கிரிக்கெட்: இந்தியாவிடம் தோற்றதால் கொந்தளிக்கும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தான் அணி அவர்களின் சொந்த நாட்டிலேயே கோபமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோல்விக்குப் பிறகு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு சமயத்தில் போட்டி பாகிஸ்தானின் கைவசம் இருப்பதுபோல தோன்றியது. ஆனால் போட்டியின் திசையை திருப்பி இந்தியா வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்தப்போட்டியில் இந்தியா 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தானால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

பட மூலாதாரம், Getty Images
ஷோயப் அக்தர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் சொல்வது என்ன?
கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணியின் திறமை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
அணித் தேர்வு மற்றும் வீரர்களின் செயல்பாடு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், “இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை. ஒரே பந்து போட்டியின் திசையை மாற்றியது. பாகிஸ்தான் அணியின் மன உறுதி மற்றும் அதை ஆடுகளத்தில் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆகிய எல்லாமே கேள்விக்குறியாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
"இது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வெற்றிபெறும் வாய்ப்பும் இருந்தது. 46 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அணியிடம் ஏழு பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆனால் அணியால் போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-ஹக் தனது யூடியூப் சேனலான 'மேட்ச் வின்னர்' இல், ”பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது, ஆனால் இந்திய அணி அதைக்காட்டிலும் சிறப்பாக விளையாடியது,” என்று குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அதை விட சிறப்பாக இருந்தது. குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் இந்திய அணி தன் தைரியத்தை இழக்கவே இல்லை,” என்றார் அவர்.
”பேட்டிங் செய்யும்போது ’எடுக்கவேண்டிய ரன்களின் சராசரி’ ஏழு ரன்களுக்கு மேல் செல்ல பாகிஸ்தான் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தானின் கையில் விக்கெட்டுகள் இருந்தன, இருந்தபோதிலும் அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை,” என்று இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டார்.
‘‘பாகிஸ்தானின் பேட்டிங் மோசமாக இருந்தது. இமாத் வாசிம் மோசமாக பேட்டிங் செய்தார். அவர் இரண்டு மூன்று முறை ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். 23 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் அவுட்டும் ஆகவில்லை, ஸ்கோரும் செய்யவில்லை. ரிஸ்வான் நிறைய நேரம் விளையாடினார். ஆனால் போட்டியை முடிக்க முடியவில்லை. இந்த போட்டியை வைத்து அணியின் நிலை என்ன என்பதை பாகிஸ்தான் ஆழமாக சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் விமர்சனம்

பட மூலாதாரம், X.com Screengrab
"என்னிடம் வார்த்தைகள் இல்லை. வருத்தத்தை மட்டுமே தெரிவிக்க முடியும். பாகிஸ்தான் 120 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தில் இந்தியா 35 முதல் 40 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தது. ஆனால் அவர்களது பந்துவீச்சாளர்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் நம்மால் 120 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. நீங்கள் அதிக ரன் கொடுக்கிறீர்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் எப்போதுமே சொல்கிறோம். ஏனென்றால், இது பேட்ஸ்மென்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது,” என்று ஷாஹித் அஃப்ரீதி தெரிவித்தார்.
“இன்றைய தோல்வியால் பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டது. மோசமான அணித் தேர்வு, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் பயிற்சிப் போட்டிகளைத் தவிர்த்தது போன்றவை பாகிஸ்தானை இந்த நிலைக்கு தள்ளியுள்ளன. இனி பாகிஸ்தான் தீவிரமாக சிந்திக்க வேண்டும்,” என்று டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவை சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். போட்டிக்கு முன் ராஜா எக்ஸில்," இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கடந்த ஏழு டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி ஒவ்வொரு முறையும் வென்றது," என்று எழுதியிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியாவின் மட்டைவீச்சுக்கு பிறகு செய்த ட்வீட்டும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் பந்துவீச்சுக்குப் பிறகு அவர் எக்ஸ் தளத்தில், "நியூயார்க்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அற்புதமாக பந்து வீசியது. இந்தப் போட்டியில் அபாரமான ஆட்டம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் அணி சிறப்பாக சேஸ் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்திய அணியின் ஸ்கோரை பாகிஸ்தான் அணியால் அடிக்க முடியவில்லை. இதனால் வெற்றி கைநழுவியது.
டெல்லி காவல்துறையின் டிவீட்
பாகிஸ்தானின் தோல்வியை கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெல்லி போலீசார், "எங்களுக்கு இரண்டு சத்தம் கேட்டது. ஒன்று 'இந்தியா... இந்தியா என்ற கோஷம்'. மற்றொன்று டிவி உடையும் சத்தமாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்த முடியுமா," என்று குறிப்பிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், X.com Screengrab
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியை 119 ரன்கள் மட்டுமே எடுக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனுமதித்தனர். இந்திய அணி 19 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக்குறைவான ஸ்கோர் இது.
பின்னர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது போட்டியில் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதிபோல இருந்தது. ஆனால் ஒரு பந்து போட்டியை மாற்றியது.
120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாபர் ஆசம் ஆரம்பத்திலேயே வெளியேறினார். ஆனால் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டில் தொடர்ந்து இருந்தார், அவர் விளையாடும் வரை பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் 15வது ஓவரில் பந்து வீச வந்த ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே ரிஸ்வானின் ஸ்டம்புகளை எகிற வைத்தார். இங்கிருந்து பாகிஸ்தான் அணி பலவீனமானது.
19வது ஓவரில் பும்ரா மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து இஃப்திகார் அகமதின் விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












