‘ராகுல் மேல் வருத்தம் தான், ஆனால்…’ - வயநாடு தொகுதி மக்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இவற்றில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் திங்கட்கிழமை (ஜூன் 17) அறிவித்தார்.
ரேபரேலியைத் தேர்ந்தெடுத்த பிறகு வயநாடு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அத்தொகுதியில் பிரியாங்கா காந்தி போட்டியிடப்போவதாகச் சொல்லி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக தனது முதல் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து வயநாடு தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அவர்களிடம் பேசியது.
அவர்களது கருத்துக்கள் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வயநாடு மக்களவைத் தொகுதி
கேரள மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. வயநாடு நாடாளுமன்ற தொகுதி 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
இந்த 7 சட்டமன்ற தொகுதிகளும் மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் திருவம்பாடி சட்டமன்ற தொகுதியும். மலப்புரம் மாவட்டத்தில் ஏறநாடு, வண்டூர், நிலம்பூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள். வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன.
2009-ஆம் ஆண்டு வயநாடு நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டும், 2014-ஆம் ஆண்டும் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு முறையும் சானவாஸ் என்பவர் எம்.பி ஆக இருந்தார்.
2019-ஆம் ஆண்டு ராகுல் காந்தி முதல்முறையாக வயநாட்டில் போட்டியிட்டார். அதே சமயத்தில் உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் போட்டியிட்டார். அமேதியில் தோற்றாலும், வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், மானந்தவாடி மற்றும் சுல்தான் புத்தேரி ஆகிய இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கான தனி தொகுதிகளாகும், வண்டூர் தொகுதி எஸ்.சி பிரிவினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஏழு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியான யூ.டி.எஃப் முன்னணியும், மூன்று தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றன.
ஆனால் நடந்து முடிந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி சுமார் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
பிரியங்காவின் அரசியல் பிரவேசம்
2004-ஆம் ஆண்டு ரேபரேலியில் போட்டியிட்ட சோனியா காந்தியின் பிரசார மேலாளராக, பிரியங்கா காந்தி தனது அரசியல் பயணத்தைத் துவங்கினார்.
அவர், தனது சகோதரர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். 2017-ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலத்தில் அனைத்து அரசியல் பிரசாரங்களிலும் ராகுல் காந்தி ஈடுபட்டபோது, அமேதி மற்றும் ரேபரேலி உட்பட சுமார் பத்து தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி இருந்தார்.
இருந்தாலும், அரசியல் வெளிச்சத்திலிருந்து அவர் விலகி இருக்கவே விரும்பினார்.
பிரியங்கா, தீவிர அரசியலில் இறங்கியதில் இருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சிக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்.
கட்சி அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வாய்ப்பு இருப்பதாக, அவ்வப்போது அரசியல் விமர்சர்களால் பேசப்பட்டு வந்தது.
ஆனால், அவர் தனது பாராளுமன்ற அறிமுகத்திற்காக லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிரியங்கா காந்தி வயநாட்டுக்குப் புதியவர் அல்ல, ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு, ராகுல் வயநாட்டில் போட்டியிட வந்தபோது பிரியங்கா தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
ராகுல் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர் வயநாடு மக்களைச் சந்திக்க வந்தபோது அவருடன் பிரியங்காவும் வந்தார். ராகுலின் தகுதி நீக்கத்திற்கு எதிராக கல்பெட்டா தெருக்களில் போராட்டம் வெடித்தது.
வயநாட்டில் ராகுல் இரண்டாவது முறையாகப் போட்டியிட வந்தபோது, பிரியங்கா காந்தி பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்கும் காங்கிரஸின் முடிவை வரவேற்று, அந்தத் தொகுதியில் ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அன்னி ராஜா, பெண் வேட்பாளரை நிறுத்திய காங்கிரசின் முடிவைப் பாராட்டியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பலம் 14-இல் இருந்து 13% ஆக குறைந்துள்ளதால், நாடாளுமன்றத்துக்குப் பெண்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று அன்னி ராஜா கூறினார்.
இந்த முறை கேரளாவில் எந்தத் தொகுதியிலும் ஒரு பெண் கூட வெற்றி பெறவில்லை என்றவர், பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதை கட்சிதான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

வயநாடு மக்கள் சொல்வது என்ன?
ராகுலின் ராஜினாமா குறித்தும், பிரியங்கா போட்டியிடுவது குறித்தும் வயநாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
அத்தொகுதியைச் சேர்ந்த உனைஸ் கூறும் போது, "ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து ராஜினாமா செய்தது மிக வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இனி எங்களுக்கு ராகுல், பிரியங்கா என இரண்டு எம்.பி-க்கள் இருப்பார்கள் என்பது தான் சரி," என்றார்.

ஒரு பெண் என்ற முறையில் பிரியங்கா காந்தி மேலும் மேலும் மிகச் சிறந்த சேவை பணிகளை ஆற்றுவார் என்று நம்புவதாக கன்னியாஸ்திரி தெரசா தெரிவித்தார்.

‘ராகுல் பெண்களுக்கான வளர்ச்சிப் பணிகள் செய்திருக்கிறார்’
கல்லூரி மாணவி ஹனினா ஜான் பேசும்போது, பிரியங்கா காந்தி இத்தொகுதியில் போட்டியிடுவது வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.
"அவர், பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகளும், சேவையும் செய்வார் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு, பள்ளிக்கூட பேருந்து, பள்ளிக்கூட கட்டிடங்கள் சாலைகள், என ராகுல் காந்தி பல விஷயங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். பிரியங்கா காந்தியும் அதைவிட இரண்டு மடங்கு சேவைகள் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 2018-ஆம் ஆண்டு நடந்த மழை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து வந்த பாதிப்புகளில் தவித்த மக்களுக்கு ராகுல் காந்தி உதவிகள் செய்ததாகச் சொன்னார்.


காங்கிரஸ் கட்சியினர் சொல்வது என்ன?
வயநாடு தொகுதியின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் கூறுகையில், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக ராகுல் வயநாடு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இது வருத்தமாக இருந்தாலும், பிரியங்கா இங்கு போட்டியிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது, என்றார்.
வயநாடு மகிளா காங்கிரஸ் அணிப் பொறுப்பாளரான உஷா ஜான்சன் கூறுகையில், “ராகுல் காந்தி, கேன்சர் மையத்திற்கு ரூ.55 லட்சம் செலவில் ட்ரான்ஸ்பார்மரை அமைத்துக் கொடுத்துள்ளார். அங்கன்வாடிகள் பலவற்றை கட்டிக் கொடுத்துள்ளார். விதவைகளுக்கு வீடுகள் கொடுத்துள்ளார். அவரை ஆதரித்ததுபோலவே, பிரியங்காவையும் ஆதரிப்போம்," என்றார்.

பா.ஜ.க கூறுவது என்ன?
இதுகுறித்து வயநாடு பா.ஜ.க மாவட்டத் தலைவர் பிரசாத் முள்ளிவயல் கூறுகையில், ராகுல் காந்தி இரண்டாவது முறையாக வயநாட்டில் போட்டியிடும் போது தாங்கள் ‘கண்டிப்பாக வயநாட்டில் வெற்றி பெற்ற பிறகு ராகுல் இங்கிருந்து போய்விடுவார்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்.
“இரண்டாவதாக ஒரு தொகுதியில் போட்டியிடுவார், வயநாடு மக்களை வஞ்சிப்பார் என முன்கூட்டியே நாங்கள் சொன்னோம். நாங்கள் சொன்னது போலவே இப்போது நடந்துள்ளது. வயநாடு மக்களின் மேல் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது வேதனை தருகிறது,” என்றார்.
மேலும், “இங்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. மனித-வனவிலங்கு மோதல், போக்குவரத்து, சாலை பிரச்சனைகள், விவசாய பிரச்சனைகள் என பல பிரச்னைகள். ராகுல் காந்தியால் இவை எவற்றிற்கும் தீர்வு காண முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. குடும்ப அரசியலால் ஜனநாயகத்தை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்,” என்கிறார் அவர்.
இடைத்தேர்தல் என்பது ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு செய்த வஞ்சனை என்கிறார்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் கூறியபோது, எந்த வளர்ச்சி திட்டங்களையோ, சேவைப் பணிகளையோ ராகுல் காந்தி இந்தத் தொகுதிக்குச் செய்யவில்லை. அதேபோல், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் ஒன்றுமே செய்யப் போவதில்லை என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள், என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












