மரக்காணம்: கள்ளச் சாராயத்திற்கு பலியான 14 பேரின் குடும்பங்கள் ஓராண்டுக்குப் பின் எப்படி உள்ளன?

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்
    • எழுதியவர், நந்தகுமார் & மாயகிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்து 57 இறந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், இதேபோன்று விஷச் சாராயம் குடித்து 14 பேர் இறந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்துக்கு பிபிசி சென்றது. ஓராண்டில் அந்த கிராமத்தில் என்ன மாறியிருக்கிறது?

"கடந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் மட்டும் 14 பேர் கள்ளச்சாராயத்திற்கு இறந்தது தமிழ்நாட்டிற்கே ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், தற்போது இதைவிட அதிக மரணங்கள் கருணாபுரத்தில் நிகழ்ந்திருப்பதைப் பார்த்து நெஞ்சமே பதறுகிறது. கருணாபுரம் பகுதி மக்களின் வலிகளை எங்களால் உணர முடிகிறது," என வருந்துகின்றனர் எக்கியார்குப்பம் கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சியில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் கள்ளச்சாராயத்திற்கு அதிக உயிர்களைப் பறிகொடுத்த பகுதியாக கள்ளக்குறிச்சியின் கருணாபுரத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது எக்கியார்குப்பம். 2023-ஆம் ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். இதில் 14 பேர் எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கருணாபுரத்திற்கும், எக்கியார்குப்பத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகள். கருணாபுரத்தில் இறந்தவர்களும் மூட்டை தூக்கும் கூலி வேலைகளைச் செய்துவந்த பட்டியல் இன மக்கள். எக்கியார்குப்பத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் மீன்பிடித் தொழிலாளர்கள்.

கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் வசிக்கும் கடலை ஒட்டியுள்ள அமைதியான மீனவ கிராமமான எக்கியார்குப்பம், கள்ளச்சாராய மரணங்களுக்கு பிறகே அதிகம் அறியப்பட்டது.

மரக்காணம்

குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள்

"எங்கள் கிராமத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் குடும்பத் தலைவர்கள். அவர்களை நம்பித்தான் அவர்களது குடும்பமே இருந்தது. ஓராண்டில் அந்தக் குடும்பங்களின் சூழ்நிலையே மாறியுள்ளது," என்றனர் அப்பகுதி மீனவர்கள்.

"அன்றைய தினத்தை யாராலும் மறக்க முடியாது. கிராமத்தின் மையப் பகுதியில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மரத்திற்கு அடியில்தான் சாராயம் விற்றார்கள். வழக்கமாக ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்பார்கள். ஆனால், அன்றையே தினமே வெறும் 30 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொழிலை முடித்துக்கொண்டு கடலிலிருந்து வந்தவர்கள், வழக்கம்போல நேரடியாகச் சாராயம் வாங்கச் சென்றிருக்கிறார்கள். வழக்கத்தை விடக் குறைவான விலைக்குக் கிடைக்கவே, சிலர் அதிக பாக்கெட்களை வாங்கியிருக்கிறார்கள்," என்றார் சண்முகம் என்ற மீனவர்.

"எங்கள் கிராமத்தில் சாராயம் விற்றது குறித்து போலிசாருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. 14 உயிர்போன பிறகே போலிசார் எங்கள் கிராமத்திற்கு வந்தார்கள். இப்போது எங்கள் கிராமத்தில் சாராயம் விற்கப்படவில்லை என்றாலும், மரக்காணத்தில் தாராளமாகச் சாராயம் கிடைக்கிறது," என்கிறார் கள்ளச்சாராயத்திற்குத் தனது தந்தை விஜயனை இழந்த 27 வயதான நேதாஜி.

எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, நேதாஜி

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறார் நேதாஜி. இவரும் இவரது தம்பியும் தந்தையும் இறந்தபிறகு தாயின் ஒற்றை வருமானத்தை நம்பியே உள்ளனர். இவரது தாயார் வீடு வீடாகச் சென்று மீன் விற்று வருகிறார்.

"என் அப்பா சாராயம் குடிப்பார், ஆனால் எங்களை நன்றாகவே பார்த்துக்கொண்டார். கூலிக்குக் கடலில் மீன் பிடிக்கும் வேலையைச் செய்துவந்த அவருக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம். இதில் 200 ரூபாயை அவருக்கேன எடுத்துக்கொள்வார். 400 ரூபாய் சம்பாதித்தாலும், 1,000 ரூபாய் சம்பாதித்தாலும் அவருடைய லிமிட் 200 ரூபாய்தான். மீதிச் சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவார்," என்கிறார் நேதாஜி.

தான் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என தனது தந்தை விரும்பியதாகவும், அதற்கான முயற்சியில் தற்போது இருப்பதாகவும் நேதாஜி கூறுகிறார்.

"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களது தந்தை இறந்தபிறகு, அவர்கள் பார்த்த தொழிலான மீன்பிடி தொழிலில் இறங்கிவிடுவார்கள். ஆனால், நான் அரசு வேலைக்குச் சென்று அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என உறுதியாக உள்ளேன்," என்கிறார்.

"எப்போது கடலுக்குச் சென்றுவிட்டு வந்தாலும் அப்பா சாராயம் குடித்துவிட்டுதான் வருவார். அன்றும் அப்படிதான் குடித்துவிட்டு வந்தார். அன்று நிறையக் குடித்துவிட்டதால் போதை அதிகமாக இருப்பதாக நினைத்திருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவருக்கு வலி ஏற்படத் துவங்கியது,” என்கிறார் நேதாஜி.

"சாராயம் குடிக்க வேண்டாம் எனப் பல முறை அப்பாவிடம் நானும் அம்மாவும் கூறியிருக்கிறோம். 'கடலில் எப்போது என்ன ஆகும் என்றே தெரியாது. வேலை கடுமையான உள்ளது. எனக்கு நிலையான மாத சம்பளம் என எதுவும் இல்லை. இதுபோன்ற ஒரு பொருளாதார சூழலில் உடல் அசதியைப் போக்க வேறு வழியில்லை’ என அப்பா கூறுவார்," என்கிறார் நேதாஜி.

அவ மரியாதை, உளவியல் சிக்கல்

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் என்ற பெயரை அப்பா பெற்றதால் உளவியல் ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் நேதாஜி.

"எனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என அம்மா நினைக்கிறார். ஆனால், சாராயம் குடித்து இறந்தவர் மகனுக்கு பெண் தர முடியாது எனச் சிலர் கூறிவிட்டனர். எனக்கு எவ்வித குடிப் பழக்கமும் இல்லை. ஆனால், எனது அப்பா மற்றும் எங்களது சமூக சூழலைப் பார்த்து நானும் சாராயம் குடிப்பேன் எனப் பலர் கருதுகின்றனர். இந்த அவப்பெயரிலிருந்து மீள்வது மிகப்பெரிய சவாலாக எங்கள் குடும்பத்திற்கு உள்ளது,” என்கிறார்.

''அதுமட்டுமல்ல, 'கள்ளச்சாராயம் குடித்துத்தானே இறந்துபோனார்கள் அவர்களின் குடும்பத்திற்கு எதற்கு 10 லட்சம் ரூபாய்?' என்ற ஏளனப்பேச்சையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. என் அப்பா மீது எவ்வளவு தவறு இருக்கிறதோ அதை விட அதிக தவறு அரசு மேல் உள்ளது. கொரோனா பொது முடக்கக் காலத்தில் மக்கள் மது இல்லாமல் இருந்தார்களே. அதுபோல கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே," என்கிறார் நேதாஜி.

இங்கு இன்னும் சாராயம் விற்கப்படுகிறதா எனக் கேட்டதற்கு, "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலரே இன்னும் சாராயம் குடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எங்கேயோ சென்று வாங்கி வந்து குடிக்கிறார்கள். இதை ஒழிக்கவே முடியாது போல என்ற விரக்தி நிலைக்கு நாங்கள் சென்றுவிட்டோம்," என வருந்தினார்.

மரக்காணம்

'படிப்பை நிறுத்திய பிள்ளைகள்'

ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் அஞ்சனா, கணவர் தனது ராஜவேல், மற்றும் தந்தை ஆகியோரை ஒரே நேரத்தில் கள்ளச்சாராயத்திற்குப் பறிகொடுத்தார்.

"பல ஆண்டுகளாகவே எங்கள் கிராமத்தில் சாராயம் விற்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுவை விடக் குறைவான விலையில் இது கிடைத்தால் இதைக் குடிக்கத் துவங்கிய எனது கணவர், பின்னர் இதற்கு அடிமையாகிவிட்டார். ஒரு வேளை சாராயம் இல்லையென்றாலும் கூட அவரது கைகள் நடுங்கத் துவங்கிவிடும்," என்கிறார் அஞ்சனா.

"அவர் உயிருடன் இருக்கும் வரை எங்களது 3 குழந்தைகளையும் படிக்க வைத்தார். வறுமை என்பதையே நாங்கள் பார்த்ததில்லை. ஏனெனில் நாங்கள் நம்பும் கடல் எங்களைக் கைவிட்டதில்லை. அவர் கடலுக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பியதில்லை. ஆனால் இப்போது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது," எனக் கூறுகிறார்.

அஞ்சனாவுக்கு 2 மகன்கள், ஒரு மகள். கணவர் இறந்தபிறகு, 2 மகன்களும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தற்போது கடலுக்கு செல்கின்றனர் என்கிறார் அஞ்சனா.

எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, அஞ்சனா

"அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தார்கள். இறுதிச் சடங்கிற்குச் செலவான பணம் போக, கொஞ்சம் பணம் மூலம் கடனை அடைத்தோம். மீதியுள்ள பணத்தை 3 குழந்தைகளுக்கான சேமிப்பாக வைத்திருக்கிறேன். குடும்பத்தை நடத்த நான் மீன் வெட்டும் வேலைக்குச் சென்றேன். நான் கஷ்டப்பட வேண்டாம் எனக் கூறிய எனது மகன்கள், இப்போது கடலுக்குச் சென்று வருகின்றனர். என் கணவர் தனிஆளாகக் குடும்பத்தை நடத்தினார். இப்போது அவருக்குப் பதில் 2 பேர் உழைக்கின்றனர். எப்படியாவது இங்கு மாடி வீடு கட்டிவிட வேண்டும் என்பது என் விருப்பம்," என்கிறார் அவர்.

"இப்போது கள்ளக்குறிச்சியிலும் என்னைப்போலப் பல பெண்கள் கணவரை இழந்திருப்பதைத் தெரிந்துகொண்டேன். கள்ளச்சாராயத்திற்கு பெண்கள் விதவைகளாகும் அவலத்திற்கு எங்கள் கிராமம் கடைசியாக இருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், இது தொடர்வதை பார்த்தால் இன்னும் கோபம்தான் அதிகமாகிறது,” என்கிறார் அஞ்சனா.

மிரட்டும் சாராய வியாபாரிகள்

மரணம் மட்டுமல்ல, அதன்பிறகும் பல இன்னல்களைச் சாராயம் குடித்தவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறார் தனது தந்தையை இழந்த ஆறுமுகம்.

"என் அப்பா உட்பட 14 பேர் இறந்தது மட்டுமல்ல, 2 நபர்களுக்குக் கண் பார்வை பறிபோனது. 10-க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகளால் தொழிலுக்குச் செல்லமுடியாமல் வீட்டிலேயே உள்ளனர். அவர்களுக்குப் பதில் அவர்களது மனைவியோ அல்லது குழந்தைகளோ வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை இன்னும் நடந்து வருகிறது. ஆனால், இன்னும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இங்குள்ள சில சாராய வியாபாரிகள், சிறைக்குச் செல்வது, பின்னர் மீண்டும் விடுதலையாவது என்பது தொடர்கதையாக உள்ளது. அரசு ஒரு கடும் நடவடிக்கை எடுக்காதவரையில், ஒரு தீர்வு கிடைக்காது," என்கிறார் ஆறுமுகம்.

எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, ஆறுமுகம்

கடந்த விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு நேதாஜி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சென்று வந்துள்ளனர்.

"எங்கள் கிராமத்தில் சாராயம் விற்று கைதானவர்களின் ஆதரவாளர்கள், விழுப்புரத்தில் நடந்த சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வந்திருந்தனர். 'ஏதோ தவறு நடந்துவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. சாராயம் விற்றது யார் என்பது தெரியாது’ என நீதிமன்றத்தில் கூறுமாறு எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். விசாரணை நியாயமாக நடந்து, அனைத்து குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்குமென நம்புகிறோம்," என்கிறார் நேதாஜி.

காவல்துறையின் பதில் என்ன?

மரக்காணத்தில் இன்னும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக இப்பகுதிகள் மக்களின் குற்றச்சாட்டு குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாயிடம் கேட்டோம்.

"மரக்காணம் கள்ளச்சாராய மரணத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கையை அதிகரித்திருக்கிறோம்," என்றார்.

"கடந்த ஓராண்டாக மரக்காணத்தில் சாராயம் விற்கப்படவில்லை. சாராய வியாபாரிகளின் தொடர்புடையவர்கள் சாட்சிகளை மிரட்டியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)