இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பௌத்தத்தை வலுப்படுத்த முயல்கிறதா பா.ஜ.க?

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க-வை ஆதரிக்கும் இலங்கையின் சிவசேனை அமைப்பு சிங்களர்கள் தமிழர்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கட்டும் பௌத்த விகாரைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.என்ன நடக்கிறது இலங்கையில்?
இந்திய - இலங்கை உறவானது பல நூற்றாண்டு காலங்களை கடந்து இன்றும் அவ்வாறே தொடர்ந்து வந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட உறவுகள் இலங்கைக்கு பாரிய வலுவை சேர்த்தது.
நரேந்திர மோதி தற்போது மூன்றாவது முறை பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அது எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பது தொடர்பில் தற்போது இலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இந்திய வெளியுறவுக் கொள்கையில், அருகிலிருக்கும் அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியா எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி வந்துள்ளது.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் வாழ்வதற்கே முடியாத சூழ்நிலை காணப்பட்ட போது, 4 பில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக வழங்கி, இலங்கையின் பொருளாதாரத்தையும், இலங்கை மக்களின் வாழ்க்கையையும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னேற்றமடைய செய்ய பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது.
அது மாத்திரமன்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றமடைய செய்வதற்கான உதவிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி, மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
இந்த நிலையில், நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளரின் கருத்துக்களை பிபிசி தமிழ் பெற்றுக்கொண்டது.


பட மூலாதாரம், SENTHIL THONDAMAN
மோதி குறித்து இலங்கை அரசியல்வாதிகள் சொல்வது என்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மேலும் வலுப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
அவர் பேசுகையில், மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மோதி அடுத்த ஐந்து வருடங்களில் உதவுவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். நரேந்திர மோதி அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், மலையக மக்களுக்கு 10,000 வீட்டுத் திட்டங்களும், கல்வி வளர்ச்சிக்காகவும் உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு நரேந்திர மோதி முன்வர வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன், பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், மோதி தனது முன்னிரண்டு பதவிக் காலங்களில் இலங்கைக்கு வருகை தந்து ஒரு சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திலும் கருத்துக்களை தெரிவித்திருந்தார், என்றார். இருந்தாலும் கூட, மாகாண சபைகளை உருவாக்க அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தை அமல்படுத்த முடியாத நிலைமை இருக்கிறது என்கிறார் அவர். “அதை இந்தியா செய்ய வேண்டும் என்ற சூழலில் எங்களுடைய மக்கள் இருந்து வருகின்றார்கள். எனினும், அது காலம் கடந்து போகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது,” என்கிறார் அவர்.

‘பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க’
இலங்கையில் நரேந்திர மோதிக்கு ஆதரவான கருத்துக்கள் இருக்கும் அதேவேளையில், விமர்சனங்களும் இருக்கின்றன.
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், பா.ஜ.க இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பை இலங்கையில் கொண்டு வர உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி நடக்கையில் இலங்கையில் மற்றுமொரு விஷயம் நடப்பதாக அவர் கூறுகிறார். “இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்ற பொழுது, இந்தியாவின் இந்த பா.ஜ.க-வின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகினற பௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்,” என்கிறார் அவர்.
“இவர்கள் மூலம் சிங்கள பௌத்தப் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி, ‘இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்திற்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்தியா சிங்கள பௌத்த விரிவாகத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்திற்கு சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை’ என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையை தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது,” என்று குற்றம் சாட்டுகிறார்.
“இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும். அதற்கு இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,” என்று கூறுகிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், FACEBOOK/MARAVANPULLAVU SACHCHITHANANTHAN
‘பௌத்தர்கள் தமிழர்கள் மீது மதத்தைத் திணிக்கவில்லை’
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், இலங்கையின் சிவசேனை அமைப்பு மற்றும் உருத்திரசேனை அமைப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெற்றி கொண்டாட்டங்களை நடாத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நகரிலுள்ள வைரவர் ஆலயத்தில் கற்பூரம் கொளுத்தி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடுகளை நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலுக்கு சிவசேனை அமைப்பு உதவி புரிந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு அந்த அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், இலங்கையில் இந்துக்களை பௌத்தர்கள் மத மாற்றத்திற்கு உட்படுத்தவில்லை, என்றார். “பௌத்தர்கள் எந்த இடங்களில் விகாரையை கட்டவிரும்புகின்றார்கள்? சோழர்களால், தமிழர்களினால் கட்டப்பட்ட பழைய விஹாரைகள் இருந்த இடங்களிலேயே புதிய விஹாரைகளை கட்டவிரும்புகின்றார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கந்தரோடைக்கு வந்து சென்றவர் மணிமேகலை. நான் சொல்லவில்லை, மணிமேகலை காப்பியம் சொல்கின்றது. அப்படியென்றால், அந்த காலத்தில் பௌத்த கோவில்கள் இருந்திருக்கின்றன. தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கின்றோம். தமிழ் பௌத்தர்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன,” என்றார் அவர்.
“அந்த எச்சங்கள் தான் வெடுக்குநாறி மலையிலும் இருக்கின்றது. குருந்தூர்மலையிலும் இருக்கின்றது. அவை தமிழ் பௌத்த எச்சங்களே தவிர, சிங்கள பௌத்த எச்சங்கள் கிடையாது. போரில் நாங்கள் தோற்றபோது வெற்றிக் களிப்பில் இருந்த போர்த்துகேயர் அரசு, 400 இந்து கோவில்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் இடித்தார்கள். இதனை போர்த்துகேயர்களே எழுதியுள்ளார்கள். போர்த்துகேயர்கள் எங்கள் மீது மதத்தை திணித்தார்கள். ஆனால், பௌத்தர்கள் எங்கள் மீது மதத்தை திணிக்கவில்லை," என சிவசேனை அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், NIKSHAN
‘இந்துத்துவப் போக்கும் வலுப்பெற வாய்ப்புள்ளது’
இலங்கை மீதான இந்த ஆக்கிரமிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார்.
அவர் பேசுகையில், இந்தப் போக்கு இன்னும் வலுப்பெற வாய்ப்புள்ளது. என்றார்.
“இலங்கையில் இன்றும் ராமாயணத்தின் சுவடுகள் என்று சொல்லப்படும் 9 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் கண்டிருக்கின்றார்கள். அதனூடாக இந்துத்துவ கொள்கையை பரப்பக்கூடிய விடயங்கள் மேற்கொள்ளப்படலாம். சைவ மக்களின் பண்பாடுகளைத் தாண்டி, வட இந்திய வழிபாடுகளை இலங்கைக்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றது, என்றார்.
“இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பௌத்த சமயத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால்,பௌத்த சமயத்துடன் தொடர்பிருப்பதாக சில கதைகளைப் புனைகிறார்கள். இது தொடர்பான விவகாரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால், இலங்கையில் இந்த மதம் சார்ந்த விவகாரத்திற்கு பௌத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என சொல்ல முடியாது. ஆனால், இந்துத்துவ கொள்கையின் வளர்ச்சி என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கலாம்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












