டி20 உலகக் கோப்பை: கோலி, ரோகித்தை திணறவைத்த 'மும்பை' வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏ பிரிவில் முதல் அணியாக இந்தியா சூப்பர்-8 சுற்றுக்கு அதிகாரபூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது. அதேசமயம், அமெரிக்க அணி முதல்முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்று, சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ஒருவேளை தனது கடைசி லீக் போட்டியில் அமெரிக்கா அணி வென்றால், பாகிஸ்தான் அணியை வெளியேற்றிவிடும். பாகிஸ்தானுக்கான கடைசி லீக் ஆட்டம் மழையால் தடைபட்டாலும் அமெரிக்கா தகுதி பெற்றுவிடும். இதனால் ஏ பிரிவில் இடம் பெறப்போகும் 2-ஆவது அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூயார்க் நாசோ மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவில் 25-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சூப்பர் -8 சுற்றில் இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் அதிகாரபூர்வமாக சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. கடைசி லீக்கிலும் வென்றால், 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தற்போது 1.137 நிகர ரன்ரேட்டில் இருக்கும் இந்திய அணி கடைசி லீக்கில் வென்றால் நிகர ரன்ரேட்டை உயர்த்தி முதலிடத்தைப் பிடிக்கலாம்.
அமெரிக்க அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன், 0.127 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 0.191 என நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கிறது. அமெரிக்க அணி தன்னுடைய கடைசி லீக்கில் அயர்லாந்தை வென்றால் அல்லது போட்டி மழையால் தடைபட்டாலே பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை பாகிஸ்தான் கடைசி லீக்கில் அயர்லாந்தை வென்றாலும் பயனில்லை. ஆதலால் சூப்பர்-8 சுற்றுக்குள் அமெரிக்கா செல்ல கடைசி லீக்கில் வெல்ல வேண்டும் அல்லது ஆட்டம் மழையால் தடை பட வேண்டும்.
அமெரிக்காவின் மும்பை வீரர்கள் பற்றி ரோகித் சர்மா கூறியது என்ன?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ 110 ரன்கள் இந்த விக்கெட்டில் கடினமான இலக்கு என்பது தெரியும். சேஸிங் செய்த எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். சூர்யகுமார், துபே சிறப்பாக பேட் செய்தனர். அமெரிக்க அணியில் இருக்கும் பல வீரர்கள் எங்களுடன் மும்பையில் சேர்ந்து விளையாடியுள்ளனர். அவர்களின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமான உழைப்புக்குப்பின் இந்த அடையாளத்தை பெற்றுள்ளனர். இந்த கடினமான விக்கெட்டில் நிச்சயம் எங்கள் பந்துவீச்சாளர்கள் ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவார்கள் என எனக்குத் தெரியும். அர்ஷ்தீப் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். சூப்பர்-8 சுற்றுக்குள் சென்றது பெரிய நிம்மதியளிக்கிறது. நியூயார்க் ஆடுகளத்தில் விளையாடுவது எளிதானது அல்ல. கடைசிவரை களத்தில் இருந்தால்தான் ஆட்டத்தில் வெற்றி பெற முடியும். ஸ்கை அந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துபேயுடன் அவரின் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்
இந்திய அணியின் தனது அனுபவமிக்க பந்துவீச்சால் அமெரிக்க அணியை 110 ரன்களில் சுருட்டியது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் தனது டி20 கிரிக்கெட்டிலும், இந்திய அணி வரலாற்றிலும் சிறப்பான பந்துவீச்சை நேற்றுப் பதிவு செய்தார்.
அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவர் முதல்பந்திலும், அதே ஓவரிலும் 2வது விக்கெட்டையும் வீழ்த்தி அமெரிக்க அணியின் பேட்டிங் வரிசையை உடைத்தார். முதல் ஓவர் முதல் பந்தில் அமெரிக்க பேட்டர் ஜஹாங்கிரை ஸ்விங் பந்துவீச்சு மூலம் கால்காப்பில் வாங்க வைத்து அர்ஷ்தீப் வெளியேற்றினார். அதே ஓவர் கடைசிப்பந்தில் ஆன்ட்ரிஸ் கோயஸை வீழ்த்தி அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கடைசி நேரத்தில் அமெரிக்க பேட்டர்கள் அதிரடியாக ஆடி 120 ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நிதிஷ் குமார், ஹர்மீத் சிங் விக்கெட்டை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் ரன்சேர்ப்புக்குத் தடைபோட்டார்.
ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 25 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி இருந்தார். ஹர்திக் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி டக்அவுட்
பேட்டிங்கில் உலகின் தலைசிறந்த பேட்டர்களில் இருவரான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் விக்கெட்டுகளையும் தொடக்கத்திலேயே வீழ்த்தி அமெரிக்க பந்துவீச்சாளர்கள் மிரட்டினர். அதிலும் மும்பையை பூர்வீமாகக் கொண்ட நெட்ராவால்கர் விராட் கோலி ஆட்டமிழக்கச் செய்தது அமெரிக்காவுக்கு நம்பிக்கைதரும் தருணமாக அமைந்தது. விராட் கோலி தனது பேட்டிங் பலவீனத்தை அமெரிக்க அணியிடம் ஒப்புக்கொண்ட தருணமாக அமைந்தது. விராட் கோலி தான் சந்தித்த முதல்பந்திலேயே கவர்ச்சிக் கன்னி பந்துக்கு விக்கெட்டை இழந்தார். டி20 போட்டிகளில் விராட் கோலி கோல்டன் டக்அவுட் ஆவது இது 2-ஆவது முறையாகும்.
அதேபோல ரோஹித் சர்மாவுக்கும் நெருக்கடி அளித்து, அவரை அடித்து ஆடத் தூண்டவைத்து, மிட்ஆஃப் திசையில் கேட்சாக வைத்தது நெட்ராவால்கரின் சிறப்பான பந்துவீச்சுக்கு உதாரணமாகும். மும்பை அணியைச் சேர்ந்த ரோஹித் சர்மாவை, மும்பையின் முன்னாள் வீரர்கள் நெட்ராவால்கர், ஹர்மீத் சிங் இருவரும் சேர்ந்து வீழ்த்தினர். 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை சற்று ஆட்டம் காண வைத்தது அமெரிக்கா.
குறிப்பாக அமெரிக்காவின் நெட்ராவால்கர் நேற்று 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சவால் விடுத்தார். இதில் 13 டாட்பந்துகளும் அடங்கும், ஆக 11 பந்துகளில் மட்டுமே ரன் சேர்க்க நெட்ராவால்கர் அனுமதித்தார்.
ரோஹித் , கோலி விக்கெட்டுகளை வீழ்த்தியபின் சூர்யகுமாரை களத்தில் நிற்கவைத்து நெட்ராவால்கர் திணறவைத்தார். துல்லியமாக பந்துவீசியதால், சூர்யகுமாரால் பெரிய ஷாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு ஆளாகினார்.
ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்தநிலையில் அவரை அலிகான் போல்டாக்கிய பந்துவீச்சும் அற்புதமானது. ரிஷப் பந்த் எதிர்பாராத நேரத்தில் திடீரென இன்ஸ்விங் ஆகி ஸ்டெம்ப்பை பதம்பார்த்தது. 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை அசைத்துப் பார்த்தது அமெரிக்கா. ஆனால், 3 விக்கெட்டுகளுக்கு மேல் அமெரிக்க பந்துவீச்சாளர்களால் எடுக்கமுடியவில்லை.
360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் யாதவ்(50), ஷிவம் துபே(31) இருவரும் சேர்ந்து அணியை அரணாகக் காத்தனர். கடந்த 2 போட்டிகளிலும் சொதப்பிய சூர்யகுமார் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷிவம் துபேயும் தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் நிதானமாகப் பேட் செய்து 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் ஸ்டாப்கிளாக் தண்டனை
ஐசிசி அறிமுகப்படுத்திய புதிய விதியான ஸ்டாப்கிளாக் மூலம் தண்டனை பெற்ற முதல் அணியாக அமெரிக்கா பெயரெடுத்தது. ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் தொடங்கப்பட வேண்டும். அவ்வாறு தொடங்காவிட்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
ஒரு இன்னிங்ஸில் முதல்முறையாக பந்துவீசும் அணி தாமதம் செய்தால் இந்த தண்டனை வழங்கப்படாது. 3-ஆவது முறையாக ஓவரை 60 வினாடிகளுக்குள் தொடங்காதபட்சத்தில்தான் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அந்த வகையில் 2 முறை அமெரிக்க அணி நேற்று 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்காத நிலையில், நடுவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். 3-ஆவது முறையும் 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தொடங்காமல் தாமதம் செய்ததால், இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.
16-வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. மிகவும் நெருக்கடிதரும் விதத்தில் அமெரிக்கா பந்துவீசியது. அப்போது ஸ்டாப் கிளாக் மூலம் அமெரிக்காவுக்கு தண்டனையளித்து 5 ரன்களை இந்தியாவுக்கு வழங்கியதால், திடீரென இந்தியாவின் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களும், பந்துகளும் சமமாக வந்து 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
அமெரிக்க அணியின் மோனக் படேல் நேற்று விளையாடாத நிலையில், துணைக் கேப்டன் ஆரோன் ஜோன்ஸிடம் நடுவர்கள் ஸ்டாப் கிளாக்விதி குறித்து விளக்கம் அளித்து இந்திய அணிக்கு 5 ரன்களை வழங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
அதிக சிக்ஸர்கள் அடித்த அமெரிக்கா
இந்த ஆட்டத்தில் பவுண்டரி அடிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட சிக்ஸர்கள்தான் அதிகம் அடிக்கப்பட்டன. அமெரிக்க தரப்பில் 4 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் விளாசப்பட்டன. இந்திய அணித் தரப்பில் 4 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசப்பட்டன. இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 10 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.
அமெரிக்க அணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் நியூசிலாந்து வீரர் கோரி ஆன்டர்ஸன் 15 ரன்னில் ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அமெரிக்க அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்களும், அடுத்தார்போல் டெய்லர் 24 ரன்களும் சேர்த்தனர். மற்ற வகையில் பெரிதாக யாரும் ரன்கள் சேர்க்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












