10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: நீட் போன்ற தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க புதிய சட்டம்

நீட், நெட் தேர்வு முறைகேடு, புதிய சட்டம்

பட மூலாதாரம், Getty Images

நீட் மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இரவு மத்திய அரசு வெளியிட்டது.

புதிய சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நான்கு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024க்கு ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டத்தை நாட்டில் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

யுஜிசி-நெட் 2024 தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

யுஜிசி-நெட் தேர்வு ரத்து மற்றும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதவிர, இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை அதாவது என்.டி.ஏ. குறித்தும் பல கேள்விகள் எழுகின்றன.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சட்டவிரோத செயல்கள்

இந்தப் புதிய சட்டத்தின்படி, கீழ்க்கண்ட செயல்கள் சட்டவிரோதமாகக் கருதப்படும்.

  • ஏதேனும் வினாத்தாள், விடைக்குறிப்பு (Answer Key) அல்லது அதன் ஒரு பகுதியை கசியவிடுதல். இவற்றை கசியவிடுவதற்கு மற்றவர்களுக்கு உதவுதல் அல்லது துணைபுரிதல்
  • வினாத்தாள்கள் அல்லது ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல்
  • தேர்வின் போது கேள்விகளுக்கு பதில் அளித்தல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விண்ணப்பதாரருக்கு உதவுதல், ஓ.எம்.ஆர் விடைத்தாளை மாற்றியமைத்தல்
  • அரசு வகுத்துள்ள விதிகளை வேண்டுமென்றே மீறுதல்
  • இறுதி தரப் பட்டியலுக்கான முக்கியமான ஆவணங்களைச் சிதைத்தல்
  • கணினி வலையமைப்பு அல்லது தேர்வு தொடர்பான உபகரணங்களில் முறைகேடு செய்தல், போலி இணையதளங்களை உருவாக்குதல், போலி தேர்வுகளை மேற்கொள்வது, போலி ஆவணங்களை வழங்குதல்
  • சம்பந்தப்பட்ட தேர்வுக்கு மிரட்டல் விடுத்தல்

தண்டனை விவரம்

மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் நடவடிக்கைக்கு உட்பட்டதாகவும் ஜாமீனில் வெளிவர முடியாததாகவும் இருக்கும்.

இந்த வழக்குகளின் விசாரணை, துணைக் காவல் கண்காணிப்பாளர் அல்லது அவரை விட உயர் அதிகாரிகளாலோ மேற்கொள்ளப்படும். விசாரணையை மத்திய அமைப்புகளிடம் ஒப்படைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கும்.

நீட் தேர்வு சர்ச்சை - தாள் கசிவில் ஈடுபட்டால் என்ன தண்டனை - புதிய சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சட்டத்தின் கீழ், தேர்வு தொடர்பான முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

தேர்வுக்கான சேவைகளை வழங்குபவர்களும் இந்த சட்டத்தின் கீழ் கையாளப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட சேவை வழங்குநர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு ஆகும் செலவும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அத்தகைய சேவை வழங்குநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு எந்த தேர்வும் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சேவையை வழங்கும் சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள ஒரு இயக்குநர் அல்லது மூத்த நபரின் ஒப்புதலுடன் சட்டவிரோத செயல்கள் செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ஒரு கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

தேர்வில் சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது சேவை வழங்குநர்கள் யாரேனும் சதி செய்ததற்காக நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அபராதத் தொகை குறைந்தது ஒரு கோடி ரூபாயாக இருக்கும்.

நீட் மற்றும் நெட் தேர்வுகளில் குழப்பம்

நீட் மற்றும் நெட் ஆகிய இரண்டு தேர்வுகளிலும் ஏற்பட்ட குழப்பம் கடந்த வாரத்தில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் ஜூன் 18 அன்று நடத்தப்பட்ட யுஜிசி-நெட் தேர்வை (தேசிய தகுதித் தேர்வு) மறுநாள் ரத்து செய்தது. தேர்வில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தியது. ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர்.

தேர்வின் இரண்டாம் நாளான ஜூன் 19-ம் தேதி சைபர் கிரைம் துறையிடம் இருந்து பல்கலைக்கழக மானியக் குழு சில முக்கிய தகவல்களைப் பெற்றது. அதன் பிறகு தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தேர்வு முறையின் புனிதத்தன்மையை பராமரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

நீட் தேர்வு சர்ச்சை - தாள் கசிவில் ஈடுபட்டால் என்ன தண்டனை - புதிய சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், ANI

நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு, கருணை மதிப்பெண்ணை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவோம் என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

நேர விரயத்தைக் காரணம் காட்டி 1,563 மாணவர்களுக்கு தன்னிச்சையாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் கூறி, தேர்வை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது.

தேர்வு வரலாற்றில் முதன்முறையாக 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள், அதாவது முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

ஆனால், தேர்வுகளை மீண்டும் நடத்தக் கோரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து பிகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)