இந்தியா - அமெரிக்கா உறவில் நெருடலை ஏற்படுத்திய வழக்கில் திருப்பம் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சீக்கிய பிரிவினைவாத தலைவரை அமெரிக்காவில் கொல்லத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தியர் நிகில் குப்தா, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா, வார இறுதியில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி அறிக்கை கூறுகிறது.
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ அமெரிக்காவில் படுகொலை செய்ய சதி முயற்சி நடந்ததாக கூறப்படும் வழக்கை அமெரிக்கா விசாரித்து வருகிறது. குர்பத்வந்த் சிங்கைக் கொலை செய்ய ஒரு கொலையாளியை வேலைக்கு அமர்த்த முயன்றதாக நிகில் குப்தா மீது அமெரிக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர்கள் குப்தாவை இந்திய அரசு அதிகாரி ஒருவர் இயக்கியதாக குற்றம் சாட்டுகின்றனர். குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை தொடர்பான சதிக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு
அவர் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் குப்தா, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதைத் தடுக்க ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் அது செக். அரசியல் சாசன நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.
52 வயதான நிகில் குப்தா, கொலை செய்ய ஆள் அமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிறை பதிவுகளின்படி, அவர் தற்போது புரூக்ளினில் உள்ள பெடரல் பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக பேச அவரது வழக்கறிஞர்களை பிபிசி அணுகியது. ஆனால் செக். அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை.
நவம்பரில் வட அமெரிக்காவில் இருந்த பன்னூன் உட்பட நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குப்தா மீது குற்றம் சாட்டினர்.
பன்னூனைக் கொல்வதற்காக குப்தா ஒரு கொலையாளிக்கு $100,000 (ரூ. 83,54,750) பணம் செலுத்தியதாக வழக்குரைஞர்கள் கூறினர். அந்த கொலையாளி ரகசியமாக சதி வேலையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்திய உச்சநீதிமன்றத்தை நாடிய நிகில் குப்தா
அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்ற பன்னூன் நியூயார்க்கில் வசிக்கிறார்.
இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2% சீக்கியர்கள் உள்ளனர். பன்னூன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட `சீக்கியர்களுக்கான நீதி’ (Sikhs for Justice) என்ற அமைப்பில் பொது ஆலோசகராக பணியாற்றுகிறார்.
இந்திய அரசாங்கம் 2020 இல் பன்னூனை பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது. ஆனால் அவர் இந்த கூற்றை மறுத்தார். அவர் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் நெருக்கமாக இருந்தார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
நவம்பர் மாதம் வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று, பன்னூனுக்கு எதிரான சந்தேகத்திற்குரிய படுகொலைத் திட்டத்தை இந்தியாவின் உயர் மட்ட அதிகாரிகள் மேற்கொண்டதாக குறிப்பிட்டது.
இந்த சதித் திட்டத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொண்ட இந்திய அதிகாரிகள், இதுபோன்ற செயல்கள் அரசின் கொள்கைக்கு மாறானது என்று கூறினர்.
குப்தாவுக்கு எதிரான கோரிக்கைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் நிகில் குப்தா அவரை விடுதலை செய்வதற்கும், நியாயமான விசாரணையை வழங்குவதற்கும் இந்திய உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் குப்தாவின் கோரிக்கையை நிராகரித்தது,
இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட குப்தாவின் மனுவில், சுய உரிமை கோரும் அமெரிக்க ஃபெடரல் முகவர்களால் தான் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய உச்சநீதிமன்றம் இந்த சர்ச்சையில் தலையிடாது என்றும், அதை அரசாங்கமே கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












