அரிசி எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்? 10 ஆண்டு பழைய அரிசியை சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஒனுர் எரெம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தாய்லாந்து அரசு சமீபத்தில் 15,000 டன் அரிசியை ஏலம் விட்டது. ஆனாலும், இது புதிய அரிசி அல்ல, பத்து ஆண்டுகள் பழமையானது.
'சர்ச்சைக்குரிய' திட்டத்தின் மூலம் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கிய இந்த அரிசியை தாய்லாந்து அரசு 10 ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ளது.
2011ல் அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அறிமுகப்படுத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளிடம் இருந்து அரிசி மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த திட்டம்தான் ஷினவத்ராவின் அரசியல் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்ததாக கூறப்படுகிறது.
அந்த அரிசியை வாங்க அரசு பெரும் தொகையை செலுத்தியது. இதற்காக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) செலவிட்டுள்ளது.
இதில் பெரும்பாலான பணம் கடன் மூலம் திரட்டப்பட்டது.
ஆனால் இத்திட்டம் தோல்வியடைந்து அரசுக்கு நிதிச்சுமையாக மாறியது. அதிக விலை கொடுத்து வாங்கிய அரிசியை விற்க முடியாமல் அரசு திணறியது. இதனால், அரசிடம் அதிக அளவு அரிசி கையிருப்பில் இருந்தது.
கடந்த மாதம், தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் ஃபும்தம் வெச்சயாச்சாய், அரிசி விற்பனையை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
ஜூன் 17 அன்று, தாய்லாந்து நிறுவனமான வி8 இன்டர்ட்ரேடிங் கோ லிமிடெட், அரிசியை ஏலத்தில் சுமார் ரூ.45 கோடிக்கு வாங்கியது.
பத்து வருடங்கள் பழைய அரிசி இப்போது எப்படி இருக்கும்? இவ்வளவு நாள் சேமித்து வைத்தால் அரிசி என்னவாகும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரிசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
அரிசி ஏற்றுமதி செய்யும் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இருக்கும் தாய்லாந்தால் இந்த அரிசியை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இந்த திட்டத்தால் 125 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2014ல் பல மாத போராட்டங்களுக்குப் பிறகு, பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
2017 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்காக அவர் விசாரிக்கப்பட்டார். அவர் ஆஜராகவில்லை என்றாலும், விசாரணையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.

அரிசியின் தரம் எப்படி இருக்கிறது?
கடந்த மாதம், தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் ஃபும்தம், அரிசி உயர் தரமானது மற்றும் பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக, அந்த அரிசியின் மூலம் சமைத்த உணவை ஊடகங்கள் முன் சாப்பிட்டார்.
“இந்த அரிசி தானியங்கள் இன்னும் நன்றாக இருக்கின்றன. அவை சற்று மஞ்சள் நிறமாக மாறக்கூடும். 10 வருடங்கள் பழைய அரிசி இப்படித்தான் இருக்கும்” என்றார். எந்த அரிசி மூட்டையிலிருந்தும் அரிசியை எடுத்து அதன் தரத்தைப் பார்க்கலாம் என ஊடகங்களுக்கு சவால் விடுத்தார்.
தாய்லாந்து வர்த்தக அமைச்சகம், பொது சுகாதார அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆய்வகத்தில் அரிசியை சோதித்து, அதன் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட்டது. தங்கள் ஆய்வில் அஃப்லாடாக்சின், டியோக்சினிவலெனால், புரோமைடு அயன், எத்திலீன் ஆக்சைடு அல்லது பிற நச்சு ரசாயனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆய்வகத்தில் அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புகளை சரிபார்த்த அவர், தற்போது சந்தையில் விற்கப்படும் அரிசிக்கும், இந்த அரிசிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.
தாய்லாந்து தொலைக்காட்சி சேனலான சேனல் 3, ஒரு சுயாதீன ஆய்வகத்தில் மேற்கொண்டு சோதனைகளை நடத்தி, அந்த அரிசி சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தியது.
பிபிசி இந்த அரிசியை சுயாதீனமாக சோதிக்கவில்லை.

அரிசி கெட்டுப் போகுமா?
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கூற்றுப்படி, அரிசியை உலர்ந்த, குளிர்ந்த இடத்தில் காற்று புகாத கொள்கலனில் நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும்.
அரிசியை முறையாக அரைத்தால் நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரிசி கூட்டமைப்பு கூறுகிறது.

பழைய அரிசி ஊட்டச்சத்துகளை இழக்குமா?
பத்தாண்டு காலத்திற்கு அரிசியை சேமித்து வைக்கும்போது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், அரிசி விஷமாக மாறுவதற்கு வழிவகுக்குமா என்று பிபிசி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிடம் கேட்டது.
ஆனால் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றினால், ஆபத்து எதுவும் இருக்காது என்று அந்த அமைப்பு பதிலளித்தது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அரிசியின் ஊட்டச்சத்துகள் குறைந்துவிடுமா என கேட்டதற்கு, அரிசியில் இருக்கும் வைட்டமின்கள் போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் குறையக்கூடும் என அந்த அமைப்பு கூறியது.
"அரிசியின் மிக முக்கியமான ஊட்டச்சத்து நன்மைகளில் ஒன்று, அதன் அதிக மாவுச்சத்திலிருந்து வருகிறது, இது உடலில் ஆற்றலாக மாற்றப்படும்" என்று எஃப்.ஏ.ஓ கூறுகிறது.
அரிசியை எவ்வளவு காலம் சேமித்து வைத்தாலும், அதன் மாவுச்சத்து அளவில் பெரியளவில் மாற்றம் இருக்காது என தெரிவித்தது.
அரிசியின் சுவை மாறுமா?
அரிசி பொதுவாக காலப்போக்கில் அதன் சுவையை இழக்கிறது என, எஃப்.ஏ.ஓ கூறியது. ஆனால், இது எவ்வளவு காலத்தில் நிகழ்கிறது என்பது சேமிக்கும் சூழலைப் பொறுத்தது.
தாய்லாந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் சோராயுட் சுதஸ்ஸனசிந்தா 10 ஆண்டுகள் பழைய மல்லிகை அரிசியை (ஒரு வகை நீண்ட, மணம் கொண்ட அரிசி) ருசித்து, அது வெள்ளை அரிசியைப் போல சுவைத்ததாகவும், ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மணமாகவும் மென்மையாகவும் இல்லை என்றும் கூறினார்.
தாய்லாந்து தேர்தல் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் சோம்சாய் ஸ்ரீசுதியகோர்னும் பழைய அரிசியை சாப்பிட முயன்றார். ஆனால், அந்த அரிசியில் நல்ல வாசனை இல்லை, அவை உடைந்துபோய் விட்டதாகவும், கெட்டியாக இல்லை என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?
தாய்லாந்து அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்தோனேஷியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை தாய்லாந்து அரிசியை கடந்த ஆண்டு அதிகம் வாங்கியுள்ளன.
"பழைய அரிசியை உண்பவர்களில் பெரும்பாலானோர் ஏழை நாடுகளில் உள்ளனர்" என்று தாய்லாந்தில் உள்ள ஒரு பெரிய அரிசி அரைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த பியர்ரோட் வாங்டி கூறினார்.
தென்னாப்பிரிக்காவைத் தவிர, தாய்லாந்து பல ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அரிசி விற்கிறது.
பொதுவாக ஆப்பிரிக்காவில் தாய்லாந்து அரிசிக்கு நல்ல கிராக்கி இருப்பதாக ஃபும்தம் கூறினார்.
தாய்லாந்து அரசாங்கம் விற்பனையை அறிவித்தது முதல், ஆப்பிரிக்காவில் இருந்து சமூக ஊடக பயனர்கள் கவலையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
"உலகம் எதை நிராகரித்தாலும் அதை எப்போதும் போல ஆப்ரிக்கா ஏற்கும்… மற்ற நாடுகளின் குப்பைக் குவியலாக ஆப்பிரிக்கா மாறிவிட்டது" என்ற கருத்துகள் வெளியாகி வருகின்றன.
கென்ய அரசாங்கம் தரத்தை பூர்த்தி செய்து, ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட அரிசி மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
தாய்லாந்து அரிசியை ஏலத்தில் வென்ற வி8 நிறுவனம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கொள்முதலை முடிக்க 30 நாட்கள் அவகாசம் அளித்தது.
எவ்வாறாயினும், இந்த அரிசியை எந்தெந்த நாடுகளுக்கு விற்க விரும்புகிறார்கள் என்பதை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












