போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை - யுக்ரேன் என்ன சொல்கிறது?

நிபந்தனைகள் விதிக்கும் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

முதலில், யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெற வேண்டும்.

இரண்டாவதாக, யுக்ரேன் நேட்டோவில் சேரக் கூடாது.

90 நாடுகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை சுவிட்சர்லாந்தில் சந்திக்கவிருக்கும் நேரத்தில், யுக்ரேனுடன் போர் நிறுத்தம் செய்வதற்கான புதினின் நிபந்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

யுக்ரேன் அமைதிக்கான பாதை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதில் பங்கேற்க உள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புதினின் நிபந்தனைகள்

பட மூலாதாரம், Getty Images

புதினின் நிபந்தனைகள் என்ன?

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர்களுடனான சந்திப்பில், "யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தவுடன், ரஷ்ய ராணுவம் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கும்," என்று புதின் கூறினார்.

இந்தப் பகுதிகளில் இருந்து யுக்ரேன் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார். இருப்பினும், இங்கு ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு ஓரளவு மட்டுமே உள்ளது என்பதும் உண்மை.

நேட்டோவில் இணையும் திட்டத்தை யுக்ரேன் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

“யுக்ரேன் அதன் நடுநிலை, அணிசேரா மற்றும் அணுசக்தி இல்லாத நிலையை மீண்டும் பெற வேண்டும். ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை யுக்ரேன் பாதுகாக்க வேண்டும். நாசிசத்தைக் கைவிட்டு ராணுவமயமாக்கலில் இருந்து பின்வாங்க வேண்டும்,” என்று புதின் கூறியுள்ளார்.

யுக்ரேன் அதன் எல்லைகள் (நிலம்) தொடர்பான புதிய யதார்த்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, ரஷ்யா-யுக்ரேன் போருக்கான அமைதி ஒப்பந்தம் சர்வதேச உடன்படிக்கைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் புதின் கூறினார். மேலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எல்லாம் சரியாக நடந்தால், யுக்ரேன் ராணுவம் வெளியேற பாதுகாப்பான வழியை வழங்குவதாக ரஷ்ய அதிபர் உறுதியளித்தார்.

புதினின் விதிமுறைகள் எவ்வளவு நம்பகமானவை?

செர்ஜி லாவ்ரோவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (கோப்பு படம்)

யுக்ரேன் ஏற்பாடு செய்துள்ள அமைதி மாநாட்டிற்கு ஒருநாள் முன்னதாகவே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை புதின் முன்வைத்துள்ளார்.

இந்த அமைதி மாநாடு சுவிட்சர்லாந்தின் பெர்கன்ஸ்டாக்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதி மாநாட்டில் 92 நாடுகள் மற்றும் 8 அமைப்புகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. சீனா, பிரேசில் மற்றும் சௌதி அரேபியாவின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். இதன் முடிவில் யுக்ரேனிய அமைதி உடன்படிக்கையின் மூன்று முக்கிய விவகாரங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பு, மனிதாபிமானப் பிரச்னைகளுடன் இந்த மூன்று விவகாரங்களும் தொடர்புடையதாக இருக்கும். குழந்தைகள் உட்பட சிறைப்படுத்தப்பட்ட அனைத்து யுக்ரேனியர்கள் மற்றும் யுக்ரேனிய கைதிகளின் விடுதலையும் இதில் அடங்கும்.

மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மத்தியஸ்தர்கள் மூலம் ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்படும். மாநாட்டின் திட்டத்தின் படி, இந்த மத்தியஸ்தர்கள் பின்னர் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்வார்கள். இதற்கு முன்னரும் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

உதாரணமாக, யுக்ரேனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் வகையில் 'கிரெய்ன் காரிடார்' (Grain corridor) உருவாக்கப்பட்டது.

எவ்வாறாயினும், போரை நிறுத்துவது தொடர்பான புதினின் அறிக்கை அமைதி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

யுக்ரேன் அதிபர் கூறியது என்ன?

யுக்ரேன் அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதினின் போர்நிறுத்த முன்மொழிவு ஒரு இறுதி எச்சரிக்கை போலத் தெரிகிறது என்றும், இதை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

போர்நிறுத்தம் தொடர்பான அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் புதின் ராணுவத் தாக்குதலை நிறுத்த மாட்டார் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

புதினின் இந்தச் செய்திகள், ஹிட்லர் கூறிய செய்திகள் போல உள்ளன என்று அவர் கூறினார்.

" 'செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியை எனக்குக் கொடுங்கள், நான் போரை முடித்துக் கொள்கிறேன்' என்று ஹிட்லர் கூறினார். அது முழுப் பொய். அதற்குப் பிறகு போலந்தின் ஒரு பகுதியை ஹிட்லர் கேட்டார். ஆனால் அதற்குப் பிறகும் கூட, ஐரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஹிட்லர்," எனக் கூறினார் ஜெலென்ஸ்கி.

யுக்ரேன் மற்றும் நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (கோப்பு படம்)

இதற்கு முன்பும் புதின் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்பதுதான் உண்மை.

புதினின் சமீபத்திய அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. யுக்ரேன் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையிலும் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, புதினின் அறிவிப்பு வெளிவந்துள்ள தருவாவையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, "சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சிமாநாட்டிற்கு முன்பு இதுபோன்ற சமிக்ஞைகளை வழங்குவதற்குப் பின்னால் புதினுக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் தலைவர்களையும் உலகெங்கிலும் உள்ள நாடுகளையும் பங்கேற்பதைத் தடுப்பது. உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக புதினின் அறிக்கைகள் வந்திருப்பது ரஷ்யா உண்மையான அமைதி நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது."

யுக்ரேன் அதிபரின் அலுவலகத்தின் தலைமை ஆலோசகர் மிகைல் பொடோல்யோக், ரஷ்ய அதிபர் முன்வைத்த நிபந்தனைகளை 'வழக்கமானவை' என்று விவரித்தார்.

"அந்த நிபந்தனைகளின் உள்ளடக்கம், சர்வதேசச் சட்டத்தை மீறக்கூடியதாகவும், நிலைமையின் யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு ரஷ்ய தலைமையின் இயலாமையை காட்டுவதாகவும் உள்ளது," என்று மிகைல் கூறியுள்ளார்.

நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்.

மேற்கத்திய நாடுகளின் விமர்சனம்

யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் புதினின் இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ளன.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், "யுக்ரேன் மண்ணில் இருந்து யுக்ரேன் தனது படைகளை திரும்பப் பெறத் தேவையில்லை, ஆனால் ரஷ்யா தனது படைகளை யுக்ரேன் மண்ணில் இருந்து திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

அவர் புதினின் கோரிக்கைகளை 'அமைதி முன்மொழிவு' என்பதற்கு பதிலாக, 'அதிக ஆக்ரோஷம் மற்றும் அதிக ஆக்கிரமிப்புக்கான முன்மொழிவு' என்று குறிப்பிட்டார்.

"ரஷ்யாவின் இலக்கு யுக்ரேனைக் கட்டுப்படுத்துவதே என்பதை இது காட்டுகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில் இருந்தே இது ரஷ்யாவின் இலக்காகும். இது சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறுவதாகும். அதனால்தான் நேட்டோ நாடுகள் யுக்ரேனை ஆதரிக்க வேண்டும்," என்றார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போரை நிறுத்துமாறு யுக்ரேனிடம் கேட்க முடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் ஆஸ்டின் பேசுகையில், "அமைதியை அடைய யுக்ரேன் என்ன செய்ய வேண்டும் என்று புதின் கூற முடியாது. புதின் விரும்பினால் இன்றே போரை முடித்துக் கொள்ளலாம்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)