இமயமலையின் இறப்பு மண்டலம்: 12 ஆண்டுகளுக்கு முன் கண்ட சடலத்தை இப்போது மீட்டு வந்த ஷெர்பாவின் அனுபவம்

இமயமலையின் இறப்பு மண்டலத்தில் இருந்து உடல்களை கொண்டு வருவது எப்படி?

பட மூலாதாரம், Tshiring Jangbu Sherpa

படக்குறிப்பு, துப்புரவு குழுவினர் இந்த ஆண்டு இமயமலையில் இருந்து நான்கு உடல்களை மீட்டு அப்புறப்படுத்தினர்
    • எழுதியவர், ரமா பராஜூலி
    • பதவி, பிபிசி நேபாளி

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லோட்ஸே மலையின் சிகரத்தில் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் ஓர் உயிரற்ற சடலம் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்த ஷிரிங் ஜங்பு கண்களில் தென்பட்டது. அவர் ஒரு சடலத்தைக் கண்டுபிடிப்பது அதுவே முதல்முறை, எனவே அவரால் அந்த நிகழ்வை ஒருபோதும் மறக்க முடியாது.

நேபாளியான ஷிரிங் ஜங்பு ஒரு `மலையேறி வழிகாட்டி’.

மே 2012இல், உலகின் நான்காவது உயரமான மலையின் உச்சியை அடைய மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஜெர்மன் நபருக்கு அவர் உதவி செய்தார். அவர்கள் மலையேறும்போது அந்தப் பாதையில் ஒரு உயிரற்ற சடலத்தைக் கண்டனர். அந்தச் சடலம் சிகரத்தின் அருகே சில நாட்களுக்கு முன்பு இறந்த செக் நாட்டைச் சேர்ந்த மலையேறுபவர் ஒருவருடையது என்று அவர்கள் நினைத்தார்கள்.

செக் மலையேறி ஏன் இறந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள ஷிரிங் ஜங்பு ஆர்வமாக இருந்தார். ஏனெனில் அந்த நபரின் சடலம் உச்சிக்கு மிக அருகில் இருந்தது. மேலும் இறந்த அந்த நபரின் ஒரு கையுறையைக் காணவில்லை என்பதை ஷிரிங் ஜங்பு கண்டுபிடித்தார்.

"வெறும் கையால் கயிற்றைப் பிடித்து ஏறும்போது பிடி நழுவியிருக்கலாம்," என்று அவர் கூறுகிறார். "அவர் கைநழுவி, பிடி தளர்ந்து கல்லின் மீது மோதியதால் இறந்திருக்கலாம்" என்றும் விவரித்தார்.

அந்த உயிரற்ற உடல் அதே இடத்தில் இருந்தது. லோட்சே மலையை ஏறும் ஒவ்வொரு மலையேறியும் அந்த சடலத்தைக் கடந்து சென்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சடலத்தை அவர் மீட்டெடுப்பார் என்று ஷிரிங் ஜங்பு எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது.

இமயமலையை சுத்தம் செய்ய நேபாள ராணுவத்தால் அனுப்பப்பட்ட 12 ராணுவ வீரர்கள் மற்றும் 18 ஷெர்பாக்கள் (Sherpa) அடங்கிய குழுவில் 46 வயதான ஷிரிங் ஜங்புவும் அங்கம் வகித்தார்.

நேபாள அரசாங்கம் துப்புரவுப் பணிகளை முதன்முதலில் 2019இல் தொடங்கியது. அதோடு கடந்த காலங்களில் மலையேறும்போது இறந்தவர்களின் சடலங்களையும் அகற்றினர். ஆனால் இந்த ஆண்டுதான் முதன்முறையாக இறப்பு மண்டலம் என்று அழைக்கப்படும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருக்கும் பகுதியில் ஐந்து உடல்களை மீட்பதற்கான இலக்கை அதிகாரிகள் நிர்ணயித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த முயற்சியின் மூலம் முதல் முறையாக இறப்பு மண்டலத்தில் இருந்து நான்கு உடல்களை மீட்டெடுப்பதில் குழு வெற்றிப் பெற்றது.

ஜூன் 5ஆம் தேதி முடிவடைந்த 54 நாள் துப்புறவு செயல்பாட்டுக்குப் பிறகு குறைந்த உயரத்தில் இருந்து, ஒரு எலும்புக்கூடு மற்றும் பதினொரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

"இறந்த உடல்கள் மற்றும் குப்பைகள் நிரம்பிய நேபாளத்தின் இமயமலை மாசுபாடு நாட்டிற்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்துள்ளது" என்று இந்த ஆண்டு துப்புரவு இயக்கத்தின் தலைவரான மேஜர் ஆதித்யா கார்க்கி பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார்.

இந்தத் திட்டம் மலை ஏறுபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேஜர் கார்க்கி கூறுகையில், உடல்களைப் பார்த்துப் பலர் பதற்றமடைகின்றனர் என்கிறார்.

கடந்த ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு மலையேறுபவர் ஒரு சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அரை மணிநேரம் நகர முடியாமல் இருந்தார்.

எவரெஸ்ட் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மலை ஏறுதல் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து 300க்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளன, மேலும் இந்த சடலங்களில் பல அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன.

ஆனால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர்; நேபாள சுற்றுலாத் துறையின் கூற்றுபடி, 2023இல் 18 பேர் இறந்துள்ளனர்.

செலவும் சிரமங்களும்

இமயமலையின் இறப்பு மண்டலத்தில் இருந்து உடல்களை கொண்டு வருவது எப்படி?

பட மூலாதாரம், Tshiring Jangbu Sherpa

படக்குறிப்பு, ஷிரிங் ஜங்பு

இறந்தவர்களின் உறவினர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினரின் சடலத்தைத் திரும்பப் பெற பணம் செலுத்த முடியாத சூழலில் உள்ளனர். மலையின் சிகரத்தில் இருந்து சடலங்களைக் கீழே கொண்டு வருவதற்கு அதிக செலவாகும்.

தங்களுக்கு நிதி வசதி இருந்தாலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், இறப்பு மண்டலத்தில் உள்ள உடல்களை மீட்க உதவ மறுக்கின்றன. ஏனெனில் அது மிகவும் ஆபத்தான செயல்பாட்டை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு, ராணுவம் ஐந்து மில்லியன் ரூபாயை (ரூ.31,22,477) ஒரு சடலத்தை மீட்பதற்காக ஒதுக்கியுள்ளது.

ஒரு உடலை 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே இறக்க, பன்னிரண்டு பணியாளர்கள் தேவை, ஒவ்வொருவருக்கும் நான்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.33,395 ($400)-க்கு மேல் செலவாகும் என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை மட்டும் ரூ.16,69,774 ($20,000) வருகிறது.

மேலும் உயரமான பகுதிகளில், காற்று சுழற்சிகளில் ஏற்படும் மாற்றத்தின்போது காற்றின் வேகம் குறைவதால், மலை ஏறுபவர்கள் வருடத்தில் சுமார் 15 நாட்களுக்கு மட்டுமே 8,000 மீட்டர் உயரத்தை அடைய முடியும். இறப்பு மண்டலத்தில், காற்றின் வேகம் அடிக்கடி மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசுகிறது.

சடலங்களைக் கண்டுபிடித்த பிறகு, மற்ற மலையேறுபவர்களுக்கு இடையூறு செய்ய குழு விரும்பவில்லை. எனவே அவர்கள் பெரும்பாலும் இரவில் வேலை செய்தனர்.

லோட்சே (Lhotse) மற்றும் நுப்ட்சே (Nuptse) ஆகிய சிகரங்களைக் கொண்ட எவரெஸ்ட் பகுதியில், மக்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரே ஒரு ஏணி மற்றும் ரோப்வே மட்டுமே உள்ளது.

"இறப்பு மண்டலத்தில் இருந்து உடல்களை மீட்டெடுப்பது மிகவும் கடினமாக இருந்தது," என்று ஷிரிங் ஜங்பு கூறுகிறார்.

“நான் பலமுறை வாந்தி எடுத்தேன். நாங்கள் மிக உயரமான இடத்தில் பல மணிநேரம் செலவழித்ததால் சிலருக்கு இருமல் வந்தது, சிலருக்கு தலைவலி ஏற்பட்டது,” என்று விவரித்தார்.

இமயமலையின் இறப்பு மண்டலத்தில் இருந்து உடல்களை கொண்டு வருவது எப்படி?

பட மூலாதாரம், Tshiring Jangbu Sherpa

படக்குறிப்பு, மற்ற மலையேறுபவர்களுக்கு இடையூறு செய்ய குழு விரும்பவில்லை, எனவே அவர்கள் பெரும்பாலும் இரவில் வேலை செய்தனர்.

வலுவான ஷெர்பாக்கள்கூட 8,000 மீட்டர் உயரத்தில் 25 கிலோ எடையை மட்டுமே தூக்க முடியும், குறைந்த உயரம் கொண்ட சிகரங்களில் சுமக்கக்கூடிய எடையில் இருந்து இது 30%க்கும் குறைவு. எனவே அவர்கள் சுமந்து செல்லும் சுமைகளைக் குறைக்க வேண்டியிருந்ததால், கொஞ்சம் தண்ணீர், சாக்லேட், கொண்டைக்கடலை, பார்லி, கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு குழு உயிர் பிழைத்தது.

இமயமலைத் தொடரில், 8,516 மீட்டர் உயரமுள்ள லோட்சே மலையின் உச்சிக்கு அருகில் கிடந்த சடலம் 12 ஆண்டுகளாக சூரியன் மற்றும் பனியில் வெளிப்பட்டதால் அதன் நிறம் மாறியிருந்தது.

உடலின் சில பாகங்கள் கருப்பாகவும் சில பகுதிகள் வெண்மையாகவும் மாறியிருந்தன. உடலின் பாதிப் பகுதி பனியில் புதைந்துவிட்டது என்கிறார் ஷிரிங் ஜங்பு. நான்கு சடலங்களும் அவர்கள் எங்கு இறந்தார்களோ அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தச் சடலங்கள் உறைந்த நிலையில் இருந்ததால், கைகால்களை நகர்த்த முடியவில்லை, இது போக்குவரத்தை இன்னும் சவாலாக மாற்றியது.

நேபாள சட்டத்தின்படி, சடலங்கள் சிறந்த நிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; இல்லையெனில், அபராதம் விதிக்கப்படலாம்.

சமவெளிகளைப் போல் இங்கு சடலங்களைப் பின்னாலிருந்து தள்ளுவதோ அல்லது முன்பக்கத்தில் இருந்து இழுப்பதோ இயலாது.

எனவே கயிறு கட்டி உடல்களைப் படிப்படியாகக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. சில நேரங்களில், உடல்கள் முகடுகளில் சிக்கி, அவற்றை மீண்டும் வெளியே இழுப்பது ஒரு கடினமான பணியாக இருந்தது.

செக் மலையேறியின் உடலை 3.5 கிமீ தொலைவில் இருந்த முகாமுக்குக் கொண்டு வர இடைவிடாமல் 24 மணிநேரம் ஆனது என்கிறார் ஷிரிங் ஜங்பு

பின்னர் அக்குழு மற்றொரு 13 மணிநேரத்தைச் செலவழித்து சடலத்தை மற்றொரு கீழ் முகாமுக்குக் கொண்டு சென்றது.

உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவுக்கு கொண்டு வரப்பட்டன, ஆனால் மோசமான வானிலை காரணமாக குழுவினர் ஐந்து நாட்களாக நாம்சே நகரில் சிக்கிக்கொண்டனர். இந்தக் குழு ஜூன் 4ஆம் தேதி பத்திரமாக தலைநகர் காத்மாண்டு வந்தடைந்தது.

அடையாளம் காணுதலில் சிரமம்

நான்கு சடலங்களும் எலும்புக்கூடுகளும் தற்போது காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணப் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலையேறும் ஷெர்பாக்கள் மற்றும் மலையேறி வழிகாட்டிகள் சில சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட இடம் மற்றும் சாத்தியமான அடையாளங்களைக் கண்காணித்து வருகின்றனர். எனவே அவர்கள் சடலங்களைப் பற்றிய தகவல்களை வழங்க முடியும்.

அனைத்து உடல்களும் வெளிநாட்டவர்களுடையது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அரசாங்கம் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மலையேறும் நபர்களின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 100 ஷெர்பாக்கள் இமயமலையில் இறந்துள்ளனர். எனவே பல குடும்பங்கள் தங்கள் அன்புக்கு உரியவர்களுக்கான கடைசி புத்த சடங்குகளைச் செய்யப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றன.

அடையாளம் காணப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு உடல்களை உரிமை கோர யாரும் வரவில்லை என்றால் உடல்கள் வெளிநாட்டினரின் சடலங்களா அல்லது நேபாளியுடையதா என்பதைப் பொருட்படுத்தாமல் உடல்களை அடக்கம் செய்வோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஷிரிங் ஜங்பு முதன்முதலில் 20 வயதில் இமயமலையை ஏறினார். அவரது வாழ்க்கையில், அவர் மூன்று முறை எவரெஸ்ட் சிகரத்தையும் ஐந்து முறை லோட்சே சிகரத்தையும் அடைந்துள்ளார்.

“மலையேறுபவர்கள் ஏறுவதன் மூலம் புகழ் பெற்றுள்ளனர். இமயமலை எங்களுக்குப் பல வாய்ப்புகளை அளித்துள்ளது,” என்கிறார் அவர்.

"இறந்த உடல்களை மீட்டெடுக்கும் இந்தச் சிறப்பான பணியைச் செய்வதன் மூலம், பெரிய இமயமலைக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக நம்புகிறேன்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)