தலாய் லாமாவை சந்திக்க இந்தியா வந்துள்ள அமெரிக்க குழுவுக்கு சீனா எச்சரிக்கை - என்ன நடக்கிறது?

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திப்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் ஏழு பேர் கொண்ட இந்தக் குழு வியாழக்கிழமை (ஜூன் 20) புத்த மதகுரு தலாய் லாமாவைச் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, ​​சீனா-திபெத் பிரச்னை தொடர்பாகச் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஆனால், இந்தச் சந்திப்பிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சீனா, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கும் உறுதிமொழியை அமெரிக்கா மதிக்கவில்லை என்றால், சீனா 'கடுமையான நடவடிக்கைகளை' மேற்கொள்ளும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சீனா எச்சரிக்கை அறிக்கை

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி

சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லின் சியென், “14-வது தலாய் லாமா முழுமையான மதம் சார்ந்த நபர் அல்ல, மாறாக மதம் என்ற போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபடும் நாடு கடத்தப்பட்ட அரசியல் பிரமுகர் என்பது அனைவரும் அறிந்ததே,” என்றார்.

மேலும், குறிப்பாக, சீனா-திபெத் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் லின்.

"இந்தச் சட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திடக் கூடாது," என்றும் லின் கூறினார்.

"சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றும் கூறியுள்ளார் அவர்.

இந்தியாவிலுள்ள சீனத் தூதரகமும் இது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “தலாய் லாமா குழுவின் சீன-எதிர்ப்பு பிரிவினைவாதத் தன்மையை அமெரிக்கத் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், ஜிசாங் (திபெத்தைக் குறிக்கச் சீனா பயன்படுத்தும் பெயர்) பிரச்னையில் அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழிகளை மதிக்கவும், உலகிற்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பாமல் இருப்பதை உறுதி படுத்தவும் வேண்டுகிறோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்."

சீனா கூறியது என்ன?

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜிசாங் எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. ஜிசாங் முழுக்க முழுக்க சீனாவின் உள்விவகாரம். அதில் வெளியில் இருந்து எந்த தலையீடும் அனுமதிக்கப்படாது. சீனாவைக் கட்டுப்படுத்தும் மற்றும் அடக்கும் நோக்கில் எந்த ஒரு தனி நபரும், எந்த சக்தியும் ஜிசாங்கை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது. அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது,” என்றார்.

“சீனாவின் ஒரு பகுதியாக ஜிசாங்கை அங்கீகரிப்பதுடன், 'ஜிசாங் சுதந்திரத்தை' ஆதரிக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்,” என்றார்.

தற்போது தலாய் லாமாவைச் சந்திக்க வந்துள்ள இந்தக் குழுவில் அமெரிக்கக் காங்கிரஸின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் டெக்சாஸின் குடியரசுக் கட்சியின் தலைவரும், அமெரிக்கக் காங்கிரஸின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் ஆகியோர் உள்ளனர்.

'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை, இந்த நடவடிக்கை சீனாவுடனான தனது உறவைச் சீராக்க ஜோ பைடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பின்னுக்குத் தள்ளும் என்று எழுதியுள்ளது.

2022-ஆம் ஆண்டில், நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் செய்தார், அவரது வருகைக்குப் பிறகு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து மட்டங்களிலுமான ஒத்துழைப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நான்சி பெலோசி நாடுகடந்த திபெத் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று உரையாற்றினார். இந்த உரை குறித்த வீடியோ பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அவர் தனது உரையில் என்ன பேசினார் என்பது குறித்து வெளியிடப்படவில்லை.

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார் மைக்கேல் மெக்கால்.

சீனா-திபெத் பிரச்னை மசோதா குறித்த விவாதம்

தலாய் லாமாவைச் சந்திக்கும் இந்தத் தூதுக்குழு, ஜோ பைடன் விரைவில் கையெழுத்திட உள்ள மசோதாவைப் பற்றி விவாதிக்க உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் திபெத்துடன் நடந்து வரும் சர்ச்சையைத் தீர்க்க சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதாகும்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை சமீபத்தில், 'திபெத்-சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்ட மசோதா’ ஒன்றை நிறைவேற்றியது. இந்த மசோதா ஏற்கனவே அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, திபெத்தின் வரலாறு, மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து சீனா பரப்பும் 'தவறான தகவல்களை' எதிர்த்துப் போராட அமெரிக்கா நிதி வழங்கும்.

இந்த மசோதாவின் மூலம் திபெத் தனக்குச் சொந்தமானது என்று உரிமைகோரும் சீனாவின் வாதம் எதிர்க்கப்படும். மேலும், திபெத் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் வகையில், 2010-இல் இருந்து முடங்கிக் கிடக்கும் திபெத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதனுடன், திபெத்திய மக்களின் வரலாற்று, கலாச்சார, மத மற்றும் மொழியியல் அடையாளம் தொடர்பான பிரச்னைகளை சீனா தீர்க்க வேண்டும்.

தலாய் லாமாவைச் சந்திப்பது குறித்து பேசியுள்ள மைக்கேல் மெக்கால், “நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திபெத் மக்களுடன் அமெரிக்கா நிற்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார்.

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தரம்சாலா வந்தடைந்த அமெரிக்கக் குழு

இந்தியாவில் என்ன கருத்து நிலவுகிறது?

இது ஒருபுறமிருக்க தலாய் லாமாவை ஒரு அரசியல் பிரமுகர் என்றும், மதத் தலைவர் அல்ல என்றும் சீனா கூறியதற்கு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள அவர், “தலாய் லாமா ஒரு ஆன்மீகவாதி. திபெத்தின் நாகரீக அடையாளத்தை அழிக்கும் வகையில், திபெத்தின் மக்கள்தொகை, ராணுவ ஆக்கிரமிப்பு, திபெத்தின் நுட்பமான சூழலியல் ஆகியவற்றை மாற்றியமைப்பதற்காக ஹான் மக்களைக் கொண்டு வந்த போதிலும், அதைத் தடுக்க திபெத்திய மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை,” என்றார்.

“திபெத்தின் சுயாட்சியை சீனா ஏற்றுக்கொண்டால், சீனாவுடன் இணைய அவர் ஒப்புக்கொண்டார். சீனா இன்று அமைதியை உருவாக்கும் ஒரு நபராக தன்னைக் காட்டிக்கொள்கிறது. அப்படியானால், ஏன் அந்தக் கூற்றை உண்மையக்குவதற்காக தலாய் லாமாவுடன் சுமூகமாகி, பின்னர் அதன் வழியாக இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தக்கூடாது?” என்றார்.

சர்வதேச உறவுகள் குறித்து எழுதி வரும் ஜோராவர் தௌலத் சிங், நான்சி பெலோசியின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“புவிசார் அரசியல் பார்வையில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இருவருக்கும் இடையிலான போட்டி மிக வலுவானதாக உள்ளது. ஆனால் இப்போது அதிலிருந்து சீனாவின் கவனத்தைத் திசை திருப்பி, அதன் சொந்த நிலத்தின் தென்மேற்கு பகுதியின் மீது கொண்டு வருவதால் என்ன பயன்?” என்றார்.

“அதுவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் மூலோபாயக் கூட்டாளிகள் இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் பிரச்னை ஆகியவை நடந்துகொண்டிருக்கும் போது, இது நடக்கிறது,” என்றார்.

சீனா-திபெத் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மங்கோலிய மன்னர் குப்லா கான் யுவான் வம்சத்தை நிறுவி தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார்.

சீனா-திபெத் பிரச்னையின் வரலாறு

சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையேயான சர்ச்சை, திபெத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பானது. 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து திபெத் தனது ஒரு பகுதியாக இருந்து வருவதாக சீனா கூறுகிறது.

ஆனால் திபெத்தியர்கள், பல நூற்றாண்டுகளாகவே திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்து வருவதாகவும், அதன் மீது சீனாவுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

மங்கோலிய மன்னர் குப்லா கான், யுவான் வம்சத்தை நிறுவி, தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில், சீனாவின் சிங் வம்சம் திபெத்துடன் உறவுகளை ஏற்படுத்தியது. 260 ஆண்டுகள் உறவுக்குப் பிறகு, சிங் ராணுவம் திபெத்தைக் கைப்பற்றியது.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் அவரது ஆட்சி திபெத்தியர்களால் வெளியேற்றப்பட்டது. 1912-இல் பதின்மூன்றாவது தலாய் லாமா திபெத்தின் சுதந்திரத்தை அறிவித்தார்.

பின்னர் 1951-இல், சீன ராணுவம் மீண்டும் திபெத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. திபெத்தின் இறையாண்மை சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூறி திபெத்திய தூதுக்குழுவை நிர்பந்தித்தது. 1959-ஆம் ஆண்டு இந்தியா வந்த தலாய் லாமா, திபெத்தின் சுயாட்சிக்காகப் போராடி வருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)