வடகொரியா எழுப்பிவரும் 'எல்லைச் சுவர்' - தென் கொரியாவுடன் நிலைமை மோசமாகிறதா?

வடகொரியா, தென் கொரியா
    • எழுதியவர், ஜேக் ஹார்டன், யி மா, டேனியல் பலும்போ
    • பதவி, பிபிசி வெரிஃபை

வடகொரியா, தென் கொரியாவுடனான தனது எல்லைக்கு அருகில் பல இடங்களில் சுவர் போலக்காட்சியளிக்கும் கட்டுமானங்களை மேற்கொண்டிருப்பதை புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

ராணுவமயமாக்கல் இல்லாத மண்டலத்திற்குள் (டி.எம்.இசட் - DMZ = Demilitarized Zone) நிலம் வெறுமையாக்கப்பட்டு சமன் செய்யப்பட்டிருப்பதை, ’பிபிசி வெரிஃபை’-ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட படங்கள் காட்டுகின்றன. இது தென் கொரியாவுடன் நீண்டகாலமாக இருந்த போர்நிறுத்தத்தை மீறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை'

DMZ என்பது வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையே 4.கி.மீ அகலமான ராணுவ நடவடிக்கை விலக்கப்பட்டப் பகுதி ஆகும்.

இருநாடுகளும் அதிகாரபூர்வமாக இன்னும் போரில் உள்ளதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் அந்த நாடுகளுக்கு இடையில் இதுவரை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. DMZ இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் பக்கத்தில் இருக்கும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன.

இந்த சமீபத்திய செயல்பாடு 'அசாதாரணமானது' மற்றும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில் நடந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இந்தக் கட்டத்தில் வட கொரியா தனது ராணுவ இருப்பு மற்றும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த விரும்புகிறது என்று மட்டுமே நாம் ஊகிக்க முடியும்," என்று தென்கொரியத் தலைநகர் சியோலை தளமாகக் கொண்ட நிபுணர் தளமான என்கே நியூஸின் செய்தியாளர் ஷ்ரேயஸ் ரெட்டி கூறுகிறார்.

'இதுவே முதல் முறை'

வட கொரியாவால் அந்த பகுதியில் செய்யப்படும் மாற்றங்களைக் காணும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 7கி.மீ. நீள எல்லையின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது. DMZ-க்கு அருகில் தடைகள் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் மூன்று பிரிவுகளை படங்கள் காட்டுகின்றன.

எல்லையின் கிழக்கு முனைக்கு அருகில் மொத்தம் சுமார் 1கி.மீ. நீள பகுதியில் இது அமைந்துள்ளது. எல்லையின் பிற பகுதிகளிலும் தடுப்புகள் கட்டப்பட்டிருக்கலாம். இப்பகுதியைக்காட்டும் முந்தைய உயர் தெளிவுத்திறன் படங்கள் இல்லாததால், கட்டுமானம் எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் 2023-ஆம் ஆண்டு நவம்பரில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் இந்த கட்டமைப்புகள் தெரியவில்லை.

"இரு நாடுகளையும் பிரிக்கும் இடத்தில் அவர்கள் ஒரு தடையை உருவாக்குவது இதுவே முதல் முறை என்று நான் கருதுகிறேன்," என்று சியோலின் அசன் இன்ஸ்டிடியூட் ஃபார் பாலிசி ஸ்டடீஸின் ராணுவ மற்றும் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் யுகே யாங் பிபிசியிடம் கூறினார்.

"1990-களில் போர் வெடிக்கும் பட்சத்தில் பீரங்கிகள் முன்னேறுவதைத் தடுப்பதற்காக வட கொரியா பீரங்கிகள் தடுப்புச் சுவர்களை அமைத்தது. ஆனால் சமீபத்தில் வட கொரியா 2-3 மீட்டர் உயரத்திற்கு சுவர்களை எழுப்புகிறது, மேலும் அவை பீரங்கி தடுப்புச்சுவர் போல் இல்லை,” என்கிறார் டாக்டர் யாங்.

வடகொரியா, தென் கொரியா

"சுவர்களின் வடிவமானது அவை [பீரங்கிகளுக்கான] தடைகள் மட்டுமல்ல, ஒரு பகுதியைப் பிரிக்கும் வகையிலானது என்பதைக்காட்டுகிறது," என்கிறார் செயற்கைக்கோள் படங்களை மதிப்பாய்வு செய்த டாக்டர் யாங்.

DMZ-இன் வட கொரியப்பகுதியில் நிலம் காலியாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

புதிதாகக் கட்டப்பட்ட அணுகல் சாலை ஒன்றையும் எல்லையின் கிழக்கு முனையின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

மேலே உள்ள வரைபடத்தில் DMZ-இன் சரியான வடக்கு எல்லையை வரையும்போது, ​​எல்லை மேப்பிங் குறித்த பிபிசி ஆராய்ச்சியை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏனென்றால், எல்லையின் கிடைக்கக்கூடிய வரைபடங்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் நாங்கள் ஆராய்ந்த பெரும்பாலான வரைபடங்கள் DMZ-க்குள் நிலம் காலியாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

'கண்காணிப்புக் கோபுரங்களை அமைப்பதை எளிதாக்கும்'

'முக்கிய சாலைகளை வலுப்படுத்துதல், கண்ணிவெடிகள் இடுதல் மற்றும் தரிசு நிலங்களில் செடிகொடிகளை அகற்றி சமன் செய்தல்' தொடர்பான தற்போதைய நடவடிக்கையை ராணுவம் அடையாளம் கண்டுள்ளது என்று தென் கொரிய கூட்டுப்படைத் தலைவர்கள் குழு (ஜே.சி.எஸ்) அதிகாரி ஒருவர் கூறினார்.

"நிலத்தை சுத்தம் செய்வதன் நோக்கம் ராணுவ மற்றும் ராணுவம் அல்லாத அம்சங்களைக் கொண்டிருக்கலாம்,” என்று கொரியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு பேராசிரியரான கில் ஜு பான் கூறினார்.

"இது கண்காணிப்புக் கோபுரங்களை அமைப்பதை எளிதாக்கும். இதன் மூலம் தென் கொரியாவில் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பது வட கொரியாவுக்கு எளிதாகிவிடும். எல்லையை கடந்து தென் கொரியாவிற்குள் நுழைய முயற்சிப்பவர்களை அடையாளம் காணவும் இது உதவும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடகொரியா, தென் கொரியா

"DMZ இல் கட்டமைப்புகளை உருவாக்குவது அசாதாரணமானது மற்றும் முன்கூட்டிய ஆலோசனை கலப்புகள் இல்லாமல் போர் நிறுத்தத்தை மீறுவதாகும்," என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் ஆசியா மற்றும் கொரியாவிற்கான மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் விக்டர் சா கருதுகிறார். கொரியப் போர் 1953-இல் ஒரு போர்நிறுத்தத்துடன் முடிவடைந்தது.

"ராணுவ நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பகுதியின் 'உள்ளில் இருந்து, உள்ளே அல்லது எதிராக’ எந்த விரோதச் செயல்களையும் செய்ய மாட்டோம்," என்று இதில் இரு தரப்பும் உறுதியளித்தன. ஆனால் இறுதி சமாதான உடன்பாடு எட்டப்படவில்லை.

சில வல்லுநர்கள் கிம் தெரிவித்த இந்த கருத்தை 'முன்னோடியில்லாதது' என்று அழைத்தனர். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரியாவை 'பெரிய எதிரி' என்று கிம் முத்திரை குத்தியதிலிருந்து அந்த நாட்டின் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை அவர்கள் கண்டனர்.

வடகொரியா, தென் கொரியா
படக்குறிப்பு, வடகொரிய, தென்கொரிய தலைவர்கள் கடைசியாக 2018-ஆம் ஆண்டு சந்தித்தனர்

வடகொரியாவின் மனநிலை என்ன?

அப்போதிருந்து இரண்டு நாடுகளின் ஒற்றுமையைக் குறிக்கும் சின்னங்களை வடகொரியா அகற்றத் தொடங்கியது. நினைவுச்சின்னங்களை இடிப்பது மற்றும் அரசு வலைதளங்களில் உள்ள ஒற்றுமை பற்றிய குறிப்புகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது.

"தெற்கிலிருந்து தாக்குதலைத் தடுக்க வட கொரியாவுக்கு உண்மையில் மேலும் தடைகள் தேவையில்லை. ஆனால் இந்த எல்லைத் தடைகளை அமைப்பதன் மூலம் வட கொரியா, இரு நாடுகளும் ஒன்றுபடுவதை தான் விரும்பவில்லை என்று சமிக்ஞை செய்கிறது" என்று கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் தலைவர் டாக்டர் ரேமன் பாச்சிகோ பார்டோ.

இது கிம்மின் பரந்த நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது என்றும் சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"அமெரிக்காவுடனோ அல்லது தென் கொரியாவுடனோ பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம் இருப்பது போல் வடகொரியா நடிப்பது கூட இல்லை. மேலும் பேச்சுவார்த்தைக்கான ஜப்பானின் சமீபத்திய முயற்சிகளையும் அது நிராகரித்துவிட்டது," என்று ஆக்ஸ்போர்டில் உள்ள கொரிய தீபகற்ப ஆராய்ச்சியாளர் டாக்டர் எட்வர்ட் ஹோவெல் கூறுகிறார்.

"ரஷ்யாவுடன் வட கொரியாவின் நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இரு கொரியாக்களுக்கு இடையே இந்த ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால் ஆச்சரியம் ஏதும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)