நீட் தேர்வு: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகும்? - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா.வி
- பதவி, பிபிசி தமிழ்
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக தேசியத் தேர்வு முகமை (NTA - என்.டி.ஏ) தெரிவித்துள்ளது. கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அகில இந்திய அளவில் மாணவர்களின் ரேங்க் மாறக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் வெளியிடப்பட்டது. அதில் சில மாணவர்களின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. நீட் தேர்வில் தலா நான்கு மதிப்பெண்கள் கொண்ட 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
ஒரு மாணவர் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்திருந்தால் அவருக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். எனவே இந்த தேர்வில் , ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
“சிலர் தேர்வு நேரம் குறைவாக இருப்பது குறித்து புகார்கள் எழுப்பியிருந்தனர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அவர்களுக்கு நேர குறைவு இருந்ததா என உறுதி செய்து விட்டு, 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தேர்வு மதிப்பீடுகள் குறித்த தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. எனவே, சிலருக்கு 718 அல்லது 719 ஆகிய மதிப்பெண்கள் இருக்கக் கூடும்,” என்று தேசிய தேர்வு முகமை தனது அறிக்கையில் விளக்கம் அளித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
'பாரபட்சமான முடிவு'
இந்த பதிலே மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக கல்வியாளர்கள், மாணவர்கள் பலர் தெரிவித்திருந்தனர். தேர்வு நேரம் குறைவாக இருந்த அனைவரும் நீதிமன்றத்தை நாடியிருக்க மாட்டார்கள், புகார் அளித்திருக்க மாட்டார்கள், இது எப்படி நியாயமான வழிமுறையாக இருக்கும் என்று கல்வியாளர்களும் மாணவர்களும் கேட்டனர்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மேலும் சில சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. 2024-ஆம் ஆண்டு 23.33 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், 13.16 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர். இதில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களை சேர்ந்த 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள், அதாவது 720-க்கும் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டுகளில் முழு மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பார்கள். இது வரை இல்லாத வகையில் 67 பேர் எப்படி முழு மதிப்பெண்கள் எடுத்தனர் என்று பலரும் கேள்வி கேட்டனர். மேலும் அரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்துல் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதுவும் வழக்கத்துக்கு மாறானது என்று கூறி பலர் சந்தேகம் எழுப்பினர்.
நீட் தேர்வின் கேள்வித் தாள் கசிந்து விட்டது என்று மறு புறம் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இத்தனை குழப்பங்கள் காரணமாக, இந்த தேர்வு முடிவுகளை எதிர்த்து பல்வேரு மாநிலங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பலர் இந்த குழப்பங்களை சுட்டிக் காட்டினர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின் போது, நாடு முழுவதும் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் அந்த மாணவர்கள் மறு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தது.
மறு தேர்வு எழுத விருப்பப்படாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்களை கழித்த பிறகு, அவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும். மறு தேர்வு எழுத விரும்புவோருக்கு, அவரது மறு தேர்வின் மதிப்பெண்களே கணக்கில் எடுத்ததுக் கொள்ளப்படும். இந்த மறு தேர்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறலாம் என்றும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள கலந்தாய்வுக்கு எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தது.
இந்தத் முடிவு மிகவும் பாரபட்சமானது என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் விமர்சிக்கிறார்.
“தேர்வு நேரம் குறைவாக கிடைத்த பல மாணவர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. தமிழ்நாட்டில் சில இடங்களில் மாணவர்கள் புகார் செய்த போது அதை கண்டுக்கொள்ள வேண்டாம் என கூறப்பட்டது. ஆனால் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குரல் எழுப்பினால் அது கேட்கிறது. இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது மாணவர்களே. எதிர்காலத்தில் நமக்கு தரமான மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள்,” என்றார்.

பட மூலாதாரம், நெடுஞ்செழியன்
மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?
“கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது யார் உள்ளே நுழைகிறார்கள், யார் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாகும். உதாரணமாக, பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான கட் ஆப் 220 மதிப்பெண்களாக இருந்தால், தற்போது நடைபெறும் குழப்பத்தால் மதிப்பெண் இழந்திருந்தால், அவருக்கு அந்த இடம் கிடைக்காது. இது போன்ற அனைத்து நிலைகளிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரப் போகிறது இந்த குழப்பம்,” என்கிறார் கல்வியாளர் ஆர். ராஜராஜன்.

பட மூலாதாரம், ராஜராஜன்
கருணை மதிப்பெண் பெறாதவர்களுக்கு என்ன பாதிப்பு ?
1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானதாகப் பார்க்கப்படுகிறது.
புதிதாக நடைபெறும் தேர்வின் கேள்வித்தாள் முந்தைய தேர்வை விட எளிதாக இருந்தால், இப்போது பெற்றுள்ள மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை பல மாணவர்கள் பெற முடியும். எனவே, நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள, பிற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
“கருணை மதிப்பெண்கள் பெறாத மாணவர்களின் ரேங்க மற்றும் கட் ஆஃப் இதனால் மாறும். புதிதாக தேர்வு எழுதுபவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால், பிற மாணவர்களின் ரேங்க மற்றும் கட் ஆப் ஏற்கனவே இருந்ததை விட குறையும். ஒரு கல்லூரில் 550 கட் ஆப் மதிப்பெண் என்றால், 549 மதிப்பெண் பெற்றவர் அந்தக் கல்லூரியில் நுழைய முடியாது. இந்த தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியமாகும்,” என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.
கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன பாதிப்பு?
கருணை மதிப்பெண் பெற்று, மறு தேர்வு எழுத வேண்டாம் என்று முடிவு செய்யும் மாணவர்களுக்கு ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களை விட குறைவாக தான் இப்போது கிடைக்கும். எனவே, அவர்கள் நினைத்த கல்லூரியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகலாம்.
“கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், தற்போது அவர் சில மதிப்பெண்களை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்போது அவரது ரேங்க் மிகவும் குறைந்துவிடும். இதனால் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று மாணவர்கள் குழம்பி போவார்கள்,” என்கிறார் ராஜராஜன். கடந்த ஆண்டு 1,583 மாணவர்கள் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றனர், இந்த ஆண்டு 2,000-க்கும் அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளனர் என்றார்.
கட் ஆப் மதிப்பெண்கள் உயருமா?
புதிய தேர்வு நடத்தி அதன் முடிவுகள் கிடைத்த பிறகே, அதைச் சொல்ல முடியும். எனினும் இப்போது கிடைத்துள்ள அகில இந்திய கோட்டா ரேங்க் பலருக்கு மாறப் போகிறது என்பது உறுதி என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதனால் கலந்தாய்வு தள்ளிப்போகுமா?
வரும் 23-ஆம் தேதி தேர்வு நடத்தி வரும் 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூலை மாதம் நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேரில் தமிழ்நாட்டு மாணவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலிலும், கலந்தாய்விலும் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த இளநிலை மருத்துவ இடங்களில் 85% மாநில கலந்தாய்வு மூலமும், 15% அகில இந்திய கலந்தாய்வு மூலமும் நிரப்பப்படும்.
“ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே கலந்தாய்வு நடைபெறுவதால், தமிழ்நாட்டுக் கலந்தாய்வில் பெரிய பாதிப்புகள் இருக்காது. அகில இந்திய கோட்டாவில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்களது அகில இந்திய ரேங்க் மாறுபடலாம்,” என்று ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்வு நேர இழப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் கொடுத்த 1,563 மாணவர்களில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், “கருணை மதிப்பெண்கள் கொடுப்பதிலும் எந்த மாநிலத்துக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தே கொடுக்கின்றனர்,” என்று விமர்சித்தார்.
2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
“2018-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கும் நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. அந்த தீர்ப்பு சட்டப்படிப்புக்கான ஆன்லைன் தேர்வாகும். ஆன்லைன் தேர்வில், ஒருவர் எப்போது எழுத தொடங்கினார் என்பது துல்லியமாகத் தெரியும். ஆனால் நீட் தேர்வு அப்படி கிடையாது. எனவே அந்த தீர்ப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது தவறு,” என்றார்.
“நீட் தேர்வை தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது என்று கூற முடியாது. இப்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது,” என்றும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












