தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு - முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கலா?

- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் இயங்கிவந்த ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்யப்பட வேண்டும் என, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது. அதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முடிவடைந்தது. இதனால், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி இயக்கப்படும் பேருந்துகள் முடக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
வெளிமாநிலத்தில் ஆம்னி பேருந்துகளைப் பதிவு செய்வதால் தங்களுக்கு வரி, வருவாய் இழப்பு ஏற்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை விட தாங்கள் அதிகமாக வரி செலுத்துவதாக கூறுகின்றனர் பேருந்து உரிமையாளர்கள்.
முன்னதாக, வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஆம்னி பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா வாகனங்களும் தமிழ்நாட்டில் ஜூன் 14-க்குள் மறுபதிவு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து ஆணையர் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பயணிகளுக்கு என்ன அறிவுறுத்தல்?
இதற்கு முன்பு மறுபதிவு செய்வதற்கான காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
ஜூன் 14-க்குப் பின் பக்ரீத் பண்டிகையால் தொடர் விடுமுறை காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், ஜூன் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இன்னும் சுமார் 540 ஆம்னி பேருந்துகள் மறுபதிவு செய்யப்படவில்லை.
வெளிமாநில பதிவெண் கொண்ட இந்த ஆம்னி பேருந்துகள் இனி இயங்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என, தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தால் அதனை ரத்து செய்யுமாறு பயணிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு
இதுதொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள், குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (AITP - ஏ.ஐ.டி.பி) வழங்க அதிகாரம் அளிக்கிறது. ஆனால், சுற்றுலா காரணங்களுக்காக அனுமதி பெற்ற வாகனங்கள் அனுமதிக்குட்பட்டு செயல்படாமல் வேறு வகையில் செயல்படுகின்றன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலா காரணங்களுக்காக மட்டுமல்லாமல், அந்த ஆம்னி பேருந்துகள் பயணிகள் பேருந்தாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனமாக இயக்காமல், வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கிவிடுதல், ஏ.ஐ.டி.பி நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்குக் கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மறுபதிவு செய்யப்படாத ஆம்னி பேருந்துகளின் பட்டியலையும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உத்தரவை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் முடக்கப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அதிகமாக வரி செலுத்துகிறோம்'
தமிழ்நாட்டில் மறுபதிவு செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கான வசதிகளைத் தமிழக அரசு செய்துதர வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட, ஏ.ஐ.டி.பி உரிமம் வைத்துள்ள ஆம்னி பேருந்துகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சாலை வரியை அதிகமாக செலுத்துவதாக கூறுகிறார், அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெயம் பாண்டியன்.
“ஆம்னி பேருந்துகளுக்குத் தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணம் ரூ.4,000 ஆகும். உதாரணத்திற்கு, கர்நாடகாவை எடுத்துக்கொண்டால் அங்கு, கட்டணம் ரூ. 3,000. அதேபோன்று, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் ஆம்னி பேருந்துகள் காலாண்டுக்கு சாலை வரியாக ரூ.3,000 (இருக்கை பேருந்து), ரூ.4,000 (படுக்கை பேருந்து) செலுத்த வேண்டும். அதுவே, வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்தாக இருந்தால் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.5,500 செலுத்த வேண்டும். அப்படியென்றால், நாங்கள் அதிகமாகவே சாலை வரி செலுத்துகிறோம்,” என்கிறார்.
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு வாகன பதிவெண் பெற ரூ. 2,200 செலுத்த வேண்டும் எனக்கூறும் அவர், சில சமயம் இடைத்தரகர்களால் பதிவெண் பெறுவதற்கு மொத்தமாக ரூ10,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக குறை கூறுகிறார்.
தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டு வரை படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு உரிமம் வழங்கவில்லை என்பதாலேயே, பெரும்பாலானோர் வெளி மாநிலங்களில் அவற்றை பதிவு செய்ததாக கூறுகிறார் ஜெயம் பாண்டியன்.
“மற்ற மாநிலங்களில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 2015-2016 ஆண்டிலேயே உரிமம் வழங்கினர். தமிழ்நாட்டில் ஓட்டும் வாகனங்களை இங்கேயே பதிவு செய்வதுதான் நல்லது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால் அதற்கான வசதிகளை செய்து தர வேண்டும்,” என்றார்.
காவிரி விவகாரத்தால், கர்நாடகா மாநிலத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அவ்வப்போது பிரச்னை ஏற்படும் என்பதாலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்வதில்லை என அவர் தெரிவித்தார்.
பயணிகளுக்குச் சிக்கலா?
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், “பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்குத் தேவையான அளவுக்கு ஆம்னி பேருந்துகள் உள்ளன. தடையை மீறிப் பேருந்துகளை இயக்கும் எண்ணம் இதுவரை இல்லை,'' என்றார்.
தமிழகத்தில் பேருந்துகளை பதிவு செய்ய ஒருமாத காலம் ஆவதாகவும் அவர் புகார் கூறுகிறார்.
கேரளா போன்ற மாநிலங்களில் தட்கல் முறையில் ஒரு நாளிலேயே பதிவு செய்து பேருந்துகளை ஓட்ட முடிவது போன்று தமிழகத்திலும் செய்துதர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் பட்டியலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இங்கு சென்று அவற்றின் விவரங்களை பயணிகள் அறியலாம்.
தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இணையதளத்திலேயே இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சிக்கலும் இல்லை என்றார், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெயம் பாண்டியன்.

அமைச்சர் சொல்வது என்ன?
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை மறுபதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்படுமா என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினோம்.
அவர், “நான்கு-ஐந்து மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்து ஆணையர் கூட்டம் நடத்தி இதனைச் சொல்லிவிட்டார். அதன்பின், இருமுறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டோம். அதன்பின், தேர்தல் காரணமாக அந்த நடைமுறை நின்றுவிட்டது. தேர்தல் முடிந்தபிறகும் பக்ரீத் விடுமுறை என்பதால் கூடுதல் காலம் கேட்டனர். அதையும் கொடுத்தோம். ஒரே நாளில் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை,” என்றார்.
நாகலாந்து, அசாம் போன்ற மாநில பதிவெண் வாகனங்களாலேயே இத்தகைய சிக்கல் உள்ளதாக அவர் கூறுகிறார்.
வாகனத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்யாததால் அரசு வரிவருவாய் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மேலும், வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழையும் (FC) வேறு மாநிலத்தில் பெறுவதாக உரிமையாளர்கள் கூறுவதில் பல சந்தேகங்கள் உண்டு என்றும் இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து உரிமையாளர்கள் போக்குவரத்து ஆணையரிடம் கூறினால் நிவர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதிகாரிகளுக்கும் இதுகுறித்து வழிகாட்டுதல்களை ஆணையர் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












