ரேபரேலியில் ராகுல், வயநாட்டில் பிரியங்கா - உத்தரபிரதேசம், தென் மாநிலங்களில் காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் களத்தில் இறங்க உள்ளார்
    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரியங்கா காந்தி எப்போது தேர்தல் அரசியலுக்கு வருவார் என்று தசாப்தங்களாக காத்திருப்பு இருந்தது. கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்புடன் அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஜூன் 4 ஆம் தேதியன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது அவர் ஒரு தொகுதியை விட வேண்டியிருக்கும் என்பது தெளிவானது.

ராகுல் ரேபரேலி தொகுதியில் இருந்து எம்பியாக இருப்பார் என்றும், வயநாட்டை எம்.பி. பதவியை ராஜினா செய்வார் என்றும் திங்கட்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்தார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.

கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்ட பிரியங்கா காந்தி, "என் சகோதரர் இந்தத் தொகுதியின் எம்.பியாக இல்லாத குறையை வயநாடு மக்கள் உணரவே விடமாட்டேன்," என்று கூறினார். ரேபரேலியிலும் ஏறக்குறைய இதேபோன்ற அறிக்கையை பிரியங்கா வெளியிட்டிருந்தார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தியை களம் இறக்கும் காங்கிரஸின் முடிவை தேசிய அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் ஆய்வாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியை உன்னிப்பாக கவனித்து வரும் செய்தியாளர் ஜாவேத் அன்சாரி, பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவது ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறினார்.

"அவர் எப்போது தேர்தலில் போட்டியிடுவார் என்ற கேள்வியே இருந்தது. போட்டியிடுவாரா என்ற கேள்வி இருக்கவே இல்லை.

அமேதி மற்றும் ரேபரேலியில் அண்ணனும், தங்கையும் போட்டியிடுவார்கள் என்று சொல்லப்பட்டதைப் போல நடந்திருந்தால் அது பெரிய விஷயமாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலின் போது ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா முனைப்புடன் பிரசாரம் செய்தார். இதன் காரணமாக ராகுல் நாடு முழுவதும் பிரசாரம் செய்ய முடிந்தது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரியங்காவின் தலைமைப் பண்பு

உத்தரபிரதேசத்தில் 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பொருட்டு 2020 இல் அம்மாநிலத்தின் முழுப் பொறுப்பையும் பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் ஒப்படைத்தது. இதன்படி 'லட்கி ஹூன், லட் சக்தி ஹூன் '(நான் பெண், போட்டியிடும் திறமை எனக்கு உண்டு) என்று கூறி பெண்களை மனதில் வைத்து அவர் தனது பணியை தொடங்கினார். இதற்காக பலரும் அவரை பாராட்டினாலும் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

2022 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. இரண்டு இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.

இது தவிர பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்ட குழப்பத்தை பிரியங்கா கையாண்ட விதமும் பல அரசியல் நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டது.

அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி, சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் ஆக்கும் முடிவிற்குப் பின்னால் பிரியங்கா காந்தி இருந்ததாக வல்லுநர்கள் கூறினர். இந்த முடிவு காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

பிரியங்கா காந்தி ராஜஸ்தானிலும் இதேபோன்ற செயலை செய்துள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சச்சின் பைலட் எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் கட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டது.

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடாதது ஏன்?

பிரியங்கா காந்திக்கு அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகள் பற்றிய புரிதலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுல் காந்தி வயநாட்டை தன்னுடன் ஏன் வைத்திருக்கவில்லை, பிரியங்கா ஏன் ரேபரேலியில் போட்டியிடவில்லை?

"ரேபரேலியில் பிரியங்காவின் அனுபவத்தைப் பார்க்கும் போது, அவரை இங்கே போட்டியிட வைத்திருக்க வேண்டும் என்றும் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தக்க வைத்திருக்க வேண்டும் என்றும் பலரும் நினைக்கலாம். ஆனால் ராகுல் காந்திதான் கட்சியின் முகம் என்றும், அதனால் அவர் உத்தரபிரதேசத்தை விட்டு நகர முடியாது என்றும் கட்சி தெளிவான செய்தியை அளித்துள்ளது. குறிப்பாக மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்ட இந்த நேரத்தில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜாவேத் அன்சாரி கூறுகிறார்.

அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நீரஜா செளத்ரியும் ஜாவேத் அன்சாரியுடன் உடன்படுகிறார்."இது காங்கிரஸ் கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட முடிவு என்று நான் நினைக்கிறேன். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸின் செயல்பாடு மற்றும் பாஜகவுக்கு ஏற்பட்ட இழப்பையும் பார்க்கும் போது உத்தரபிரதேசத்துக்கு காங்கிரஸ் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அக்கட்சி தெரிவிக்க விரும்புகிறது,” என்று நீரஜா குறிப்பிட்டார்.

"இது தவிர, அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி இடையேயான தெளிவான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. இரு தரப்பினரும் தங்கள் பரஸ்பர புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பால் பயனடைந்துள்ளனர். ஆனால் பிரியங்கா காந்தி ரேபரேலியில் அதிக முனைப்புடன் இருந்ததை பார்க்கும் போது ராகுல் வயநாட்டை தன்னிடம் வைத்துக் கொள்வார் என்றே அனைவரும் நினைத்தனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த முறை மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2019 இல் ரேபரேலி தொகுதி மட்டுமே காங்கிரஸுக்கு கிடைத்தது. சோனியா காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 2014 இல் உத்தரபிரதேசத்தில் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த முறை ராகுல் காந்தி ரேபரேலியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாட்டில் 3 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவதன் அர்த்தம் என்ன? வயநாடு தேர்தலில் பிரியங்கா வெற்றி பெறுவது மிகவும் எளிதானதா?

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

வயநாடு மக்கள் பிரியங்காவை ஆதரிப்பார்களா?

“பிரியங்கா விஷயத்தில் வயநாடு மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்து பல நாட்கள் வரையிலும் ரேபரேலியில் போட்டியிடுவது பற்றி ராகுல் கூறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் ராகுலின் முடிவை வயநாடு மக்கள் துரோகமாக எடுத்துக் கொள்கிறார்களா அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். இருப்பினும் பிரியங்கா இப்படி நடக்க அனுமதிக்க மாட்டார் என்றும் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்றுவதில் வெற்றி பெறுவார் என்றும் நான் கருதுகிறேன்,” என்று நீரஜா செளத்ரி குறிப்பிட்டார்.

பிரியங்கா காந்தியின் ஆளுமை குறித்து கருத்து தெரிவித்த நீரஜா செளத்ரி, “பிரியங்கா காந்தி மிகவும் யதார்த்தமானவர் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது பிரியங்கா காந்தியின் பேச்சு மொழி எளிமையானது. ஆனால் இது ராகுலின் ஐந்தாவது மக்களவைத் தேர்தல் என்பதையும் பிரியங்கா காந்திக்கு இதுதான் முதல் தேர்தல் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது,” என்று கூறினார்

“ராகுல் காந்திதான் எதிர்காலத் தலைவர் என்பதில் காங்கிரஸ் மிகத் தெளிவாக உள்ளது. 18வது மக்களவையில் பிரியங்கா நுழைவது அவருக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக அவரது தாயார் சோனியா காந்தி மாநிலங்களவையில் இருக்கும் போது. நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை மக்கள் மிகவும் கூர்ந்து கவனிப்பார்கள். நாடாளுமன்றத்தில் அவர் தனது சகோதரரின் நிழலுக்கு பின்னால்தான் இருப்பாரா என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்,” என்றார் அவர்.

"ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொள்வார் என்பது முடிவான விஷயம்,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மா கூறினார்.

ராகுல் ரேபரேலியை தக்க வைத்துக்கொள்வதை உத்தரபிரதேசத்தில் காங்கிரஸின் மறுமலர்ச்சியுடன் தொடர்புபடுத்தி ஷர்மா பார்க்கிறார்.

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

ராகுல்-அகிலேஷ் ஜோடி

“2014 க்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி தான் விரும்பியதைச் செய்தது. தற்போது அந்த மாநிலத்தில் இந்த நிலை மாறிவிட்டது. காங்கிரஸ் இங்கு திடமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு உ.பி.யில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு உயர் சாதியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது,” என்று வினோத் ஷர்மா குறிப்பிட்டார்.

ஆனால் படிப்படியாக காங்கிரஸ் தனது பலத்தை இழக்கத் தொடங்கியது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பலம் பெற்றன. பின்னர் காங்கிரஸின் இருப்பே கேள்விக்குறியானது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உத்தரபிரதேசத்தில் மூழ்கும் காங்கிரஸின் படகுக்கு ஒரு துடுப்பு கிடைத்திருப்பது போல் தெரிகிறது.

''இப்போது காங்கிரஸ் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதற்கு உ.பி.யில் சமூக சமன்பாட்டை காங்கிரஸ் தயார் செய்ய வேண்டும். இந்த பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் எல்லா மாவட்டங்களிலும், மாநிலத்திலும், அதன் பிறகு நாடு முழுவதும் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். காங்கிரஸின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெற்று வலுப்பெற வாய்ப்புள்ளது.”

“காங்கிரஸின் இந்த பலம் சமாஜ்வாதி கட்சியுடன் நம்பகமான மற்றும் உறுதியான கூட்டணிக்கு உத்தரவாதம் அளிக்கும். சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே உள்ள நல்ல புரிதல், தலைமை மட்டத்தில் மட்டுமில்லாமல் வாக்காளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.”

எனவே பிரியங்கா காந்தி தனது தேர்தல் இன்னிங்ஸை தொடங்கவிருக்கும் நேரத்தில், காந்தி குடும்பத்தின் அரசியல் பங்கு பற்றிய பேச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஜூன் 11 ஆம் தேதி அமைச்சரவை உருவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் ’குடும்ப அரசியல்’ என்ற பேச்சை குறிவைத்தார்.

"தலைமுறை தலைமுறையாக போராட்டம், சேவை மற்றும் தியாகத்தின் பாரம்பரியத்தை ’வாரிசு அரசியல்’ என்று அழைப்பவர்கள் இப்போது தங்கள் 'அரச குடும்பத்திற்கு' அதிகாரத்தை விநியோகிக்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் நரேந்திர மோதி,” என்று அவர் எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) எழுதினார்.

பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா,” காங்கிரஸில் வாரிசு அரசியல் எந்த ஆழத்திற்கு சென்றுள்ளது என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார். .

"தாயார் மாநிலங்களவையில்.. மகன் மக்களவையில்,.. இப்போது கட்சியின் இந்த முடிவு… காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல, ஒரு குடும்பம் நடத்தும் நிறுவனம் என்பதை இது காட்டுகிறது." என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் வினோத் ஷர்மா இதற்கு உடன்படவில்லை.

காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

ரேபரேலியில் காந்தி-நேரு குடும்பத்தின் வேர்களை குறிப்பிட்ட வினோத் ஷர்மா, "காந்தி குடும்பத்துடனான ரேபரேலியின் தொடர்பு, பெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை நீண்டுள்ளது. எனவே ரேபரேலி தொகுதி எம்.பியாக ராகுல் நீடிப்பார் என்பது முடிவான விஷயம். சிலர் வாரிசு அரசியல் என்ற கேள்வியை எழுப்புவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது ஜனநாயக வாரிசு அரசியல். இங்கே வாக்காளர்களின் உத்தரவு அல்லது ஒப்புதல் தேவைப்படுகிறது. எனவே இத்தகைய விமர்சனத்திற்கு அதிக வலு இருப்பதாகத் தெரியவில்லை,” என்று கூறினார்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் காந்தி குடும்பம் தென்னிந்தியாவுக்காக ரேபரேலி தொகுதியை கைவிட்டது. "இந்திரா காந்தி 1980 இல் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். ஆந்திராவின் மேடக் தொகுதியை தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு ரேபரேலியை விட்டுவிட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து சோனியா காந்தி ரேபரேலிக்கு வந்தார், இப்போது ராகுல் காந்தி,” என்று நீரஜா செளத்ரி குறிப்பிட்டார்.

இனி வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது நடக்கும், அங்குள்ள வாக்காளர்கள் யாரை எம்பியாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)