கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திரும்புமா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ள நிலையில், அதிமுக,‌ பாமக, பாஜக மட்டுமல்லாது. விசிக,‌ உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் கூட போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எனவே, இந்த விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விகளும் எழுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற என்.புகழேந்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

திமுக தனது வேட்பாளராக அன்னியூர் சிவாவை நிறுத்தியுள்ளது. அதிமுக‌ தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. பாமக, தனது கட்சியின் துணைத் தலைவரான சி. அன்புமணியை களத்தில் இறக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.‌

அதிமுக விலகலின் தாக்கம் இடைத்தேர்தலில் இருக்குமா?

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருப்பதாக கடந்த கால புள்ளி விவரம் கூறுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டியில் இருந்து விலகி விட்டதால் ஆளும் திமுகவின் வெற்றி இன்னும் எளிதாக இருக்கும் என்றே அரசியல் அரங்கில் கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போது கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களும், அதை ஒட்டி சூடுபிடிக்கும் அரசியலும் திமுகவுக்கு இடைத்தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்பது போன்ற சூழலை உருவாக்கியுள்ளன.

கள்ளச்‌ சாராய மரணங்களை முன்வைத்து சட்டப்பேரவையில் அமளி செய்த அதிமுகவினர், முதல் நாளே சட்டமன்றத்தில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.‌ அப்போது ஊடகங்களை சந்தித்த எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விஷ சாராயம் விற்கப்பட்ட கடையில் திமுகவினருக்கு ஆதரவு கேட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதாக புகைப்படங்களை காட்டினார்.

பின்னர் ஊடகங்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.எஸ்‌ பாரதி, "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது" என்று குறிப்பிட்டார்‌.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பட மூலாதாரம், X/@EPSTamilNadu

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்பவருக்கும், திமுக எம்எல்ஏ-க்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது" என்று பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு முன்வைக்க, உடனடியாக அதை மறுத்த திமுக எம்‌.எல்.ஏக்கள் இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுவோம் என சவால் விட்டனர்.

மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி வாக்குகள் நிலவரம்

விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது.

அதிமுக வாக்குகளை பாமகவால் ஈர்க்க முடிந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக மாறும்.

"திமுகவுக்கு கடுமையான போட்டி நிலவலாம்"

"கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் அமையாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். "திமுக கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திமுக சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்றார்.

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் விக்கிரவாண்டியில் அதிருப்தி வாக்காளர்களாக மாறக்கூடும் என்கிறார் அவர்.‌ இருப்பினும் "இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரசாரத்தின் போது எப்படி எடுத்துச் செல்கின்றன என்பதை பொறுத்து தாக்கம் அமையும்" என்கிறார் மாலன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பட மூலாதாரம், வீ அரசு

படக்குறிப்பு, வீ அரசு, பேராசிரியர்

விஷ சாராய மரணங்களின் தாக்கம் இடைத்தேர்தலில் பெரியளவில் இருக்காது என்கிறார் பேராசிரியர் வீ.அரசு.

"கள்ளச்சாராயத்துக்கும் அரசுக்கு நேரடி தொடர்பு கிடையாது என்று மக்களுக்கு தெரியும். இது புதிதான விசயம் அல்ல. ரூ.150க்கு டாஸ்மாக் கடைகளில்‌ மது வாங்க முடியாத காரணத்தால் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்.

இது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது. ஆனால், இது அரசியல் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. மற்றபடி யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்னை நிலவிக் கொண்டு தான் இருந்தது" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை உள்ளதா?

திமுக அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க பாஜகவும் அதிமுகவும் முயல்கின்றன என்றார் பத்திரிகையாளர் ஜென்ராம்.

"கள்ளச்சாராய விற்பனை அந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அடுத்த சில நாட்களில் முக்கிய திருப்பங்கள் ஏதேனும் ஏற்பட்டால், விசாரணையில் இந்த மரணங்களுக்கு யார் காரணம் என்பது போன்ற புதிய தகவல்கள் வெளியே வந்தால் அவை இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்" என்று கூறினார் அவர்.

"இடைத்தேர்தல் களம் வேறு பல பிரச்னைகளையும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு எதிர்ப்பு உள்ளது" என்கிறார் பத்திரிகையாளர் மாலன், "ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் என பல்வேறு தரப்பினரிடையே அரசு மீது அதிருப்தி நிலவுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)