வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களை சுரண்ட உதவும் 'கஃபாலா'

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், அம்ரிதா துர்வே
    • பதவி, பிபிசி மராத்தி

குவைத்தில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இந்திய தொழிலாளர்களும் அடங்குவர்.

வளைகுடா நாடுகளில் விபத்துகள் ஏற்படும்போது தொழிலாளர்களின் நிலைமை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் மோசமான வாழ்க்கைச்சூழல் உள்ள போதிலும்கூட இந்தியத் தொழிலாளர்கள் ஏன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்? வளைகுடா நாடுகளில் நிலவும் 'கஃபாலா' முறை என்பது என்ன? அதில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக சர்ச்சை எழுவது ஏன்?

ஜிசிசி நாடுகளில் இந்தியர்களின் விகிதம்

இந்தியாவுக்கும், வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நல்லுறவு நிலவுகிறது.

ஜிசிசி என்பது வளைகுடா ஒத்துழைப்பு சபையை குறிக்கிறது. இதில் செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகள் அடங்கும்.

இந்த குழு 1981இல் நிறுவப்பட்டது.

இந்தியர்கள் மட்டுமின்றி தெற்காசியாவில் இருந்தும் ஏராளமானோர் இந்த ஜிசிசி நாடுகளுக்கு வேலைக்காக இடம் பெயர்கின்றனர்.

இந்த ஆறு ஜிசிசி நாடுகளில் 2020இல் 1 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான தெற்காசிய குடிமக்கள் இருந்தனர் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதற்கு அடுத்து பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் வேலைக்காக ஜிசிசி நாடுகளுக்குச் செல்கின்றனர்.

பெரும் எண்ணிக்கையில் மக்கள் வேலைக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

2022ஆம் ஆண்டில் இந்த நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசித்து வந்தனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து ஜிசிசி நாடுகளுக்கு இடம்பெயர்தல்

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏனெனில் கேரளா மற்றும் கோவாவில் இருந்துதான் வளைகுடா ஒத்துழைப்பு சபை நாடுகளுக்கு அதிக இந்தியர்கள் இடம்பெயர்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு இணையதளமான ஹன்டர் (Huntr) நடத்திய ஆய்வின்படி, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் 'ப்ளூ காலர் வேலைகளுக்காக' செல்கின்றனர். ப்ளூ காலர் வேலைகள் என்பது உடலுழைப்பு தேவைப்படும் வேலைகள். அதாவது தொழிற்சாலை வேலைகள் அல்லது உடல் உழைப்பு தேவைப்படும் வேறு வேலைகள்.

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக பணியாளர்கள் செல்வது குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், பிகாரில் இருந்து தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கட்டுமானத் துறையில் உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஜிசிசி நாடுகளில் உள்ள கட்டுமானத் துறை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) பகுதிகளுக்கு, சுகாதாரத் துறையில் வேலைக்காக இடம்பெயர்பவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்று ஹன்டரின் மற்றொரு கணக்கெடுப்பு கூறுகிறது.

கஃபாலா முறை என்பது என்ன?

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

கட்டுமானம், சுகாதாரம், உற்பத்தி, போக்குவரத்து, விருந்தோம்பல், சேவைத் துறைகளில் வேலைகளுக்காக மக்கள் ஜிசிசி நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.

ஜிசிசி நாடுகளின் குடியுரிமையைப் பெறுவதற்கு ’நீண்ட கால வசிப்பு’ ஒரு முன்நிபந்தனையாகும். இந்தக் காலம் 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும். இங்கு பணி நிமித்தமாக வருபவர்கள் குறிப்பிட்ட பணி விசாவில் வருகின்றனர்.

பெரும்பாலும் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஜிசிசி நாடுகளில் நடைமுறையில் உள்ள கஃபாலா முறையின்படி பணியமர்த்தப்படுகிறார்கள். இதில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் விசா, பயணம், தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகளை கஃபீல் (ஸ்பான்சர்) ஏற்கிறார். இவர்தான் புலம்பெயரும் தொழிலாளிக்கு ஸ்பான்சர் செய்கிறார். இருவருக்கும் இடையே ஒப்பந்தம் இருக்கும்.

ஆனால் இந்த கஃபாலா முறையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக பல ஆண்டுகளாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த முறையின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் பெரும்பாலும் ஸ்பான்சரின் வசம் இருக்கும். இந்தத் தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுக்குத் திரும்பவோ அல்லது வேலையை மாற்றவோ முடியாது. இந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பல மணிநேரத்திற்கு வேலை செய்ய வேண்டிவருகிறது. அவர்களுக்கு வசதியான தங்குமிடங்களும் கொடுக்கப்படுவதில்லை.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஜிசிசி நாடுகளில் இந்த கஃபாலா முறை பரவலாக உள்ளது. கூடவே இது ஜோர்டான் மற்றும் லெபனானிலும் நடைமுறையில் உள்ளது.

கஃபாலா முறையை ஒழிக்கப் போவதாக 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கத்தார் கூறியது. இதன்படி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையை மாற்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற முடியும்.

இருப்பினும், 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக ஸ்டேடியம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து பல அறிக்கைகள் வெளியாயின.

இந்திய தொழிலாளர்கள் வேலைக்காக வளைகுடா செல்வது ஏன்?

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டில் வேலை கிடைத்தால் நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு பல தொழிலாளர்கள் புலம் பெயர்கின்றனர். அவர்களில் சிலர் இந்த கனவை நனவாக்குவதில் வெற்றியும் பெறுகிறார்கள். பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலம் இந்த வேலைகளைப் பற்றி விவரங்களை அறிந்து அத்தகைய வேலையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இந்த ஜிசிசி நாடுகளில் கிடைக்கப்பெறும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளும், இடம்பெயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாகும். 2022 ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பைக்காக 7 மைதானங்கள், புதிய விமான நிலையங்கள், மெட்ரோ சேவைகள், சாலைகள் மற்றும் சுமார் 100 ஹோட்டல்கள் கட்டப்பட்டன. இறுதிப் போட்டி நடைபெற்ற மைதானத்தைச் சுற்றி முழு நகரமும் உருவாக்கப்பட்டது.

உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 5 முதல் 10 லட்சம் தொழிலாளர்கள் இடம்பெயர்வார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்திருந்தது.

ஆனால் இந்த மைதானங்களை கட்டுவதற்காக 30 ஆயிரம் வெளிநாட்டு பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டதாக கத்தார் அரசு தெரிவித்தது.

அதிக எண்ணிக்கையில் வேலைகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் அங்கு செல்கிறார்கள்.

ஜிசிசி நாடுகளில் இப்போது தொழிலாளர்களுக்கான விதிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. இந்திய அரசும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மற்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்கான கொள்கைகளை நிர்ணயம் செய்கிறது.

இதனால்தான் இந்த நாடுகளில் பெறப்படும் சம்பளம், இந்தியாவிற்கு பணம் அனுப்பும் போது ஜிசிசி நாடுகளின் நாணய மாற்று விகித பலன்கள் மற்றும் இந்திய ரூபாய் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு வேலைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொழிலாளர் இடப்பெயர்வு மூலம் இந்தியா என்ன பலன்களைப் பெறுகிறது?

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

ஜிசிசி நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நீண்டகால உறவு உள்ளது. இந்த நாடுகள் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு பங்காளிகள். இந்த நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பு இந்தியாவுக்கு முக்கியமானது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2014 மே முதல் 2023 டிசம்பர் வரை 10 முறை வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் அந்நிய செலாவணி அடிப்படையிலும் இந்த நாடுகள் முக்கியமானவை.

2021ஆம் ஆண்டில் ஜிசிசி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 87 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்துள்ளன.

இந்த தொகை 2022இல் 115 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

2023 டிசம்பர் மாதத்திற்குள் 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரத்து இருந்தது என்று 17வது மக்களவையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஜிசிசி நாடுகளில் இருந்து மிக அதிகமாக இந்தியாவுக்கு பணம் அனுப்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வருகின்றன.

இந்த ஆறு ஜிசிசி நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா அதிக பணம் பெறுகிறது. அதற்குப்பிறகு இந்தியர்கள் செளதி அரேபியா, ஓமன், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து அதிகமாக பணம் அனுப்புகின்றனர்.

வளைகுடா நாடுகளுக்கு இந்தியர்கள் இடம்பெயர்ந்த வரலாறு

குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு இந்திய தொழிலாளர்கள் ஏன் செல்கிறார்கள்?

பட மூலாதாரம், PENGUIN PUBLISHING / CHINMOY TUMBE

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சின்மய் தும்பே உலகளாவிய இடம்பெயர்வு குறித்த அறிஞர். 'இந்தியா மூவிங்: எ ஹிஸ்டரி ஆஃப் மைக்ரேஷன்' என்ற புத்தகத்தில், பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார்.

1970களில் தொடங்கிய ஜிசிசி நாடுகளுக்கான இந்தியர்களின் இடப்பெயர்வு என்பது உலகளாவிய புலப்பெயர்வு வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று அவர் கூறுகிறார்.

ஆரம்ப காலத்தில் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 1930களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஏடன் நகரத்தில் (தற்போது ஏமனில்) சுமார் 10,000 இந்தியர்கள் இருந்தனர் என்று சின்மய் தும்பே எழுதுகிறார்.

இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவிய தீருபாய் அம்பானியும் 1948 முதல் பத்தாண்டுகள் இந்த ஏடன் துறைமுகத்தில்தான் பணியாற்றினார்.

எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆங்கிலோ பாரசீக எண்ணெய் நிறுவனம் (APOC) இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக ஆவணங்களை பதிவு செய்தது என்று 'இந்தியா மூவிங்: எ ஹிஸ்டரி ஆஃப் மைக்ரேஷன்' என்ற புத்தகம் கூறுகிறது.

1990 ஆகஸ்டில், இராக் குவைத்தை ஆக்கிரமித்ததும் வளைகுடா போர் வெடித்தது. இதனால், 1990 அக்டோபர் வாக்கில் 1,75,000 இந்தியர்கள் குவைத்திலிருந்து திருப்பி அழைத்து வரப்பட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)