குஜராத்: அடுக்கு மாடி குடியிருப்பில் முஸ்லிமுக்கு வீடு ஒதுக்க இந்துக்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
- எழுதியவர், தேஜஸ் வைத்யா
- பதவி, பிபிசி செய்தியாளர், வதோதராவில் இருந்து
"சன்ஸ்கார் நகருக்கு (கலாசார நகர்) வரவேற்கிறோம்."
ஆமதாபாத்தில் இருந்து சுமார் 110 கிமீ தொலைவில் உள்ள வதோதரா நகர எல்லையை அடைந்தவுடன், எங்கு பார்த்தாலும் இதுபோன்ற எழுத்துப் பலகைகள் காணப்படுகின்றன.
முதல் பார்வையில் இந்த நகரம் 'சமூக நல்லிணக்கம்' மற்றும் 'சகோதரத்துவம்' உள்ளது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் நகரின் ஹர்னி பகுதியில் உள்ள மோட்நாத் ரெசிடென்ஸியை நோக்கி நாம் நகரும்போது, 'மதத்தின் அடிப்படையில் பாகுபாடு' மற்றும் தீவிர 'சமூக உரசல்' எட்டிப் பார்க்கத் தொடங்குவது போல் தெரிகிறது.
முக்கிய மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (முதலமைச்சர் வீட்டு வசதி திட்டம்) கீழ் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள 642 ப்ளாட்டுகளில் ஒன்றை முஸ்லிம் பெண்மணிக்கு ஒதுக்கியதற்கு எதிராக 32 குடியிருப்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சி நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும், முஸ்லிம் பெண்ணுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனு, 'கலாசார நகரம்' என்ற இந்த மாநகரின் பிம்பத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த மனுவின் நகல் பிபிசியிடம் உள்ளது.
2018 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான (லோயர் இன்கம் க்ரூப் - எல்.ஐ.ஜி) அரசு திட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்து, அவருக்கு வேறு இடத்தில் வீடு வழங்கக் கோரி இந்த குடியிருப்பாளர்கள் ஜூன் 5 ஆம் தேதி மனு அளித்தனர். கலாசார நகரம் என்று அழைக்கப்படும் வதோதராவில் முஸ்லிம்கள் மீது இந்துகளின் வெறுப்பை இந்த மனு காட்டுகிறது.
குஜராத்தில் 1991 முதல் நடைமுறையில் உள்ள இந்தச் சட்டம் (பதற்றம் நிறைந்த பகுதிகள் சட்டம்) அது பொருந்தக் கூடிய பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசின் அதாவது மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்குகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சம்பவம் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற பிபிசி குழு மோட்நாத் ரெசிடென்ஸியை அடைந்தது. மோட்நாத் சொசைட்டியின் நுழைவுவாயிலுக்கு அருகில் ராமரின் பெரிய உருவம் நிறுவப்பட்டுள்ளது.
வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் ஆரஞ்சு வண்ண கொடிகள் காணப்படுகின்றன.
குடியிருப்பு வளாகத்தில் நுழைந்தவுடன், சொசைட்டியின் தலைவர் பவன்பாய் ஜோஷியை நாங்கள் சந்தித்தோம். அவர் எங்களுக்கு குடிக்க குளிர்ந்த தண்ணிர் அளித்தார். இந்த சொசைட்டியில் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்படுவதை எதிர்ப்பதன் பின்னணியில் இருக்கும் தங்கள் தரப்பு வாதத்தை அவர் முன்வைத்தார். "ஒட்டுமொத்த குடியியிருப்பும் இந்துக்களுக்குச் சொந்தமாக இருக்கும் போது ஒரு வீடு மட்டும் ஏன் முஸ்லிமுக்கு ஒதுக்கப்பட்டது என்று விசாரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
இது நகர முனிசிபல் கார்ப்பரேஷனின் (விஎம்சி) தவறு என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த விவகாரத்தில் கொள்கைகளின் அடிப்படையில் உரிய முறையில் அந்தப் பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் எந்த திட்டத்திலும் மத அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது என்றும் மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
முழு சம்பவத்தின் மையமாக இருக்கும் முஸ்லிம் பெண்மணியை பிபிசி தொடர்பு கொண்டது.'கடந்த ஆறு ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொள்வதாக,” அவர் தெரிவித்தார். இருப்பினும் அவர் மேலே எதுவும் பேச மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் இந்த முழு சம்பவமும் 'நகரத்தின் பிம்பத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது' என்றும், 'சமூக ஒற்றுமைக்கு எதிரானது' என்றும் தன்னார்வலர்கள் விவரிக்கின்றனர்.
"முஸ்லிமுக்கு வீடு ஒதுக்கப்பட்டது ஏன்?”

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
பிபிசியிடம் பேசிய சொசைட்டி தலைவர் பவன்பாய் ஜோஷி, "முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதை இங்குள்ள 32 குடியிருப்பாளர்கள் மட்டும் அல்ல, சொசைட்டியின் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் ஒருமனதாக எதிர்த்தனர்" என்று கூறினார்.
இருப்பினும் பிபிசியால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
மேலும், விஎம்சி அதிகாரிகள் தொடர்பான முழு விவகாரம் குறித்தும், வீடு ஒதுக்கீடு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுதார்.
“ஹர்னி பகுதி இந்துக்கள் வசிக்கும் அமைதியான பகுதி. சுற்றி நான்கு கிலோமீட்டருக்கு முஸ்லிம் மக்கள் இல்லை. இவ்வாறான பிரதேசத்தில் அரசு நெறிமுறைகளை மனதில் கொள்ளாமலும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமலும் எங்கள் குடியிருப்பில் ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கு 461 வீடுகள் இந்து குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் ஆட்சேபனை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
"இந்த விவகாரத்தில் உண்மையாகவே ஏதோ குறிப்பிடத்தக்க தவறு நடந்துள்ளதாகத் தெரிகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்னி, பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்ட பகுதி என்ற வாதத்தை முன்வைத்தும் இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.
இருப்பினும் இந்த முழு சம்பவம் மற்றும் காலனி குடியிருப்பாளர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த வதோதரா மாநகராட்சிpa;d மலிவு விலை வீட்டு வசதி துறை அதிகாரி நிலேஷ் பர்மர், “இந்த காலனி ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் 2017ம் ஆண்டு நடத்தப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது
இந்தப் பகுதி, ’பதற்றம் நிறைந்த பகுதி’ சட்டத்தின் கீழ் இல்லை. எனவே வீடுகளை ஒதுக்குவதில் எந்தத் தடையும் இருக்கவில்லை,” என்றார்.
அரசின் ஒதுக்கீடுகள் எதுவும் மதத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறிய நிலேஷ் பர்மர்,“ ஒதுக்கீடு, விதிகளின்படி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது ’பதற்றம் நிறைந்த பகுதி’ சட்டம் இங்கு அமலில் உள்ளதால், வருங்கால ஒதுக்கீட்டில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
வதோதரா மாநகராட்சி அதிகாரியின் வாதத்திற்கு எதிராக தன் வாதத்தை முன்வைத்த ஜோஷி,“ அப்போது இந்த சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இப்போது அந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அல்லவா? சில சூழ்நிலைகள் தோன்றியிருக்கலாம் அல்லவா? சமூக விரோதத்தை ஏற்படுத்துவது எங்கள் கோரிக்கையின் நோக்கம் அல்ல,” என்று தெரிவித்தார்.
மோட்நாத் ரெசிடென்சியில் வசிக்கும் வேறு சிலரும் அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் வீடு தர வேண்டும் என்று கோரினர்.
இந்த ஒரு சம்பவத்தால் அப்பகுதியில் 'முஸ்லிம்களின் எண்ணிக்கையும் தலையீடும்' அதிகரிக்கும் என்று ஒருவர் கூறினார்.
முஸ்லிம் பெண்மணியின் உணவுப் பழக்கம் காரணமாக அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம் குடும்பத்தின் மீதான வெறுப்பு அவர்களுடனான உரையாடல்களில் வெளிப்பட்டது. "இன்று ஒரு முஸ்லிம் குடும்பம் உள்ளது. நாளை இரண்டு இருக்கும். பின்னர் நான்காக ஆகும்" என்று ஒருவர் பிபிசியிடம் கூறினார். இதன்மூலம் அவர்கள் இந்துப் பகுதிகளில் தங்கள் எல்லையை விரிவுபடுத்துவார்கள். சொசைட்டியில் இருக்கும் கிளப் ஹவுஸில் தங்கள் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள். எனவே, ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்க்க வேண்டும்,” என்றார் அவர்.
இன்னொருவர், ”முஸ்லிமாக இருப்பதால் அவர் இறைச்சியும் சாப்பிடுவார்,” என்றார்.
இந்தக் குடியிருப்பில் யாராவது இறைச்சி சாப்பிடுவார்களா? என்ற பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த அந்த நபர், "முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை உண்பார்கள். இந்துக்கள் இறைச்சி சாப்பிட்டாலும் அதை உண்ண மாட்டார்கள்,” என்றார்.

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனை மனு குறித்து தனது கருத்தை வெளியிட்ட வதோதராவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி டாக்டர். ஹேமாங் ஜோஷி, இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார். அந்த முஸ்லிம் பெண்ணுக்கு எந்த விதமான சிரமமும் இல்லாத வகையிலும், குடியிருப்பில் உள்ளவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் விதமாகவும் தீர்வு அமையும் என்றார் அவர்.
''பதற்றம் நிறைந்த பகுதி சட்டம் அமலில் இருக்கும் இடத்தில் இது நடக்காது. ஆனால் இந்த செயல்பாட்டில் ஒரு குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வீடு ஒதுக்கீடு பெற்றவரின் ’சொந்த வீட்டுக்கான’ கனவு கலைந்துவிடாமல், சொசைட்டி மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
இந்தசம்பவம் தொடர்பாக அந்த முஸ்லிம் பெண்ணின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார் அவர். ”நாங்கள் கல்வியறிவு பெற்ற குடும்பம். நாங்கள் சமூகத்துடன் வாழ விரும்புகிறோம். ஆனால் சமூகம் இதை விரும்பவில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்..
அந்த முஸ்லிம் பெண் தனது குடியிருப்பில் தங்க வந்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதிலளித்த பவன்பாய், “எங்கள் போராட்டம் மாநகராட்சிக்கு எதிரானது. வீடு என் சகோதரிக்கு சொந்தமானது. அவர்கள் வந்து தங்கலாம். நாங்கள் அவர்களை ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை,” என்றார்.
2018 ஆம் ஆண்டே வீடு ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் அந்த முஸ்லிம் பெண் தனது குடும்பத்துடன் இங்கு வரவேயில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாநகராட்சியில் அந்தப் பெண் செலுத்திய மொத்தப் பராமரிப்பு தொகையான 50,000 ரூபாய் சொசைட்டிக்கு சொந்தமானது என்றும் அந்த வீடு அந்தப் பெண்ணுடையது என்றும் அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பவன்பாய் கூறுகிறார்.
இருப்பினும் பிபிசி அந்த வீட்டிற்குச் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
”இந்த விவகாரத்தில் அமைப்பு தலையிட மறுத்தால், சொசைட்டி மக்கள் அந்தப் பெண்ணை வரவேற்கத் தயார்,” என்று பிபிசியிடம் பேசிய பவன்பாய் மேலும் கூறினார்.
தீர்வுக்கான யோசனை

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
சர்ச்சைக்குரிய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2018 இல் புகார் அளித்த அகமதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேனிஷ் குர்ஷி, “இந்த சம்பவத்தில் மாநில அரசு முஸ்லிம் குடும்பத்திற்கு ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளது. மாநில அரசு ஒருவருக்கு வீடு ஒதுக்கும்போது, அதற்கு மதக் கட்டுப்பாடு எதுவும் இருக்கக் கூடாது. ஏனென்றால் அரசுக்கு மதம் கிடையாது. இருப்பினும் சர்ச்சைக்குரிய சட்டத்தை யாராவது ஏற்றுக்கொண்டால், அது அரசியலமைப்பை மீறுவதாகும்,” என்று பிபிசியிடம் கூறினார்.
வதோதராவைச் சேர்ந்த பேராசிரியர் பரத் மேத்தா, இது போன்ற சம்பவங்கள், 'கலாசார நகரம்’ என்ற நகரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கருதுகிறார்.
சமூகப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான தீர்வை பரிந்துரைக்கும் பரத் மேத்தா, "என் கருத்துப்படி, அந்தக் காலனியில் ஒன்றல்ல பத்து முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். இது தவிர சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடும் இருக்க வேண்டும். ஏனென்றால் இதைச் செய்தால் மட்டுமே அங்கு ’இந்தியா’ உருவாகும். இதுபோன்ற சிறிய சிறிய இந்தியாக்கள் உருவாகும் போது வேறுபாடுகள் மறைந்துவிடும்,” என்று குறிப்பிட்டார்.
“சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறு கலாசாரங்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார் அவர்.
'ஒருபுறம் அதிகரிக்கும் இடைவெளி, மறுபுறம் நல்லிணக்க வாழ்வு முறை'

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
நகரத்தில் மோட்நாத் ரெசிடென்சி போன்ற குடியிருப்புகள் ஒருபுறம் இருந்தாலும், வதோதராவின் கோர்வா பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஹைட்ஸ் போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. அவை 'மத பாகுபாட்டை' கடந்து உலகளாவிய சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த காலனி,அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் 1,560 குடியிருப்புகள் உள்ளன.
இந்துக்களுடன் கூடவே முஸ்லிம்கள், தென்னிந்தியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் இங்கு வாழ்கின்றனர்.
இங்கு வசிக்கும் நம்ரதா பர்மார், தன் குழந்தைகள் இந்த சொசைட்டியில் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி வாழ்ந்தால்தான் கலாசாரம் செழிக்கும். இதைத்தான் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கிறோம். உண்மை என்னவென்றால் பாட புத்தகத்தில் எழுதப்பட்டபடி நாங்கள் இங்கே வாழ்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
ஹாதிகானா என்பது வதோதராவின் ஒரு பகுதி. இங்கு அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இங்கு வசிக்கும் இஸ்மாயில் படேலும் இதை உறுதிப்படுத்துகிறார்.
”எங்கள் பகுதியிலும் சில இடங்களில் இந்துக்கள் வாழ்ந்து வியாபாரம் செய்கிறார்கள். நாங்கள் ஒருவரையொருவர் மிகவும் அன்பாக நடத்துகிறோம். இங்கு இந்து வியாபாரிகளும் உள்ளனர். அவர்களது கடை உரிமையாளர்கள் முஸ்லிம்கள். ஒவ்வொருவரும் மற்றவரின் மதத்தை மதித்து அன்புடனும் மரியாதையுடனும் வாழ்கிறார்கள். இதுவே ஒரு நாட்டை உருவாக்குகிறது,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மோட்நாத் சொசைட்டியில் நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "முஸ்லிம் பெண்ணுக்கு இந்து காலனியில் வீடு கிடைத்துள்ளது. சொசைட்டி அதை புரிந்துகொண்டு அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் ஒருவரையொருவர் மனம் திறந்து வரவேற்க வேண்டும். முஸ்லிம் சமூகமும் இவ்வாறான மனப்பான்மையை தவிர்க்க வேண்டும்,” என்றார்.
பதற்றம் நிறைந்த பகுதிகள் தடைச்சட்டம் முஸ்லிம்களை மேலும் ஓரங்கட்டுகிறதா?

பட மூலாதாரம், PAVAN JAISWAL/BBC
மோட்நாத் குடியிருப்பு தொடர்பான சர்ச்சையின் மையத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகள் சட்டம் உள்ளது. இந்த சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டதில் இருந்து தொடர்ந்து விவாதத்திலும் சர்ச்சையிலும் உள்ளது.
இந்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் மேலும் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வழக்கறிஞர் டேனிஷ் குரேஷி இந்த சட்டத்தை ஒரு 'சதி' என்கிறார். 'முஸ்லிம்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ வற்புறுத்துவது' தவிர இந்தச் சட்டம் 'சமூகப் பாகுபாட்டையும் அதிகரிக்கிறது' என்று பரத் மேத்தா குறிப்பிட்டார்.
இந்தச் சட்டம் முஸ்லிம்கள் சொத்துகளை வாங்குவதிலும், விற்பதிலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வதோதராவில் வசிக்கும் அமர் ராணா இந்த சட்டத்தால் பிரச்சனைகளை எதிர்கொண்டார்.
“என்னுடைய பெயரைப் பார்த்து நான் முஸ்லிம் அல்ல என்று மக்கள் கருதுகிறார்கள். ஒரு வீட்டை பார்த்துக் கொண்டிருக்கும் போது இதேபோன்ற ஒன்று நடந்தது. எனக்கு அந்த வீடு பிடித்திருந்தது. ஆனால் புரோக்கர் என்னை இந்து என்று கூறி வீட்டைக் காட்டினார். இங்கு பதற்றம் நிறைந்த பகுதி சட்டம் உள்ளதே. நீங்கள் இஸ்லாமியருக்கு விட்டை விற்பீர்களா என்று நான் கேட்டேன். அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்,” என்று நகரின் ஃபதேகஞ்ச் பகுதியில் வசிக்கும் அமர் ராணா கூறினார்.
இது தனக்கு பலமுறை நடந்திருப்பதாக அமர் கூறுகிறார்.
இதுமட்டுமின்றி இந்த சட்டம் காரணமாக தற்போதுள்ள வாடகைகாரர்களுக்கு தன் சொத்துக்களை விற்கவும் முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
"இந்த சட்டத்தால் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான சொத்து விற்பனை மிகவும் கடினமாகிவிட்டது" என்கிறார் அவர்.
சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தினால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏனைய மக்களும் சிரமங்களை எதிர்கொள்வதாக அமர் குறிப்பிட்டார்.
“பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த சட்டத்தால் சிரமப்படுகிறார்கள். நம் நாட்டிலும், நம் பகுதியிலும் வீடு வாங்குவது கடினமாகவும், விலை உயர்ந்ததாகவும் மாறிவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். நான் இந்த நாட்டில் எங்கு வாழ விரும்பினாலும் அங்கு வீடு வாங்க முடியாது. இதைவிட சோகம் என்ன இருக்க முடியும்? இதை அரசு பரிசீலிக்க வேண்டும். மக்களின் இதயங்களில் கசப்பை ஏற்படுத்தும் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். அத்தகைய சட்டம் நீண்ட காலத்திற்கு அமலில் இருந்தால் அது முழு சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்," என்று அமர் ராணா குறிப்பிட்டார்.
“ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களுக்கே இழப்பு அதிகம். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்கள் வசிக்கும் பகுதி குறைவாகவே உள்ளது. இந்த சட்டத்தால் அந்த பகுதியில் விலை அதிகரித்துள்ளது. முஸ்லிம் பகுதிகளில் சதுர அடி அல்லது மீட்டருக்கான விலை அருகிலுள்ள இந்து பகுதிகளை விட அதிகமாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த சட்டம் காரணமாக முஸ்லிம் சமூகம் நேரடியாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசுவதற்காக பிபிசி குஜராத்தி, வதோதரா மாவட்ட ஆட்சியர் பிஜல் ஷாவை அவரது அலுவலகத்தில் சந்திக்க முயற்சித்தது. இது தவிர அவரது கைபேசிக்கு அழைப்புகளை செய்தும், செய்திகளை அனுப்பியும், மின்னஞ்சல் அனுப்பியும் அவரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கலெக்டருக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிபிசி பதில்களை பெற்றவுடன் இந்த விவரங்கள் புதுப்பிக்கப்படும்.
பதற்றம் நிறைந்த பகுதிகள் தடைச்சட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
பதற்றம் நிறைந்த பகுதிகள் தடைச்சட்டம் 1986 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1991 இல் சட்டமாக்கப்பட்டது.
'அசையா சொத்துக்கள் விற்பனைத் தடை மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளிலிருந்து குத்தகைதாரர்களை வெளியேற்றுவதிலிருந்து பாதுகாப்பு’ ஆகியவை இந்த சட்டத்தில் அடங்கும். இதன் காரணமாக பாரபட்சம் பற்றிய புகார்கள் அதிகரித்தன.
இந்த சட்டத்தின்படி, பதற்றம் நிறைந்தாக அறிவிக்கப்பட்ட இடங்களில் சொத்துக்களை விற்கும் முன் கலெக்டரிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
இந்த சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேவைக்கேற்ப புதிய பகுதிகள் அதில் சேர்க்கப்படுகின்றன.
இந்த சட்டத்தைப் பற்றிப் பேசிய வழக்கறிஞர் ஷம்ஷத் பதான், ”1986-87 இல் அகமதாபாத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு இந்துக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் பின்னணியில் இருந்தது,” என்று தெரிவித்தார்.
"திடீரென்று எந்த சொத்தும் வாங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, விற்பனை ஆவணங்கள் மற்றும் காவல்துறையின் கருத்துகளின் சரிபார்ப்பு அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் அளிக்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
இந்தச் சட்டத்தின் கீழ் கலெக்டருக்கு சொத்தை பறிமுதல் செய்யும் உரிமையும் உண்டு. பதற்றம் நிறைந்த பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி 500 மீட்டர் வரை இந்த சட்டம் பொருந்தும்.
2019 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த குஜராத் அரசு, அதை மீறினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற பிரிவைக் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2020 இல் குறிந்த சட்டம் பற்றிய உரையாடலில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி, “ஒரு இந்து முஸ்லிமுக்கு சொத்தை விற்பது சரியல்ல. ஒரு முஸ்லிம் ஒரு இந்துவுக்கு சொத்துக்களை விற்பதும் ஏற்புடையதல்ல. அவர்கள் (முஸ்லிம்கள்) தங்கள் சொந்த பகுதியில் மட்டுமே சொத்து வாங்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக கலவரம் நடந்த பகுதிகளில் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்,” என்று கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












