கள்ளக்குறிச்சி: சிபிசிஐடி வலையில் சிக்கும் கள்ளச்சாராய நெட்வொர்க் - மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சியில் 50 பேரைப் பலிவாங்கிய கள்ளச்சாராய விற்பனை அங்கே பகிரங்கமாக நடந்தது எப்படி? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு?

கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் கள்ளச்சாராயத்தைக் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாகவும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்திருக்கின்றன என்றாலும், நகரின் மையப் பகுதியில் மாவட்ட நீதிமன்றம், காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் இருக்கும் பகுதியிலேயே வெளிப்படையாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதும் அதைக் குடித்து இத்தனை பேர் பலியாகியிருப்பதும்தான் இவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குக் காரணம்.

கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது மாவட்ட நீதிமன்ற வளாகம். அதற்கு அருகிலேயே கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள பகுதிகளில் ஜோகியர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். அங்கே கள்ளச்சாராய விற்பனை தடையின்றி இருந்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள். காய்கறிச் சந்தையில் மூட்டை தூக்குவது, கொத்தனார், பெயின்டர் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர். இந்தப் பகுதியில் குடிப்பழக்கம் மிகப்பரவலாக இருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரையிலேயே சம்பாதிக்கிறார்கள். அரசின் மதுபான விற்பனை நிலையமான டாஸ்மாக் மதுபானக் கடைகளில், குறைந்தபட்ச விலையே ரூ.150 ரூபாயை நெருங்கிவிட்ட நிலையில், இவர்களுக்கான ஒரு தேர்வு ரூ.40 - ரூ.50 ரூபாய்க்கு விற்கப்படும் கள்ளச்சாராயமாகத்தான் இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளச்சாராய ‘நெட்வொர்க்’

தற்போது, பெரிய அளவில் மரணங்கள் நேர்ந்திருக்கும் கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரும்தான் இந்தப் பகுதிக்கான சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தனர்.

இங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் வேலைக்குச் செல்வார்கள் என்பதால், இந்தக் கள்ளச்சாராய விற்பனை 24 மணி நேரமும் நடந்துவந்திருக்கிறது.

இவ்வளவு மரணங்கள் நடந்த பிறகும் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்கூட, யார் அந்தப் பகுதியில் சாராயம் விற்றது, யாராருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து ஊடகங்களிடம் பேசுவதற்கு மறுக்கிறார்கள்.

தன் மனைவியுடன் சாராயம் குடித்து இறந்துபோன சுரேஷின் தங்கை மட்டும், கன்னுக்குட்டியின் பேரைச் சொன்னார். "இந்தப் பகுதியில் சாராயம் விற்பது கண்னுக்குட்டி அண்ணன்தான். அவரும் அவருடைய தம்பியும்தான் சாராயம் விற்றார்கள். காவல்துறைக்குச் சொன்னால், அவர்கள் ரெய்டு வரும் நேரத்தில் இருக்க மாட்டார்கள். இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது இங்கே," என்று சொன்னார்.

சாராயம் விற்றுவந்த கன்னுக்குட்டியின் குடிசை அருகே வசிப்பவர்கள் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். "இந்தப் பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் சாராயம் விற்கப்படுகிறது. அதில் பிரதானமாக இங்கேதான் விற்பார்கள். கன்னுக்குட்டியும் அவரது சகோதரர் தாமோதரனும் கொரோனா காலகட்டத்திலிருந்து இங்கே சாராயம் விற்கிறார்கள். இவர்கள் மீதிருக்கும் அச்சத்தால் யாரும் காவல்துறையிடம் இதுபற்றித் தெரிவிப்பதில்லை. அதுபோல புகார் தெரிவித்த ஒன்றிரண்டு தருணங்களிலும், அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதுபோலப் பேசுவார்கள். அதனால், இவர்களிடம் யாரும் எதுவும் வைத்துக்கொள்வதில்லை," என்கிறார் அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர்.

கன்னுக்குட்டி - தாமோதரன் சகோதரர்களுக்கு, சின்னதுரை என்பவர்தான் சாராயத்தை விற்பனைக்குக் கொடுத்துவந்தது தெரிந்ததும் அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஜோசப் என்பவரது பெயரைச் சொல்ல, அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் மாதேஷ் என்பவரிடமிருந்துதான் சாராயம் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது.

மாதேஷூடன் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வரும் சக்திவேல், மீன் வியாபாரி கண்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னுடைய ஜி.எஸ்.டி. பில்லை மாதேஷ் பயன்படுத்த அனுமதி அளித்ததால் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். சக்திவேலின் ஜிஎஸ்டி பில்லை தான் பயன்படுத்தி மாதேஷ் ரசாயனத்தை வாங்கியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் இது பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. பத்துக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த மாதேஷிடம் நடக்கும் விசாரணையின் முடிவிலேயே, எங்கே தயாரிக்கப்பட்டது, எந்த இடத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது என்பதெல்லாம் தெளிவாகும், என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு, சுகுணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம்

தொடர்ந்து நடந்துவந்த விற்பனை

இந்தப் பகுதிக்கான மதுவிலக்குக் காவல் பிரிவு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. இருந்தபோதும் இவ்வளவு பெரிய அளவிலான விற்பனையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல, இத்தனை ஆண்டுகளாக சாராயம் விற்றுவந்தவர்கள் திடீரென அதில் மெத்தனாலைக் கலந்தது ஏன் என்பது தெளிவாகவில்லை. இதில் கலக்கப்பட்ட மெத்தனால், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவத்திருக்கிறார். புதுச்சேரியின் எந்தத் தொழிற்சாலையிலிருந்து, யார் மூலமாக இவர்களுக்கு வந்தது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தப் பகுதியில் கோவிந்தராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் சாராயம் விற்றுவந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மரணங்களை ஏற்படுத்திய சாராயத்தை விற்றது கோவிந்தராஜன் தரப்புதான் என்பதால், மற்றவர்கள் குறித்தே யாரும் பேசவில்லை. இந்த மரணங்கள் பரபரப்பாகும்வரை இந்தப் பகுதியில் விற்பனை தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. விவகாரம் ஊடகங்களில் பெரிதாகவும்தான் சாராயம் விற்றவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு, கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு

தமிழகத்தில் மெத்தனால் எங்கு தயாரிக்கப் படுகிறது?

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் இதேபோல மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்வத்தில் சாராயம் விற்றவர்களைப் பிடித்து விசாரித்ததில், இதில் கலக்கப்பட்ட மெத்தனால், சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறை, மதுவிலக்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"இந்தப் பகுதியில் சாராயம் விற்பது அரசியல்வாதிகள், காவல்துறையினர் என எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. இதுபோல விபரீதம் நடந்ததும் எல்லோரும் இது குறித்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு நீண்ட காலத் தீர்வு தேவை," என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான காமராஜ்.

இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூடச் சொல்வதற்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. ஆனால், அரசின் மதுபானக் கடைகளுக்கு வெளியில் மிகப்பெரிய அளவில் சாராய விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது.

மரக்காணம், கள்ளக்குறிச்சி என கள்ளச்சாராய மரணங்கள் தொடரும் நிலையில் இந்தச் சிக்கலான பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002-ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937)-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)