பீர் குளியல் செய்தால் இளமை கூடுமா? உலகளவில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஏன்?

பட மூலாதாரம், BierBath
- எழுதியவர், நார்மன் மில்லர்
- பதவி, பிபிசி
ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமீபகாலமாக 'பீர் ஸ்பாக்கள்' திறக்கப்பட்டுள்ளன.
'பீர் தேசம்' என்று கருதப்படும் செக் குடியரசின் முந்தைய வழக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டது தான் இந்த 'பீர் ஸ்பாக்கள்'.
1,000 லிட்டர் தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய மரத்தினாலான குளியல் தொட்டியில் (oak tub) இறங்க நான் தயாரானபோது, வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் வானியலாளர் டைகோ ப்ராஹேவின் கறை படிந்த கண்ணாடி ஓவியம் என்னை உற்று நோக்கி கொண்டிருந்தது.
நிகோலா ஸ்கைபலோவாஎன்பவர் எனக்குக் குளியல் தொட்டியில் இறங்க உதவினார். அவர் தண்ணீரில் சேர்க்கத் தேவையான பொருட்கள் நிறைந்த பெரிய மரக் கரண்டிகளை வைத்திருந்தார்.
"இது ஹாப்ஸ் (hops) - இது உங்கள் மன அழுத்தத்தை நீக்குகிறது, மற்றும் சருமத்தின் சிறு துளைகளையும் திறக்கிறது," என்று கூறியபடி அதைக் குளியல் தொட்டியில் ஊற்றினார். "மேலும் இது மதுபானம் தயாரிக்க பயன்படும் யீஸ்ட், இதில் நிறைய வைட்டமின் பி உள்ளது, உங்களை இளமையாகக் காட்டும்," என்று விளக்கினார். இதனுடன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மால்ட்’ சேர்க்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நான் இருந்தது, செக் குடியரசின் மிகவும் செழுமையான பீர் ஸ்பாக்களில் ஒன்றான 'Chateau Spa Beerland’-இல். செக் குடியரசில் 1980-களில் இந்த தனித்துவமிக்க 'பீர் ஸ்பா’ என்னும் நவீன போக்கு ஆரம்பமானது. இது, ப்ராக் நகரில் உள்ள யு ஸ்லேட்டே ஹ்ருஸ்கி (U Zlaté Hrušky - At The Golden Pear) என்னும் தேசிய பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது, இங்குதான் டைகோ ப்ராஹே 1599-இல் வாழ்ந்தார். இன்று, அதன் பீர் ஸ்பா அறைகளில் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் முதல் வானியல் சுவரோவியங்கள் வரை கண்களைக் கவரும் அலங்கார அம்சங்களை கொண்டுள்ளன.
குளியல் தொட்டிக்கு அடுத்ததாக ஒரு பெரிய வைக்கோல் படுக்கை இருந்தது, இது மகிழ்ச்சியான வெந்நீர் குளியலை அனுபவித்தப் பிறகு வைக்கோல் படுக்கை பாரம்பரிய உணர்வை வழங்குகிறது.
குளியல் தொட்டியில் குளித்த பிறகு,வைக்கோல் படுக்கை அதன் கடினத்தன்மையின் மூலம் சருமத்தை மேலும் உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம் வைக்கோல் மேற்பரப்பு, பயனரை இயற்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும். நோர்டிக் சானா (Nordic sauna) என்னும் நீராவி குளியல் முறையிலும் இதே முறை கையாளப்படுகிறது.

பட மூலாதாரம், Norman Miller
பீர் குளியல் எப்படி நடக்கிறது?
நான் பீர் குளியலை மேற்கொண்ட போது, ஸ்கைபலோவா எனக்கு பல கரண்டி பீரை ஊற்றினார். இது சாதாரண பீர் அல்ல. வடிகட்டப்படாத, உயர்தர செக் பீர் (Czech Beer) ஆகும். இது யீஸ்ட் உட்பட அதன் அத்தியாவசியக் கூறுகளில் பலவற்றைத் தக்கவைத்து, 'உயிர்தனமையுடன்' அதிக வைட்டமின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
செக் மக்களுக்கு பீர் பற்றி நன்றாகத் தெரியும் - அவர்கள் ஆஸ்திரியா நாட்டினரை விட ஒரு நபருக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். உலகளவில் அதிக பீர் விரும்பிகள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
குளியல் தொட்டியில் சிறந்த ப்ரீமியம் பீரைச் சேர்ப்பது வீணாவதாகத் தோன்றினால், குளியல் தொட்டியின் அருகில் அளவாக பீரை விநியோகிக்கும் குழாய்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான் குளியல் தொட்டியில் இறங்கினதும், ஜக்குஸி பட்டனை (jacuzzi button) அழுத்தி, குமிழிகளை வரவைத்தேன். பின்னர் ஒரு குவளையில் ப்ரீமியம் டார்க் க்ருசோவிஸை (dark Krušovice) (1581-இல் அறிமுகமான ஒரு பாரம்பரிய செக் மதுபானம்) ஊற்றினேன். ஒரு பீர் ரொட்டியை சுவைப்பதற்காக (அதன் மாவில் பீர் கலந்து பிசையப்பட்டதால் பழுப்பு நிறத்தில் இருக்கும்) கையில் எடுத்தேன். பீர் குளியலின் விசித்திரமான அனுபவத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். காற்றில் பீரின் நறுமணம் நிறைந்திருந்தது.

பட மூலாதாரம், WeWantMore/Bath&Barley
உலகளாவிய போக்கு
இந்தக் குளியல் அனுபவத்தை ஆதரிப்பவர்கள், "உங்கள் சருமத்திற்குக் குமிழிகள் ஆரோக்கியமானவை. இறுக்கமான தசைகளை தளர்த்தும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மறுபுறம், ஹாப்ஸின் நறுமணங்கள் மனநிலையை உயர்த்தி இளைப்பாறுதல் உணர்வை கொடுக்கும். இந்த புதுமையான ஆரோக்கியக் குளியல் முறையில் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம் இருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பீர் ஸ்பாக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது,” என்கின்றனர்.
சமீபத்தில் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பீர் ஸ்பாக்கள் திறக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பால்டிமோர் அருகே 'BierBath’ திறக்கப்பட்டது. டென்வரில் 2021-ஆம் ஆண்டு 'Oakwell’ என்னும் பீர் ஸ்பா திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பிரிட்டனின் கிழக்கில் உள்ள நோர்போக் மீடில் முதல் பீர் ஸ்பா திறக்கப்பட உள்ளது.
உலக அளவில் நிகழும் இந்த ஸ்பாவின் எழுச்சிக்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இந்த ஸ்பா மக்களால் விரும்பப்படும் இரண்டு பொழுது போக்குகளை இணைக்கிறது: பீர், மற்றும் இளைப்பாறல். மேலும் ஸ்பாக்களின் இதமான ஐரோப்பிய வடிவமைப்புகள் கூடுதல் மகிழ்ச்சியூட்டுகிறது.
உலகம் முழுவதும் பீர் ஸ்பாக்கள் பிரபலமடைந்து வருவதற்கான மற்றொரு விளக்கத்தை தி நார்ஃபோக் மீடில் ஸ்பா மேலாளரான எலிசா ஓக்டன் சொன்னார்: "இந்த ஸ்பாக்கள் பெண்களை அதிகம் ஈர்க்கின்றன. எனவே இது ஆண்கள் மற்றும் தம்பதிகளை ஈர்க்கும் என்று நாங்கள் நினைத்தோம்."
பாத் & பார்லி (Bath & Barley) - பெல்ஜியத்தின் முதல் பீர் ஸ்பா, 2023-இல் ப்ரூக்ஸில் திறக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை மேம்படுத்த பீர் பிரியர்கள் தங்கள் விருப்பமான பீர் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் ஹாப் தாவர வகைகளைத் தேர்ந்தெடுத்துக் குளியல் தொட்டியில் நிறைக்கலாம் என்னும் அம்சத்தை இந்த ஸ்பாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
பீர் கலாசாரம்
"பெல்ஜிய விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட பல்வேறு ஹாப் தாவரங்களில் இருந்து தேர்ந்தெடுத்து உங்கள் குளியல் தொட்டிக்குத் தேவையான சாரத்தை நீங்களே உருவாக்கலாம். இந்த ஹாப்ஸ் வெவ்வேறு சாரங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் நன்மை பயக்கும் விளைவுகள் ஒரே மாதிரியானவை," என்று இணை நிறுவனர் லூயிஸ் ரேசோவ் விளக்குகிறார்.
"சில செக் ஸ்பாக்களை விட எங்களின் உட்புற வடிவமைப்பு ஆடம்பரமான அனுபவத்தை கொடுக்கும். பெல்ஜிய பீர்களுடன் நல்ல உணவையும் வழங்குகிறோம். குளியல் தொட்டியில் ஒரு 'ஹாப்’ ஸ்க்ரப்பையும் வழங்குகிறோம்,” என்றார்.
2022-இல் நிறுவப்பட்டதிலிருந்து, ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள டாக்கா பீர் ஸ்பா (Taaka Beer Spa) பிரான்சில் உயர்தர பீர் ஸ்பா அனுபவத்தை பெற வழிவகுத்தது. "இந்த ஸ்பா உள்ளூர் மக்களிடையே நிறைய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது, இந்த ஸ்பாவை முயற்சிக்க கணிசமான எண்ணிக்கையில் மக்கள் வருகின்றனர்," என்கிறார் நிறுவனர் நவோமி க்ராவ்ஷா.
"நாட்டின் பீர் கலாசாரத்தை அனுபவிப்பதற்கான ஒரு புதிய வழியாக இந்த ஸ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்றும் கூறினார்.
தற்போது மீண்டும் பீர் ஸ்பாக்களின் பூர்வீகமான செக் குடியரசுக்கு வருவோம். அதன் தலைநகரில் உள்ள சுமார் ஆறு சிறந்த பீர் ஸ்பாக்கள் உள்ளன. மேலும பல சிறிய அளவிலான பீர் ஸ்பாக்களும் உள்ளன.

பட மூலாதாரம், WeWantMore/Bath&Barley
பீர் ஸ்பாக்கள் மகிழ்ச்சிக்கா அல்லது ஆரோக்கியத்திற்கா?
பீர் குளியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கலாசாரம் என்று பல பீர் ஸ்பாக்கள் கூறுகின்றன. இருப்பினும் இது பீர் மற்றும் ஸ்பாக்களின் வரலாற்று இருப்பை ஒன்றிணைப்பதாகத் தெரிகிறது. இவை பண்டைய காலத்தில் தோன்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அதே போன்று செக் பீர் ஸ்பாக்கள் வென்செஸ்லேஸ் என்று அழைக்கப்படும் மன்னர்களில் ஒருவரை வழக்கமாக பீர் குளியல் எடுத்து கொள்வார் என்று குறிப்பிடுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அதற்கும் எந்த ஆதரமும் இல்லை.
"இது நிச்சயமாக உண்மையல்ல," என்று ப்ர்னோவில் உள்ள மசாரிக் பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய மதுபானங்கள் வரலாற்று நிபுணரான லிபோர் ஜாஜிக் கூறுகிறார். அரசர் வென்செஸ்லேஸ்களில் ஒருவர் உண்மையில் செக் மதுபான உற்பத்தியாளர்களின் விளம்பரத் தூதராகப் பார்க்கப்படுகிறார் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"இது பீர் ஸ்பாக்களை இயக்கும் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் தந்திரம். பீர் ஸ்பா என்பது ஒரு நவீன கண்டுபிடிப்பு. இடைக்காலத்தில் பீர் குளியல் தொட்டியில் சேர்க்கப்பட்டிருக்கலாம், ஆனால் அதில் நிச்சயமாக எந்த ஆழமான நோக்கமும் இருந்திருக்காது," என்றார்.
ஆரோக்கியம் தருமா என்ற நோக்கில் பார்க்கும்போது பீர் ஸ்பாக்கள் நடத்துபவர்கள் சில வலுவான வாதத்தை முன்வைக்கின்றனர்.
"மால்ட் தானியங்கள், யீஸ்ட் மற்றும் ஹாப்ஸ் ஆகியவை பீரில் உள்ள மூன்று பொருட்களாகும், அவை உங்கள் சருமத்திற்கு நல்லது," என்று கொலராடோ அரோமேட்டிக்ஸின் உயிர்வேதியியல் நிபுணர் டாக்டர் சிண்டி ஜோன்ஸ் விளக்குகிறார்.
"யீஸ்ட் மற்றும் மால்ட் தானியங்கள் இரண்டிலும் பி வைட்டமின்கள் உள்ளன, அவை தோலில் கருந்திட்டுக்களை (hyperpigmentation) குறைக்கின்றன மற்றும் தோலின் ஈரப்பதம் மற்றும் மென்மையை மேம்படுத்துகின்றன,” என்றார்.
"குறிப்பாக, ஹாப்ஸில் ஏராளமாக சாந்தோஹுமுல் மற்றும் ஹுமுலோன் (xanthohumul and humulone) உள்ளன. முந்தையது அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், பிந்தையது சருமத்தை குணப்படுத்தும் ஆண்டி-பாக்டீரியா தன்மைகளைக் கொண்டுள்ளது,” என்கிறார்.
நன்மைகள் உண்டா?
"ஹாப்ஸ் தாவரத்தின் சாறுகள், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தூக்கத்தை மேம்படுத்துவதில் ஹாப் தாவரம் நீண்டகால பயன்பாட்டை கொண்டுள்ளது என அறிவியல் ரிதியாக ஆதரங்கள் காட்டுகின்றன,” என்கிறார் சிண்டி ஜோன்ஸ்.
"ஹாப்ஸ் தாவரம் சமீபத்தில் தோல் பராமரிப்புக்காக அதிக அறிவியல் கவனத்தைப் பெறுகிறது," என்று ஜோன்ஸ் தொடர்ந்தார்.
"இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமச் சுருக்கங்களைக் குறைக்கும் மற்றும் தோலின் வீக்கத் தன்மையை குறைக்கும்," என்றார்.
உலகளாவிய மதுபான நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் (Carlsberg) 2015-ஆம் ஆண்டில் பீர் அழகுச்சாதன பொருள்களை அறிமுகப்படுத்தியபோது, ஒரு வித்தியாசமான விளம்பர வீடியோவின் ஆதரவுடன் பீர் அழகுசாதனப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செக் குடியரசில் விற்கப்படும் பல பொருட்களில் ஹாப்ஸ் மற்றும் பார்லி சாறுகளுடன் கூடிய குளியல் உப்புகளும் விற்கப்படுகிறது.
வீட்டிலேயே குளியல் தொட்டியில் பீரை சேர்த்து இந்த அனுபவத்தைப் பெற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சாத்தியமில்லை. வைக்கோல் மெத்தை, முடிவில்லா பிரீமியம் பீர் அல்லது சுவையான பீர் ரொட்டி போன்றவற்றுடன் இளைப்பாறும் சூழல் வீட்டில் இருக்காது. இது தான் பீர் ஸ்பாக்களை உண்மையான தனித்துவமான அனுபவம் கொடுக்கும் இடமாக மாற்றுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












