பந்துவீச்சில் சிறப்பாகத் தொடங்கி, பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நிகர ரன்ரேட்டை உயர்த்த முயன்றோம், அதை நோக்கித்தான் விளையாடினோம். 14 ஓவர்களுக்குள் இலக்கை அடைவது இந்த ஆடுகளத்தில் கடினமாக இருந்தது. நான் எனக்கு பிடித்தமான ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தது எனக்கு வேதனையாக இருந்தது. இந்திய அணிக்கு எதிராகவும் இதே ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தேன். சில நேரங்களில் இதுபோன்ற ஷாட்களை ஆடும்போது வெற்றி தேவை”எ னத் தெரிவித்தார்
பாபர் ஆஸம், ரிஸ்வான் சேர்ந்தபின் ரன்சேர்ப்பில் ஓரளவு வேகம் காட்டியது பாகிஸ்தான் இதனால் 17வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பாபர் ஆஸம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்களில் ஹேலிகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியால் பாகிஸ்தான் நிகர ரன்ரேட் அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிடக்கூட உயரவில்லை. இந்த குறைந்த இலக்கை 10 ஓவர்களில் சேஸ் செய்திருந்தால், அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












