விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க ஏன் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது?
இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
விக்கிரவாண்டி தொகுதியின் பின்னணி என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தலைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க
ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தி.மு.க-வை தீவிரமாக விமர்சித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, [...] மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக புறக்கணிப்பால் யாருக்கு லாபம்?
அ.தி.மு.க போட்டியிலிருந்து விலகியதால், தி.மு.க சுலபமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன்.
அவர் கூறுகையில், “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை. சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஆளும் கட்சிகளின் தவறுகளை மக்களுக்கு அம்பலபடுத்த மறைமுகமாக மக்களுக்கு தகவலை கொண்டு செல்லும் ஜனநாயகத்தின் ஒரு வாய்ப்புதான் தேர்தல் புறக்கணிப்பு. அந்த ஆயுதத்தை தான் அதிமுக தற்போது கையில் எடுத்துள்ளது,” என்கிறார்.
அப்படி அ.தி.மு.க, தி.மு.க என இருகட்சிகளுமே பல சமயங்களில் தேர்தல்களை புறக்கணித்துள்ளதாக கூறும் அவர், தற்போது அ.தி.மு.க தேர்தலைப் புறக்கணிக்கும் இந்தச் சூழல் தான் வித்தியாசமானது என்கிறார்.
இதுகுறித்து பேசுகையில், “இரட்டைத் தலைமையாக இருக்கும்போது முடிவுகளை ஒருமித்த கருத்தோடு எடுக்க முடியவில்லை, செயல்படுத்த முடியவில்லை. ஒற்றைத்தலைமையாக இருந்தால் அ.தி.மு.க-வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்று சொன்னவர் எடப்பாடி,” என்கிறார்.
"ஆனால், இப்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 'ஆளுங்கட்சி அராஜகம் செய்யும்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் ஈரோடு இடைத்தேர்தலில் எதற்காக பங்கேற்றீர்கள் என்ற முரண்பாடு எழுகிறது,” என்று கூறுகிறார் லக்ஷ்மணன்.
குறிப்பாக, “ஒற்றைத்தலைமையாகி, அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை, எடப்பாடியின் செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த இன்னொரு வாய்ப்பை பயன்படுத்த அ.தி.மு.க தவறியது தவறு என்றே தோன்றுகிறது,” என்கிறார் அவர்.
மேலும், “தி.மு.க-வின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க விலகியதன் மூலம், போட்டியில் இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும், பா.ம.க-வுக்கும் ஒரு சில வாக்குகள் செல்லலாம். மீதம் வாக்குகள் பதிவாகமலேயே இருக்கலாம்,” என்கிறார்.
ஆனால், “பிரதான எதிர்க்கட்சி விலகியதால் ஆளும்கட்சியான தி.மு.க-வின் வெற்றி தற்போது சுலபமாகியுள்ளது. முடிவுகள் யாருக்கு சாதகம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன்.

இடைத்தேர்தல் ஏன் நடக்கிறது?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார்
அவரின் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு சட்டமன்ற தொகுதி அல்லது மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் உயிரிழந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் யார்?
இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க-வும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவதாக பா.ம.க தலைவர் அன்புமணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிருகிறது. ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்குகிறது நாம் தமிழர் கட்சி.

புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிமுகப்படுத்தக்கூடாது," என்றார்.
இடைத்தேர்தலுக்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாட்டு வரவுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கல் எப்போது?
விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முக்கிய தேதிகள்:
- வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜூன் 14
- வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - ஜூன் 21
- வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - ஜூன் 24
- வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாள் - ஜூன் 26
- வாக்குப் பதிவு நடைபெறும் நாள் - ஜூலை 10
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - ஜூலை 13
விக்கிரவாண்டி தொகுதி - ஒரு பார்வை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் கீழ், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன.
விழுப்புரம் தாலுகா (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, பனமலை, சின்னப்பநாயக்கன்பாளையம், சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர் ஆகிய கிராமங்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூ ஆகிய கிராமப் பகுதிகளை கொண்டது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பானை சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பாக்யராஜை தோல்வியுறச் செய்தார்.
விழுப்புரம் மக்களவை தொகுதியில் பாமக 1,81,822 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், 57,242 வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி நான்காம் இடமும் பிடித்தது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, மக்களவை தேர்தலின் போது தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 72,188 வாக்குகளை பெற்றுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் 65,825 வாக்குகளும், பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்றிருந்தன.

வாக்காளர்கள் விபரம்
2021-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.
கடந்த தேர்தல்கள்
கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி (51.71% சதவித வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் ராதாமணியை (41.93% சதவித வாக்குகள்) 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம், தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டார்.
இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவைச் சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 13 ஆண்டுகளில் 5-வது முறையாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

மும்முனைப் போட்டி
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மீண்டும் அது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அ.தி.மு.க-வின் அறிக்கை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கவுள்ள நிலையில், தற்போது தி.மு.க-பா.ம.க-நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம்.
இந்நிலையில், ஆளும் தி.மு.க அரசின் நலத்திடங்களுக்கு மக்கள் என்ன மதிப்பெண் வழக்குவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












