நாம் மிகவும் மோசமான சூழலில் வாழ்கிறோமா? - நமக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கரோலினா மோட்ராம் மற்றும் பெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
உலகம் அற்புதமாக மாறி வருகிறது அல்லது மோசமாகி வருகிறது என்று நம்மில் பலர் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்போம். ஆனால் 'மோசமாகி வருகிறது’ என்னும் கருத்துடையவர்கள் தான் அதிகம்.
கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துள்ளன.
2022-ஆம் ஆண்டு கேலப் (Gallup) ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், உலகளவில் 10 இளைஞர்களில் நான்கு பேர் தாங்கள் மிகுந்த கவலை அல்லது மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பெரும்பாலும் தீவிரமாக அல்லது கடுமையாக இருக்கின்றன. போர்ச் சூழல், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற பிரச்னைகளால் உலகம் முடிவுக்கு வருவது போல் உணரலாம்.
ஆனால் அது கதையின் ஒரு பக்கம் மட்டுமே என்று சால் பெர்ல்முட்டர் கூறுகிறார். அவர் ஒரு அமெரிக்க வானியற்பியல் விஞ்ஞானி ஆவார். அவர் பிரபஞ்சம் முன்பை விட வேகமாக விரிவடைகிறது என்பதற்கான ஆதாரத்தை முன்வைத்த அறிவியல் குழுவில் உறுப்பினராக இருந்தார். அதற்காக 2011-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
" 'வாழ்க்கையின் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்ற உண்மையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மனித ஆயுட்காலம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது?
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு இனமாக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நீண்ட தூரம் முன்னேறி வந்துவிட்டோம்.
1900-ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'Our World in Data’ தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது 2021-இல் 71 ஆண்டுகளாக ஆக மாறி, இருமடங்காக அதிகரித்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் வியத்தகு அளவில் குறைந்துள்ளது. மேலும் வறுமையைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். தொற்று நோயைத் தடுப்பது முதல் கல்வியறிவு அதிகரிப்பது வரை, உலகின் முன்னேற்றங்களை நிரூபிக்கும் புள்ளிவிவரங்கள் ஏராளமாக உள்ளன.
இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் விமர்சனச் சிந்தனை பாடத்திட்டத்தை உருவாக்கிய பெர்ல்முட்டரின் கூற்றுப்படி, "ஏதோ ஒரு வகையில் எல்லாமே நம்மை பயமுறுத்தும், அல்லது ஆபத்தானதாக இருக்கும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.”
நம்மிடையே இந்த எண்ணம் நிலவுவதற்கு நம் முன்னோர்களும் காரணமாக இருக்கலாம், என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
‘நம் முன்னோர்களைவிட நாம் பாதுகாப்பானவர்கள்’
நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களை நாம் கவனிக்காமல் இருக்கிறோம் என்பதல்ல விஷயம், எதிர்மறையான சார்பு (negativity bias) எனப்படும் அறிவாற்றல் நிலையை மனிதர்கள் சமாளிக்க வேண்டும். நேர்மறையான அனுபவங்களை விட மோசமான அனுபவங்கள் நம் மனதில் நீடித்த உளவியல் விளைவைக் கொண்டிருக்கின்றன என்பதே இதன் பொருள்.
இது ஏன் என்று புரிந்து கொள்ள வேண்டுமெனில், மனிதர்கள் குகைகளில் வாழ்ந்த காலத்திற்கு நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். நம் தொலைதூர மூதாதையர்களைப் பொறுத்தவரை, தவறான தகவல்களைப் பற்றிக் கொள்வது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு நிலையாக இருக்கலாம். உதாரணமாக, தவறான உணவு அவர்களுக்கு விஷமா மாறலாம், அல்லது வேட்டையாடும் போது ஒரு தவறான செயல் அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம்.
நம் முன்னோர்களை விட நாம் எவ்வளவு பாதுகாப்பானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது என்று பெர்ல்முட்டர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
‘எதிர்மறை செய்திகளே அதிகம்’
அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான பால் ரோசின் கூறுகையில், "நம் முன்னோர்கள் அடிக்கடி மரண அச்சுறுத்தல்கள் இருந்த ஒரு உலகத்தை எதிர்கொண்டனர்,” என்கிறார்.
"இப்போது விஷயங்கள் மிகவும் சிறப்பாக மாறிவிட்டது, ஆனால் இந்த முதன்மையான அச்சுறுத்தல் என்னும் விஷயம் இன்னும் நம்மிடம் அப்படியே உள்ளது," என்கிறார்.
அவரும் சக பேராசிரியர் எட்வர்ட் ரோய்ஸ்மானும் இணைந்து 2001-இல் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார்கள். அதில் அவர்கள் "எதிர்மறையின் விளைவுகள் நேர்மறையை ஆதிக்கம் செலுத்தும் (அல்லது முற்றிலும் மூழ்கடிக்கும்) போக்கு உள்ளது," என்று முடிவு செய்தனர்.
அவர் தொடர்ந்து விவரிக்கையில், "எதிர்மறையான நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை என்பதற்கான காரணங்களில் ஒன்று என்னவென்றால் அவை நம் வாழ்வில் ஒப்பீட்டளவில் அரிதாக நிகழ்பவை," என்கிறார்.
தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள் விஷயங்களை இன்னும் மோசமாக்கியுள்ளன. ஏனெனில், அவை நல்ல மற்றும் கெட்ட செய்திகள் ஆகிய இரண்டிற்கும் நம் அணுகலை அதிகரித்துள்ளன. இவற்றில் கெட்ட செய்திகளை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் எளிது என்று நமக்கு ஏற்கனவே தெரியும்.
அவர் மேலும் கூறுகையில், "பெரும்பாலான செய்திகள் எதிர்மறையானவை," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பேரழிவைத் தடுக்க முடியுமா?
இதை விளக்க, பேராசிரியர் பால் ரோசின், "480 விமானங்கள் இன்று பிலடெல்பியாவில் பாதுகாப்பாக இறங்கின, ஆனால் யாரும் இதைப் பெரிதுப்படுத்தவில்லை. இருப்பினும், ஒரு அசாதாரண நிகழ்வு என்பதால், ஒரு விமானத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றி மட்டும் நாம் கேள்விப்படுகிறோம். ஒரு விமானம் பாதுகாப்பாக புறப்படுவது செய்தி ஆகாது. சிக்கல் ஏற்படுவது தான் செய்தியாகிறது,” என்கிறார்.
"சில சூழ்நிலைகளில், நமது மூளை சாத்தியமான ஆபத்துக்களுக்கு மிகையாக எதிர்வினையாற்றுகிறது என்பது சாத்தியம் தான். மேலும் இந்த உள்ளார்ந்த போக்குகள் பிற்கால தலைமுறைகளில் மங்கக்கூடும்," என்று ரோசின் கருதுகிறார்.
ஆனால் கோவிட் தொற்றுநோய் போன்ற சமீபத்திய நிகழ்வுகள் சிலரின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
"தொற்றுநோய்க்குப் பிறகு இரவு உணவிற்கு வெளியே செல்லும்போது சிலர் முகமூடிகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்," என்று அவர் விளக்கினார்.
சால் பெர்ல்முட்டர் உலகின் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறார், எனவே இந்தச் சாதகமற்ற நம்பிக்கைகளை மாற்ற நாம் உழைக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
அவர் சமீபத்தில் இணை ஆசிரியராக எழுதிய 'தர்ட் மில்லினியம் திங்கிங்: கிரியேட்டிங் சென்ஸ் இன் எ வேர்ல்ட் ஆஃப் நான்சென்ஸ்' (Third Millennium Thinking: Creating Sense in a World of Nonsense) என்ற நூலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.
"ஒவ்வொரு 2.6 கோடி ஆண்டுகளுக்கும் ஒரு பெரிய வால்மீன் அல்லது சிறுகோள் பூமியுடன் மோதும்போது ஏற்படும் அடுத்த வெகுஜன அழிவைத் தடுக்கக்கூடிய முதல் உயிரினம் நாம் தான் என்று தோன்றுகிறது," என்று கூறியுள்ளார்.
"உள்வரும் வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் ஆகியவற்றை வருவதற்கு முன்பே அவற்றைக் கண்டறியக்கூடிய தொலைநோக்கிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம், மேலும் அத்தகைய தொலைதூர சிறுகோள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் தொழில்நுட்பத்தையும் நாம் உருவாக்க முயற்சித்திருக்கிறோம்,” என்கிறார்.
நம்மில் பலர் மோசமான விஷயங்களை உணர்ந்தாலும் கூட, நாம் அடிக்கடி எதிர்பார்ப்பதை விட எதிர்காலம் பிரகாசமானது என்று பெர்ல்முட்டர் நம்புகிறார்.
"வரலாற்றில் முதன்முறையாக அனைவருக்கும் உணவு, உடை, வீடு மற்றும் கல்வி கற்பிக்க முடியும் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார்.
"மக்கள் ஒரே மாதிரியான நேர்மறை சிந்தனைகளுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், நாம் ஒரு அற்புதமான தலைமுறையாக வாழ முடியும்," என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












