அரசியலில் மீண்டும் சசிகலா: அதிமுகவில் பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன் ஒன்றிணைவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்த வி.கே. சசிகலா, தற்போது மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். என்ன செய்ய முயற்சிக்கிறார் வி.கே. சசிகலா?
"அரசியலில் ரீ என்ட்ரி" - சசிகலா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்த சசிகலா, அதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்படிப் பேசும்போது, அ.தி.மு.கவில் சாதி அரசியல் செய்வதாகவும் தன்னுடைய மறு வருகையால், 2026ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமென்றும் தெரிவித்தார் சசிகலா. "அ.தி.மு.க. தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒரு சில சுயநலவாதிகள் அந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சாதி தான் சொந்த சாதி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது. ஜெயலலிதாவும் சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி சாதி பார்த்து பழகியிருந்தால், உயர்சாதி வகுப்பை சார்ந்த அவர், என்னுடன் பழகியிருக்க மாட்டார். திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடும். ஆனால், இங்கு சாதாரண ஏழை கூட எம்.பி. எம்.எல்.ஏ. ஆகலாம். ஆனால் இப்போது நம் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு முன்னுரிமை கொடுத்து சாதி அரசியல் செய்கிறார்கள். இதை நானும், தொண்டர்களும், யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான் பெங்களூரு சென்றபோது, சாதி பார்த்திருந்தால், அவருக்கு (எடப்பாடி கே. பழனிசாமிக்கு) வாய்ப்பளித்திருக்க மாட்டேன். இன்று அ.தி.மு.க. மூன்றாவது, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது, டெபாசிட்டும் போய்விட்டது. சிலர் தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது
என்னுடைய என்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள். 2026இல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 40 வருடங்களாக மக்கள் பணி செய்தேன், இனி வரும் காலமும் மக்களுக்காகத்தான் வாழ்வேன்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியும் அ.தி.மு.கவும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தன. இந்தத் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் அ.தி.மு.கவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்த வி.கே. சசிகலா, பலமுறை தனது அரசியல் மறுபிரவேசத்திற்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குப் பிறகு, மீண்டும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சசிகலா.
அதிமுக பதில் என்ன?
ஆனால், இவரது அறிவிப்பை அ.தி.மு.க. நிராகரித்துவிட்டது. "அவருக்கும் அ.தி.மு.கவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினரே இல்லை" என்று சொல்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்குமார்.
"வி.கே. சசிகலா சிறையிலிருந்து 2021ல் வந்த பிறகு செய்ய வேண்டிய அரசியலை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட நிலை இது; தன்னை வந்து யாரும் ஏன் சந்திக்கவில்லை என்பதை அவர் யோசிக்க வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன்.

பட மூலாதாரம், Getty Images
எடப்பாடியை கையாளும் திட்டம் சசிகலாவிடம் உள்ளதா?
"நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார் வி.கே. சசிகலா. வெளியேற்றப்பட்ட யாரையும் சேர்க்கப் போவதில்லை என்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி. அம்மாதிரி சூழலில், எடப்பாடி கே. பழனிச்சாமியை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அவரிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சசிகலாவைப் பொருத்தவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் தான் செய்ய வேண்டிய அரசியலை செய்யத் தவறிவிட்டார்.
சசிகலாவால் அடையாளம் காணப்பட்டு எம்.எல்.ஏவாகவும் எம்.பியாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகளாகவும் உயர்ந்தவர்கள் பலர் உண்டு. இந்த இரண்டரை ஆண்டுகளில் யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை. தன்னால் உயர்த்திவிடப்பட்டவர்கள் தன்னை வந்து சந்திப்பதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பதை அவர் யோசித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த யோசனையும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்றாகச் சேரவேண்டும் என வெறும் கோரிக்கை மட்டும் விடுவதால் எதுவும் நடக்காது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
அதிமுக ஒன்றிணைவதில் என்ன சிக்கல்?
சசிகலா மீண்டும் அரசியலில் இணைய விரும்பினால், எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் அவர். "விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று அ.தி.மு.க. எடப்பாடி கே. பழனிசாமி வசம்தான் இருக்கிறது. அவர் இறங்கி வராதவரை எதுவும் சாத்தியமில்லை. ஆகவே, எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திக்க முதலில் அவர் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்" என்கிறார் எஸ். லக்ஷ்மணன்.
இன்னொரு சிக்கலாக, அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவருமே அ.தி.மு.கவின் தற்போதைய தலைமை குறித்து வெவ்வேறு விதமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்லிவருகிறார். ஆனால், சசிகலா அ.தி.மு.கவின் தற்போதைய தலைமையுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஏதும் சொல்லவில்லை என்பதோடு, ஒரு சாதி சார்ந்து செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தவிர, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் குறித்தும் அவர் பேசுவதில்லை. டிடிவி தினகரனைப் பொருத்தவரை, எடப்பாடி கே. பழனிசாமியைக் கடுமையாக எதிர்க்கிறார். "பழனிசாமி என்ற தீய மனிதர் பொதுச் செயலாளராக இருக்கும்வரை அவர்களோடு சேர்வது எப்படி சாத்தியமாகும்? நாங்கள் மீண்டும் ஒன்றிணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
"ஜெயலலிதா வழியை சசிகலா பின்பற்றலாம்"
"தற்போதைய சூழலில் அ.தி.மு.கவில் ஒற்றுமை என்றால், எடப்பாடி கே. பழனிசாமி, வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைவதுதான். ஆனால், சசிகலா தன்னைப் பற்றி மட்டும் பேசுகிறாரே தவிர டி.டி.வி. தினகரனைப் பற்றியோ ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றியோ பேசுவதேயில்லை. அவர்களையும் இவர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் இவரே முன்வந்து அவர்களைச் சென்று பார்க்க வேண்டும்.
2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும் வைகோவையும் ஜெயலலிதா தானே நேரில் சென்று சந்தித்தார். அந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். சசிகலாவும் அதேபோலத் தேடிப் போக வேண்டும். வீட்டுக்குள் இருந்தபடியே ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொல்வது பலனளிக்காது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு என்ன ஆனது?
இதற்கிடையில், அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் கே.சி. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்த ஜே.சி.டி. பிரபாகர், பெங்களூர் புகழேந்தி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் எல்லோரையும் இணைக்க பேசி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தக் குழுவினரின் முயற்சிக்கு பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை.
"நாங்கள் பேச ஆரம்பித்த பிறகுதான் எல்லோருமே தங்கள் கருத்தைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம், பொருத்திருந்து பாருங்கள்" என்கிறார் இந்தக் குழுவைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி.

பட மூலாதாரம், Getty Images
"சசிகலாவின் ரீ என்ட்ரி திருப்பம் தராது"
சசிகலாவின் 'ரீ என்ட்ரி' எந்தத் திருப்பத்தையும் தரப்போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "சசிகலாவிடம் கட்சி அமைப்பு ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் நெருக்கத்தைப் பெற்றவர் என்கிற வரலாறு மட்டுமே உள்ளது. அது ஒரு அறிமுகத்தைதான் தரும். அரசியலில் ஏறுமுகத்தைத் தராது. தவிர, அ.தி.மு.கவிலிருந்து விலகி நிற்கும் தலைவர்கள் யாரும் சசிகலாவுடன் காணப்படவில்லை. டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, தனிக்கட்சி என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இந்நிலையில், சசிகலாவின் ரீ என்ட்ரி எந்தத் திருப்பத்தையும் தராது" என்கிறார் ஷ்யாம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்திருக்கும் நிலையில், சசிகலா தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி, அவருக்காக பிரசாரம் செய்திருக்க வேண்டும் என்கிறார் லக்ஷ்மணன். "தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் ஏற்கப்பட்டதுதான் என்றாலும்கூட அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது தவறு. இந்தச் சூழலில், தீவிரமான ஆதரவாளர் ஒருவரை சசிகலா தேர்தலில் நிறுத்தியிருக்க வேண்டும். அந்த வேட்பாளருக்காக சசிகலா தீவிரமாகப் பிரசாரம் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் அரசியலில் என்ட்ரி என்று சொல்வதற்கு அர்த்தமே இல்லை. இப்போதும் சசிகலாவுக்கு தொண்டர்களிடம் மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை அர்த்தமுள்ளதாக்கி, அதை அ.தி.மு.கவுக்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டுமானால், சசிகலா தன் அரசியல் பாணியை மாற்றை வேண்டும்" என்கிறார் லக்ஷ்மணன்.
தன்னுடைய ரீ என்ட்ரி எப்படியிருக்கும் என்பதை சசிகலா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. சுற்றுப் பயணம் போகப்போவதாக மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், கடந்த முறை அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணமே பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காத நிலையில், இந்த முறை புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சசிகலா விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
- டிசம்பர் 5, 2016: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் காலமானார். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- டிசம்பர் 29, 2016: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்முறையாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடைபெறும்வரை, வி.கே. சசிகலாவே கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக இருப்பார் என முடிவெடுக்கப்பட்டது.
- பிப்ரவரி 5, 2017: அ.தி.மு.கவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிப்ரவரி 6, 2017: முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை தமிழ்நாடு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார். ஆனால், புதிய முதல்வராக பொறுப்பேற்குமாறு சசிகலாவை ஆளுநர் அழைக்கவில்லை.
- பிப்ரவரி 14, 2017: சொத்துக் குவிப்பு வழக்கில் வி.கே. சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா, அடுத்த முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியைத் தேர்வுசெய்தார்.
- பிப்ரவரி 15, 2017: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தார் சசிகலா.
- செப்டம்பர் 13, 2017: ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை அ.தி.மு.கவுடன் இணைப்பதற்கான முன் நிபந்தனையாக, வி.கே. சசிகலாவை அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
- 15 மார்ச் 2018: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்ற கட்சியை உருவாக்கினார் டி.டி.வி. தினகரன்.
- பிப்ரவரி 2021: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவுசெய்த வி.கே. சசிகலா, பெங்களூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார்.
- மார்ச் 3, 2021: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.
- மே 2021: சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார் சசிகலா. அ.தி.மு.க. தொண்டர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து, அ.தி.மு.கவை காப்பாற்ற வேண்டும் என்று கோருவது போன்ற ஆடியோ க்ளிப்களை ஊடகங்களுக்கு வெளியிட ஆரம்பித்தார்.
- அக்டோபர், 2021: சிறிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் சசிகலா. ஆனால், அந்தப் பயணம் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தவில்லை.
- ஏப்ரல், 2022: `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- ஜூன், 2024: நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்" என்று அறிக்கைவிட்டார் சசிகலா.
- ஜூன் 16, 2024: தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்தார் வி.கே. சசிகலா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












