விபத்து அல்லது ஆபத்தில் சிக்கியவருக்கு உதவும் நபருக்கு உள்ள சட்ட பாதுகாப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செய்தியாளர்
- பதவி, பிபிசி மராத்தி
மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜுன் 18) காலை இளம்பெண் ஒருவரை அவரது காதலர் என்று கூறப்படும் நபர் இரும்பு ஆயுதத்தால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. குற்றவாளி அந்தப் பெண்ணை மார்பு மற்றும் தலை பகுதிகளில் கடுமையாகத் தாக்கியதில் அந்தப் பெண் உயிரிழந்தார்.
அந்த நேரத்தில் அங்கு பல பேர் இருந்தபோதும் கூட, ஒருவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை. அப்படி யாராவது முன்வந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
இந்தச் சம்பவத்தில் பலியான பெண்ணின் பெயர் ஆர்த்தி. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரோஹித் யாதவை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் நடக்கும்போது அருகிலிருந்த சிலர் வீடியோ எடுப்பதும், சிலர் கண்டு கொள்ளாமல் போவதுமாக இருந்துள்ளனர். ஒருவரைத் தவிர வேறு யாரும் உதவ முன்வரவில்லை.
இதேபோல் நடக்கும் எல்லா சம்பவங்களிலும் மக்கள் பெரும்பாலும் உதவ முன்வருவதில்லை என்றும் நாம் பொதுவாக சொல்ல முடியாது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் ஒன்று புனேவில் நடந்தது. அங்கு இளம்பெண் ஒருவரை இதேபோல் இளைஞர் ஒருவர் தாக்க, மற்றொரு இளைஞர் அந்தப் பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.
அதில் ஒரு நபர் கத்தியால் குத்த வரும்போது, அந்த இளம்பெண் தப்பித்து ஓடுகையில் கீழே விழுந்துவிட்டார். குத்த வந்த அந்த நபர் அப்பெண்ணை கத்தியால் குத்த முற்பட, அங்கிருந்த மற்றொரு இளைஞர் பாய்ந்து வந்து, அவரைத் தடுத்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்.
அப்பெண்ணைக் காப்பாற்றிய அந்த இளைஞர் புனேவில் அரசுப்பணித் தேர்வுக்காகத் தயார் செய்து வந்தவர். அவர் மட்டும் தைரியமாகக் காப்பாற்ற முன்வராமல் இருந்திருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கைம் முடிந்து போயிருக்கும். ஆனால், பெரும்பாலும் இது போன்ற சம்பவங்களில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
மக்கள் உதவ நினைத்தாலும், பயம் உள்ளது
மக்கள் வேண்டுமென்றே எதுவும் செய்யாமல் இருப்பதில்லை. அவர்கள் இதுபோன்ற சூழலில் உதவவே நினைக்கிறார்கள். ஆனால், உதவ முன்வந்தால், அதற்குப் பிறகு வரும் சட்டரீதியான நடைமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் அவர்களுக்குள் இருக்கிறது.
இந்த பயத்தினால்தான் பலரும் விபத்து மற்றும் பிற அவசர நிலைகளில் உதவ முன்வருவதில்லை. ஆனால், சமூக அக்கறை கொண்ட குடிமக்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை அரசே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான சிறப்புச் சட்டத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டம் 'நல்ல சமாரியன் சட்டம்' (Good Samaritan Law) என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இது போன்ற சூழலில் உதவும் நபர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு வழங்குவதற்கான அரசாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவசர நிலையில் உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவுவது நமது கடமை என்பதை உச்ச நீதிமன்றமும் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறது. எனவே உதவும் நபருக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆபத்தில் உதவினால் சட்டப் பாதுகாப்பு
இந்தச் சட்டத்தின்படி, ஒரு நல்ல குடிமகன் என்பவர், இதுபோன்ற ஆபத்துச் சமயங்களில் எந்த விதமான எதிர்பார்ப்பும், பாரபட்சமும் இன்றி பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றுபவரே ஆவார் என்று இச்சட்டம் விளக்குகிறது.
நல்ல சமாரியன் சட்டம், ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவும் நபருக்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகள் பெரிய அளவில் நிகழ்கின்றன. நாட்டில் உள்ள நான்கில் மூன்று பேர், காவல்துறையின் துன்புறுத்தலுக்கும், நீண்ட சட்ட நடைமுறைகளுக்கும் பயந்து விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவத் தயங்குகிறார்கள்.
அப்படி ஒருவர் உதவி செய்ய நினைத்தாலும் கூட, இந்த நடைமுறைகள் அவர்களை பயமுறுத்தி அதைச் செய்ய விடாமல் தடுத்து விடுவதாக கூறும் மத்திய அரசு, இந்தச் சட்டம் மிகவும் அவசியமானது என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா வசாய் பகுதியில் நிகழ்ந்த கொலை ஒரு விபத்து இல்லை என்றாலும் கூட, அங்கிருந்தவர்கள் உதவ முன்வந்திருந்தால், இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு வழங்க முடியும்.
ஆனாலும், 'யாரும் உதவ முன்வராதது ஏன்?' என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. இதை, சட்டம் மற்றும் உளவியல் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
'சமூக வலைதளங்களால் மாறிய மனநிலை'
இதுகுறித்து மனநல மருத்துவரான சந்தீப் சிசோட் அவர்களிடம் பேசினோம்.
மக்கள் கூட்டத்தின் மனநிலை குறித்தும், கோவிட் தொற்றுக்கு பின் அதிகரித்துள்ள டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்க்கும் நேரத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறுகிறார்.
அவர் பேசுகையில், "கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு வரை, மூளை நம் கண்ணெதிரே என்ன நடக்கிறது என்பதையும், அதன் தீவிரம் என்ன என்பதையும் அறிந்துகொள்ளும் அளவுக்கு உறுதியுடன் இருந்தது. ஆனால் கோவிட்டுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இணையம், சமூக வலைதளங்கள் மற்றும் அதிகமாக ஸ்க்ரீன் பார்ப்பட்தால் நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது," என்று கூறுகிறார்.
“சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் மக்கள், நேரில் பார்க்கும் போது சிரித்துக் கொள்வது கூட கிடையாது. அதாவது, சமூக வலைத்தளங்களே மக்களின் சமூகமாக மாறிவிட்டது,” என்கிறார்.
குறிப்பிட்ட இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து பேசிய அவர், இது போன்ற காட்சிகளை பலமுறை சமூகவலைதளங்களில், திரைப்படங்களில் பார்த்தன் விளைவாக, நேரில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அவர்களால் அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை, என்கிறார்.
"உண்மையில் 'என்ன நடக்கிறது' என்பது குறித்த புரிதலே மூளையை அடையத் தாமதமாகிறது. அப்படி உணரும் நேரத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. ஆனால், உதவி தேவைப்படும்போது அந்தச் சூழலின் தீவிரத்தன்மை புரிவதில்லை,” என்கிறார்.
“அதே சமயம், வேறு யாராவது ஒருவர் உதவுவார் என்ற நினைப்பில் யாரும் உதவ முன்வருவதில்லை. மேலும், கொலையாளியை நம்புவதா அல்லது கொலை செய்யப்படுபவரை நம்புவதா என்ற குழப்ப மனநிலையும் மக்களிடம் உள்ளது. எனவே தான் மக்கள் இதை அந்த இரு நபர்களுக்குள் இருக்கும் பிரச்னையாக மட்டும் பார்க்கின்றனர்,” என்கிறார் சந்தீப் சிசோட்.
பார்வையாளர் விளைவு என்றால் என்ன?
'இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் ஏன் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர்?' என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து, சமூக சிந்தனையாளர் மெலிசா பெர்க்லி, 'சைக்காலஜி டுடே' என்ற இணையதளத்தில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த இணையதளம் உளவியல் சார்ந்த விஷயங்களைப் பிரசுரிக்கிறது.
பெர்க்லியின் கூற்றுப்படி, இது 'பார்வையாளர் விளைவு' (bystander effect) என்ற கருத்தின் விளைவாக இருக்கலாம்.
இந்தக் கருத்தின்படி, ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் கூடியிருப்பது அங்கு உதவி தேவைப்படுபவருக்கு உதவி கிடைக்கும் வாய்ப்பை குறைக்கிறது. அதாவது, அதிக மக்கள் இருந்தால், உதவ முன்வருபவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதுவே குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள், அல்லது ஒரே ஒரு நேரில் கண்ட சாட்சி மட்டும் இருந்தால் உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
'கூட்டத்தில் இருப்பவர்கள் ஏன் அதிகமாக உதவ முன்வருவதில்லை?' என்பது குறித்து ஜான் டர்லி மற்றும் பிப் லடேன் ஆகியோர் பல்வேறு சோதனைகளை நடத்தினர். இதில் சில குறிப்பிடத்தகுந்த விஷயங்களை கவனித்ததாக கூறுகிறார் பெர்க்லி.

பட மூலாதாரம், Getty Images
தனிபரின் பொறுப்பு
பெரும்பாலும், இதுபோன்ற ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கும்போது, தாங்கள் ஒரு தீவிரமான சம்பவத்தையோ அல்லது குற்றத்தையோ பார்க்கிறோம் என்பதை மக்கள் முதலில் உணரமாட்டார்கள்.
இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பார்ப்பது அதிர்ச்சியூட்டும் ஒன்று. அது நாம் உண்மையில் ஒரு அவசர நிலையில் நிற்கிறோமா, இல்லையா என்பதை உணரத் தாமதப்படுத்துகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவத்தின் போது அங்கு பலர் இருந்தால், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று மற்ற அனைவரும் கணிக்க முயற்சிக்கின்றனர். என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் அவர்கள், ஒருவேளை தங்களை விட மற்றவர்களுக்கு ஏதாவது நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்.
சில சமயங்களில் குற்றம் நடப்பதை உணர்ந்த பிறகும் கூட உதவ முன்வருவதில்லை. ஏனென்றால், உதவி செய்வது தங்களின் தனிப்பட்ட கடமை என்று அவர்கள் நினைப்பதில்லை.
இதற்குப் பின்னால் உள்ள காரணம், மக்கள் அதிகமாக இருப்பதால், ஒவ்வொருவரின் பொறுப்புணர்ச்சியும் குறைகிறது. அதாவது நீங்கள் தனியாக இருந்தால் 100 சதவீத பொறுப்பு தானாகவே உங்கள் மீது விழுகிறது. ஆனால், 10 பேர் இருந்தால், அந்தப் பொறுப்பு தானாகவே ஒவ்வொருவருக்கும் 10 சதவீதமாகப் பிரிகிறது.
எனவே சாதாரணமாக நாம் நினைப்பது என்னவென்றால், அதிகமான மக்கள் இருந்தால், அதிகமான உதவி செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு நிகழ்வை நேரில் காணும் கூட்டத்திற்கு இது பொருந்தாது.
எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் தீவிரமான மற்றும் பொறுப்பான நடவடிக்கைகளை எடுப்பது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

பட மூலாதாரம், Getty Images
உதவி செய்பவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்
இதுகுறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய வழக்குரைஞர் ரமா சரோதே, இதுபோன்ற சூழ்நிலையில் உதவி செய்பவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இயங்கி வரும் ரமா சரோதே பேசுகையில், "ஒருவரை ஒருவர் தாக்கும்போதோ, அல்லது கொலை செய்ய நினைக்கும்போதோ உடனடியாக மக்கள் உதவ முன்வர வேண்டும். வசாய் விஷயத்தில் ஒருவர் உதவ முன்வந்தாலும் கூட, அவரது உதவி மட்டும் குற்றவாளியைச் சமாளிக்க போதுமானதாக இல்லை" என்றார்.
மேலும், "இந்த பயத்திற்கான காரணம் என்ன? காவல்துறையினர் சாட்சிகளையோ அல்லது உதவியவர்களையோ குற்றவாளிகள் போல நடத்துவார்களோ என்று பயம் இருக்கிறது. எனவே இந்த பிரச்னையையும் நாம் தீர்க்க வேண்டும்," என்று கூறுகிறார் ரமா.
"இதுபோன்ற அவசரகாலச் சூழ்நிலைகளில் உதவி செய்பவர்களை கண்ணியமாக நடத்தினால், சமுதாயத்தில் அது நல்ல முன்னுதாரணமாக இருக்கும். இந்த மக்கள் தான் சரியான நீதியை வழங்குவதற்கு அரசு அமைப்புகளுக்கு உதவுகிறார்கள். அவர்களே முன்வரவில்லை என்றால், அரசமைப்பு எப்படி பலப்படும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












