பாஜக செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் அதிருப்தி - இரு தரப்பு உறவில் விரிசலா?

ஆர்எஸ்எஸ்- பா.ஜ.க

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவுத்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆளும் பா.ஜ.கவை 'திமிர் பிடித்தவர்கள்' என்றும், எதிர்தரப்பு இந்தியா கூட்டணியை 'பகவான் ராமருக்கு எதிரானவர்கள்' என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

“ராமர் அனைவருக்கும் நீதி வழங்குகிறார். 2024 மக்களவைத் தேர்தலைப் பாருங்கள். ராமரை வழிபடுபவர்களுக்கு படிப்படியாக ஆணவம் ஏற்பட்டது. அந்தக்கட்சி மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அந்தக்கட்சியின் ஆணவத்தால் அதற்குக் கிடைக்க வேண்டிய முழு பெரும்பான்மையை பெற கடவுள் அனுமதிக்கவில்லை,” என்று இந்திரேஷ் குமார் கூறினார்.

ராமரை எதிர்த்தவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. அவர்களில் யாரும் ஆட்சிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. ஒன்றிணைந்த பிறகும் அவர்களால் முதலிடத்தை எட்ட முடியவில்லை. அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே கடவுளின் முடிவு மெய்யானது.” என்று அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் பகுப்பாய்வு அறிக்கை

சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும். ஆனால், நான் வேலை செய்தேன் என்று பெருமிதம் கொள்ளாதீர்கள். நாட்டிற்கு தன்னலமற்ற உண்மையான சேவை தேவை. கண்ணியத்தைப் பின்பற்றுபவனுக்கு அகங்காரம் இருக்காது. அதுதான் உண்மையான சேவை” என்று மறைமுகமாக மோதி அரசை நோக்கி மோகன் பாகவத் கூறினார்.

இதுமட்டுமின்றி பல விஷயங்களில் ஆளும் பா.ஜ.க அரசை அவர் குறை கூறினார். அவர் அத்துடன் நிற்கவில்லை. மணிப்பூரில் நடந்த வன்முறைகளையும் பாகவத் குறிப்பிட்டார். ஒரு வருடமாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் பிரச்னை ஏன் இன்னும் தீரவில்லை என்று தனக்கு குழப்பமாக இருப்பதாகவும், உத்தரவிடும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றும் அவர் சொன்னார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. கடந்த இரண்டு தேர்தல்களில் கிடைத்ததுபோல இந்த முறை பா.ஜ.கவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல இடங்களை அக்கட்சி இழந்தது. இந்த அதிர்ச்சிக்கான காரணங்களை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். பல விமர்சனங்களையும் கட்சி எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஆர்எஸ்எஸ் தலைவர் சொன்ன கருத்துகள் கட்சிக்கு பேரிடியாக உள்ளன.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான மோகன் பாகவத்தின் பேச்சு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. சங்பரிவாருக்குள் இருக்கும் அரசியல் அமைப்பான பா.ஜ.க பற்றி, அதன் தாய் அமைப்பு சொன்ன கருத்துகள் நாடு முழுவதும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. அது இன்னும் தொடர்கிறது.

இந்த தொடர் விமர்சனம் பாகவத்துடன் நின்றுவிடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துகளை பிரதிபலிக்கும் ’ஆர்கனைஸர்’ இதழ் பா.ஜ.கவையும், அதன் மூத்த தலைவர்களையும் விமர்சித்துள்ளது.

“மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவில் அதீத நம்பிக்கையுடன் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கண்ணாடி. எல்லோருமே ஒரு பிரமையில் இருந்தனர். மக்களின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை" என்று அது குறிப்பிட்டிருந்தது.

சங்கத்துடன் தொடர்புடைய ரத்தன் ஷார்தா, பா.ஜ.க மற்றும் மோதி அரசை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

'பா.ஜ.கவுக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை'

இந்த சூழலில் சங்கத்திற்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் எல்லாம் சரியாக இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானது.

மக்களவை தேர்தலின் முதல் சில கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒரு நேர்காணலின் போது சொன்னது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.கவுக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை” என்று நட்டா கூறியிருந்தார்.

நாடு முழுவதும் பரவியிருக்கும் சங்க அமைப்பு, அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எப்படி உதவுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பிறகு எதற்காக தேர்தலின் போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்?

தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே மோகன் பாகவத், மோதி அரசை விமர்சிக்க ஆரம்பித்தார். அடுத்த நாளே ’ஆர்கனைஸர்’ இதழ் பா.ஜ.க தலைவர்களை விமர்சித்தது.

இந்த சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது, ​​பா.ஜ.கவுக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவுகிறதா என்ற கேள்வி எழுகிறது. பாஜகவுக்கும் சங்கத்துக்கும் இடையே உண்மையில் என்ன நடக்கிறது?

இதற்கு முன் எந்தெந்த விஷயங்களில் மோகன் பாகவத் பாஜக தலைவர்களை விமர்சித்துள்ளார்? மகாராஷ்டிரா அரசியல் பற்றி அந்த அமைப்பின் இதழ் என்ன சொன்னது? விரிவாக விவாதிக்கலாம்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

மோகன் பாகவத் எந்தெந்த விஷயங்கள் குறித்து பேசினார்?

மோகன் பாகவத் ஆண்டுக்கு இரண்டு முறை தொண்டர்களிடையே உரையாற்றுவார். விஜயதசமி தினத்தன்றும், நிர்வாக மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படும்போதும் அவர் பேசுவார். ஆனால் அவர் ஒருபோதும் நிர்வாக மேம்பாட்டு வகுப்புகளில் அரசியல் ஆலோசனைகளையோ அறிக்கைகளையோ வழங்குவதில்லை. அவர் தனது விஜயதசமி உரையில் மட்டுமே தனது அரசியல் நிலைப்பாடு அல்லது அரசியல் அறிக்கையை அளிப்பார்.

ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே, எக்ஸிகியூட்டிவ் டெவலப்மென்ட் குரூப்-2- மாநாட்டின் இறுதி உரையில் அவர் மறைமுகமாக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களை சாடினார். அவரது பேச்சு ஆக்ரோஷமாக இருந்தது. எனவே இந்த பேச்சு பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெறுகிறது.

முதலாவது மணிப்பூர் குறித்த அவரது அறிக்கை. “நாட்டின் வளர்ச்சிக்கு அமைதி அவசியம். நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது, வேலைகள் நடைபெறவில்லை. நாட்டின் முக்கியப் பகுதியான மணிப்பூர் ஓராண்டாக பற்றி எரிகிறது. மணிப்பூரில் நிலவும் வெறுப்பு, அராஜகத்தை பரப்பியுள்ளது. அங்கு வன்முறையை தடுத்து நிறுத்துவதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவதாக, பிரதமர் மோதி எப்போதும் தன்னை பிரதான் சேவக்(முக்கிய சேவகர்) என்று அழைத்துக்கொள்கிறார். மோகன் பாகவத் தனது உரையில் ‘சேவகர்’ என்ற வார்த்தையை அடிக்கோடிட்டு பேசினார். "நாட்டுக்கு தன்னலமற்ற உண்மையான சேவை தேவை. கண்ணியத்தைப் பின்பற்றுபவருக்கு அகங்காரம் இருக்காது. அவர்தான் சேவகர் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர்" என்றும் பாகவத் கூறினார். இது மறைமுகமாக மோதியை நோக்கிச் சொல்லப்பட்டதாகவே கருதப்படுகிறது.

மூன்றாவதாக, எதிர்க்கட்சி தொடர்பான அவரது அறிக்கை. ”ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளன. அடிப்படையில் நாம் எதிர் தரப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். விரோதி என்று சொல்லக்கூடாது. நாடாளுமன்றத்தில் அவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர். அதையும் மதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

நான்காவதாக, "தேர்தல்கள் போர் அல்ல, போட்டி. அதற்கு வரம்புகள் இருக்க வேண்டும். பொய்யை நாடுவதில் பலனில்லை. பிரசாரங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சமூகத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எந்த காரணமும் இல்லாமல் சங்கம் போன்ற அமைப்புகளை இதில் இழுக்கும் முயற்சி நடந்தது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொய்களை பரப்புவது சரியல்ல. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தீரவில்லை. தேர்தலின் பரபரப்பான சூழலில் இருந்து விலகி, பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்" என்றும் ஆளும் பா.ஜ.க தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஜூன் 10ஆம் தேதி இரவு மோகன் பகவத் இந்த உரையை நிகழ்த்தினார். அதற்கு மறுநாள் அதாவது ஜூன் 11ஆம் தேதி ‘ஆர்கனைஸர்’ இதழ் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களை விமர்சித்தது.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

‘ஆர்கனைஸர்’ இதழ் என்ன சொன்னது?

ஆர்எஸ்எஸ் எதிர்பார்த்த வேலையை பா.ஜ.க செய்யவில்லை என்று அது குறிப்பிட்டது. "பா.ஜ.க ஒரு பெரிய கட்சி. அக்கட்சிக்கு சொந்த தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கட்சியின் செயல்பாடுகளையும், அதன் சித்தாந்தத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும்.

தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவினர் தங்கள் செய்தியை சங்கத்திடம் கொண்டுசெல்லவில்லை. தேர்தலில் உதவுமாறு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் கேட்கவும் இல்லை. ஏன் இப்படி செய்தார்கள்?" இந்த இதழிலும் இதே கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடக்கும் வன்முறை அரசியல் தொடர்பாகவும் இந்த கட்டுரையில் பா.ஜ.க விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. 'மோதி மட்டும் போதும், இந்த முறை 400ஐ தாண்டுவோம்' என்ற அதீத நம்பிக்கையில் பா.ஜ.கவினர் மிதந்து கொண்டிருந்தனர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பிரித்தாளும் அரசியலை பா.ஜ.க தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

"பா.ஜ.கவும், சிவசேனையும் பெரும்பான்மை பெற்றபோதும் அஜித் பவாரை ஏன் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்? பல ஆண்டுகளாக யாரை எதிர்த்துப் போராடினார்களோ அவர்களை சேர்த்துக் கொண்டதால் பாஜக ஆதரவாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்." என்றும் அந்த கட்டுரை கூறுகிறது.

சங்கத் தலைவர்கள் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டிருப்பதை பார்க்கும்போது, சங்க அமைப்பிடமிருந்து தகவல்கள் மற்றும் கருத்துகளை அறியாமல் அதை அவர்கள் பகிரங்கமாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுவதாக சங்கம், அதன் பணிகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.

மோகன் பாகவத்தின் அறிக்கைக்கு முன்பும், ‘ஆர்கனைஸர்’ இதழில் கட்டுரை வெளிவருவதற்கு முன்பும், சங்க அமைப்பு தனது தொண்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் இருந்து தேர்தல் முடிவுகள் குறித்து ‘கருத்து’ சேகரித்தது.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தேர்தலின் அரசியல் நிர்வாகத்தில் தொழில் ரீதியாக ஈடுபட்டிருந்த மூத்த தன்னார்வ தொண்டர் ஒருவர், தனது அடையாளம் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் 'பிபிசி மராத்தி'யிடம் பேசினார்.

"இந்த 'பின்னூட்டம்' சங்கத்தின் அடிமட்ட நிலையில் இருந்து தேசிய நிர்வாக நிலை வரைக்கும் எடுக்கப்பட்டதாகும். அத்தகைய பின்னூட்டத்தின் அடிப்படையில் வெளியான கருத்துகள் இவை.” என்று அவர் கூறினார்.

“வாக்கு சதவிகிதம் ஏன் குறைந்தது, சமூக ஒற்றுமையில் என்ன தாக்கம் ஏற்பட்டது, தேர்தல்களின் போது என்ன கூறப்பட்டது, ஏன் இப்படி முடிவுகள் வந்தது போன்ற விஷயங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இது பா.ஜ.கவுக்கும் பொருந்தும். அக்கட்சியுடன் தொடர்பு உடையவர்களிடமிருந்தும் கருத்து கேட்கப்படுகிறது.” என்றார்.

தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு பாகவத்தின் அறிக்கை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டாலும், அவர் இதுபோல விமர்சனம் செய்வது இது முதல் முறை அல்ல. மோதி அரசு மௌனமாக இருந்த பிரச்னைகள் குறித்து இதற்கு முன்பும் பாகவத் கருத்து தெரிவித்துள்ளார். பாகவத் மட்டுமல்ல, அவருக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவரும் பகிரங்கமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மோகன் பாகவத்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு முன்பு மோகன் பாகவத் என்ன அறிக்கை வெளியிட்டார்?

மணிப்பூர் விவகாரம் தலைப்புச் செய்தியாக இருந்தபோது ​​பிரதமர் மோதி அதுபற்றி எதுவும் கூறவில்லை. இந்த விவகாரம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சில உறுப்பினர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.

ஆனால், மணிப்பூர் பற்றி பேச அரசு தரப்பில் யாரும் தயாராக இருக்கவில்லை. அப்போது மோகன் பாகவத் தனது 2023 விஜயதசமி உரையில் மணிப்பூர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

”மணிப்பூரில் வன்முறையை தூண்டியது யார்? இந்த வன்முறை தானாக ஏற்பட்டதா அல்லது தூண்டி விடப்பட்டதா? மெய்தேயி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களும் இதுவரை ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தன,” என்று அவர் சொன்னார்.

இது ஒரு எல்லை மாநிலம். இங்கு வன்முறை நடந்தால் அதனால் யாருக்கு லாபம் என்று சிந்திக்க வேண்டும் என்றும் பாகவத் கூறியிருந்தார்.

இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மோகன் பாகவத் தெரிவித்திருந்தார். இடஒதுக்கீட்டின் பலன் யாருக்கு, எவ்வளவு காலம் கிடைக்கும் என்பதை முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்க அவர் முன்மொழிந்திருந்தார். அடுத்து நடந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே விவகாரம் ஆதிக்கம் செலுத்தியது.

இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று சங்கம் விரும்புவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இது பா.ஜ.கவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் மோகன் பாகவத்தின் அறிக்கை வெளியானது. இது அவரது முந்தைய அறிக்கைக்கும் சில சங்க நிர்வாகிகளின் நிலைப்பாட்டிற்கும் முரணானது.

“சமூகத்தில் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சாசனத்தின்படி எந்த இடஒதுக்கீடு இருக்க வேண்டுமோ அதை சங்கம் ஆதரிக்கிறது,” என்று மோகன் பாகவத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மோகன் பாகவத் மட்டுமல்லாமல் இதற்கு முன் இருந்த சங்கத் தலைவர்களும் பா.ஜ.க மூத்த தலைவர்களை விமர்சித்துள்ளனர். ஆர்எஸ்எஸ்-சுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முன்பும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக பதவி வகித்த போது, அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் கே. எஸ். சுதர்ஷன். தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அடல் பிஹாரி வாஜ்பாய்

பட மூலாதாரம், Getty Images

வாஜ்பேயி பற்றி ஆர்எஸ்எஸ் கூறியது என்ன?

அடல் பிஹாரி வாஜ்பேயி 2000வது ஆண்டு காலகட்டத்தில் பிரதமராக இருந்தார். ஆனால் 2004 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்ஷன் என்டிடிவிக்கு பேட்டி அளித்தார்.

அந்த நேரத்தில் அவர் அடல் பிஹாரி வாஜ்பேயி மற்றும் லால் கிருஷ்ண அத்வானியை வெளிப்படையாக விமர்சித்தார்.

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தை விமர்சித்த அவர்,"வாஜ்பேயி தனது பதவிக்காலத்தில் அதிகம் செய்ததாக நான் நினைக்கவில்லை. சில நல்ல முடிவுகளை அவர் எடுத்தார். ஆனால் அவர் அனைவரையும் தன்னுடன் ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும் ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவர் ‘பாரதிய மஸ்தூர் சங்கத்துடன்’ பேச்சுவார்த்தையை முடித்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இப்போது வாஜ்பேயி மற்றும் அத்வானி ஓய்வு பெற்று புதிய தலைமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று கூறினார்.

இதுமட்டுமின்றி வாஜ்பேயி குடும்பத்தினரையும் அவர் விமர்சித்தார். அரசின் வேலைகளில் தலையிடுவதாக அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவையும் சுதர்ஷன் விமர்சித்தார். அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுக்கும் சங்கத்துக்கும் இடையேயான உறவு பதற்றமாக இருந்தது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் வெளியான அறிக்கைகளை விட நாக்பூர் மாநாட்டின் முடிவில் மோகன் பாகவத் ஆற்றிய உரை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது என்று பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் குறித்து செய்தி வெளியிட்டு வரும் அரசியல் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

மோகன் பாகவத் ஏன் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பேசினார்? தசரா உரையில் மட்டுமே அரசியல் அறிக்கைகளை வெளியிடும் மோகன் பாகவத், சங்கத்தின் மாநாட்டிலேயே அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு பா.ஜ.க தலைவர்களை சாடியது ஏன்?

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Getty Images

ஜே.பி.நட்டாவின் அறிக்கை ஆர்எஸ்எஸ்-சுக்கு பிடிக்கவில்லையா?

இந்த அறிக்கைகள் அனைத்தும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வந்தவை. தேர்தல் நேரத்தில் யாரும் எதுவும் பேசவில்லை. குறிப்பாக, ஜே.பி.நட்டா தேர்தலின் போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு மே 17ஆம் தேதி அளித்த பேட்டியில், “இனி பாஜகவுக்கு சங்கம் தேவையில்லை. அரசியல் முடிவுகளை எடுக்கும் திறன் பாஜகவுக்கு உள்ளது” என்று கூறியிருந்தார்.

அந்த நேரத்தில் கூட பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்தும் யாரும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே மோகன் பாகவத் ஆளும் பா.ஜ.கவை விமர்சனம் செய்துள்ளார்.

இப்போது ​​மோகன் பாகவத் கூறியது நட்டாவின் அறிக்கையின் மீதான கோபத்தின் வெளிப்பாடா? அதற்கான பதிலை ஆர்எஸ்எஸ் இப்போது அளித்துள்ளதா? ஜே.பி.நட்டாவின் அறிக்கையால் பல சங்க தொண்டர்கள் புண்பட்டுள்ளனர் என்று நாக்பூர் லோக்சத்தா நாளேட்டின் ஆசிரியர் தேவேந்திர கவண்டே கூறினார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "சங்கத்தினர் தேர்தலில் பணியாற்றத் தேவையில்லை என்று பிரசாரம் செய்யப்பட்டது. பா.ஜ.கவினர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். பா.ஜ.கவுக்கு சங்கம் தேவையில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் தேர்தலின் போது கூறியதும் சங்கத்திற்கு பிடிக்கவில்லை. இந்த அறிக்கைக்கு பிறகு பதற்றம் தெளிவாகத் தெரிந்தது,” என்று குறிப்பிட்டார்.

ஆனால் நாக்பூரில் ஆர்எஸ்எஸ், பா.ஜ.க மற்றும் அரசியல் குறித்து செய்தி வெளியிடும் மூத்த செய்தியாளர் விகாஸ் வைத்யாவின் கருத்து மாறுபட்டதாக உள்ளது.

“ஜே. பி. நட்டா அளித்த அறிக்கைக்கு பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒப்புதல் உள்ளது. எனவே சங்கத்திற்கு கோபம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்திருந்தால், அவர்கள் அதை அப்போதே பதிவு செய்திருப்பார்கள் அல்லது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பார்கள். பா.ஜ.கவும் விளக்கம் அளித்த்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

பா.ஜ.க - ஆர்எஸ்எஸ் மோதலா?

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தால் எல்லா பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கும் சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு, ’சில்க் பாக்’ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அழைக்கப்படுகின்றனர். ஆனால் மோதி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். பல நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க நாக்பூர் வந்தார். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கோ அல்லது சில்க் கார்டனில் அமைந்துள்ள நினைவிடத்திற்கோ சென்றதில்லை.

அவருக்கு ஆர்எஸ்எஸ் மீது கோபமா? தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மோகன் பாகவத் பா.ஜ.க.வை விமர்சித்தது ஏன்? பா.ஜ.கவுக்கும் சங்கத்துக்கும் இடையே உண்மையிலேயே மோதல் உள்ளதா?

ஆனால் அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பலாஷிகர் அப்படி நினைக்கவில்லை.

”சங்கத்துக்கும் பாஜகவுக்கும் எந்த அடிப்படை கருத்து வேறுபாடும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்போது வேலை செய்ய வேண்டிய விஷயங்களில் அவர்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

பாஜக மற்றும் சங்கம் நிறுவ விரும்பும் (சமூக மற்றும் கலாசார) ஆதிக்கம் குறித்து அவை தெளிவாக இருக்கின்றன. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அரசின் பிற பணிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சாத்தியம்தான் என்றும் அவர் கூறினார்.

‘வன்முறை அரசியலில் உடன்பாடு இல்லை’

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆர்எஸ்எஸ்-சுக்கும் பாஜகவுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் காணப்பட்டது. ஆனால் சங்கம் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்கிறார் தேவேந்திர கவண்டே.

”பா.ஜ.க மீது குறைபட்டுக் கொள்ள சங்கத்திற்கு எதுவும் இல்லை. ஆனால் மோதியின் பா.ஜ.க மீது அது கோபமாக உள்ளது. ஏனெனில் சங்கம், ஒரு நேர்கோட்டில், அதன் கொள்கையின்படி செயல்படும் ஒரு அமைப்பு. எனவே, பா.ஜ.க.வின் துண்டாடும் அரசியலையும், இதன் காரணமாக கெட்டுப்போகும் அதன் பிம்பத்தையும் சங்கம் ஏற்கவில்லை. பாகவத்தின் இந்த அறிக்கைகள் அதிலிருந்து வந்தவைதான். சங்கத்திற்கும் பா.ஜ.கவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இதற்கு அர்த்தமில்லை. ஆனால் நிச்சயமாக சிறிது பதற்றம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு, வன்முறை அரசியலில் உடன்பாடு இல்லை என்பதை விகாஸ் வைத்யாவும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் சங்கத்துக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

“மோதி மீது சங்கத்திற்கு கோபம் இருந்தால் பாகவத் நேரடியாக அவரது பெயரை சொல்லியிருப்பார். பா.ஜ.கவுக்கு மூத்தவராக சங்கம் தன்னை கருதுகிறது. எனவே பா.ஜ.கவின் பின்னடைவை சங்கத்தால் ஏற்க முடியாது. சங்கத்திற்கு பா.ஜ.க மீது பாசம் உள்ளது. ஆயினும் மோகன் பாகவத்தின் தலைமுறை இடைவெளி முன்னுக்கு வந்துள்ளது,” என்று வைத்யா குறிப்பிட்டார்.

ஆனால், பா.ஜ.க. பற்றிய விமர்சனம், எதிரிகளை போட்டியாளர்களாக கருத வேண்டும், எதிரணியினரின் கருத்துகளை மதிக்கவேண்டும் என்ற மோகன் பாவத்தின் அறிக்கை வெளியான நேரம் குறித்து நாக்பூர் லோக்மத் ஆசிரியர் ஸ்ரீமந்த் மானே சந்தேகம் எழுப்புகிறார்.

பா.ஜ.க வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பாஜக தனித்து இயங்க தீர்மானித்தால் என்ன ஆகும்?

பா.ஜ.க வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், பாஜக பக்கம் நாங்கள் முழுமையாகச் சாய்ந்திருக்கவில்லை என்பதைக் காட்ட சங்கம் முயல்கிறதா?

கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.கவின் செயல்திட்டத்தை சங்கம் முன்னிறுத்தி வந்தது. எதிர்க்கட்சிகளின் இலக்காகி விடக்கூடாது என்பதற்காக தற்போது சமஇடைவெளியை பராமரிக்க அது முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகளை போட்டியாளராக கருதவேண்டும், மணிப்பூர் மீது கவனம் செலுத்துங்கள் என்று தேர்தல் நேரத்தில் பாகவத் ஏன் கூறவில்லை? தேர்தல் வரை ஏன் அமைதியாக இருந்தார்? இது போன்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

சங்கத்திற்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் உறவு சுமுகமாக இல்லையென்றால், சங்கத்திற்கு நன்மை அளிக்கும் விதமாக பா.ஜ.க இல்லாவிட்டால், வரவிருக்கும் அரசியல் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய கேள்வி.

கூட்டணி ஆட்சி நடத்தும் பா.ஜ.கவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவி தேவைப்படலாம். அடுத்த 4 மாதங்களில் மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் சவாலான சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு அக்கட்சிக்கு தேவைப்படும்.

மோகன் பாகவத்தின் உரையில் இருந்து மோதியும், பாஜகவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது இப்போது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படும். புதிய தேசிய தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. சங்கத்திற்கும் பா.ஜ.கவிற்கும் இடையிலான தற்போதைய உறவின் நிலையை இந்தத் தேர்தல் முடிவும் நமக்குச் சொல்லும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)