இலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - தமிழர்களைக் கவர கட்சிகள் செய்வது என்ன?

பட மூலாதாரம், SJB MEDIA
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், தமிழர்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன், பிரதான எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து, வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்வதை காண முடிகின்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் பயணமாக வட மாகாணத்திற்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கிய பின்னணியில், ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளும் தமது பார்வையை வட மாகாணத்தை நோக்கி நகர்த்தியுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்களும் வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சஜித் பிரேமதாஸ கூறியது என்ன?

பட மூலாதாரம், SJB MEDIA
அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வட மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருந்தார்.
இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
''சில அரசியல்வாதிகள் வடக்கு மக்களை, அரசியல் சங்கீத நாற்காலி விளையாட்டுக்கு உட்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு நேரத்தில் பறந்து வந்து, ஒவ்வொரு விடயங்களை செய்கின்றனர். அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம் என்பது புதுமையானது ஒன்றல்ல. அது எமது சட்டத்தில் உள்ள ஒன்றாகும்," என்றார், சஜித் பிரேமதாஸ.
13-ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் அனைத்தும் செயலிழந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மாகாண சபைத் தேர்தல், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விதத்திலேயே நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று, இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று சஜித் உறுதி தெரிவித்தார்.
மேலும், "மாகாண சபைத் தேர்தலை கூட நடத்த முடியாத தலைவர்கள் எவ்வாறு, 13-ஆவது திருத்தம் குறித்துப் பேசுவார்கள். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் அல்ல, முழு நாட்டிற்கும் நல்லிணக்கம் தேவைப்படுகின்றது," என்றார்.
13-ஆவது திருத்தத்தையும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, படிப்படியாக நடைமுறைப்படுத்துவோம் எனவுஎனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸவின் கருத்துக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், SJB MEDIA
13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த எதிர்ப்பை வெளியிட்டார்.
''தான் ஆட்சிக்கு வந்ததும், 13-ஆவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதாக சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். போலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் போன்ற விடயங்களில் எவ்வாறு இந்த அதிகாரத்தை வழங்குவீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுப்புகின்றோம்," என்றார்.
30 வருடங்களாக போர் இடம்பெற்ற நாட்டில் வாழ்ந்த மக்கள் வாழும் நாடு இது எனக்கூறிய அபேகுணவர்தன, அவ்வாறான நிலைமையிலிருந்து மீட்கப்பட்ட நாட்டை மீண்டும் பிரிப்பதற்கான முயற்சியா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார்.
அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டே சஜித் இக்கருத்தைக் கூறியுள்ளதாக தெரிவித்த அபேகுணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காக மிகவும் கீழ்மட்டத்திற்கு சென்றுள்ளார் என்று விமர்சித்தார்.

'13-ஆவது திருத்தம் என்பது இந்த நாட்டிலுள்ள சட்டம்'
சஜித் பிரேமதாஸவின் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி தெளிவூட்டியது.
''13-ஆவது திருத்தம் என்பது இந்த நாட்டிலுள்ள சட்டம். இந்த நாட்டிலுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என எவரேனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்களாயின், அதுவும் அரசியலமைப்பிற்கு முரணான கருத்தாகும்," என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார்.
போலீஸ், காணி அதிகாரங்கள் அல்ல, மாகாண சபைத் தேர்தலை உரியவாறு நடத்தாது 13-ஆவது திருத்தத்தை கைவிட்டதனாலேயே இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், ஸ்தம்பிதமடைந்துள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்ற பொருளிலேயே சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார் என தெளிவுபடுத்தினார்.
13-ஆவது திருத்தம் தொடர்பிலான பேச்சு மீண்டும் பேசுப்பொருளாக மாறிய நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு காரணமாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, மாகாண சபை முறைமை தொடர்பில் கருத்து வெளியிட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பட மூலாதாரம், ANURA MEET TNA
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு காரணம் மக்கள் விடுதலை முன்னணி என்ற நிலைப்பாட்டை தமிழர்கள் கொண்டிருக்கின்றார்கள். அது தொடர்பில் என்ன பதில் கூற விரும்புகின்றீர்கள் என செய்தியாளர் ஒருவர், அநுர குமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
''எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது என்றே எண்ணமே தற்போது எம்மிடம் உள்ளது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் மொழியை பேசுகின்ற மக்களுக்கு, குறிப்பாக அரசியல் தொடர்பில் என்னால் உறுதியொன்று வழங்க வேண்டியுள்ளது. அந்த மக்கள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும். அனைவரும் கடந்த காலங்கள் தொடர்பில் சிந்தித்தால், எதிர்காலத்தை எம்மால் தீர்மானிக்க முடியாது," என அநுர குமார திஸாநாயக்க பதிலளித்தார்.
மாகாண சபை என்பது அதிகார பகிர்வு என்பதால், தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை தொடர்பில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த திஸாநாயக்க மாகாண சபை முறையில் தீர்வொன்று கிடைக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறினார்.
அதனையும் தாண்டிய ஒரு நடைமுறையொன்று தேவைப்படுகின்றது என வலுயுறுத்திக் கூறிய அவர், அரசியலமைப்பு, சட்டம், நடைமுறை சாத்தியமான, பொருளாதார ரீதியான பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாகவே சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறினார்.

பட மூலாதாரம், NPP MEDIA
தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வா?
தேசிய மக்கள் சக்தி, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவர்களுடன், இலங்கை தமிழரசு கட்சி, யாழ்ப்பாணத்தில் அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.
இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டார்.
13-ஆவது திருத்த மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்தார்.
''தேசிய மக்கள் சக்தியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முன்னேற்றகரமான பேச்சுவார்த்தை என்று வர்ணிக்கலாம். எல்லா விடயங்களுக்கும் தீர்வு கண்டுவிடவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது," எனத் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சமவுரிமைகள், பொருளாதார சமத்துவம் போன்ற விடயங்களில் அவர்களுடன் நேரடியாகவே இணங்கி போக முடிகின்றது என சுமந்திரன் கூறினார்.
"தமிழ் தேசிய பிரச்னைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத் தாழ்வுகள், பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட இருக்கின்ற மாகாண சபை முறைமையை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதனை நடைமுறைப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கின்றார். மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றார்," என அவர் கூறினார்.
ஆனால், தற்போதுள்ள 13-ஆவது திருத்த மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள் எனக்கூறிய சுமந்திரன், இந்த விடயத்தில் இரு தரப்பினரும் சேர்ந்து போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
தமிழ் மக்களின் தாயகத்தில் வடக்கு-கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வு, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கூறியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
மேலும் பேசிய அவர், ''13-ஆவது திருத்தத்தை இன்றைக்கு அமல்படுத்துவேன் என்று சொல்வது கூட அர்த்தமில்லாது இருக்கின்றதை தெளிவாக எடுத்து சொன்னோம். அவர் விசேடமாக ஒன்றை சொல்லியிருந்தார். நிதி பகிர்வு தொடர்பில் சொல்லியிருந்தார். அதிகாரப் பகிர்வை கொடுத்து விட்டு, நிதி பகிர்வை கொடுக்கா விட்டால், அந்த அதிகார பகிர்வைக் கொடுத்து எந்தவித பிரயோசனமும் இல்லை என சொல்லியிருந்தார்," என்றார்.
தமிழ் மக்களின் தாயகத்தில் வடக்கு-கிழக்கு இணைந்ததான ஒரு பூரண அதிகார பகிர்வு, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என சுமந்திரன் கூறினார்.
"தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அதிகார பகிர்வு பற்றிப் பேசாமல், அது குறித்த வாக்குறுதிகளை கொடுக்காமல், வேறு விடயங்களை சொல்வது, அதிகார பகிர்விலிருந்து தப்பியோடுகின்ற விடயமாக எங்களுடைய மக்கள் கருதுவார்கள்," எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

13-ஆவது திருத்தம் என்றால் என்ன?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29-ஆம் தேதி இந்த 13-ஆவது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்தானது.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.
இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13-ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.
இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13-ஆவது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006-ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.
அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












