காஸா போர்: அழிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு, தவிக்கும் குழந்தைகள் - என்ன நடக்கிறது?

- எழுதியவர், ஜான் டோனிசன்
- பதவி, பிபிசி நிருபர்
ஐந்து வயது சிறுமி தாலா இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் கண் விழித்திருந்தார், ஆனால் உடலில் அசைவில்லை.
தாலா கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் சிறுமியின் படுக்கைக்கு அருகில் அவரது தந்தை இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் அமர்ந்திருந்தார். சிறுமியின் மெல்லிய மணிக்கட்டில் டிரிப்ஸ் செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொந்தரவு செய்யாமல், சிறுமியை கவனமாகப் பற்றிக் கொண்டார் தந்தை இப்ராஹிம்.
ஏறக்குறைய நாற்பது டிகிரிக்கும் அதிகமான வெப்பம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஆகிய சூழல்கள் தனது மகளை மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியதை அவர் அறிவார்.
"நிலைமை மோசமாகி வருகிறது," என்கிறார் அவர்.
"எங்கள் கூடாரத்தில் வெப்பநிலை கற்பனை செய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும். நாங்கள் மாசுபட்ட தண்ணீரைக் குடிக்கிறோம். அதனால் சிறியவர்கள் மற்றும் வயதானவர்கள் விரைவில் நோய்வாய்ப்படுகிறார்கள்," என்று விவரித்தார்.
அவர்களது வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான காஸா மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வசதிகளற்ற தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். தண்ணீர் சுத்தமாக இருந்தாலும் அசுத்தமாக இருந்தாலும் கிடைப்பது கஷ்டம். தண்ணீருக்காக மக்கள் அன்றாடம் போராட வேண்டியுள்ளது. நீர் விநியோக மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
கழிவுநீர் அமைப்பு மோசமாகச் சேதமடைந்து, ஒரு சில கழிப்பறைகள் மட்டுமே இருப்பதால், அங்குள்ள தண்ணீர் எளிதில் மாசுபடுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முற்றிலும் அழிக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார கட்டமைப்பு
"காஸா பகுதியில் தற்போது ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகப்பெரிய காரணம், இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாசுப்பட்ட தண்ணீர் தான்," என்று நாசர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் தலைமை மருத்துவர் அஹ்மத் அல்-ஃபாரி கூறுகிறார்.
"முதல் பிரச்னை வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகள் ஆகும். இது நீரிழப்புக்குக் காரணமாகிறது," என்று அவர் கூறுகிறார்.
"இரண்டாவது பிரச்னை, ஹெபடைடிஸ் சி அல்லது ஏ ஆகும். இவையும், குடல் நோய் தொற்றைப் போன்று ஆபத்தான நோய்கள் தான்,” என்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக கூற்றுபடி, காஸாவின் 67% நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
"இங்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மீண்டும் நிறுவ எங்களுக்கு மிகப்பெரிய சர்வதேச முயற்சி தேவை," என்கிறார் கான் யூனிஸ் நகராட்சியின் நீர் பொறியாளர் சலாம் ஷரப்.
"கான் யூனிஸில் உள்ள நாங்கள் 170கி.மீ. முதல் 200கி.மீ. வரையிலான குழாய்களை இழந்துள்ளோம். அவை கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளுடன் சேர்த்து முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன,” என்கிறார்.
கெரெம் ஷாலோம் கடவுப் பாதையின் வழியாக தினமும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் சுமார் 200 ட்ரக்குகளை அனுமதிப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. எதிர்தரப்பில் உள்ள நிவாரண அமைப்புகளால் அதை விநியோகிக்க இயலாமல் இருப்பதே பிரச்னை என்றும் கூறுகிறது.

தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
மனிதாபிமான அமைப்புகள், காஸாவில் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது மிகவும் ஆபத்தானது என்று வாதிடுகின்றனர். ஏனெனில், தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
மேலும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது அனுமதிக்கப்பட்ட நிவாரணத்தின் அளவு மிகவும் சிறியது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மாசுபட்ட நீர் ஆகியவற்றால் இந்தச் சூழல் கடுமையான விளைவை ஏற்படுத்தும்.
சிறுமி தாலா வைக்கப்பட்டிருந்த தளத்துக்குக் கீழ் தளத்தில் பெருமூளை வாதம் கொண்ட ஒன்பது வயது சிறுவன் யூனிஸ் ஜுமா, ஒரு படுக்கையில் அரை மயக்கத்தில் படுத்திருக்கிறார்.
எட்டு மாதப் போர்ச் சூழல், அவரது உடல்நிலையைத் தீவிரமாகப் பாதித்து மோசமாக்கியதாக அவரது தாயார் கானிமா கூறுகிறார்.
"அவர் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீரிழப்புப் பிரச்னைகளால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு இப்போது நீங்கள் பார்ப்பதை போல் ஆனார்," என்று கானிமா கூறுகிறார்.

கொள்ளையடிக்கப்படும் நிவாரணப் பொருட்கள்
"பாட்டில் தண்ணீர் கிடைப்பதில்லை. குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள் - கிடைக்கும் தண்ணீரும் அசுத்தமாக எங்களை வந்தடைகிறது," என்று கானிமா மேலும் கூறுகிறார்.
உணவு மற்றும் தண்ணீருக்கானத் தேவை காஸாவில் அதிகரித்துள்ளதால், அவை கொள்ளையடிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்களால் நிவாரண டிரக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக அவர் கூறுகிறார்.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், பஞ்சத்தை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கைது செய்யுமாறு கோரினார்.
இஸ்ரேலிய அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சீற்றத்துடன் பதிலளித்துள்ளது.
காஸாவில் ஏற்கனவே பரவலான பஞ்சம் இருப்பதாக உதவி நிறுவனங்களின் கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பாலத்தீனியர்களின் துயரத்துக்கு ஹமாஸ் தான் போரை ஆரம்பித்தது என்றும் இஸ்ரேல் கூறியது.
10 லட்சத்துக்கும் அதிகமான காஸா மக்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த அளவிலான பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர்களின் கூற்றுப்படி, காஸாவில் மனிதாபிமானப் பேரழிவு எதுவும் இல்லை, நெருக்கடி இல்லை என்று கூறி வருகின்றனர்.
நாசரில் உள்ள மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் படுக்கைகளுக்கு அருகில் இருக்கும் இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலாத் மற்றும் கானிமா ஆகியோருக்கு அது அப்படித் தெரியவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












