30 லட்சம் பேரை பலி கொண்ட வங்கப் பஞ்சம் - அப்போதைய ஆளுநர் பற்றி அவரது பேத்தி என்ன சொல்கிறார்?

பிரிட்டிஷ் ஆளுநராக இருந்தவரின் பேத்தி பிபிசியிடம் கூறியது என்ன
படக்குறிப்பு, சூசானா ஹெர்பர்ட்
    • எழுதியவர், கவிதா புரி
    • பதவி, தொகுப்பாளர், த்ரீ மில்லியன் பாட்காஸ்ட்

"நடந்தது குறித்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன்," என்று சூசானா ஹெர்பர்ட் கூறுகிறார்.

1943இல் குறைந்தது முப்பது லட்சம் உயிர்களை பலிகொண்ட வங்காள பஞ்சத்தின் போது சூசானாவின் தாத்தா, பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளத்தின் ஆளுநராக இருந்தார்.

அந்தப் பேரழிவில் அவர் வகித்த பங்கு குறித்து சூசானா இப்போது தான் முழுமையாக அறிகிறார்.

நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது ​​1940இல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கையில் வைத்திருந்தார். வங்காளத்தில் உள்ள கவர்னர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். அது சம்பிரதாயமாக எப்போதுமே நடப்பது. நன்றாக உடை அணிந்த பலர் படத்தில் வரிசையாக அமர்ந்தபடி கேமராவை நேராகப் பார்க்கின்றனர்.

முன்வரிசையில் பிரமுகர்கள் உள்ளனர். இந்தியாவின் மிக முக்கியமான காலனித்துவ நபர்களில் ஒருவரான வைஸ்ராய் லின்லித்கோ மற்றும் வங்காள கவர்னரான அவரது தாத்தா சர். ஜான் ஹெர்பர்ட் ஆகியோர் இதில் அடங்குவர்.

அவர்களின் காலடியில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். வெள்ளைச் சட்டையும், ஷார்ட்ஸும், முழங்கால் உயரத்திற்கு சாக்ஸும், பளபளப்பான ஷூவும் அணிந்திருக்கிறான். இவர்தான் சூசானாவின் தந்தை. வங்காள பஞ்சம் குறித்தோ, பிரிட்டிஷ் ஆட்சி குறித்தோ சூசானாவிற்கு பெரிதாக எதையும் அவர் சொல்லவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பஞ்சத்திற்கான காரணங்கள்

பிரிட்டிஷ் ஆளுநராக இருந்தவரின் பேத்தி பிபிசியிடம் கூறியது என்ன

பட மூலாதாரம், Susannah Herbert

படக்குறிப்பு, இந்த புகைப்படத்தில் (1940) வெள்ளை நிற உடையணிந்த சிறுவன் தான் சூசானாவின் தந்தை.

கிறிஸ்துமஸ் தாத்தா யானை மீது சவாரி வந்த நாள் போல, இந்தியாவில் தான் வளர்ந்தபோது நடந்த ஒரு சில கதைகளை மட்டுமே அவர் சூசானாவிற்கு சொல்லியிருந்தார். 1943-இன் பிற்பகுதியில் இறந்த சூசானாவின் தாத்தாவைப் பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை.

வங்காளப் பஞ்சத்திற்கு பல சிக்கலான காரணங்கள் இருந்தன. ஜான் ஹெர்பர்ட் வங்காளத்தில் மிக முக்கியமான காலனித்துவ நபராக இருந்தபோது, டெல்லியில் உள்ள மேலதிகாரிகளிடம் ஆட்சி குறித்த விவரங்களை அளிப்பார். அவர்கள் லண்டனில் இருக்கும் மேலதிகாரிகளிடம் அதைச் சொல்வார்கள்.

”ஹெர்பர்ட், பஞ்சத்துடன் நேரடியாக தொடர்புடைய காலனித்துவ அதிகாரி. ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் வங்காள மாகாணத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார்" என்று வரலாற்றாசிரியரும், 'தி ஹன்க்ரி பெங்கால்' புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் ஜனம் முகர்ஜி கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது அவர் செயல்படுத்திய கொள்கைகளில் ஒன்று 'டினயல்' (Denial- மறுப்பு) என்று அறியப்பட்டது.

இதன் கீழ் ஆயிரக்கணக்கான கிராமங்களில் படகுகளும், முக்கிய உணவான அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. இது ஜப்பானிய படையெடுப்பு குறித்த பயத்தால் செய்யப்பட்டது. எதிரிகளுக்கு உள்ளூர் வளங்கள் கிடைக்காமல் இருக்கவும், அவர்கள் இந்தியாவுக்குள் முன்னேறுவதை தடுக்கும் நோக்கத்துடனும் இது செய்யப்பட்டது.

இருப்பினும் இந்தக் காலனித்துவ கொள்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த உள்ளூர் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு செல்ல முடியவில்லை. கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. முக்கியமாக அரிசியை கொண்டு செல்ல முடியவில்லை.

வங்காளப் பஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்காளப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம்

'மேட் இன் பிரிட்டிஷ் இந்தியா'

விலைவாசி ஏற்கனவே அதிகமாக இருந்தது. டெல்லி காலனித்துவ அரசு பணத்தை அச்சடித்து, ஆசியாவில் போர் முன்னெடுப்புகளுக்கு பயன்படுத்தியது. லட்சக்கணக்கான நேச நாட்டு துருப்புகள் கொல்கத்தாவில் தங்கி உள்ளூர் உணவு வளங்களை பயன்படுத்தினர்.

ஜப்பானியர்களின் கைகளில் சிக்கிய பிறகு, பர்மாவிலிருந்து வங்காளத்திற்கு அரிசி இறக்குமதி நின்றது. லாபத்திற்காக அரிசி அடிக்கடி பதுக்கி வைக்கப்பட்டது. ஒரு கொடிய சூறாவளி வங்காளத்தின் நெற் பயிர்களின் பெரும்பகுதியை அழித்தது. போருக்கு நடுவே உணவு இறக்குமதிக்கான தொடர்ச்சியான கோரிக்கைகள், போர் அமைச்சரவை மற்றும் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரால் நிராகரிக்கப்பட்டன அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

சர். ஜான் ஹெர்பர்ட், அவரது மனைவி லேடி மேரி

பட மூலாதாரம், Herbert family

படக்குறிப்பு, 1940இல் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் சர். ஜான் ஹெர்பர்ட் அவரது மனைவி லேடி மேரியுடன் காணப்படுகிறார்.

இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வங்காள ஆளுநராக இருந்தவரின் பேத்தியான சூசானா, பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுகுறித்து ஏன் வெட்கித் தலைகுனிகிறார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவர் அதற்கு விளக்கமளிக்க முயற்சித்தார்.

"நான் சிறுவயதில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் எனக்கிருந்த உறவு குறித்து பெருமையும், கர்வமும் கொண்டிருந்தேன்,” என்று தெரிவித்தார்.

"தாத்தாவின் பழைய துணிகளை என்னிடம் வைத்திருப்பேன். 'மேட் இன் பிரிட்டிஷ் இந்தியா' என்று எழுதப்பட்ட சால்வைகள் (scarves) இருந்தன. இப்போது அலமாரியின் பின்புறத்தில் அவற்றை பார்க்கும்போது என் உடல் நடுங்குகிறது. ​​​​நான் ஏன் இவற்றை அணிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் லேபிளில் உள்ள 'பிரிட்டிஷ் இந்தியா' என்ற வார்த்தைகள் இப்போது அணிவதற்கு பொருத்தமற்றதாகத் தெரிகிறது." என்று அவர் குறிப்பிட்டார்.

சால்வை

பட மூலாதாரம், Herbert family

படக்குறிப்பு, பிரிட்டிஷ் இந்தியா லேபிளுடன் கூடிய சால்வை.

பாட்டியின் கடிதம்

பிரிட்டிஷ் இந்தியாவில் தனது தாத்தாவின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் சூசானா விரும்புகிறார். வங்காள பஞ்சத்தைப் பற்றி அவரால் முடிந்த அனைத்தையும் படிக்கிறார். வேல்ஸில் உள்ள தனது குடும்ப வீட்டில் இருக்கும் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழைய ஆவணங்களை அவர் ஆராய்கிறார். தன் தாத்தாவைப் பற்றி மேலும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்.

"அவர் செயல்படுத்திய மற்றும் துவக்கிய கொள்கைகள், பஞ்சத்தின் அளவு மற்றும் தாக்கத்தில் பெரும் பங்கு வகித்தன என்பதில் சந்தேகமில்லை. அவரிடம் திறமைகள் இருந்தன, அவருக்கு மரியாதை இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தொலைதூர மூலையில் 6 கோடி மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது," என்று சூசானா குறிப்பிட்டார்.

குடும்ப காப்பகத்தில் தனது பாட்டி லேடி மேரியின் கடிதத்தை அவர் கண்டார். 1939ஆம் ஆண்டில் தனது கணவருக்கு ஆளுநர் பணி வழங்கப்பட்டதை அறிந்தபோது அவர் எழுதிய கடிதம் இது. இதன் பின்னால் இருக்கும் சாதகங்களும், பாதகங்களும் அதில் விளக்கப்பட்டிருந்தன. தனக்குப் போக விருப்பமில்லை என்றும் ஆனால் ஹெர்பர்ட் எந்த முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்றும் லேடி மேரி அதில் குறிப்பிட்டிருந்தார்.

"நீங்கள் அவற்றை (கடிதங்களை) எதிர்காலத்தில் படிக்கிறீர்கள். எழுதியவருக்கும், படிப்பவருக்கும் தெரியாததை அறிந்து கொண்டு அவற்றைப் படிக்கிறீர்கள். கடந்த காலத்திற்கு உங்களால் பயணிக்க முடிந்தால், இந்தியாவுக்கு போகாதீர்கள், நிச்சயம் போகாதீர்கள், உங்களால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள்.” என்கிறார் சூசானா.

வைஸ்ராய் சர். ஆர்க்கிபால்ட் வேவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் வைஸ்ராய் சர். ஆர்க்கிபால்ட் வேவல் 1943இன் பிற்பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

கடந்த சில மாதங்களாக சூசானா ஹெர்பர்ட்டின் கடந்த காலம் குறித்த ஆய்வை நான் பின்தொடர்ந்து வருகிறேன். அவருக்கு தனது தாத்தாவைப் பற்றி பல விரிவான கேள்விகள் உள்ளன. வரலாற்றாசிரியர் ஜனம் முகர்ஜியிடம் அவற்றை நேரடியாகக் கேட்க சூசானா ஆர்வமாக இருந்தார். அவர்கள் ஜூன் மாதம் சந்தித்தனர். ஜான் ஹெர்பர்ட்டின் பேத்திக்கு எதிரே நான் அமர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று ஜனம் கூறுகிறார்.

ஒரு இளம் அதிகாரியாக டெல்லியில் சிறிது காலம் தங்கியிருந்ததைத் தவிர இந்திய அரசியலில் கிட்டத்தட்ட எந்த அனுபவமும் இல்லாத, பிரிட்டனில் மாகாண எம்.பி-யாகவும், அரசு கொறடாவாகவும் மட்டுமே இருந்த தனது தாத்தா, வங்காள மாகாண ஆளுனராக ஏன் நியமிக்கப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள சூசானா விரும்பினார்.

"இது காலனித்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது ஆதிக்கம் பற்றிய யோசனையிலிருந்து உருவாகிறது." என்று விளக்குகிறார் ஜனம்.

"காலனித்துவ அனுபவம் இல்லாத, மொழியியல் திறன் இல்லாத, பிரிட்டனுக்கு வெளியே எந்த அரசியல் அமைப்பிலும் பணியாற்றாத எம்.பி ஒருவர் கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் சென்று அமர்ந்து, தனக்கு எதுவுமே தெரியாத மக்கள் பற்றிய முடிவுகளை எடுக்க முடிந்தது,” என்கிறார் அவர்.

'இந்தியாவின் பலவீனமான கவர்னர்'

வங்காளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் ஹெர்பர்ட் பிரபலமாக இருக்கவில்லை. கூடவே டெல்லியில் உள்ள வைஸ்ராய் லின்லித்கோ உட்பட அவரது மேலதிகாரிகளும் அவரது தகுதிகளை சந்தேகித்தனர்.

"லின்லித்கோ அவரை இந்தியாவின் பலவீனமான கவர்னர் என்று அழைத்தார். உண்மையில் அவரை நீக்க விரும்பினார். ஆனால் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் கவலைப்பட்டார்," என்று ஜனம் கூறினார்.

"இதைக் கேட்பதற்கே கஷ்டமாக உள்ளது" என்று சூசானா பதிலளித்தார்.

இந்த இருவருக்கும் இடையே மற்றொரு தனித்துவமான தொடர்பும் உள்ளது என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஜனம் மற்றும் சூசன்னாவின் தந்தைகள் கொல்கத்தாவில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் சிறுவர்களாக இருந்தனர். ஆனால் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர். இருவரும் தற்போது இந்த உலகத்தில் இல்லை. குறைந்தபட்சம் சூசானாவிடம் அவருடைய புகைபடங்கள் உள்ளன. ஆனால் ஜனத்திடம் தனது தந்தையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் எதுவும் இல்லை.

"அவர் சந்தித்த பயங்கரங்கள் மற்றும் சிறுவயதில் காலனித்துவ போர் மண்டலத்தில் தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறிய சில கதைகள் மட்டுமே எனக்குத் தெரியும்,” என்கிறார் ஜனம்.

"நான் என் தந்தையின் மிகவும் கஷ்டமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறேன். மேலும் அவரது வழித்தோன்றலாக அது என்னை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்," என்கிறார் அவர்.

பின்னர் நான் எதிர்பார்க்காத ஒன்றை அவர் சொன்னார்.

"என் தாத்தாவும் காலனித்துவ போலீஸ் படையில் பணிபுரிந்தார். அதனால் என் தாத்தாவும் காலனித்துவ அமைப்பின் குற்றப்பொறுப்பில் பங்குடையவர். எனவே நமது புரிதலுக்கான உந்துதல்களில் சுவாரசியமான ஒத்த தன்மை உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

சூசானா, ஜனம்
படக்குறிப்பு, தன் தாத்தா நேர்மையற்ற முறையில் செயல்பட்டார் என்பதை கற்பனை செய்வது கடினம் என்று சூசானா கூறுகிறார்.

வங்காளப் பஞ்சத்தில் குறைந்தது முப்பது லட்சம் பேர் இறந்தனர். அவர்களுக்கு உலகில் எங்குமே நினைவுச் சின்னமோ, நினைவுப் பட்டயமோ இல்லை. சூசானாவால் குறைந்தபட்சம் தனது தாத்தாவின் நினைவு சின்னத்தையாவது சுட்டிக்காட்ட முடியும்.

"நாங்கள் வணங்கும் தேவாலயத்தில் அவரது நினைவாக ஒரு பட்டயம் மட்டுமே உள்ளது. ஒருவேளை கொல்கத்தாவில் அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.” என்று சூசானா கூறினார். மரியாதைக்குரியவர் என்பது தனது தாத்தாவை விவரிக்க சூசானா பயன்படுத்திய வார்த்தை. இருப்பினும் அவருடைய தோல்விகளை அவர் ஒப்புக்கொள்கிறார்.

"நாம் முதலில் சொன்னதை விட வரலாறு மிகவும் சிக்கலானது என்பதை ஏற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிதானது என்றாலும், ஜான் ஹெர்பர்ட் எந்த வகையிலும் நேர்மையற்ற முறையில் செயல்பட்டிருப்பார் என்பதை கற்பனை செய்வது கடினம் என்று நான் கருதுகிறேன்.” என்கிறார் சூசானா.

ஜனம் வேறு விதமாக சிந்திக்கிறார், "நோக்கம் பற்றிய கேள்விகளில் எனக்கு ஆர்வம் இல்லை. வரலாற்று நிகழ்வுகளின் வரிசையில் தான் நான் அதிக ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதை நோக்கங்கள் எப்போதும் மறைக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டார்.

'அவமான உணர்வு'

வங்காளப் பஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சத்தின் போது உணவுக்காக வரிசையில் நிற்கும் இந்திய மக்கள்

80 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிகழ்வு சிக்கலானதாகவும், மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. பல மாதங்கள் ஆராய்ச்சி செய்த பிறகும் சூசானாவுக்கு 'நடந்த சம்பவத்திற்கு வெட்கப்படும்' உணர்வுதான் இப்போதும் உள்ளதா? தன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டுவிட்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

"வெட்கம் என்ற வார்த்தை எனது உணர்வுகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். இது என்னைப் பற்றியது மற்றும் எனது எண்ணங்களைப் பற்றியது அல்ல. இது ஒரு பெரிய திட்டத்தின் பகுதி. நாம் இப்போது இருக்கும் இடத்தை எப்படி அடைந்தோம் என்பதைப் புரிந்துகொள்வதும், அதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதுமே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நாம்? அதாவது பிரிட்டன் அதாவது இந்த நாடு," என்றார் அவர்.

ஜனம் முகர்ஜியும் இதை ஒப்புக்கொள்கிறார். "ஒரு காலனித்துவ அதிகாரியின் வழித்தோன்றலுக்கு, அவமான உணர்வு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது பிரிட்டனின் அவமானம் என்று நான் கருதுகிறேன். அதாவது வங்காளத்தில் மக்கள் பட்டினியால் இறந்தனர். எனவே தனிப்பட்ட அளவிலும் கூட்டு அளவிலும் சரித்திரத்தை ஆராய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் சொன்னார்.

சூசானா தன் குடும்ப பாரம்பரியம் பற்றி சிந்திக்கிறார். தனது கண்டுபிடிப்புகளை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். குடும்பத்தினர் அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை.

வேல்ஸில் உள்ள தனது பூர்வீக வீட்டில் சேமிக்கப்பட்டுள்ள காகிதக் குவியல்களை ஆராய்வதற்கு தன் குழந்தைகள் உதவுவார்கள் என்று சூசானா நம்புகிறார். பிரிட்டன் தனது போர் சரித்திரங்கள் மற்றும் காலனித்துவ வரலாற்றின் இந்தக் கடினமான அத்தியாயங்களை எப்படிக் கையாள்வது என்று சிந்தித்து வரும் இந்த நேரத்தில், சூசானாவின் சந்ததிகளும் ஒரு சிக்கலான பாரம்பரியத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)