கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்தே இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கின்றன. ஜாம்பவான் அணிகளை கத்துக்குட்டி அணிகள் தோற்கடிக்கும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவையும் தீர்மானிப்பதில் நட்சத்திர பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை விட, ஆடுகளங்கள்(விக்கெட்) முக்கியக் காரணியாக மாறிவிட்டன.
இதுவரை இருபதுக்குக்கும் மேற்பட்ட லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் எந்தெந்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்லும் என்பதை கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.
முன்னாள் சாம்பியன்கள், வலிமையான அணிகள்கூட சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், கத்துக்குட்டி அணிகள், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அணிகளும் கூட சூப்பர்-8 வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளன.
ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள 5 அணிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறும். எந்த குரூப்பில் எந்தெந்த அணிகள் முதலிரு இடங்களைப் பிடிக்கும் என்பது கடைசி லீக் ஆட்டம் வரை சஸ்பென்ஸாகவே இருக்கும் என்பது போலவே அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் வந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குரூப்- ஏ: பாகிஸ்தான் நிலைமை பரிதாபம்
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளது. இதில் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். ஆதலால், பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வது சந்தேகத்துக்குரிய ஒன்றுதான்.
பாகிஸ்தான் அணியை விட கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் அமெரிக்கா அணி வலுவாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு வரும் 16ம் தேதி ஃப்ளோரிடா நகரில் அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. ப்ளோரிடா நகரில் அன்றைய தினம் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றாலும், அமெரிக்கா அணியின் கடைசி 2 லீக் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14ம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
அவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் என்பதால் வெளியேற வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் அணி இன்னும் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறது.
குரூப்-பி: இங்கிலாந்துக்கு சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி தற்போது 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் இரு லீக் ஆட்டங்களில் நமீபியா, ஓமன் அணிகளுடன் மோதுகிறது. இரு அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வென்றால் 5 புள்ளிகளுடன் முடிக்கும்.
தற்போது ஸ்காட்லாந்து அணியும் 5 புள்ளிகளுடன் முடித்தால் நிகர ரன்ரேட் பார்க்கப்படும். அந்த வகையில் இ்ங்கிலாந்து அணி தனது அடுத்த 2 வெற்றிகளிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பிரமாண்ட வெற்றியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், நிகர ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து சூப்பர்-8 சென்றுவிடும்.
ஸ்காட்லாந்து அணி, தற்போது 3 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 2.164 என வலுவாக இருக்கிறது. இந்த ரன் ரேட்டும், புள்ளிகளும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு சவாலாகத்தான் இருக்கும். இங்கிலாந்து அணி கட்டாயமாக அடுத்த இரு போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணியின் நிகர ரன்ரேட்டைவிட உயர்வாக வைத்திருக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் ஸ்காட்லாந்து அணி மிகமோசமாகத் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால்தான் அதன் நிகர ரன்ரேட் குறையும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து கடும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் நிலை சிக்கலாகிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
சி பரிவில் நியூசிலாந்து பரிதாபம்
குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையே சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. தற்போது மைனஸ் 4.200 புள்ளிகளில் மோசமான நிலையில் நியூசிலாந்து இருக்கிறது.
இன்னும் 3 போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு இருக்கும் நிலையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நிச்சயம் இரு அணிகளுக்கும் சவாலானது.
ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்றுவிட்டால், அடுத்து வரும் இரு ஆட்டங்களில் பப்புவா நியூ கினி, உகாண்டா அணிகளை எளிதாக வென்று 6 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு கடும் போட்டியளிக்கும். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் மாபெரும் வெற்றியுடன் முடித்து நிகர ரன்ரேட்டை ஆப்கானிஸ்தானைவிட அதிகமாக உயர்த்துவது அவசியம்.
கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் தோற்றாலும், 4 புள்ளிகளோடு, நியூசிலாந்து போட்டியிட்டாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
குரூப்-டி: இலங்கை வெளியேறுவது உறுதி
குரூப் டி பிரிவில் இலங்கை அணி அடுத்தடுத்த தோல்விகள், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒருபுள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றாலும் 3 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் இலங்கை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












