சீனாவிடம் வங்கதேசம் கடன் வாங்கினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், MARK SCHIEFELBEIN/TINGSHU WANG/MARCO RAVAGLI/FUTURE PUBLISHING/AFP/GETTY IMAGES
- எழுதியவர், சௌமித்ரா சுப்ரா
- பதவி, பிபிசி செய்திகள் பங்களா
சீனாவிடம் கடன் பெற்று 'டீஸ்டா சிறப்புத் திட்டத்தை' (Teesta Master Plan) செயல்படுத்த, அந்நாட்டு அரசு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு விரிவான ஆய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் இருந்து கடன் பெறுவதற்கான வங்கதேசத்தின் ஆர்வத்தை ஹசீனா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். அதே சமயத்தில், இந்தியாவும் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஆர்வமாக உள்ளது. வங்கதேசத்தின் முடிவு என்னவாக இருக்கும்? 'டீஸ்டா சிறப்புத் திட்டம்' என்றால் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சீன அரசின் நிதியுதவி

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை வங்கதேச நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஷேக் ஹசீனா, "டீஸ்டா சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு, எளிதான நிபந்தனைகளில் கடன் வழங்குமாறு சீனாவைக் கோர வங்கதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்றார்.
வடக்கு வங்காளத்தில் டீஸ்டா ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னைகளைக் குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சீன அரசின் நிதியுதவியுடன் ஒரு கணக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக தான், இதுவரை வங்கதேசத்தால் சீனாவுடன் சேர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஷேக் ஹசீனா அரசு நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, டாக்காவில் உள்ள சீனத் தூதர் இந்தத் திட்டத்தில் மீண்டும் ஆர்வம் காட்டினார்.
ஆனால், கடந்த மாதம் டாக்காவுக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சென்றிருந்த போது, டீஸ்டா திட்டத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்க விரும்புவதாக வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தியாவை அதிருப்தி அடையச் செய்யும் எதையும் வங்கதேசம் விரும்பாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் தனது உரையில் சீனாவின் பொருளாதார உதவி பற்றி குறிப்பிட்டாலும், இந்தியா குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், டீஸ்டா திட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம், ஆகிய இருநாடுகளின் பரஸ்பர உறவுகளிலும் நிலைப்பாட்டிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டீஸ்டா நதிநீரைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுமா? என்பது மற்றொரு கேள்வி.
8,210 கோடி ரூபாய்க்கான பிடிபிபி (PDPP- பூர்வாங்க வளர்ச்சித் திட்ட முன்மொழிவு) 2020 ஆகஸ்டில் நிதி அமைச்சகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டதாக வங்கதேச பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீன அரசு கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிடிபிபி குறித்த மதிப்பீட்டு அறிக்கையை அனுப்பியிருந்தது.
"பெரிய அளவிலான நில மேம்பாடு மற்றும் பயன்பாடு, அத்துடன் வழிசெலுத்தல் அமைப்புகளின் வளர்ச்சியில் அதிக பகுப்பாய்வு மற்றும் பெரிய அளவிலான முதலீடு இல்லாதது" என்று அறிக்கை குறிப்பிட்டதாக ஷேக் ஹசீனா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"சீனா இன்னும் விரிவான ஆய்வுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னணியில் அடுத்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது’’ என்றார் ஷேக் ஹசீனா.
டீஸ்டா சிறப்பு திட்டத்தில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
ரிவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (River Research Institute) உறுப்பினரும், நீர்வளப் பொறியாளருமான மாலிக் ஃபிடா அப்துல்லா கான் கூறுகையில், "டீஸ்டா சிறப்பு திட்டம் அடிப்படையில் மூன்று நோக்கங்களை மனதில் வைத்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், மண்ணரிப்பை தடுத்தல் மற்றும் நிலத்தை மீட்டெடுப்பது ஆகியவை இதில் அடங்கும். இந்த திட்டத்தின் மிக முக்கியமான பகுதி, வங்கதேச நிலத்தின் மேல்புறத்தில் ஒரு பல்நோக்கு தடுப்பணை கட்டுவதாகும்." என்றார்.
பிபிசி பங்களாவிடம் பேசிய கான், "வங்கதேச பிராந்தியத்தில் டீஸ்டா ஒரு முக்கியமான நதி. தடுப்பணையின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.
சில இடங்களில் ஆற்றின் அகலம் ஐந்து கிலோமீட்டர் வரை உள்ளது, அது குறைக்கப்படும். இதனுடன் தூர்வாருவதன் மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிக்கப்படும். கரைகளை சீரமைத்து பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்.
இப்பணி முடிந்ததும், டீஸ்டா ஆற்றங்கரையில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சீரமைக்கப்படும். இது நிலமற்ற மக்களுக்கு விவசாயம் அல்லது தொழில்மயமாக்கலுக்கு பயன்படுத்தப்படலாம்.
மறுபுறம், வெள்ளம் மற்றும் கரையோர அரிப்பைக் கட்டுப்படுத்துவதால், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்னைகள் குறையும்.
தற்போது இந்த முழு விஷயமும் திட்ட வரைவில் இருப்பதாக அப்துல்லா கான் கூறுகிறார்.
இந்தியாவுடனான ஒப்பந்தம்

இந்த மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்பட்டால், மழைக்காலத்தில் டீஸ்டா பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் இன்னல் குறையும். ஆனால் வறண்ட காலங்களில் டீஸ்டாவில் நீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தால் என்ன நடக்கும்?
நதிநீர் நிபுணர் ஃபிதா அப்துல்லா கான் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், "வறண்ட காலத்துக்கான நீர் பகிர்வு ஒப்பந்தம் தேவை. இந்தியாவுடன் ஒப்பந்தம் இல்லை என்றால், வறண்ட காலங்களில் தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதனால்தான் இந்த சிறப்பு திட்டம் 'டீஸ்டா நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்திற்கு' மாற்றாக செயல்படாது." என்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கங்கை நதி நீர் ஒப்பந்தமும், ஜனவரி முதல் மே வரை ஐந்து மாத வறண்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான்.
இருப்பினும், டீஸ்டா ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை என்று வங்கதேசத்தில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் கூறினர். 2011ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், டாக்கா சென்றிருந்த போது டீஸ்டா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருந்தது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பால் அது ஒரு இழுபறியில் சிக்கிக்கொண்டது.
பிரதமர் நரேந்திர மோதி 2015ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியுடன் இணைந்து வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, டீஸ்டா நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் ஏறக்குறைய பத்து வருடங்கள் கடந்தும் டீஸ்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஜிண்டால் சர்வதேச உறவுகள் பள்ளியின் பேராசிரியரும், வங்கதேசத்தின் சர்வதேச உறவுகள் நிபுணருமான பேராசிரியர் ஸ்ரீராதா தத்தா கூறுகையில், "வறண்ட காலங்களில், விவசாயத்திற்கு டீஸ்டா தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஏதேனும் உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பாக, இந்த வறண்ட காலத்தில் விவசாயப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் மாற்று வழிகளை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும்." என்றார்.
சீனா - இந்தியா பிரச்னை

பட மூலாதாரம், Getty Images
ஜூலை மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் பிரதமர் ஷேக் ஹசீனா சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கு முன், அவர் இம்மாதம் 21ஆம் தேதி இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இது தவிர்த்து, மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் ஷேக் ஹசீனா இந்தியா வந்தார்.
டாக்டர் ஸ்ரீராதா தத்தா பிபிசி பங்களாவிடம் பேசுகையில், "இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் நிலவும் இழுபறி தீர்க்கப்படாத வரை, அது வங்கதேசத்தின் முக்கிய பிரச்னையாக இருக்கும். இந்தியா தரப்பிலிருந்து நேர்மறையான பதில் கிடைக்கவில்லை என்றால், இயற்கையாகவே சீனாவின் பக்கம் வங்கதேசம் சாயும், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை." என்றார்.
ஆனால் இந்தியாவைக் கோபப்படுத்தும் வகையில் ஷேக் ஹசீனா அரசாங்கம் எதையும் செய்யாது என்று அவர் நம்புகிறார்.
"அப்படிப் பார்த்தால், இந்தியாவின் நேர்மறையான நிலைப்பாட்டை உறுதி செய்த பின்னரே வங்கதேசம் இத்திட்டத்தில் முன்னேற வேண்டும்" என்கிறார் பேராசிரியர் தத்தா.
டீஸ்டா சிறப்பு திட்டத்தில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் நம்புகிறார்.
ஆனால், வங்கதேசத்தின் முன்னாள் வெளியுறவுச் செயலர் தௌஹீத் ஹொசைன், “இந்த விஷயத்தில் சீனாவும் இந்தியாவும் ஒன்றாக செயல்பட முடியும் என்று நினைப்பது மிகவும் கடினம்” என்கிறார்.
அவர் பிபிசி பங்களாவிடம் பேசுகையில், "சீனாவுக்கு செல்வதற்கு முன், பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர வேண்டும். இந்தியாவும் சிறப்பு திட்டத்திற்கான நிதி உதவியை முன்மொழிந்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவை அதிருப்தி அடையச் செய்யும் எதையும் வங்கதேசம் செய்யாது என்றே தெரிகிறது," என்றார்.
ஒரு தெளிவான உடன்படிக்கைக்கு முன்பாகவே எந்தவொரு உறுதியான முடிவையும் எட்டுவது பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறுகிறார்.
புவிசார் அரசியல் முக்கியத்துவம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் பன்னிரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், டாக்காவிற்கான சீனத் தூதர் இயாவோ வென், தேர்தலுக்குப் பிறகு டீஸ்டா திட்டப் பணிகளைத் தொடங்குவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.
தேர்தலுக்குப் பிறகும் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் உடனான சந்திப்புக்குப் பிறகு வென் செய்தியாளர்களிடம் பேசியபோது, "வங்கதேசம் விரும்பினால், டீஸ்டா திட்டப் பணிகளைத் தொடங்க சீனா தயாராக உள்ளது." என்றார்.
மறுபுறம், இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சச்சின் வினய் மோகன் குவாத்ரா, மே இரண்டாவது வாரத்தில், இரண்டு நாள் பயணமாக டாக்கா சென்றிருந்தார்.
அவருடனான சந்திப்புக்குப் பிறகுதான், வங்கதேச வெளியுறவு அமைச்சர், "டீஸ்டாவில் அணை கட்ட விரும்புகிறோம். அதற்கு இந்தியா நிதி உதவி செய்ய விரும்புகிறது" என்று கூறியிருந்தார்.
இந்திய சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் (Observer Research Foundation) அனுசுயா பாசு ராய்சௌத்ரி, ஜனவரி மாதம் பிபிசி பங்களாவுக்கு அளித்த பேட்டியில், "டீஸ்டா திட்டம் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது. தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து திட்டங்களிலும் சீனா கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. சீனா தனது இருப்பை வலுப்படுத்த விரும்புகிறது" என்று கூறியிருந்தார்.
ஆனால் டாக்கா பல்கலைக் கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் இம்தியாஸ் அகமது இதை மறுக்கிறார்.
அவரைப் பொருத்தவரை, டீஸ்டா திட்டத்தில் சீனாவுக்கு மிகப்பெரிய ஈடுபாடு இல்லை. அதேபோல அத்திட்டத்துடன் தொடர்புடைய எந்த புவிசார் அரசியல் ஆர்வமும் சீனாவுக்கு இல்லை.
"டீஸ்டா நதி தொடர்பாக முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் வங்கதேசத்தைச் சேர்ந்தது. இது சீனாவின் பல திட்டங்களைப் போல் இல்லை. இதற்கு நிதி வழங்க மட்டுமே சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மற்ற நாடுகளால் இவ்வளவு பணத்தை வழங்க முடியாது" என்று பேராசிரியர் அகமது கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












