காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் தமிழ்நாட்டு கிராமம் - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்டம் அருகே, காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு குற்றம் செய்ததற்கான ‘வரி’ விதிக்கப்படுவதுடன், அதைச் செலுத்தாவிட்டால் ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் முறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இதைக் 'குத்தவரி' என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
இந்த நடைமுறை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்று வடக்கலூர் கிராமத் தலைவர் பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார்.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுத்து உறுதியாகக் களையப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காதல் திருமணம் செய்தால் ‘வரி’
கோவை மாவட்டம் அன்னூர் அருகே, காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் சாதிய தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ‘குத்தவரி’ (குற்றம் செய்ததற்கான வரி) செலுத்தினால் ஊரினுள் சேர்த்துக் கொள்ளும் வினோத நடைமுறை இருப்பதாகவும் புகார் எழுந்தது.
உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என அறிய, பிபிசி தமிழ் வடக்கலூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, காதல் திருமணம் செய்து கிராமத்தின் சட்ட விரோத பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசியது.
அன்னூரில் இருந்து 5 கி.மீ. தொலைவு பயணித்து வடக்கலூர் கிராமத்தை அடைந்தோம். சுற்றிலும் வாழைத் தோட்டங்கள், இதர வகை பயிர் சாகுபடி எனப் பசுமை சூழ்ந்த கிராமமாக இருந்தது.
சுமார் 220 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் 95 சதவீதம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் வசித்து வருகின்றனர். ஊரினுள் இந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் நிர்வகிக்கும், கருப்பராயன் கோவில் உள்ளது.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் காதல் திருமண ஜோடிகள், இந்தக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சாதிய தலைவர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டோர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

‘மாற்று மதத்தில் திருமணம் செய்தேன்’
இந்தக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிலர், பிபிசி தமிழிடம் தாங்கள் எதிர்கொண்ட பாதிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால், ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ‘குத்தவரி’ செலுத்தி ஊரினுள் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார் கூலி வேலைக்குச் செல்லும் 40 வயதான ரமேஷ்.
அதை விவரித்த ரமேஷ், ‘‘எனது பூர்வீகம் வடக்கலூர் கிராமம்தான். வெளியூரில் வேலைக்குச் சென்றபோது அங்கு மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து திரும்ப ஊருக்குள் வந்தேன். ஆனால், ஊர்ப்பன்னாடி எனப்படும் எங்கள் சாதியின் ஊர்த் தலைவரும் அவரது குழுவும் என்னை ஊரினுள் விடவில்லை."
"ஊருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்தது தவறு எனவும், இதற்கு ‘குத்தவரியாக’ 500 ரூபாய் ஊர் பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்,‘‘ என்றார்.
‘ஊருக்குள் சேர 200 வீடுகளில் மன்னிப்பு கேட்டேன்’

மேலும் தொடர்ந்த ரமேஷ், ‘‘ஊரினுள் உள்ள ஒவ்வொரு வீடாக நான் சென்று அவர்களிடம், கிராமத்திற்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்தது தவறு, ஊர் பஞ்சாயத்திற்கு வந்து என்னை மன்னித்து, எனது குத்தவரியை ஏற்றுக்கொண்டு ஊரினுள் சேர்த்துக்கொள்ளுங்கள் என மன்னிப்பு கேட்க வேண்டுமெனத் தெரிவித்தார்கள்,’’ என்கிறார் ரமேஷ்.
குத்தவரி கொடுத்ததால்தான் ஊரினுள் தாம் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அவர்.
ஊரினுள் சேர்ந்தது குறித்து விவரித்த ரமேஷ், ‘‘நான் வெளியூரில் இருந்து இங்கு வந்ததால் திருமணத்திற்குப் பிறகாவது நிம்மதியாக ஊரில் வாழலாம் என நினைத்தேன். இதற்காக குத்தவரி கொடுக்க முடிவெடுத்து, நான் ஊரினுள் உள்ள 200 வீடுகளுக்கும் சென்று மன்னிப்பு கேட்டேன். கருப்பராயன் கோவிலில் நடந்த ஊர் பஞ்சாயத்தில் நானும் என் மனைவியும் ஊருக்கு முன் மன்னிப்பு கேட்டுத்தான் ஊரில் சேர்ந்து கொண்டோம்,’’ என்றார்.
‘‘எனது அனுபவம் மிகவும் கொடுமையானது, சுதந்திர நாட்டில் சுதந்திரமாகத் திருமணம்கூடச் செய்து வாழ முடியவில்லை. இந்த பிற்போக்குத்தனம் ஒழிக்கப்பட வேண்டும்,’’ என்கிறார் ரமேஷ்.
‘என் தம்பி ஊரைவிட்டே போய்விட்டான்’

தனது தம்பி சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் ஊரைவிட்டே காலி செய்துவிட்டார் என்றும் கூறுகிறார் கருப்பசாமி.
பிபிசி தமிழிடம் பேசிய கருப்பசாமி, ‘’10 ஆண்டுகளுக்கு முன்பு என் தம்பி பாரதி, பட்டியலினத்தில் வேறொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். அவரை ஊர்ப்பன்னாடி ஊரினுள் சேர்த்துக் கொள்ளவில்லை. என் தம்பியிடம் பேசினாலோ வீட்டினுள் அனுமதித்தாலோ, என்னையும் எனது பெற்றோரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பேன் என மிரட்டினார்கள்,’’ என்கிறார் அவர்.
'ஊர் கட்டுப்பாட்டுக்காக குத்தவரி’ செலுத்த தனது தம்பிக்கு விருப்பம் இல்லாததால் அவர் ஊரை விட்டே காலி செய்து வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகவும், 10 ஆண்டுகளாக ஊருக்குள்ளேயே அவர் வரவில்லை என்றும் கூறுகிறார் கருப்பசாமி.
‘என் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்’

‘‘நான் இரண்டு ஆண்டுகளாக ஊர்ப் பன்னாடியாக இருந்தபோது, காதல் திருமணம் செய்வோர் ஒதுக்கி வைக்கப்படும் நடைமுறை இருந்தது. எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் அந்தப் பதவியில் இருந்து நான் விலகிக்கொண்டேன்,’’ என்கிறார் முன்னாள் ஊர்ப் பன்னாடியான சுந்தரம்.
சுந்தரத்தின் மகள் காதல் திருமணம் செய்ததால், அவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகத் தெரிவிக்கிறார்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘எனது மகள் 2021ஆம் ஆண்டு எங்கள் கிராமத்திலேயே வசித்து வரும் எங்கள் சாதியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்தார். இதற்காக என்னை ஒவ்வொரு வீடாக மன்னிப்பு கேட்கச் சொல்லி ‘குத்தவரி’ செலுத்தச் சொன்னார்கள். நான் இதற்கு மறுத்ததால் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவிட்டனர். ஆனால் என் மகள் மற்றும் அவரது மாமனார் ‘குத்தவரி’ செலுத்தி ஊரினுள் சேர்ந்து கொண்டனர்,’’ என்றார்.
‘‘நான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், என் மகள் என் வீட்டிற்கு வந்தால் அவர்களையும் ஒதுக்கிவிடுவேன் என ஊர்ப் பன்னாடி புருஷோத்தமன் மிரட்டியுள்ளார். இதனால், என் மகள் திருமணம் ஆனது முதல் என் வீட்டிற்குக்கூட வர முடியவில்லை,’’ என்கிறார் சுந்தரம்.
இந்நிலையில், ஊர்ப் பன்னாடி புருஷோத்தமன் மற்றும் அவரது குழு மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் முன்னாள் ஊர்ப் பன்னாடியான சுந்தரம்.
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் என்னென்ன செய்வார்கள்?

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் என்னென்ன செய்வார்கள் எனவும் விளக்குகிறார் சுந்தரம்.
"அனைவரின் பொதுவான கோவிலான கருப்பராயன் கோவிலுக்குள் விடமாட்டார்கள், கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பார்கள், திருமணம் மற்றும் இறப்பு வீடுகளுக்குச் சென்றால் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கும்போது சடங்கு செய்யாமல் வெளியில் அனுப்பிவிடுவார்கள். எங்களுடன் மற்றவர்கள் பேசினால் அவர்களையும் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பார்கள்."
பாதிக்கப்பட்ட அனைவரும், "புருஷோத்தமன் என்பவர் தற்போது ஊர்ப் பன்னாடியாக இருப்பதாகவும், இவரின் மனைவி வஞ்சிக்கொடி இரண்டு முறை வடக்கலூர் ஊராட்சித் தலைவராக இருந்ததாகவும்" தெரிவிக்கின்றனர். மேலும் புருஷோத்தமன் மற்றும் அவரது குழுவினர்தான் தற்போது இந்த நடைமுறையை அமல்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
‘பல தலைமுறையாக இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம்’

பாதிக்கப்பட்டோரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து, ஊர்ப் பன்னாடி என அழைக்கப்படும் புருஷோத்தமனிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
விளக்கமளித்த புருஷோத்தமன், ‘‘இன்றோ நேற்றோ அல்ல பல தலைமுறைகளாக எங்கள் கிராமத்தில் எங்கள் சாதியைச் சேர்ந்த மக்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறோம். அதைத்தான் நாங்களும் தற்போது பின்பற்றுகிறோம். ‘குத்தவரி’ என்பது இவர்கள் சொல்வது போலத் தவறானது அல்ல, அது ஊர் கோவிலுக்கு வழங்க வேண்டிய வரி. இந்த வரியை ஊரினுள் சேர்த்துக்கொள்ளப்படும் ஜோடிகளுக்கு, அவர்களது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சி அல்லது துக்க நிகழ்வுகளில் நாங்கள் செய்யும் சடங்குகளுக்குப் பயன்படுத்துவோம்,’’ என்றார்.
மேலும் தொடர்ந்த புருஷோத்தமன், ‘‘முன்னாள் ஊர்ப் பன்னாடி சுந்தரம், அவரது தந்தை, தாத்தா, எனது தந்தை, தாத்தா எனப் பலரும், காதல் திருமணம் செய்வோருக்கு இந்த நடைமுறையைத்தான் பின்பற்றினார்கள். முன்னாள் ஊர்ப் பன்னாடி சுந்தரம் கோவிலுக்காக மக்களிடம் சேகரித்த வரியைக் கையாடல் செய்து கணக்கு கொடுக்காமல் உள்ளதுடன், தனது மகளே காதல் திருமணம் செய்ததால்தான் இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்,’’ என சுந்தரம் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆனால், புருஷோத்தமனின் குற்றச்சாட்டை மறுக்கும் சுந்தரம், ‘‘காதல் திருமணம் செய்வோர் நிம்மதியாக வாழ வேண்டும், இந்தக் காலத்திலும் இதுபோன்ற நடைமுறைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். தான் தப்பித்துக்கொள்ளவும், விஷயத்தைத் திசை திருப்பவும்தான் புருஷோத்தமன் இப்படிப் பேசுகிறார். நான் கோவிலின் அனைத்து கணக்குகளையும் ஒப்படைத்து விட்டேன்,’’ என்கிறார்.
‘கடும் நடவடிக்கை எடுத்து களைவோம்’ – மாவட்ட ஆட்சியர்

இந்த நடைமுறையைக் களைய மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, ‘‘முதலில் கோவிலில் பணம் கையாடல் எனத்தான் புகார் வந்தது, விசாரிக்கும் போதுதான் மற்ற தகவல்கள் தெரியவந்தன," என்றார்.
"இதுவரை இரண்டு முறை வருவாய் கோட்டாட்சியர் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்தோர் மற்றும் இதர மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதைத் தற்போது உறுதி செய்துள்ளோம்,’’ என்றார்.
மேலும், ‘‘அந்தக் கிராமத்தில் பழைய நடைமுறைகளைக் கைவிடக்கோரி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். இனி ஊர்க்கட்டுப்பாடு என காதல் திருமணம் செய்வோரை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்போர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்து இதர சட்ட நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறையை உறுதியாகக் களைவோம்,’’ என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












