சௌரப் நேத்ரவால்கர்: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை சுருட்டிய மும்பை வீரர் - இந்தியாவுக்குப் பதிலாக அமெரிக்க அணியில் ஆடுவது ஏன்?

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டி20 உலகக்கோப்பைப் போட்டியில் அனுபவமில்லாத அமெரிக்க அணியுடன் தோல்வியைத் தழுவியிருக்கிறது பாகிஸ்தான்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் உள்ள புள்ளிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவால்கர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வெற்றி பெறவிடாமல் சுருட்டினார். அவர் அமெரிக்க அணியில் இடம்பெற்ற கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.

மும்பையைச் சேர்ந்த சௌரப், ஒரு காலத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் (Under-19) இடம் பிடித்திருந்தார். அதன்பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றபோது தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினார்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேநேரம் கிரிக்கெட் மீதான அவரது காதல் அப்படியே இருந்தது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போதுகூட, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இறுதியில், அவருக்கு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான கதவுகள் திறக்கப்பட்டது.

மும்பை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சௌரப் தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடுவது அவரின் கிரிக்கெட் மீதான காதல் மற்றும் ஆர்வத்திற்குக் கிடைத்த வெகுமதி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சௌரப் எப்படி விளையாடினார்?

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015இல், செளரப் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

செளரப் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மலாட்டில் வளர்ந்த அவர் 10 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார்.

கடந்த 2008-09 காலக்கட்டத்தில் முதல் முறையாக அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் கோப்பை (Cooch Behar Trophy) கிரிக்கெட் போட்டியில் ஆறு போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தக் காலக்கட்டத்தில் மும்பையில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு, அங்கு உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சௌரப், உயரமான மற்றும் ஒல்லியான இடதுகை பந்துவீச்சாளர் என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு 2010இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சௌரப், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

அப்போது, ​​சௌரப் உடன், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தனர். அதன் பிறகு இவர்கள் மூவரும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஆனால் சௌரப்பால் அது முடியவில்லை.

செளரப் கிரிக்கெட் மட்டுமின்றி படிப்பிலும் ஆர்வம் காட்டினார். 2009-13இல் மும்பை சர்தார் படேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பை முடித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ​​"2013இல் புனேவில் பொறியியல் துறை தொடர்பான வேலை கிடைத்தது. அதன் பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகள் எந்தப் பணிக்கும் செல்லாமல் கிரிக்கெட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மும்பை அணியில் தேர்வாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் அறிமுகமானேன்," என்றார்.

சௌரப் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முயன்ற போதிலும், கிரிக்கெட் அணியின் பிரதான 11 வீரர்களில் ஒருவராகத் தேர்வாகவில்லை. அப்போது அணியில் இடம் பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவியதால் அவரால் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியவில்லை.

கிரிக்கெட் செயலி உருவாக்கிய செளரப்

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை 22-23 வயதில்தான் தொடங்குகிறது. ஆனால் இந்த வயதில் செளரப் கிரிக்கெட்டில் இருந்து விலகும் முக்கிய முடிவை எடுத்தார்.

இதுகுறித்து சௌரப் பேசுகையில், "அந்த நேரத்தில் நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்தில் தவித்தேன்," என்கிறார்.

அந்த நேரத்தில் மும்பை ரஞ்சி அணியில் அவரது இடம் உறுதியாகவில்லை. மேலும் அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கும் வாய்ப்பில்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த சௌரப் முடிவு செய்தார்.

செளரப் கூறுகையில் “2015இல், கிரிக்கெட்டுக்கு மாற்றாக நான் அமெரிக்காவில் முதுகலை நுழைவுத் தேர்வில் பங்கேற்றேன். என் சக பொறியியல் மாணவர்கள் பலர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். முதுநிலைப் படிப்பிற்காக, கணினி அறிவியலுக்கான உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது," என்றார்.

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

செளரப் 2015ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த நேரத்தில், செளரப் கிரிக்கெட் தொடர்பான ஒரு செயலியையும் உருவாக்கினார். அதன் பிறகு அவரது யோகா மற்றும் பாட்டு பாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பிரபலமானது. அமெரிக்கா போன பிறகு கிரிக்கெட் விளையாட்டைத் தொடர முடியாது என்று நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

"கல்லூரியில் சில மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்கள் கல்லூரியில் கிரிக்கெட் கிளப்பை உருவாக்கினர். கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன" என்கிறார் சௌரப்.

ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்த பிறகு, சௌரப் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஒவ்வொரு வார இறுதியிலும் கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. சௌரப் ஐந்து நாட்கள் வேலை செய்யவும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் திட்டமிட்டிருந்தார்.

சௌரப் கூறுகையில், “அங்கு நடந்த போட்டிகள் இந்தியா அளவுக்கு இல்லை. இங்கு சாதாரண கிரிக்கெட் பிட்ச்கள்தான் இருந்தன். இன்றளவும் அப்படித்தான். இந்தியாவில் இருப்பது போல் சரியான மண் பிட்ச்கள் இங்கு இல்லை. இங்கு சின்தட்டிக் மேட் போன்ற ஆடுகளங்கள்தான் உள்ளன். இருப்பினும், லாஸ் ஏஞ்சல்ஸில் மும்பையைப் போலவே ஒரு பூங்காவில் மூன்று அல்லது நான்கு ஆடுகளங்கள் உள்ளன. அவை அனைத்தும் நல்ல பிட்ச்கள். நாங்கள் விளையாடுவதற்கு அங்குதான் செல்வோம்,” என்றார்.

கிரிக்கெட் விளையாட 6 மணிநேரம் பயணித்த செளரப்

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஆறு மணிநேர பயண தூரத்தில் உள்ளது. எனவே செளரப் வெள்ளிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு காரில் சென்று, சனிக்கிழமை அங்கு விளையாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவுக்கு திரும்புவது வழக்கம்.

“அந்த கிளப்பில் விளையாடும்போது என்னுடன் விளையாடியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் அமெரிக்க அணியில் இருந்தனர். உண்மையில், அமெரிக்காவிலும் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்" என்கிறார் செளரப்.

இருப்பினும் சௌரப்புக்கு அமெரிக்க தேசிய அணிக்காக விளையாடும் நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. காரணம் அங்குள்ள அணிக்கான தேர்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன.

அப்போதைய சூழல் குறித்து சௌரப் கூறுகையில், “ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராக இருக்க வேண்டும், நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். நான் அப்போது மாணவர் விசாவில் அங்கு தங்கியிருந்தேன், அதோடு பணி விசாவில் இருந்தேன். எனவே, அமெரிக்காவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது. கிரிக்கெட் மீதிருந்த காதலால் நான் விளையாடினேன்,” என்றார்.

வருடங்கள் கடந்தன. ஐசிசி ஏழு வருடம் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும் என்னும் விதியை மூன்று ஆண்டுகளாகக் குறைத்தது.

பயிற்சிக்காக அமெரிக்க அணி லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது, ​​அங்குள்ள பயிற்சியாளர் செளரப்பின் ஆட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல அவருக்கு அமெரிக்க அணியின் கதவுகள் திறக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் அவர் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றார்.

கிரிக்கெட் பிரபலமில்லாத நாட்டு அணிகளிலும் இடம் எளிதாகக் கிடைத்துவிடாது

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளரப் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

கிரிக்கெட்டில் எல்லாம் எளிதில் கிடைக்கும் என்றும் சிறிய அணிகளுக்கு விளையாடுவது சுலபம் என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இங்கும் பெரிய போராட்டம் நடக்கிறது என்கிறார் செளரப்.

“அசோசியேட் நாடுகளில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும். பல இடங்களில் பயிற்சிக்கான வசதிகளோ அல்லது சாதாரண ஆடுகளங்களோ இல்லை.

நாங்கள் ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறி, இரவு ஏழு முதல் ஒன்பது வரை வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்வோம். 2019இல், ஐசிசி அனைத்து அசோசியேட் உறுப்பினர்களுக்கும் டி20 சர்வதேச அணி அந்தஸ்தை வழங்கியது. 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம் அமெரிக்கா தற்காலிக ODI அந்தஸ்தையும் பெற்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் கிரிக்கெட் வேகமாக விரிவடையப் போகிறது,” என்கிறார் சௌரப்.

அவர் மேலும் கூறுகையில், “நல்ல மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் அகாடமிகள் வடிவம் பெறுகின்றன, அவற்றில் இருந்து புதிய வீரர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். எங்கள் ODI அணியில் ஆரம்பம் முதல் இங்கிருக்கும் சிலர் இருக்கிறார்கள். இங்கு 13-14 வயதுடைய வீரர்களும் உள்ளனர், அவர்களின் தரம் அடுத்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும். சர்வதேச போட்டிக்கு அவர்களைத் தயார்படுத்துவது இங்கு அடுத்த சவாலாக உள்ளது,’’ என்றார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்வுப்பூர்வமான சவால்

டி20 உலகக்கோப்பைக்கு முன், டி20 தொடரில் வங்கதேசத்தை அமெரிக்கா தோற்கடித்தது. அந்த வெற்றி தனது அணிக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது என்கிறார் சௌரப். தற்போது, கனடா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் அந்த அணி சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக ஜூன் 12ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் என்று செளரப் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “நான் இந்தியாவுக்காக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் என்னுடன் விளையாடிய பலர் இப்போது இந்திய அணியில் உள்ளனர். அவர்களை மீண்டும் சந்திக்கப் போவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து செளரப் கூறுகையில், "டி20-இல் எதுவும் நடக்கலாம். நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். அதே நேரம் அந்த ஒரு போட்டியைப் பற்றி மட்டும் மிகவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)